கஜேந்திரன் மனைவியின் யோசனைப்படி ராதிகாவிற்கு மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கப் பட்டது. சில ஆலோசனை அமர்விற்கு மட்டுமே ஒத்துழைத்த ராதிகாவின் தற்கொலை முடிவை மாற்ற முடிந்ததே தவிர, குழந்தை மீதான அவரது வெறுப்பை மாற்ற முடியவில்லை. குழந்தை கருவில் வளர வளர ராதிகாவின் வெறுப்பும் வளர்ந்து கொண்டே வந்தது.
குழந்தை பிறந்ததும் அதன் முகத்தைக் கூட பார்க்க மறுத்த ராதிகா, குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கக் கூறினார். ஆனால், கஜேந்திரனின் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அழகாக கன்னத்தில் குழி விழச் சிரித்த அந்த பெண் சிசுவின் மீது கஜேந்திரனின் மனைவிக்கு பாசம் சுரத்தது. ஆனால், தந்தையை போல் ஆலிவ் பச்சை நிற கருவிழிகளோடு பிறந்திருந்த அந்த சிசுவைப் பார்த்த நொடியில், கஜேந்திரனுக்கு வெறுப்பு தான் தோன்றியது.
தங்கையின் விருப்பபடி குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கும் முடிவை கஜேந்திரன் எடுத்த பொழுது,
அவரது மனைவியோ, ‘பெரியவர்கள் செய்த தவறுக்கு ஏதும் அறியாத சிசுவை ஏன் தண்டிக்க வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பி குழந்தையை ஆசிரமத்தில் சேர்க்க மறுத்தார்.
கஜேந்திரன், இந்த குழந்தையால் தனது தங்கையின் நல்வாழ்வு கெட்டுவிடும் என்று வாதிட்ட போதும், ‘நடந்தது அனைத்தையும் தெரிந்து தானே பாலாஜி மறுமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டு இருக்கிறார்! அவருக்கும் ஒரு குழந்தை இருக்கிறது தானே!’ என்று மறுவாதம் செய்தவர்,
‘அப்படி அவர் இந்த குழந்தையை ஏற்கவில்லை என்றால் நான் வளர்க்கிறேன்’ என்று கூறி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
மனைவியின் கூற்றை மறுக்க முடியாமல் கஜேந்திரன் குழந்தையை அனாதை ஆசிரமத்தில் சேர்க்க மறுப்பு தெரிவித்ததோடு, தாங்கள் பார்த்துக் கொள்வதாக தங்கையிடம் கூறினார்.
ராதிகாவை ஏற்க முடிந்த பாலாஜியால் குழந்தையை ஏற்க முடியவில்லை என்றாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பெருந்தன்மையுடன் குழந்தையை ஏற்றுக் கொள்வது போல் நடித்தார். குழந்தையை ஏற்கவில்லை என்றால், ராதிகாவை தனக்கு திருமணம் செய்து தர மறுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில், அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
குழந்தைக்கு தாய் பால் கொடுக்கக் கூட ராதிகா மறுத்து விட, கஜேந்திரனின் மனைவி தான் குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். அவர் தான் குழந்தைக்கு மஞ்சரி என்று பெயர் சூட்டியது.
மறுமணத்திற்கு மறுத்த ராதிகாவை பேசிப் பேசியே பாலாஜி சம்மதிக்க வைத்தார். கிருஷ்ணாவை தனது மகனாக ஏற்றுக் கொண்ட ராதிகாவினால், தனது சொந்தக் குழந்தையான மஞ்சரியை ஏற்றுக் கொள்ள முடியவே இல்லை.
அனைவரின் வெறுப்பையும் அறிந்திருந்த கஜேந்திரனின் மனைவி, தனது மகன் ருத்ரேஷ்வரின் மனதினுள் குழந்தை மீது தூய அன்பை விதைத்தார். அழகு பொம்மையாக இருந்த குழந்தையை பார்த்ததும் பிடித்து இருந்த நிலையில், அன்னையின் கூற்றும் சேர்ந்து கொள்ள, நான்கு வயதை நெருங்கிக் கொண்டிருந்த ருத்ரேஷ்வருக்கு குழந்தை மஞ்சரி இன்றியமையாதவளாக மாறிப் போனாள். குழந்தை மஞ்சரி மீது வெறுப்பு இருந்தாலும், மனைவியின் செயலை கஜேந்திரன் தடுக்கவில்லை.
ருத்ரேஷ்வர் ஐந்து வயதை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவனது அன்னை உடல்நலம் குன்றி இறந்தார். இறக்கும் தருவாயில் மகனிடம், மஞ்சரியை அவன் தான் நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியவர், கணவரிடம் மஞ்சரியை கவனித்துக்கொள்ள தனி ஆளை நியமிக்கச் சொன்னதோடு, எக்காரணம் கொண்டும் குழந்தையை வீட்டை விட்டு அனுப்பக் கூடாது என்றும் சத்தியம் வாங்கினார்.
ஒரு காலத்தில் சுயம் இழந்து இருந்த தன்னை சற்றே மீட்க உதவிய ருத்ரேஷ்வர் மீது ராதிகாவிற்கு என்றும் தனிப் பாசம் உண்டு.
தாயை இழந்த ருத்ரேஷ்வரை தாயாக இருந்து ராதிகா தாங்க, அந்த சிறு வயதிலேயே ருத்ரேஷ்வர் மஞ்சரியை தாயாகத் தாங்கினான்.
முதலில் ராதிகா ருத்ரேஷ்வருக்கு மஞ்சரி மீது இருக்கும் பாசத்தை மாற்ற முயற்சித்தார் தான். ஆனால், அவன் மஞ்சரிக்காக அவரையே தள்ளி வைக்கத் தயாராக இருக்கவும், முயற்சியை விட்டு விட்டார்.
வீட்டினரின் வெறுப்பிற்கு மத்தியில் ருத்ரேஷ்வரின் அன்பை மட்டுமே பற்றுக்கோலாகக் கொண்டு மஞ்சரி வளர ஆரம்பித்தாள்.
நரேன் மற்றும் நித்யாவிற்கு ராதிகா உணவூட்டுவதை மஞ்சரி ஏக்கத்துடன் பார்க்கும் வேளைகளில், ‘அம்முமாக்கு நான் ஊட்டி விடுறேன்’ என்று புன்னகையுடன் கூறும் ருத்ரேஷ்வர், கதை பேசியபடி அவளுக்கு உணவூட்டி அவளை சிரிக்க வைப்பான்.
“அம்மாக்கு ஏன் என்னை பிடிக்கலை?” என்று அழும் நேரத்தில்,
“எனக்கு அம்முமாவை மட்டும் தான் பிடிக்கும்” என்று ஆறுதல் கூறுவான்.
காரணமின்றி ராதிகாவிடம் திட்டு வாங்கும் பொழுதுகளிலும், பாலாஜியிடம் அடி வாங்கும் பொழுதுகளிலும், துவண்டு போகும் மஞ்சரியை தாங்கிப் பிடிக்கும் ருத்ரேஷ்வர், ராதிகா மற்றும் பாலாஜியிடம் சண்டை போடுவான்.
மஞ்சரியிடம் வெறுப்பைக் காட்டவில்லை என்றாலும் தங்கை மற்றும் பாலாஜியின் செயல்களை கஜேந்திரன் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்.
கஜேந்திரனையும் விட்டு வைக்காமல் ருத்ரேஷ்வர் எதிர்த்து கேள்வி கேட்பான். அன்னையின் மஞ்சரி மீதான பாசத்தை எடுத்துக் கூறி, தந்தையின் மனதை மாற்ற முயற்சித்தான். அதன் விளைவாக பாலாஜி மஞ்சரியை அடிக்கும் வேளைகளில் மட்டும், கஜேந்திரன் அவரை கண்டிக்க ஆரம்பித்தார்.
கிருஷ்ணாவிற்கும் மஞ்சரியைப் பிடிக்காது தான் என்றாலும், ருத்ரேஷ்வருக்கு பயந்து அவளிடம் வம்பு செய்ய மாட்டான். அவனும் அவளை கண்டு கொள்ள மாட்டான், அவளும் அவனை கண்டு கொள்ள மாட்டாள்.
நரேன் சில முறை ஆசையுடன் பழக முயற்சித்து ராதிகா மற்றும் பாலாஜியிடம் இருந்து திட்டு வாங்கியதில், விலகியே இருந்து கொண்டான். சிறு குழந்தையான நித்யா அன்னையை ஒட்டியே இருந்ததால், அவளும் மஞ்சரியுடன் பழகியது இல்லை.
இப்படியே நாட்கள் மாதங்கள் ஆகி வருடங்களாக ஓடியது.
மஞ்சரிக்கு பத்து வயது இருந்த பொழுது வீட்டிற்கு வந்த கிராமத்து உறவினர் ஒருவர் மஞ்சரி ருத்ரேஷ்வரை ‘ருது’ என்று பெயர் சொல்லி அழைப்பதைப் பார்த்து,
“மாமாவை பெயர் சொல்லி அழைக்கக் கூடாது.. ருது மாமானு வேணா கூப்பிடு” என்று அறிவுரை வழங்கினார்.
உண்மையான அக்கறையுடன் கூறிய அவரை மஞ்சரிக்குப் பிடித்து விட, அவர் கூறிய விஷயமும் பிடித்துவிட்டது. அதில் இருந்து ருத்ரேஷ்வரை ‘ருது மாமா’ என்று அழைக்க ஆரம்பித்தாள்.
அதில் பாலாஜிக்கு அவ்வளவு கோபம் வரும். அப்பொழுதே நித்யாவை ருத்ரேஷ்வருக்கு கல்யாணம் செய்து வைத்து சொத்தை ஆளும் ஆசையில் இருந்த பாலாஜிக்கு, மஞ்சரி ‘ருது மாமா’ என்று அழைக்கும் ஒவ்வொரு முறையும் அரைத்த மிளகாயை உடம்பில் பூசியது போல் எரியும்.