மாலை ஆறு மணியளவில் பைரவிக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
பைரவி அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றதும்,
“மேடம் நான் சங்கவி பேசுறேன்” என்றார் எதிர் முனையில் இருந்தவர்.
“சொல்லுங்க சங்கவி”
“பையனுக்கு உடம்பு சரி இல்லை. அதான் போன் செய்யலை”
“கபிலன் சொன்னார்.. பையன் இப்போ ஓகேயா?”
“எஸ் மேடம்.. இப்போ பரவாயில்லை.. நீங்க அந்த டாக்டர் கிட்ட கேட்டது மாதிரி, கலைச்செல்வி கன்னத்தில் அடித்த விரல் தடம் இருந்தது மேடம்”
“ஹரஸ்மென்ட் மாதிரி?”
“ரேப் அட்டெம்ப்ட் மாதிரி எதுவும் இல்லை.. ஆனா, இடது தோள்பட்டை கீழ் பகுதியில் அழுத்தி பிடித்த தடம் இருந்தது.. அப்புறம் பின் மண்டையில் இரண்டு இடத்தில் அடி பட்டு இருந்தது.”
“தோள்பட்டை கீழ்னா புஜத்தில் சொல்றீங்க, சரியா?”
“ஆமா மேடம்”
“இடது புஜத்தில் மட்டும் தான் தடம் இருந்ததா? வலது பக்கம் இல்லையா?”
“இடது பக்கம் மட்டும் தான் இருந்தது மேடம்”
“பின் மண்டையில் இரண்டு இடத்தில் அடி பட்டிருக்குது. ஆனா ரிப்போர்ட்டில் ஒரு இடம் தான் குறிப்பிட்டு இருக்குது.. ஸோ ஏற்கனவே பின்மண்டையில் அடி பட்டு இறந்த கலைச்செல்வியோட டெட் பாடியை தான் காலேஜ் நாலாவது மாடியில் இருந்து போட்டு இருக்காங்க.. சரியா!”
“இல்லை மேடம்.. நாலாவது மாடியில் இருந்து விழுந்ததால் தான் அந்த பொண்ணு இறந்து இருக்குது”
“நிஜமாவா?”
“ஆமா மேடம்.. அந்த டாக்டரும், ஜூனியர் டாக்டரும் பேசினதை கேட்டதை சொல்றேன்..
‘நிஜமாவே நாலாவது மாடியில் இருந்து விழுந்ததில் தானே, இந்தப் பொண்ணு இறந்து இருக்குது.. அப்புறம் எதுக்கு இவ்ளோ பணம் தராங்க?’னு ஜூனியர் டாக்டர் கேட்டதுக்கு அந்த டாக்டர்,
‘கன்னத்திலும், புஜத்திலும் இருக்கிற விரல் தடத்தையும், பின்மண்டையில் வலது பக்கம் அடி பட்டதையும் மறைக்க தான் இந்தப் பணம்’னு சொன்னார் மேடம்”
“அந்த தடத்தை நீங்க பார்த்தீங்களா?”
“ஆமா மேடம்.. முதல்ல நானும் என் பிரெண்ட் வானதியும் தான் டாக்டரை அஸிஸ்ட் செய்ய இருந்தோம்.. அவர் வரதுக்கு முன்னாடி தயார் செய்துட்டு இருந்தப்ப தான், இந்த தடத்தை கவனிச்சேன், ஆனா பின் மண்டையை பார்க்கலை.. டாக்டர் உள்ள வந்து, ‘டாக்டர் அனில் என்னை அஸிஸ்ட் செய்வார், நீங்க ரெண்டு பேரும் வெளியே இருங்க’னு சொன்னதும் நாங்க வெளியே போய்ட்டோம்.. அப்புறம் எல்லாம் முடிஞ்சு அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை தற்செயலா நான் கேட்டேன் மேடம்.”
“உங்க பிரெண்ட் வானதிக்கு தெரியுமா?”
“இல்லை மேடம் நான் யார் கிட்டயும் சொல்லலை”
“கலைச்செல்வி உடம்பில் இருந்த தடத்தை அவங்க பார்க்கலையா?”
“அதை அவளும் பார்த்தா மேடம், ஆனா ரிப்போர்ட் பத்தி அவளுக்குத் தெரியாது.. ஆனா தெரிந்தாலும் அதை பத்தி உண்மையை சொல்ல முன்வர மாட்டா மேடம்.. அவளுக்கு அப்பா இல்லை.. ஒத்தை ஆளா, தம்பி தங்கைகள்னு குடும்பத்தை அவ தான் தாங்குறா.”
“உங்க பெயர் கூட வெளியே வராது.. நான் பார்த்துக்கிறேன்.. தேங்க் யூ” என்ற பைரவி, “அண்ட் உங்க தைரியத்தை பாராட்டியே ஆகணும்” என்றாள்.
“என்னோட கணவர் இராணுவ வீரர் மேடம்” என்று பெருமையுடன் கூறிய சங்கவி,
“கோர்ட்டில் சாட்சி சொல்ல நான் பயப்பட மாட்டேன் மேடம்.. வீரத்துடன் விவேகமும் வேணும்னு அவர் சொல்லுவார்.. அதான் உங்க கிட்ட ரகசியமா பேசணும்னு சொன்னேன்.. நீங்க உண்மையை வெளியே கொண்டு வர நேரத்தில் தயங்காம சாட்சி சொல்வேன் மேடம்.” என்று துணிச்சலுடன் முடித்தார்.
“உங்க வீரம் எங்கிருந்து வந்ததுனு புரியுது” என்றவள், “தேவைப்பட்டா சாட்சி சொல்ல கூப்பிடுறேன்” என்றாள்.
“அந்த கொலையாளியை விட்டுடாதீங்க மேடம்”
“கண்டிப்பா பிடிச்சிடுவேன்.. தேங்க்ஸ் அகேன்.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
கபிலனை அழைத்தவள் அவன் அறையினுள் வந்ததும் சங்கவி கூறியதை பற்றி கூறினாள்.
கபிலன், “ஒரே குழப்பமா இருக்குது, மேடம்” என்று கூற,
பைரவி, “சங்கவி சொன்னதில் இருந்து நல்லா யோசிச்சா, நமக்கு ஒரு க்ளு இருக்குது” என்றாள்.
“என்ன மேடம்?”
“இடது புஜத்தில் அழுத்தி பிடித்த தடம் இருந்து இருக்குது.. ஸோ குற்றவாளி இடது கை பழக்கம் உள்ளவனா இருக்கலாம்”
சிறிது யோசித்த கபிலன், “ஆனா இடது கன்னத்தில் தானே மேடம் அடித்த தடம் இருந்ததா கார்த்திக் சொன்னான்.. இடது கை பழக்கம் உள்ளவன்னா, வலது கன்னத்தில் தானே அடித்து இருப்பான்!” என்றான்.
“ஒருவேளை முதல் அடியை விட இரண்டாவது அடி பலமா இருந்து இருந்தா?”
“வாய்ப்பு இருக்குது மேடம்”
“மிஸ்டர் கஜேந்திரன் இடது கை பழக்கம் கொண்டவர்”
“மேடம்!” என்று அவன் சிறு அதிர்வுடன் அழைக்க,
“பார்க்கலாம்” என்ற போது கபிலனின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை எடுத்துப் பேசியவன், “மேடம் செந்திலை கயத்தாரில் பார்த்ததா தகவல் வந்து இருக்குது.” என்றான்.
“ஸோ தச்சநல்லூர் *** ஹாஸ்பிடலில் இருக்கிற பொண்ணப். பார்க்க வந்துட்டு இருக்கிறான்”
“எஸ் மேடம்”
“ஓகே கிளம்பலாம்” என்ற போது பைரவியின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை எடுத்து பேசி விட்டு வைத்தவள், “முத்தரசு தான் கூப்பிட்டார்.. கலைச்செல்வி பாலாஜியோட சிபாரிசில் தான் நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறா.” என்றாள்.
“யார் தான் குற்றவாளி! இந்த கேஸ் ரொம்பவே மண்டை காய வைக்குது மேடம்” என்று கபிலன் புலம்ப,
“நாளைக்குள் இந்த கேஸ் முடிந்திரும்.” என்றவள், “தச்சநல்லூர் கிளம்பலாம்” என்றபடி எழுந்தாள்.
கபிலனின் இருசக்கர வண்டியில் சாதாரண உடையில் சென்ற இருவரும் அந்த மருத்துவமனையின் அருகே ஒரு மறைவான இடத்தில் செந்திலுக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.
அவர்களை ஏமாற்றாமல் செந்தில் மருத்துவ மனைக்கு வந்தான்.
கபிலன் அவனை பிடிக்க தயாராக, பைரவி, “பொண்ணப் பார்த்துட்டு வரட்டும்” என்றாள்.
அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த செந்திலை கைது செய்து பைரவியின் அலுவலகத்திற்கு கூட்டிச் சென்றனர்.
தழல் தகிக்கும்…