“உங்க மன்னிப்பு எதையும் மாற்றி விடாது” என்று கோபத்துடன் கூறியவள் அவஸ்தையுடன் அமர்ந்து இருந்த ருத்ரேஷ்வரைப் பார்த்து, “என்ன ருத்ரா அப்பானதும் வலிக்குதா?” என்று கேட்டாள்.
அவளை கசப்பான புன்னகையுடன் பார்த்தவன்,
“யாரா இருந்தாலும் வினையை விதைத்தா, வினையை அறுத்து தான் ஆகணும்” என்றான்.
அப்பொழுது கிருஷ்ணா, நரேன் மற்றும் நித்யா வந்தனர்.
நித்யா பைரவியை முறைத்தபடி ருத்ரேஷ்வர் அருகே அமர,
பைரவி அமைதியாக ருத்ரேஷ்வரைப் பார்க்க, அவன் எழுந்து வந்து பைரவி அருகே அமர்ந்தான்.
நித்யாவை அலட்சியமும் நக்கலுமாக பார்த்த பைரவி, “கணேசன்” என்று அழைத்தாள்.
“எஸ் மேடம்” என்றபடி அவர் வர,
“வேலை செய்றவங்களை அசெம்பிள் செய்ய இன்னும் எவ்வளவு நேரம் வேணும்?” என்றாள்.
அவர் சிறு பதற்றத்துடன், “இல்ல மேடம்.. நீங்க வீட்டு ஆளுகளுடன் பேசிட்டு இருந்தீங்களேனு” என்று இழுத்து நிறுத்தினார்.
“எல்லோரையும் வரச் சொல்லுங்க” என்ற அவளது குரலிலேயே அனைவரும் அங்கே வந்து நின்றனர்.
“ஆரம்பிக்கலாமா?” என்று பைரவி கேட்ட பொழுது,
தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத நித்யா அவ்விடத்தை விட்டு கிளம்பப் பார்க்க,
பைரவி, “நான் சொல்றவரை யாரும் இருக்கும் இடத்தை விட்டு நகரக் கூடாது” என்று கடினக், குரலில் கட்டளையிட்டாள்.
நித்யா கோபத்துடன், “போனா என்ன செய்வ?” என்று வினவ,
“விசாரணைக்கு ஒத்துழைக்கலைனு சொல்லி ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிப்பேன்.. எப்படி வசதி?” என்றாள்.
பயமும் அதிர்ச்சியுமாக நித்யா பார்க்கவும்,
நரேன், “தேவை இல்லாம மிரட்டாதீங்க” என்று கூற,
கஜேந்திரன், “வீட்டுப் பெண்களும் விசாரணைக்கு அவசியமா?” என்று கேட்டார்.
“அவசியம் தான்” என்று பைரவி கூற,
“இந்த கேஸ்ஸுக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதப்,ப அவங்க எதுக்கு விசாரணைக்கு?” என்று கேட்டார்.
“அப்போ உங்களுக்கு சம்பந்தம் இருக்குதா?” என்று பைரவி வினவ,
“இல்லை” என்று நேர்பார்வையுடனே கூறினார்.
“தப்புக்கு துணை போறது கூட குற்றம் தான்.” என்று இருபொருள் படக் கூறியவள், நித்யாவைப் பார்த்து, “ஈஸ்வருக்காக என்ன வேணாலும் செய்வியாமே! கலைச்செல்விக்கு ஈஸ்வர் மேல ஒரு தலை காதல் இருந்ததாகவும், அதை பொறுக்காத நீ தான் அவளை போட்டுத் தள்ளிட்டனு ஒரு பேச்சு இருக்குது.. அப்படியா?” என்று கூர்விழிகளுடன் வினவ,
அதிர்ச்சி கலந்த பயத்துடன் வெடவெடத்த நித்யா, “இல்ல.. இல்ல.. நான்.. நான் யாரையும் கொலை செய்யலை.. எனக்கு அந்தப் பொண்ணு யாருனே தெரியாது.” என்றபடி அன்னையின் கையை பற்றிக் கொண்டவள்,
“அம்மா நான் எதுவும் செய்யலை” என்று அழுதாள்.
“ஒன்னுமில்லடா” என்றபடி மகளை அரவணைத்த ராதிகா பைரவியை முறைத்தபடி கிருஷ்ணாவிடம்,
“கிருஷ்ணா கமிஷனருக்கு போனை போட்டு விசாரணைங்கிற பெயரில் இவ ரொம்ப அராஜகம் செய்றானு சொல்லுடா.” என்றார்.
“அராஜமா! நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. ஓவரா பேசின குடும்பத்தோட லாக்கப்பில் வச்சு விசாரிப்பேன்.” என்று மிரட்டினாள்.
நரேன் கோபத்துடன், “சும்மா மிரட்டாதீங்க” என்றான்.
“அப்போ.. ஆதாரத்துடன் மிரட்டலாம்னு சொல்ற!” என்றவள் தன்னிடம் இருந்த கோப்பியத்தில் இருந்து ஒரு காகிதத்தை அங்கிருந்த சிறு மேசை மீது போட்டாள்.
பதற்றத்துடன் அதை அவன் எடுக்க,
“உன்னோட வங்கி கணக்கு தான் அது” என்றாள்.
அந்தக் காகிதத்தைப் பார்த்தவன் பதற்றத்தை மறைக்க முயற்சித்தபடி, “நான் யாருக்கும் இவ்வளவு பெரிய தொகையை அனுப்பலை.. யாரோ என் அக்கொன்ட்டை ஹக் செய்து இருக்காங்க.” என்றான்.
“உன்னோட போனையும் ஹக் செய்துட்டாங்களா?” என்றபடி இன்னொரு காகிதத்தை எடுத்துப் போட்டாள்.
அவன் அதை எடுக்காமல் அவளையே பார்க்க,
“உன்னோட போன் பில்.. நீ எத்தனை முறை நாராயணன் கூட பேசினனு இருக்குது.” என்றவள்,
“நாராயணன் விசாரணையில் எல்லாத்தையும் சொல்லிட்டார்” என்றாள்.
அவசரமாக, “காலேஜ் பெயர் கெடக் கூடாதுனு தான் அப்படி செய்தேன்.. மத்தபடி நான் கொலை செய்யலை.. என்னை நம்புங்க.. நான் கொலை செய்யலை” என்றவன் ருத்ரேஷ்வரைப் பார்த்து,
“நிஜமாவே நான் கொலை செய்யலை ருத்ரா.. சொல்லு” என்றான்.
“அங்கே என்ன சிபாரிசு? அவனோட அப்பாவை நான் கைது செய்தாலே, அவன் என்னை தடுக்க மாட்டான்” என்றவள் கஜேந்திரனைப் பார்த்து,
“என்ன மிஸ்டர் கஜேந்திரன்?” என்றதும்,
ருத்ரேஷ்வர் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.
அவளோ, “கலைச்செல்வியோட இடது புஜத்தில் அழுத்தி பிடித்த தடமும், இடது கன்னத்தில் அடித்த விரல் தடமும் இருந்து இருக்குது.. பின் தலையில் இன்னொரு இடத்தில் கூட காயம் இருந்ததாம்” என்றபடி பாலாஜி மற்றும் கிருஷ்ணாவின் முக மாற்றங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
பாலாஜியின் முகத்தில் பதற்றம் தெரிய, கிருஷ்ணா அமைதியாகத் தான் இருந்தான்.
மேலும் அவர்களை ஓரப்பார்வையில் கவனித்தபடி கஜேந்திரனிடம், “ஸோ… கொலையாளி இடது கை பழக்கம் உடையவன்” என்றாள்.
கஜேந்திரன் அதிர்ச்சியுடன், “என்னை சந்தேகப்படுறியா?” என்று வினவ,
“ஈஸ்வரே என்னோட லிஸ்ட்டில் இருந்தான்.” என்றவள்,
“என்ன கிருஷ்ணா அன்னைக்கு அவ்ளோ சவுண்ட் விட்ட! இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்கிற?” என்று கேட்டாள்.
“என்னிடம் எதுவும் கேட்கலையே!” என்று அவன் கூற,
“ஓ” என்றவள், “அப்புறம் பாலாஜி.. நீ தான் கலைச்செல்வியை வேலையில் சேர்த்து விட்டியாமே!” என்றாள்.
“அது..” என்று பாலாஜி திணற, கிருஷ்ணாவை தவிர மற்றவர்கள் அவளை யோசனையுடன் பார்த்தனர்.
கலைச்செல்வி நகைக்கடையில் வேலை பார்த்தது, பாலாஜி மற்றும் கிருஷ்ணாவைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.
அவள், “ஆமாவா இல்லையா?” என்று மிரட்டலாகக் கேட்டாள்.
“ஆ..மா”
“இதை ஏன் முதல்லேயே சொல்லலை?” அரை நொடி கிருஷ்ணாவைப் பார்த்த பாலாஜி, “என்னிடம் யாரும் விசாரிக்கலையே” என்றார்.