பின் கஜேந்திரனைப் பார்த்து,
“காத்தவராயனை நேத்து நைட்டே தூக்கிட்டேன்.. ஆனா அவன் இவனுக்கு எதிரா எந்த உண்மையையும் சொல்லலை.. எல்லா ஆதாரமும் அவனுக்கு எதிரா இருக்குதுன்னும், அவன் தான் தூக்குக்குப் போவான்னு சொல்லியும், அவன் வாயே திறக்கலை..” என்றபடி பாலாஜியைப் பார்த்து,
“இந்த கொலையில் இந்த நாதாரியும் கூட்டானு தெரிய வேண்டியது இருந்தது.. நரேன் வேற இன்ஸ்பெக்டருக்கு வீடு வாங்கிக் கொடுத்து இருந்தான்.. இவனை காப்பாத்த செய்தானானு தெரிய வேண்டியது இருந்தது..
இப்போ இங்கே விசாரிச்சதில் கலைச்செல்வி நகைக்கடையில் வேலை பார்த்தது, இந்த ரெண்டு நாதாரிகளை தவிர, உங்க யாருக்கும் தெரியலைனு புரிந்தது..
நித்யா மேல இவனுக்கு இருக்கிற பாசத்தை வைத்து இவனை பேச வைக்க நினைத்தேன். ஆனா, இவன் கொஞ்சம் கூட அசரவே இல்லை” என்றாள்.
ருத்ரேஷ்வர், “காத்தவராயன் எப்படி வாயை திறந்தான்? என்ன தான் நடந்தது?” என்று கேட்டான்.
“எனக்கு கீழ் இருக்கிற இன்ஸ்பெக்டர் விமல்ராஜ் பணம்னா எதுவும் செய்யும் ஆள்.. அது எப்படியும் இவனுக்கும் காத்தவராயனுக்கும் தெரிந்து இருக்கும்னு எனக்கு தெரியும்.. அதான் இன்னைக்கு காலையில் நான் கிளம்புறப்ப கபிலன் கிட்ட விமல்ராஜ் குரலில் பேசுற ஒரு ஆளை வைத்து காத்தவராயன் காதுபட கிருஷ்ணா பணம் கொடுத்து நானும் கபிலனும் இல்லாத நேரத்தில் லாக்கப்பில் வைத்தே அவனை போட்டு தள்ள சொன்னதா சொல்ல வச்சேன்..
அடுத்த பத்து நிமிஷத்தில் கபிலன் போய் பேசவும், எல்லா உண்மையையும் சொல்லிட்டான்..
நகைக்கடையில் ட்ரெஸ் கோட் இருக்குது இல்லையா.. கலைச்செல்வி கடைக்கு வந்து, அங்கே இருக்கிற ரெஸ்ட்ரூமில் தான் சுடிதாரில் இருந்து சரீக்கு மாறுவா.. அப்படி அவ ட்ரெஸ் சேஞ்ச் செய்றதை திருட்டுத்தனமா வீடியோ எடுத்து தன்னோட இச்சைக்கு பலியாகச் சொல்லி மிரட்டி இருக்கிறான்.” என்ற போது மீண்டும் கிருஷ்ணாவிற்கு இரண்டு மிதி விழுந்தது.
அடுத்து கபிலன் கூறியதைக் கூறி முடிக்கவும், கபிலன் வரவும் சரியாக இருந்தது.
கபிலனிடம் கிருஷ்ணாவை ஒப்படைத்தவள், “எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்குது.. இதை முடிச்சிட்டு கமிஷனர் சாரை பார்த்துட்டு வரேன்.” என்று கூறி அவனை அனுப்பினாள்.
வேலையாட்கள் நகர போக, “இருங்க” என்ற பைரவி, “உங்களில் பாதி பேர் பல வருஷமா இங்கே வேலை பார்க்கிறீங்க சரியா?” என்று கேட்டாள்.
பாதி பேர் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினர்.
“அதான் இருக்க சொல்றேன்” என்றவள் பாலாஜியைப் பார்த்து, “அப்போ என்ன சொன்ன! பழி வாங்குறேனா! நான் ஏன் உன்னைப் பழி வாங்கப் போறேன்? என்ன காரணம்?” என்று நிதானமாகக் கேட்டாள்.
“அது.. அது” என்று பாலாஜி திணற,
ராதிகாவைப் பார்த்து, “என்ன ராது! இந்தாளுக்கு நீ ரெண்டாம் தாரம்னு உன்னோட பிள்ளைகளுக்கு சொல்லலையா!! ச்ச.. ச்ச” என்று போலியாக உச்சுக் கொட்டிய பைரவி,
“உன் பசங்க நான் சொன்னப்ப எவ்ளோ அதிர்ச்சியா உன்னைப் பார்த்தாங்க தெரியுமா!” என்றாள்.
“வந்த வேலை முடிந்தது தானே! கிளம்பு” என்று கத்திய ராதிகா நரேனை உலுக்கியபடி,
“டேய் இவளை வெளியே அனுப்பு” என்று கத்தினார்.
கிருஷ்ணா தனக்கு செய்த துரோகத்தில் அதிர்ச்சியில் இருந்த நரேன், அவரது உலுக்கலில் விழிப்படைந்து, “ஹான்.. என்ன!” என்றான்.
“ஏசிபிக்கு தான் வேலை முடிந்து இருக்குது” என்றவள்,
“ஆமா.. இந்தாளுக்கு நீ ரெண்டாம் தாரங்கிறதையே சொல்லலைனா, நீயும் இந்தாளுக்கு செகண்ட் ஹன்ட் தான்னும், இந்த பன்னாடையை கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி ஒரு பொறுக்கியை நம்பி வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து ஒரு குழந்தையைப் பெத்ததையும் சொல்லி இருக்க மாட்டியே!” என்று கூறிய போது, அவளது விழிகள் தழலாய் தகித்தது.
பைரவியின் கூற்று மற்றும் ரௌத்திரத்துடன், கஜேந்திரன் கூறிய பதினாறு வருட கணக்கு என்று ராதிகாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவர் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார். அவரது பார்வையில் இருந்தே அவர் தன்னை கண்டு கொண்டதை பைரவி புரிந்து கொண்டாள்.
நம்ப முடியாத அதிர்ச்சியுடன், “அம்மா!” என்று அழைத்த நித்யா, பெரியவர்கள் அமைதியாக இருக்கவும்,
“அம்மா இவ சொல்றது உண்மையா?” என்று வினவினாள்.
நரேன், “அப்போ அந்த சின்னப் பொண்ணு மஞ்சரி உங்க பொண்ணு தானா?” என்று அதிர்ச்சியுடன் ராதிகாவிடம் கேட்டான்.
நித்யா ராதிகாவை உலுக்கியபடி, “பொய் தானேமா! பொய்னு சொல்லுங்க” என்றாள்.
நரேன் கண் முன்னால், அந்தச் சின்ன பெண்ணிடம் தன் தாய் காட்டிய வெறுப்பு நிழலாய் நினைவிற்கு வந்தது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க, அவனால் இதை சற்றும் ஏற்க முடியலை.
“சின்ன வயசில் நான் கேட்டப்பலாம் அந்த பொண்ணு ஒரு பொறுக்கியோட பொண்ணுனும்.. மாமா ஆதரவு தந்து இங்கே வச்சு இருக்காங்கனும் சொன்னீங்க! ஏன்மா பொய் சொன்னீங்க?” என்று நரேன் கத்த,
ராதிகா கோபமும் வெறுப்புமாக, “ஏன்னா என்னோட கருப்பு பக்கத்தோட சின்னமான இவளை என்னோட மகள்னு சொல்லிக்க நான் விரும்பலை” என்று கத்தினார்.
பைரவி இகழ்ச்சியும் நக்கலுமாக, “சொல்லாத.. எனக்கு தான் கேவலம் அது” என்றாள்.
“எதுக்குடி பதினாறு வருஷம் கழிச்சு வந்து இருக்கிற? எங்க குடும்பத்தை பிரிக்கவா?” என்று ராதிகா கத்த,
ருத்ரேஷ்வர், “அத்தை” என்று கண்டன குரலில் அழைத்தான்.
“இவ நம்ம குடும்பத்துக்கு வேணாம், ருத்ரா” என்றவர் கஜேந்திரனைப் பார்த்து, “அண்ணா இவ.. அந்த பொறுக்கிக்கு பிறந்தவ.. என்னோட வாழ்க்கையோட கரும்புள்ளி.. இவ வேண்டாம்.” என்றார்.
ருத்ரேஷ்வர் கோபத்துடன், “அத்தை.. பார்த்து பேசுங்க.. யாரு கரும்புள்ளி? அம்மு என்னோட தேவதை.. இந்த வீட்டோட மகாலட்சுமி.” என்றான்.
“இல்லை.. இல்லை.. இல்லை” என்று வெறிபிடித்தவர் போல் கத்தியவர், “இவ அசிங்கம்” என்றார்.
“யாரு அசிங்கம்? நானா நீயா?” என்று ஆவேசத்துடன் ராதிகாவிடம் கேட்ட பைரவி,
“நானா உன்னை அந்த பொறுக்கியை நம்பி கம்பி நீட்ட சொன்னேன்? நானா உன்னை அவனோட படுக்கச் சொல்லி என்னை பெத்துக்கச் சொன்னேன்?” என்றாள்.
கஜேந்திரனைப் பார்த்து, “பாரு அண்ணா எப்படி பேசுறா! பொண்ணு மாதிரியா பேசுறா? அதுவும் அம்மா கிட்ட பேசுற பேச்சா!”
என்று ராதிகா பேசிக் கொண்டிருக்க,
“அம்மா வா!” என்று சத்தமாக வாய்விட்டு சிரித்த பைரவி, இகழ்ச்சியும் வெறுப்பும் கலந்த பார்வையுடன்,
“என்னைக் கேட்டால், நான் உதிக்க காரணமான அந்த பொறுக்கி உன்னை விட பெட்டர்” என்றாள்.
தழல் தகிக்கும்…