“அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவான்.. அவன் வரதுக்குள்ள இவளுக்கு ட்ரெஸ் மாத்தி விடனும்.”
“என்னது?”
“என்ன?”
“என்னால முடியாது” என்றவரின் கை நடுங்கியது.
“சரி நீ ட்ரெஸ் எடுத்துட்டு வா.. நான் மாத்தி விடுறேன்” என்று நண்பன் கூறிய வேளையில், வெளியே மகிழுந்தின் சத்தம் கேட்க, பாலாஜிக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
பயத்துடன், “இது.. இது.. மச்சான் கார்டா.. பத்து.. மணிக்கு.. தான்.. வரேன்னு.. சொன்னார்.. இப்பவே.. வந்துட்டாங்க” என்று தந்தி முறையில் பேசினார்.
அதிகாலையில் கிளம்பி வரதாக இருந்த கஜேந்திரன் மற்றும் ருத்ரேஷ்வர், ருத்ரேஷ்வரின் பிடிவாதத்தில் இரவு பத்து மணிக்கே கிளம்பி வந்து இருந்தனர். என்னவோ ருத்ரேஷ்வருக்கு மனம் பிசைவது போல் இருக்க, அவனால் அங்கே இருக்கவே முடியவில்லை. பிடிவாதம் பிடித்து தந்தையை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
சட்டென்று கூடத்தின் விளக்கை அணைத்த நண்பன், “நான் இவளை தூக்கிட்டு பின் பக்கமா போய் அவங்க கண்ணில் படாம வெளியே போய்டுறேன்.. நாம குடிச்ச பாட்டிலை ஒளிச்சு வை.. அப்புறம் நீ உன்னோட ரூம் போய் ஒன்னும் தெரியாத மாதிரி படு.. அவங்க பெல் அடிச்சாலும் உடனே போய் திறக்காத.. கால்மணி நேரம் கழிச்சு தூக்க கலக்கத்தில் போய் திறக்கிற மாதிரி திறந்துட்டு பெருசா எதுவும் பேசாம போய் படு.. இப்போ போய் இவ செருப்ப எடுத்துட்டு வா” என்றான்.
வேகமாக ஓடிச் சென்று மஞ்சரியின் காலணியை எடுத்து வந்து கொடுத்த பாலாஜி, “வாட்ச்மேன் நீ உள்ளே வந்ததை பார்த்தானேடா” என்று பதற்றத்துடன் கேட்டார்.
மஞ்சரியை தோளில் சுமந்து இருந்த நண்பன், “எல்லாத்தையும் சொல்லனுமா!” என்று திட்டியபடி செருப்பை வாங்கினான்.
பின், “இவ விஷயத்தில் மட்டும் பொய் சொல்லு.. நான் வந்ததையோ, நீ வெளியே குடிச்சதையோ மறைக்காத.. எனக்கு அவசர வேலை வந்து கிளம்பி போயிட்டேன்.. அப்போ வாட்ச்மேன் தூங்கிட்டு இருந்தான்னு சொல்லு..
கார் இப்ப தான் வீட்டு உள்ள வர மாதிரி இருக்குது, லைட் எரிஞ்சது தெரிந்து இருக்காது.. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லனு முழிச்சு காட்டி கொடுக்காம போய் படு.. அப்புறம் பின் பக்க கதவை தாழ்பாள் போடாத.. இவ அந்த வழியா போனதாத் தான் சொல்லணும்.” என்றவன் பின் பக்க கதவின் வாயிலாக வேகமாக சத்தம் எழுப்பாமல் வெளியேறினான்.
நண்பனின் அறிவுரைப் படி அந்த அறையை சத்தமின்றி சுத்தம் செய்த பாலாஜி மஞ்சரியின் அறையை மூடிவிட்டே தனது அறைக்குச் சென்றார்.
கால்மணி நேரம் கழித்து வீட்டின் பிரதான கதவை திறந்தவர் தூக்கக் கலக்கத்துடன் பேசுவது போல் கொட்டாவி விட்டபடி, “வா மச்சான்.. சீக்கிரமே வந்துட்டீங்க!” என்றார்.
“ருத்ரா.. நைட்டே கிளம்பிடலாம்னு சொன்னான்” என்று கஜேந்திரன் கூற,
ருத்ரேஷ்வரோ, “கமலாமா எங்க? அம்முக்கு உடம்பு சரி இல்லையா?” என்று கேள்விகளை அடுக்கிய படி மஞ்சரி அறை நோக்கி விரைந்தான்.
பாலாஜி மனதினுள், ‘வந்ததும் வராததுமா அந்த சிறுக்கி ரூமுக்கு தான் போகனுமா!’ என்று ருத்ரேஷ்வரை கடுப்புடன் திட்டிய பாலாஜி, “தெரியலையே! நான் வந்தப்ப அவ தான் கதவை திறந்தா” என்றார்.
பின் கஜேந்திரனைப் பார்த்து, “சரி மச்சான், நான் போய் தூங்குறேன்.” என்றார்.
கஜேந்திரன், “சரி மச்சான்.. நானும் தூங்கப் போறேன்” என்ற போது,
மஞ்சரி அறையை விட்டு வெளியே வந்த ருத்ரேஷ்வர் சிறு பதற்றத்துடன், “அப்பா அம்முவ காணும்” என்றான்.
“எங்க போயிருக்க போறா! வேற ரூமில் இருக்கிறாளானு பாரு” என்று கஜேந்திரன் சாதாரணமாக கூற,
அவனோ, “அம்மு வேற ரூம் எல்லாம் போக மாட்டா.. ரூமில் ஃபேன் ஓடிட்டு இருக்குது.. பெட்(bed) ஸ்ப்ரெட்(spread) கலைஞ்சு இருக்குது.. தூங்கிட்டு தான் இருந்து இருக்கா” என்றபடி பாலாஜியை சந்தேகமாகப் பார்த்தான்.
பயத்தை தன்னுள் கச்சிதமாக மறைத்த பாலாஜி,
“உன்னோட ரூமில் இருக்காளானு பாரு” என்றார்.
“கமலாமா எங்க?” என்று ருத்ரேஷ்வர் வினவ,
பாலாஜி, “எனக்கு தெரியாது” என்றார்.
அவரை தீர்க்கமாகப் பார்த்தவன், “அம்முவை எதுவும் சொன்னீங்களா? இல்ல.. அடிச்சீங்களா?” என்று கேட்டான்.
கஜேந்திரனைப் பார்த்து சற்று கோபத்துடன், “மச்சான் இது சரியே இல்லை” என்றார்.
கஜேந்திரன் பேசும் முன், “அவளை கண்டுக்கவே மாட்டீங்க.. என் ரூமில் இருக்காளா பாருனு சொல்றீங்க! நீங்க எதுவும் செய்யலைனா இந்நேரம் கண்டுக்காம உங்க ரூமுக்கு போய் படுத்து இருப்பீங்களே!” என்றான்.
“நான் போய் படுக்கிறேன்.. அந்த சனி.. அவ எப்படி போனா எனக்கு என்ன?” என்று முறைப்புடன் சொன்னபடி பாலாஜி, தன் அறைக்கு செல்லப் பார்க்க,
“இருங்க.. அம்மு வந்து சொல்லட்டும்.. அதுக்கு அப்புறம் தான் நீங்க உங்க ரூமுக்கு போக முடியும்” என்ற ருத்ரேஷ்வர் தந்தையிடம்,
“கமலாமாக்கு போன் போடுங்கப்பா.. நான் என்னோட ரூமை பார்த்துட்டு வரேன்” என்றுவிட்டு படிகளில் ஏறினான்.
கஜேந்திரன், “விடிந்ததும் போன் செய்றேன் ருத்ரா” என்று கூற,
படிகளில் நின்றபடி, “நீங்க போடுறீங்களா நான் போடவா?” என்று கேட்டவன், அவர் அழைப்பதாக கூறவும் தனது அறைக்கு விரைந்தான்.
லேசாக பெரு மூச்சை வெளியிட்டபடி கஜேந்திரன் சமையல்காரர் கமலாவை அழைக்கப் போக,
பாலாஜி, “மச்சான்” என்று வரவழைத்த சிறு தயக்கத்துடன் அழைத்தார்.
“என்ன?”
“இன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது” என்று பாலாஜி இழுத்து நிறுத்த,
கைபேசியில் இருந்து பார்வையை விலக்கி பாலாஜியைப் பார்த்தபடி புருவம் சுருக்கி, “என்ன?” என்று மீண்டும் கேட்டார்.
“மஞ்சரி உன்னோட ரூமில் பிரோவில் இருந்து திருடப் போனப்ப நான் கையும் களவுமா பிடிச்சு, சத்தம் போட்டு லைட்டா அடிச்சேன்.. அப்புறம் போய் படுத்துட்டேன்.. ஒரு வேளை…” என்றவரின் பேச்சை இடையிட்டு,
“பிளேட்டை மாத்திப் போடுறீங்களா? அம்முவை என்ன செய்தீங்க?” என்று கோபமாக கேட்டபடி படிகளில் இறங்கிய ருத்ரேஷ்வர் வேகமாக அவரை நெருங்க, எங்கே அடித்து விடுவானோ என்ற எண்ணத்தில் கஜேந்திரன் சட்டென்று அவனை பிடித்து நிறுத்தினார்.
பாலாஜி கோபத்துடன், “பார்த்து பேசச் சொல்லு மச்சான்.. உன் பையன் அதிகமா பேசுறான்” என்று கத்தினார்.
கஜேந்திரன், “ருத்ரா” என்று அழைக்க,
அவனோ அவர் கைகளில் திமிறியபடி, “இவர் தான் பா ஏதோ செய்து இருக்கார்” என்றான் கோபத்துடன்.
“நீ முதல்ல வீடு புல்லா தேடு.. நான் கமலாமா கிட்ட பேசுறேன்.” என்று அவனை அனுப்பி வைத்தார்.
அவன் பாலாஜியை முறைத்தபடி தேடச் செல்ல, கமலாவை அழைத்து பேசிவிட்டு வைத்த கஜேந்திரன் பாலாஜியைப் பார்த்து,
“நீ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்த?” என்று கேட்டார்.