
தழல் ~ 13
கஜேந்திரன் மற்றும் ராதிகாவின் அன்னை அவர்களின் சிறு வயதிலேயே இறந்து விட, தந்தையின் கண்டிப்புடன் கூடிய வளர்ப்பில் தான் இருவரும் வளர்ந்தனர். தந்தை மிகவும் கண்டிப்பானவராக இருந்ததில், ராதிகா தமையனிடம் அதிகம் ஒட்டிக் கொள்ள, கஜேந்திரனுக்கும் தங்கை மீது பாசம் அதிகம்.
கஜேந்திரனுக்கு கல்யாணம் முடிந்து ருத்ரேஷ்வருக்கு ஒன்னரை வயது ஆகி இருந்தது. ராதிகா இளங்கலை படிப்பில் இறுதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்தார்.
கஜேந்திரனின் கல்லூரி நண்பனும் கஜேந்திரன் மனைவியின் தூரத்துச் சொந்தமான பாலாஜி, கஜேந்திரனின் திருமணத்திற்குப் பிறகு அவ்வப்பொழுது இவர்கள் வீட்டிற்கு வந்து சென்றதில் ராதிகா மீது காதல் வயப்பட்டார்.
பாலாஜி கஜேந்திரன் மனைவிக்கு அண்ணன் முறை ஆகும். பாலாஜியின் தந்தை இறந்து இருக்க, தாய் மட்டுமே இருந்தார். கஜேந்திரன் மனைவியின் சொந்தம் என்றாலும், இவர்கள் குடும்பத்திற்கு வாழ்ந்து கெட்ட குடும்பம் என்ற பெயர் மட்டுமே இருக்க, அவரது படிப்பு மட்டுமே அவருக்குச் சொத்தாக இருந்தது.
பாலாஜி தனது காதலை ராதிகாவிடம் கூற, அவரோ வேறு ஒருவரை காதலிப்பதாகக் கூறி பாலாஜியின் காதலை நிராகரித்துவிட்டார்.
அதில் பாலாஜிக்கு மிகுந்த வருத்தம் இருந்த போதிலும் மரணப்படுக்கையில் இருந்த அன்னையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேறு வழி இல்லாமல் அன்னை பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள, அவரோ கிருஷ்ணா பிறந்த பொழுது பிரசவத்தில் இறந்து விட்டார்.
தனது காதலுக்கு தந்தை மறுப்பு தான் தெரிவிப்பார் என்று தானே முடிவு செய்த ராதிகா, படிப்பை முடித்ததும் ஒரு நாள் வீட்டிற்குத் தெரியாமல் தான் காதலித்தவனை திருமணம் செய்து வந்து நின்றார். பாவம், தன்னை கல்யாணம் செய்துக் கொண்டிருப்பவன் பெண்களை மயக்கும் பெண்பித்தன் என்பதை அறியாமல் போனார்.
ஒருவேளை தமையனிடம் தனது காதலைப் பற்றி கூறி இருந்தால், அவர் அவனைப் பற்றி விசாரித்து இந்த விபரீதத்தை தடுத்து இருப்பாரோ என்னவோ!
திருமணத்தின் மூலம் மட்டுமே ராதிகாவை அடைய முடியும் என்பதை உணர்ந்த அந்த பெண் பித்தன், திட்டம் போட்டே ராதிகாவை சாட்சிகள் இன்றி சிறு கோவில் ஒன்றில் கல்யாணம் செய்து கொண்டான். அதன் பின் ராதிகாவை அழைத்துக் கொண்டு ராதிகாவின் வீட்டிற்கே செல்ல, அவன் எதிர் பார்த்தது போலவே ராதிகாவின் தந்தை அவர்களை ஏற்காமல் திட்டி விரட்டி விட்டார்.
அன்று இரவே மாரடைப்பில் படுத்த ராதிகாவின் தந்தைக்கு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை நடை பெற, இறுதியில் சிகிச்சைப் பலனின்றி ஐந்தாம் நாள் உயிர் துறந்தார்.
தந்தையின் காரியங்களை முடித்ததும் கஜேந்திரன் தங்கையை திருமணம் செய்து கொண்டவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். ஆனால், அதற்குள் நிலைமை கை மீறி இருந்தது.
ராதிகாவின் தோழிகளிடம் விசாரித்ததில் அவன் தூத்துக்குடியில் வேலை பார்ப்பதாக மட்டுமே அவரால் அறிந்து கொள்ள முடிந்தது.
அவர் தூத்துக்குடிக்கு சென்று தேட ஆரம்பித்த பொழுது, ஒரு நாள் ராதிகாவே ஓய்ந்த நிலையில் வீட்டிற்குத் திரும்பினார்.
ஆம்! ஒரு வாரத்தோடு ராதிகாவின் திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்து இருந்தது. ஒரு வாரம் மட்டுமே ராதிகாவுடன் குடும்பம் நடத்தியவன் அதன் பிறகு கம்பி நீட்டி இருந்தான். அவன் எங்கு சென்றான்? என்ன ஆனான்? என்று தெரியாமல் பதறியபடி அவனைத் தேடிய ராதிகாவிற்கு அவனது அலுவலகத்திற்கு சென்று விசாரித்தப் போது கிடைத்த செய்திகள் தலையில் இடியாக இறங்கியது.
அவன் இரண்டு நாட்கள் முன்பே வேலையில் இருந்து நீங்கியதாகவும் கடந்த ஒரு மாதமும் அறிவிப்பு காலத்தில் தான் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தான் என்றும், அவன் ஒரு பெண்பித்தன் என்றும் தெரிய வந்தது. மேலும் அவன் எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.
தோய்ந்த நிலையில் திரும்பிய ராதிகாவை கேள்வி கேட்காமல், கஜேந்திரனும் அவர் மனைவியும் ஏற்றுக் கொண்டனர்.
வாழ்வில் கேவலமாக தோற்றுப் போன உணர்வுடன், தந்தையின் மறைவிற்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ள, ராதிகா தன்னையே வெறுத்த நிலையில், யாரையும் பார்க்க விரும்பாமல் அறையின் உள்ளேயே அடைந்து இருந்தார்.
தனது குறும்பிலும், வசீகர மழலைச் சிரிப்பிலும் அனைவரையும் சட்டென்று கவர்ந்துவிடும் ருத்ரேஷ்வரை கஜேந்திரனின் மனைவி ராதிகாவின் அறைக்கு அனுப்பி வைக்க ஆரம்பித்தார்.
அதன் விளைவாக ராதிகா ருத்ரேஷ்வரின் மழலையில் மெல்ல அறையை விட்டு வெளியே வர ஆரம்பித்தார். பழைய ராதிகா திரும்பவில்லை என்றாலும் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் சொல்ல ஆரம்பித்தார்.
அதே நேரத்தில் ராதிகாவின் வரவையும், நிலையையும் அறிந்த பாலாஜி கஜேந்திரனை எதேச்சையாக சந்திப்பது போல் சந்தித்து, தனது தாயில்லாத ஆறு மாத குழந்தையான கிருஷ்ணாவைப் பார்த்துக்கொள்ள தான் மிகவும் சிரமப்படுவாதாகவும், அவர் உதவியாக தன்னை அவரது புற வீட்டில்(out house) தங்க அனுமதித்து, தான் வேலைக்கு செல்லும் வேளையில் அவர் வீட்டில் வேலை செய்யும் யாராவது ஒருத்தரை தனது மகனை பார்த்துக் கொள்ளும் வசதி செய்து தர முடியுமா என்று கேட்டார்.
வீட்டில் பேசி விட்டு சொல்வதாக கூறிய கஜேந்திரன், மனைவியின் சம்மதத்துடன் பாலாஜியை தனது புற வீட்டில் தங்க அனுமதித்தார்.
பாலாஜி ராதிகாவிடம் பேச முயற்சிக்க, அவரோ எதிலும் பற்றற்று இருந்தார். ராதிகா வீட்டிற்கு திரும்பி கிட்ட திட்ட நாலரை மாதங்கள் கடந்திருந்த நிலையில் கஜேந்திரன் மனைவியின் சந்தேகத்தினால், பெண் மருத்துவரை வீட்டிற்கு அழைத்து ராதிகாவை பரிசோதித்தப் பொழுது தான் அவர் கருவுற்று இருந்த விஷயம் தெரிய வந்தது.
தனக்கு இந்தக் குழந்தை வேண்டாம் என்று ராதிகா கத்தி ஆர்பாட்டம் செய்ய, மருத்துவரோ குழந்தையை அழிக்க முயற்சித்தால் அது ராதிகாவின் உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும் என்று கூறிவிட்டார்.
தங்கைக்கு மறுவாழ்வு அமைத்துத் தர வேண்டும் என்ற நினைப்பில் இருந்த கஜேந்திரன் தலையில் இடி விழுந்தது போல் தளர்ந்து போக, அவரை அவரது மனைவி தான் தேற்றினார்.
அந்தப் பெண் பித்தனின் குழந்தை தனது கருவில் வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியாத ராதிகா தற்கொலைக்கு முயற்சித்த பொழுது, பாலாஜி தான் காப்பாற்றினார். வீட்டில் இருக்கும் நேரங்களில் முடிந்தளவு ராதிகா மீது கண் வைத்திருக்கும் பாலாஜி, அவர் மொட்டை மாடிக்குச் சென்ற போது பின் தொடர்ந்து சென்று அவரைக் காப்பாற்றி இருந்தார்.
ராதிகாவின் இந்த முடிவில் மேலும் தளர்ந்த கஜேந்திரன் பாலாஜியிடம் கலங்கிய விழிகளுடன் உணர்ச்சி பூர்வமாக நன்றி தெரிவிக்க, பாலாஜியோ ராதிகாவை தனக்கு மறுமணம் செய்து தர அனுமதி கேட்டார்.
தான் ராதிகாவை காதலிப்பதையும், முன்பு தனது காதலுக்கு ராதிகா மறுப்பு தெரிவித்ததையும் கூறியே அனுமதி கேட்டார்.
வெள்ளத்தில் சிக்கியவனுக்கு தப்பிக்கும் மார்க்கமாக மரக்கிளை கிடைத்தது போன்ற உணர்வில் கஜேந்திரன் மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்தார். ஆனால் ராதிகா லேசில் ஒத்துக்கொள்ளவில்லை.
தங்கையை இழக்க இருந்த நிலையில் கஜேந்திரனின் ஆழ் மனதினுள் கருவில் இருந்த குழந்தை மீது அவர் அறியாமலேயே வெறுப்பு உதித்து இருந்தது.