பாலாஜியின் பார்வையை கவனித்தவள், “உனக்கு எப்படி கலைச்செல்வியை தெரியும்?” என்று கேட்டாள்.
“நான் ஒரு காலத்தில் கலைச்செல்வி அப்பா கிட்ட வேலை பார்த்தேன்.. அவருக்கு உடம்பு சரி இல்லைனு தெரிந்தப்ப பார்க்கப் போனேன்.. அப்போ தான் அந்த பொண்ணு வேலை கேட்டுச்சு.. வீட்டில் சொல்ல வேணாம்னு சொன்னா.”
“ஸோ யாருக்கும் தெரியாதுனு நினைச்சு கலைச்செல்வி நகைக்கடையில் வேலை பார்த்ததை மூடி மறைச்சிடலாம்னு தப்புக் கணக்கு போட்டுட்டீங்க.” என்றவள் ராதிகாவைப் பார்த்து,
“இவனைப் போய் விழுந்து விழுந்து காதலிக்கிறியே! மூத்த தாரத்து மகனைக் காப்பாற்ற உன்னோட மகனை பலி கொடுக்க, இவன் தயங்கவே இல்லை.” என்றாள்.
நரேனும் நித்யாவும் ராதிகாவை அதிர்ச்சியுடன் பார்க்க,
கிருஷ்ணா, “என்ன உளறல்?” என்று கூற,
பாலாஜி, “இல்லை ராது.. இவ சொல்றதை நம்பாத.. இவ என்னைப் பழி வாங்க இப்படி பொய் சொல்றா” என்றார்.
அப்பொழுது அவளது கைபேசியில் அழைப்பு வரவும்,
கிருஷ்ணாவைப் பார்த்து அலட்சியமும் நக்கலுமாக, “உன் கிட்ட அப்புறம் வரேன்” என்றவள் அழைப்பை எடுத்து,
“சொல்லுங்க கபிலன்” என்றாள்.
“உங்க பிளான் சக்செஸ் மேடம்.. காத்தவராயன் எல்லா உண்மையையும் சொல்லி விட்டான்.. பாலாஜியோ நரேனோ உடந்தை இல்லை..
கிருஷ்ணா பொண்ணுங்க விஷயத்தில் மோசம்.. கலைச்செல்வி ட்ரெஸ் சேஞ் செய்ததை வீடியோ எடுத்து மிரட்டி இருக்கிறான்..
ஆனா மத்த பொண்ணுங்களை மாதிரி வீடியோ பார்த்து கலைச்செல்வி அழுது புலம்பலை.. பயப்படலை.. இவனை துணிந்து எதிர்த்து தான் நின்னு இருக்கா.. வீடியோவை இவன் நெட்டில் போடுவேன்னு மிரட்டின அன்னைக்கு தான், சாரை பார்க்க பாக்டரி போய் இருக்கா.. அங்க வச்சு அவளை எதேச்சையா பார்த்த காத்தவராயன் தான் அவளை கடத்தியது.. அந்த ப்ரேஸ்லெட் இவனோடது தான். அண்ட் இவன் இடது கை பழக்கம் உடையவன்..
*** ஏரியாவில் கிருஷ்ணாக்கு வீட்டுக்கு தெரியாம ஒரு கெஸ்ட் ஹௌஸ் இருக்குது.. அங்கே தான் பொண்ணுங்களை நாசம் செய்வானாம்.. காத்தவராயன் அங்கே தான் கலைச்செல்வியை தூக்கிட்டு போய் இருக்கிறான்.. தப்பிச்சு ஓட பார்த்த கலைச்செல்வியை பிடிச்சு அடிச்சப்ப, மர டி-பாயில் இடித்து பின் மண்டையில் அடிபட்டு பேச்சு மூச்சு இல்லாமப் போனதில், முதல்ல செத்துட்டதா நினைத்து இருக்கான்க..
அப்புறம் உயிர் லேசா இருக்கிறது தெரிந்ததும், அவளால் ஆபத்துனு கொல்ல திட்டம் போட்டது கிருஷ்ணா தான்.. காலேஜ் மாடியில் இருந்து தூக்கிப் போடச் சொன்னது அவன் தான்.. அப்பனா தான் விசாரணைனு பிரச்சனை வரப்ப நரேன் மேல பழி விழும்னும், தான் தப்பிச்சிடலாம்னும் பிளான் போட்டு இருக்கிறான்..
அது மட்டுமில்ல, நரேனுக்கே தெரியாம அவன் கிட்ட பேச்சு கொடுத்து, அவனை இன்ஸ்பெக்டரை விலைக்கு வாங்குற முடிவை எடுக்க வச்சு இருக்கிறான்.. டாக்டருக்கு பணம் கொடுத்து ரிப்போர்ட்டில் உண்மையை மறைச்சது, இவனுங்க தான்.. காத்தவராயன் அண்ட் டாக்டரோட போன் பில் எடுத்தாச்சு..
கலைச்செல்வியை கடத்தின கார் இவனுங்க பெயரில் இல்லை. ஆனா பொண்ணுங்க விஷயத்துக்கு இவனுங்க பயன்படுத்துற கார் தான் அது.. அந்தக் கார் கெஸ்ட் ஹவுஸ்ஸில் தான் இருக்குமாம்..
கிருஷ்ணா மொபைல் அண்ட் லேப்டாப்பில் வீடியோஸ் இருக்குது.. நான் இப்போ அங்க தான் வந்துட்டு இருக்கிறேன்.. ஏட்டு தான் வண்டி ஓட்டிட்டு இருக்கார்.. அஞ்சு நிமிஷத்தில் அங்கே இருப்போம்”
“குட்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவள் கிருஷ்ணா அருகே சென்று விலங்கை அவன் கையில் மாட்டப் போக,
அவன், “ஏய்! என்ன செய்ற?” என்று கத்தியபடி கையை உதறினான்.
பளார் என்று அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவள் கோபத்துடன்,
“தப்பான வீடியோ எடுத்து பொண்ணுங்களை உன்னோட சல்லாபத்துக்கு பலியாக்குற நாய்! குரலை உயர்த்துறியோ! கொன்னுடுவேன் ராஸ்கல்!” என்றபடி மீண்டும் அறைந்தாள்.
அவன் கோபத்துடன் சீறப் பார்க்க, இரு கைகளையும் பின்னால் கொண்டு சென்று விலங்கிட்டவள், “உன்னை எதிர்த்து தைரியமா போராடிய பொண்ணைக் கொன்னுட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற! இந்த கேஸ் மட்டும் பப்ளிக் இஸ்ஸுவா இல்லாமல் இருந்தா, இந்நேரம் என்னோட அணுகுமுறையே வேறயா இருந்து இருக்கும்..” என்றவள் அவன் காலில் உதைத்து அவனை மண்டியிட வைத்தாள்.
“உன்னோட பிஏ.. வலது கை.. மாமா.. எக்ஸட்ராவா இருக்கிற காத்தவராயன் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.. உன்னை அள்ளிட்டு போகத் தான் நான் வந்தது” என்றவள் ருத்ரேஷ்வரைப் பார்த்து, “இவனோட லேப்டாப் வேணும்” என்றாள்.
ருத்ரேஷ்வர் அவனது மடிக்கணினியை கொண்டு வந்து தரவும், அதை பெற்றுக் கொண்டு கிருஷ்ணாவின் சட்டை பையில் இருந்து அவனது கைபேசியையும் எடுத்துக் கொண்டாள்.
கஜேந்திரன், “இவன் தான் கொலையாளினு முதல்லேயே தெரியும்னா, ஏன் எங்களை எல்லாம் சந்தேகமா கேள்வி கேட்ட?” என்று கேட்டார்.
“நேத்து செந்தில்னு ஒரு லோக்கல் ரௌடி காத்தவராயனை கை காட்டவுமே, கொலை செய்தது இவன் தான்னு கண்டு பிடிச்சுட்டேன்.” என்ற பைரவியின் பேச்சை இடையிட்ட கிருஷ்ணா,
“நான் கொலை செய்யலை.. காத்தவராயன் தான் கொலை செய்தான்.” என்று கத்தினான்.
“கொலை செய்தது அவனா இருக்கலாம்.. ஆனா திட்டம் போட்டது நீ, அண்ட் உனக்காக தானே செய்தான்!” என்றவள்,
“நான் சொல்லாம நீயா வாயை திறந்த, யோசிக்காம ட்ரிகரை வாய்குள்ள விட்டு அழுத்திடுவேன்.” என்று மிரட்டினாள்.