
அடுத்த நாள் காலை சரியாக ஏழரை மணிக்கு காக்கி உடையில் கம்பீரமாக பைரவி கஜேந்திரனின் வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள்.
இந்த முறை பைரவியைக் கண்டதும் வெளி காவலாளி ஓடிச் சென்று கதவைத் திறந்ததோடு, விறைப்பாக வணக்கம் வேறு செலுத்தினான்.
தனது வண்டியை அவன் அருகே நிறுத்திய அவள், “இப்போ எதுக்கு சல்யுட் அடித்த? சுட்டுடுவேன்னு பயத்தில் செய்தியா? இல்லை.. உன்னோட வருங்கால முதலாளினு செய்தியா?” என்று கேட்டாள்.
பயம் கலந்த அதிர்ச்சியுடன் பதில் சொல்வதறியாது திணறியவன், “ரெ..ண்..டும்.. தா.ன் மே..ம்” என்று ஒருவாறு தொண்டை குழி ஏறி இறங்கியபடி சொல்லி முடித்தான்.
“பொழச்சுக்குவ” என்றவள் உள்ளே சென்றாள்.
பயம் கலந்த மரியாதையுடன் அவளைப் பார்த்த மேற்பார்வையாளர், காலை வணக்கம் சொல்லவா வேண்டாமா என்ற குழப்பத்துடன் நிற்க,
அவள், “விஷ் செய்யலாம் தப்பில்லை.” என்றதும்,
அவர் அதிர்வுடன், “குட்.. மார்னிங் மேடம்” என்றார்.
“ஹ்ம்ம்” என்று தலையசைத்து விட்டு கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள், அது சரியாக ஏழரை என்று காட்டவும்,
உதட்டோர மென்னகையுடன் வீட்டின் உள் கூடத்திற்குள் நுழைந்தாள்.
இவள் வருவதை உப்பரிகையில் இருந்து பார்த்திருந்த ருத்ரேஷ்வர், வேகமாக கீழே வந்து புன்னகையுடன், “வாங்க ஏசிபி” என்றான்.
“வீட்டு உருப்படிகளை வரச் சொல்லு” என்றபடி மெத்திருக்கையில்(sofa) கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.
தன்னவளின் கம்பீரத்தை ரசித்தபடி அகத்தொடர்பு மூலம் அனைவரையும் வரச் சொல்லி விட்டு அவள் எதிரில் அமர்ந்தவன், “உன்னோட தொடுப்பு வரலை?” என்று கேட்டான்.
“அஃபிஸியல் மட்டும்னா வந்து இருப்பார்.. என்னோட ஆடுபுலி ஆட்டத்தையும் தொடங்க வந்து இருக்கிறேனே!”
“அப்போ நான் என்னோட ஆட்டத்தை தொடங்கலாம்”
லேசாக தலை சரித்துப் பார்த்தவள், “இன்னைக்கே கூட கல்யாணம் இருக்கலாம்னு சொன்ன! செய்துக்கலாமா?” என்றபடி புருவம் உயர்த்தினாள்.
அவளது பாவனையை அணுஅணுவாக ரசித்தபடி விரிந்த புன்னகையுடன்,
“செய்துக்கலாமே!” என்றவன், “அதை மட்டுமா சொன்னேன்!” என்று கூறி மையலுடன் அவளது உதட்டைப் பார்த்தான்.
‘எனக்காக யோசிக்கும் இவனுக்கு நான் நியாயம் செய்ய முடியுமா! என்னால் இவனை காதலிக்க முடியுமா?’ என்று யோசித்தவள் அறியவில்லை, அவனுக்காக இவ்வாறு யோசிப்பதே காதலின் ஆணி வேர் தான் என்று.
தனது கூற்றிற்கு பதில் அளிக்காதவளின் முகத்தைப் பார்த்தவன், அவள் கண்ணில் தெரிந்த சிறு தவிப்பைக் கூட தாங்கிக் கொள்ள முடியாதவனாக, “அம்முமா என்னடா?” என்று தவிப்புடன் கேட்டான்.
அந்த அழைப்பிலும் அவனது அன்பிலும் கரைய துடித்த அவளது மனம், படியில் இறங்கி வந்து கொண்டிருந்த பாலாஜி மற்றும் ராதிகாவை கண்டதும் இறுகியது.
அவளது முக மாற்றத்தில், “அம்மு” என்று அவன் அழைக்க,
அவனை ஆழ்ந்து நோக்கியபடி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “பைரவியிடம் இருந்து அம்முவை மீட்டெடுக்க, நீ ரொம்பப் போராடனும்.” என்றவள் மிடுக்கான பார்வையுடன் ஆளுமை நிறைந்த குரலில்,
“வீட்டு மேற்பார்வையாளரைக் கூப்பிடு” என்றாள்.
அப்பொழுது தான் பாலாஜி மற்றும் ராதிகாவை கவனித்தவன், வேறெதுவும் பேசாமல், “கணேசன்” என்று அழைத்தான்.
“சார்” என்றபடி அவர் வந்து நிற்கவும், பைரவியை நோக்கி கையைக் காட்டினான்.
அவர், “மேடம்” என்றபடி அவள் அருகே வர,
“வேலை செய்றவங்க எல்லோரையும் ஹாலில் அசெம்பிள் செய்யுங்க” என்று கட்டளையிட்டாள்.
“சரி மேடம்” என்று விட்டு அவர் விரைந்து செல்ல,
இவளை முறைத்தபடி வந்த ராதிகா, “எதுக்கு வரச் சொன்ன ருத்ரா?” என்று கேட்டார்.
“பைரவி தான் எல்லோரையும் கூப்பிட சொன்னா, அத்தை” என்றான்.
பாலாஜி பைரவியை முறைத்தபடி, “இப்பவே அதிகாரம் செய்றா பார்! இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னா கேட்கிறியா?” என்றார்.
கணவரிடம், “இது ருத்ரா விருப்பம்.. இனி இதைப் பத்தி பேசாதீங்கனு சொன்னேனே” என்ற ராதிகா, “என்ன ருத்ரா இதெல்லாம்?” என்றார்.
ராதிகாவைப் பார்த்து, “எதா இருந்தாலும் என் கிட்ட கேளு” என்ற பைரவி பாலாஜியை நக்கலாக பார்த்து, “எங்க கல்யாண விஷயத்தில் தலையிட நீ யாரு?” என்று கேட்டாள்.
“ஏய்! மரியாதையுடன் பேசு” என்று கோபத்துடன் சீறிய ராதிகா,
“அவர் இந்த வீட்டோட மாப்பிள்ளை.. எல்லா விஷயத்திலும் தலையிட உரிமை இருக்குது” என்றார்.
“எங்க விஷயத்தில் தலையிட உனக்கே உரிமை இல்லை.. இதில் வீட்டோட மாப்பிள்ளையான இந்த பொறம் போக்கு அல்லக்கைக்கு என்ன உரிமை?” என்று அதிகமான நக்கல் கலந்த இகழ்ச்சியுடன் பைரவி கூற,
அதிகரித்த கோபத்துடன், “ஏய்!” என்று கத்திய ராதிகா, “என்ன ருத்ரா! அமைதியா இருக்கிற?” என்றார்.
“அவன் என்ன உனக்கு மௌத் பீஸா? உனக்கு வாய் இல்லை! ஆமா சும்மா சும்மா ஏ-னு சொல்றியே அதுக்கு மேல பி சி டி எல்லாம் தெரியாதா?”
ராதிகா கோபத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பப் போக,
சொடக்கிட்டு அழைத்த பைரவி, “ஹலோ! விசாரணைக்காக தான் உன்னை கூப்பிட்டு இருக்கிறேன்.. வந்து மூடிட்டு உட்காரு.” என்றாள்.
ராதிகா ருத்ரேஷ்வரை முறைக்க, அவன் அவர் பக்கம் திரும்பவே இல்லை.
அப்பொழுது, “வாம்மா” என்று புன்னகையுடன் அழைத்தபடி கஜேந்திரன் படிகளில் இறங்கி வர,
உதட்டோர வளைவுடன் அவரைப் பார்த்த பைரவி, “என்னோட பின்புலம் தெரிந்தாலும், இதே வரவேற்பு இருக்குமா?” என்று கேட்டாள்.
அவர் அமைதியான குரலில், “எனக்கு தெரியும்” என்றார்.
“பார்டா!” என்று நக்கலாக கூறியவள், “எந்த மரத்தில் கிடைத்த ஞானோதயம்?” என்று நக்கலும் இகழ்ச்சியுமாக கூறினாள்.
“பதினாறு வருஷத்துக்கு முன்னாடியே ஞானோதயம் வந்துருச்சுனு சொன்னா நம்புவியா?”
“வந்து! எதை கிழிச்சீங்க?” என்று அவள் சீற,
அவர் மனதார, “என்னை மன்னிச்சிடுமா” என்று கூறினார்.