பாலாஜியோ, “நம்ம நட்பு மேல சத்தியமா நான் சொல்றது உண்மை கஜேந்திரா” என்றார்.
கஜேந்திரன், “நீ எப்போ வந்த?” என்று மீண்டும் கேட்டார்.
“என்னை நம்பலையா கஜேந்திரா?” என்று பாலாஜி உருக்கமாக வினவ,
அவரோ, “மஞ்சரி விஷயத்தில் உன்னை நம்ப முடியாது.. சொல்லு” என்றார்.
“அது இன்னைக்கு என்னோட பிரெண்ட் பாஸ்கரை பார்த்தேன்.. லைட்டா குடிச்சேன்.. அதான் மஞ்சரி தூங்கினதுக்கு அப்புறம் வரலாம்னு பன்னிரெண்டு மணிக்கு தான் வந்தேன்..
ஆனா கதவை அவ தான் திறந்தா..
பாஸ்கரும் என் கூட வந்தான். ஆனா கொஞ்ச நேரத்தில் போன் வந்து, ஏதோ முக்கியமான வேலைனு சொல்லிட்டு கிளம்பிட்டான்.. அவன் கிளம்பினப்ப அவ தண்ணி குடிக்க வெளியே வந்தா.. எங்களை பார்த்துட்டு முகத்தை சுளிச்சதும் ‘என்னடி சுளிப்பு! முகத்தை பேத்துருவேன்’னு திட்டினேன்.. ஒன்னும் பதில் சொல்லாம முறைச்சுட்டு தண்ணி குடிச்சிட்டு போய்ட்டா.. நானும் பாஸ்கர அனுப்பிட்டு போய் படுத்துட்டேன்..” என்றவர் ருத்ரேஷ்வர் வரானா என்பதை பார்த்தபடி,
“ஆனா ஒரு ரெண்டர மணிக்கு நான் தூக்கம் வரமா வெளிய வந்தப்ப ருத்ரன் ரூமில் லைட் எறிஞ்சிட்டு இருந்துது.. என்னனு போய் பார்த்தப்ப…” என்று அவர் தயங்கி நிறுத்த,
கஜேந்திரன், “பிட் பிட்டா சொல்லாம ஒழுங்கா சொல்லு” என்றார்.
மீண்டும் ஒருமுறை ருத்ரேஷ்வர் வருகிறானா என்று பார்த்துவிட்டு குரலை தாழ்த்தி கஜேந்திரன் அருகே சென்று,
“ருத்ரனுக்கு நீ வாங்கி கொடுத்து இருக்கிற கம்ப்யூட்டர்ல தப்பான வீடியோ பார்த்துட்டு இருந்தா.. நான் ஒரு செகண்ட் ஆடி போயிட்டேன்.. அவ்ளோ அதிர்ச்சி.. என்னோட சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவ கண்ணுல ஒரு செகண்ட் தான் அதிர்ச்சி.. அப்புறம் என்னை அசால்ட்டா பார்த்தபடி பார்த்த ஹிஸ்டரி அழிச்சுட்டு, கம்ப்யூட்டரை அணைச்சுட்டு ரூம் விட்டு வெளிய போக பார்த்தா..
நான் கேவலமா பார்த்தபடி நக்கலா ‘இந்த விஷயம் ருத்ரனுக்கு தெரிந்தா உன்னை வெறுத்திடுவான்’னு சொன்னேன்..
அவ பயப்படுவானு பார்த்தா, அதை வெளியே சொன்னா நான் தான் பார்த்ததா மாத்தி சொல்லிடுவேன்னு மிரட்டினா.. ருத்ரன் அவளை தான் நம்புவான்னு சொன்னா.. நான் கோபத்துல அவளை அடிச்சுட்டேன்..
ராதி என்னை தான் நம்புவானு சொன்னேன்.. ருத்ரன் அவளை நம்பினாலும் மத்தவங்க என்னை நம்புவாங்க.. அப்புறம் ருத்ரனும் மெல்ல நம்பிடுவான்.. கேவலமா பார்த்து வெறுப்புடன் அவளை வீட்டை விட்டே துரத்திடுவான்னு சொன்னேன்” என்றவர்,
“நீ என்னை நம்புறியானு தெரியலை. ஆனா ராதி மேல சத்தியமா சொல்றேன். நான் எந்த தப்பான படத்தையும் ருத்ரன் கம்ப்யூட்டர்ல பார்க்கலை” என்று முடித்தார்.
நட்பின் மீது சத்தியம் செய்ததை நம்பாத கஜேந்திரன் தங்கை மீது சத்தியம் செய்த போது பாலாஜி பக்கம் யோசிக்க தொடங்கினார். பாலாஜி மனைவி மீது சத்தியம் செய்த போது தான் அதை பார்க்கவில்லை என்று கூறினாரே தவிர, மஞ்சரி பார்த்ததாக கூறவில்லை.
கஜேந்திரன் தன் பக்கம் யோசிக்க ஆரம்பித்து விட்டதை உணர்ந்த பாலாஜி, “என்ன இருந்தாலும் அந்தப் பொறுக்கியோட இரத்தம் அவ உடம்பில் இருக்கும் தானே! நீ பாம்புக்கு பால் வார்த்துட்ட கஜேந்திரா..” என்று ஏற்றிவிட்டார்.
கஜேந்திரன் அப்பொழுதும் சிறு யோசனையுடன், “ஏன் திருட்டு பட்டம் கட்டின?” என்று கேட்டார்.
“ருத்ரன் முன்னாடி பேசுற விஷயமா இது.. அது போக நான் சொன்னதை அவன் நம்பப் போறது இல்லை.. இந்த இழிவான செயலை செய்ததா என் மேல் பழி விழுறதை விட, திருட்டு பழி மேல் இல்லையா!” என்றார்.
அப்பொழுது அங்கே வந்த ருத்ரேஷ்வர் கோபத்துடன் பாலாஜியைப் பார்த்து, “என்ன செஞ்சீங்க அம்முவ?” என்று கேட்டான்.
பாலாஜி கஜேந்திரனைப் பார்க்க,
கஜேந்திரன், “ருத்ரா மாமா மேல தப்பில்லை.. மஞ்சரியை தேட நான் ஏற்பாடு செய்றேன்.. நீ ரூமுக்கு போ!” என்றார்.
“உங்க யார் உதவியும் வேணாம்.. நானே என்னோட அம்முவ தேடிக்கிறேன்.” என்றபடி அவன் கிளம்ப,
அவன் கையை பிடித்து தடுத்தபடி, “நீ சின்ன பையன்டா..” என்ற கஜேந்திரனின் பேச்சை இடையிட்டவன்,
“அம்மு என்னை விட சின்ன பொண்ணுப்பா” என்ற போது, அவனது கண்கள் லேசாக கலங்கியது.
“நான் உங்க கூட ஊருக்கு வந்திருக்கவே கூடாது.. அம்மா என்னை தான் நல்லா பார்த்துக்க சொன்னாங்க.. அய்யோ என் அம்முவை நான் எங்க போய் தேடுவேன்.. ஆஆ..!” என்று சத்தமாக கத்தியபடி அமர்ந்தவன், அடுத்த சில நொடிகளிலேயே கண்களை துடைத்தபடி,
“நானே போய் தேடுறேன்” என்றபடி கஜேந்திரனின் கையை உதறி தள்ளி விட்டு வெளியேறி தெருக்களில் தேட ஆரம்பித்தான்.
ஆனால், அந்நேரம் மஞ்சரியோ உயிருக்கு போராடிய நிலையில் ஒரு மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
மஞ்சரியை தூக்கிச் சென்ற பாலாஜியின் நண்பன் அவனது மற்றொரு நண்பனின் தானியில் பயணித்த போது எதிரில் இரவு காவலுக்கு ரோந்து செல்லும் காவல்துறை வண்டி வந்து கொண்டிருந்தது.
சற்று தூரத்திலேயே காவல்துறை வண்டியை கண்டு விட்ட தானியை ஓட்டியவன் வேகத்தை சற்றே குறைத்தபடி, “மச்சான் போலீஸ்.. செக்கிங் போடுவான்க.. என்ன செய்ய?” என்று கேட்டான்.
“என்ன செய்ய! இங்கேயே தூக்கி போட்டுட்டு போய் கிட்டே இருக்க வேண்டியது தான்.. ஆனா.. வண்டிய நிறுத்தினாக்க, அவனுங்க கவனம் நம்ம பக்கம் திரும்பும்..”
“அது மட்டுமில்ல.. அவனுங்க கண்ணில் இவ பட்டுட்டா, நம்ம மேல சந்தேகம் வரும்.”
“அதுவும் சரி தான்” என்றபடி சில நொடிகள் யோசித்தவன், “ஒன்னு செய்யலாம்.. வண்டிய இன்னும் கொஞ்சம் மெதுவா ஓட்டு.. இப்படியே அந்த புதருக்குள்ள தூக்கிப் போட்டுடுறேன்..
ஒரு அரை நேரம் கழிச்சு வந்து தூக்கிட்டு போய் அம்பை கிட்டக்க போட்டுடலாம்.” என்றான்.
“நாம ஏன் திரும்ப வரணும்?”
“வீட்டில் இருந்து நாலு தெரு தான் தள்ளி வந்து இருக்கோம்.. இந்த குட்டி முழிச்சு வீட்டுக்குப் போய்ட்டா, பாலாஜி மாட்டிப்பான்.. அவன் என்னையும் சேர்த்து மாட்டி விட்டுடுவான்.”
“ஓ! சரி சரி.. சீக்கிரம் தூக்கிப் போடு.”
“ஹ்ம்ம்” என்றபடி மஞ்சரியை தூக்கி போட்டு விட்டு செல்ல, வழியில் இவர்களை மறித்த காவலரிடம் ஓட்டுனர் தான் பேசினான்.
பின்னால் இருப்பவன் தனது நண்பன் என்றும் போதையில் ரோட்டில் கிடந்தவனை வீட்டுக்கு கூட்டிட்டு போறதாக கூறி தப்பிச் சென்றனர். ஆனால் அரை மணி நேரம் கழித்து அவர்கள் வந்த போது மஞ்சரி அங்கே இல்லை.