பெருமூச்சை வெளி இட்டவன், “ருத்ரேஷ்வருக்கு நடந்தது எல்லாம் தெரியுமா?” என்று கேட்டான்.
“பாலாஜி சேதாரம் இல்லாம இருப்பதில் இருந்தே தெரியலையா?” என்றவள்,
“உண்மை தெரிந்தாலும் தன் வாழ்க்கையை பணையம் வைக்க, சிறிதும் தயங்க மாட்டான்.” என்றாள்.
“என்ன இருந்தாலும் அவனும் அந்த வீட்டு பையன் தான்.. முழுமையா நம்பாத…”
“அன்னைக்கு அவன் வீட்டில் இருந்து இருந்தால், நாம சந்தித்தே இருக்க மாட்டோம்.”
“எதுக்கும் கவனத்துடன் இரு.”
“ரொம்ப கவலைப்படாத.. இந்த பைரவியை யாரும் எதுவும் செய்ய முடியாது” என்றவள், “மிஸ்டர் பைரவி லைவில் என்ன சொல்றான்னு பார்க்கலாம்.” என்றபடி கைபேசியில் நேரலையை பார்க்க ஆரம்பித்தாள்.
சரியாக அப்பொழுது தான் நேரலை தொடங்கியது.
வெளியே வந்த ருத்ரேஷ்வர், யாரும் கேள்வி கேட்கும் முன், “குட் மார்னிங் பிரெண்ட்ஸ்.. நேற்றைய சந்திப்பு பற்றியும், எங்க கல்யாணத்தைப் பற்றியும் பைரவி சொன்னது எல்லாமே உண்மை தான்..
இந்த கேஸ் முடிந்து, பைரவியோட சம்மதம் கிடைத்த பிறகு, எங்க கல்யாணத்தை பற்றிய அறிவிப்பை கொடுக்கும் முடிவில் தான் நானே இருந்தேன்.” என்றவன்,
“ஆனால்.. இந்த மொமென்ட்டை என்ஜாய் செய்ய விடாம கேள்வி கேட்க படையெடுத்து வந்து இருக்கிறீங்க.. இட்ஸ் ஓகே.. இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்? ஒவ்வொருத்தரா கேளுங்க” என்றான்.
“உங்களுக்கு பைரவி மேடம் மேல் எப்படி காதல் வந்தது?” என்று ஒரு பெண் வினவ,
“இது என்னங்க கேள்வி?” என்று சிரித்தான்.
“பைரவி மேடம் பார்த்து ஆண்களுக்கு பயம் தான் வரும்.. உங்களுக்கு காதல் வந்து இருக்குதே! அதான் என்ன காரணம்னு தெரிந்துக்க கேட்டேன்” என்றாள்.
“காதல் வர காரணம் கிடையாது.. அப்படி காரணத்தோடு வந்தால் அது காதலே இல்லை.. எல்லா பெண்களிடம் இருந்து தனித்து தெரியுற பைரவியோட துணிச்சலும் தைரியமும் எனக்கு ரொம்ப பிடித்து இருக்குது.” என்றான்.
“நீங்க சொல்றது கேட்க நல்லா தான் இருக்குது. ஆனா உங்களுக்கும் உங்கள் அத்தை மகளிற்கும் கல்யாணம் என்ற பேச்சு இருப்பதா நான் கேள்விப் பட்டேனே!” என்று ஒருவர் கூற,
“பைரவியை நான் காதலிப்பது தெரியாமல் என் தந்தை எடுத்த முடிவு அது.”
“இப்போ உங்கள் தந்தை முடிவை மாற்றிக் கொண்டு, உங்கள் காதலை ஏற்றுக் கொண்டாரா?”
“எஸ்.. என் விருப்பத்துக்கு என்றும் என் தந்தை மறுப்பு சொல்ல மாட்டார்”
“உங்கள் அத்தை மகள் அதற்கு எதுவும் சொல்லலையா?”
“எனக்கு வாழ்த்துக்கள் சொன்னாங்க”
“உங்கள் காதல்னு தான் சொல்றீங்க.. அப்போ பைரவி மேடம் உங்களை காதலிக்கலையா?” என்று இன்னொருவர் வினவ,
“விருப்பம் இல்லாம கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லுவாங்களா!” என்றான்.
“எப்போ சார் கல்யாணம்?” என்று ஒருவர் வினவ,
புன்னகையுடன், “விரைவில்” என்றான்.
“அதான் சார் எப்போ?” என்று அவர் விடாமல் கேட்க,
“ஏன் நாளைக்கு கூட இருக்கலாம்!” என்று விளையாட்டு போல் புன்னகையுடன் கூறியவன், “இதுக்கு மேல் பெர்சனல் கேள்விகள் தேவை இல்லைனு நினைக்கிறேன்.” என்றான்.
“அது எப்படி சார்! பிரபலமான உங்கள் இருவரின் காதலைப் பற்றி அறிய மக்கள் ஆர்வமா இருப்பாங்களே!” என்று ஒருவர் கூற,
“பிரபலமானவங்கனா, அவங்க வாழ்க்கை என்ன திறந்த புத்தகமா? எப்படி சார் தயக்கமே இல்லாம ஒருத்தரோட பெட்ரூமை எட்டிப் பார்க்கணும்னு நினைக்கிறீங்க?” என்றவன் மற்றவர்களைப் பார்த்து,
“வேற ஏதும் கேள்விகள் கேட்கணுமா?” என்று கேட்டான்.
“கலைச்செல்வியை நீங்க கொன்று இருக்கலாம் என்ற பேச்சு இருக்குது.. அதுக்கு என்ன பதில் சொல்ல விரும்புறீங்க, சார்?” என்று ஒருவர் வினவ,
“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யூகங்கள் இருக்கலாம்.. அதுக்கெல்லாம் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை தான்.. ஆனால் இந்த கேள்வியோடு, நீங்க பைரவியோட நேர்மையை கேள்விக்குறி ஆக்குவதால் பதில் சொல்றேன்..
கலைச்செல்வி யாருனே எனக்கு தெரியாது.. எங்க கல்லூரியில் படித்த விஷயம் கூட அந்த பெண் இறந்த செய்தியை பார்த்த போது தான் தெரியும்.. அண்ட் அந்தப் பெண் இறந்தப்ப, நான் ஊரிலேயே இல்லை.”
“திட்டமிட்டே நீங்க ஊரிலில் இல்லாதது போல் செய்து இருக்கலாமே?” என்று இன்னொருவர் கூற,
“உண்மையான குற்றவாளியை பைரவி ஆதாரத்துடன் வெளிபடுத்துவாங்க.. நீங்க சொல்வது போல் நான் கொலை செய்து இருந்தால், கொஞ்சம் கூட தயங்காம என்னைக் கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்துவாங்க” என்றவன்,
“எனக்கு முக்கியமான மீட்டிங் ஒன்று இருக்குது.. ஸோ ப்ளீஸ்” என்று நிறுத்த,
முதலில் கேள்வி கேட்ட பெண், “முக்கியமான மீட்டிங் பைரவி மேடம் கூடயா சார்?” என்று குறும்புடன் கேட்க,
வசீகர புன்னகையுடன், “அதுவும் தான், ஆனா இப்போ நான் சொன்னது கிளையன்ட் மீட்டிங்.” என்றவன் “ஓகே கைஸ் பை” என்று கூறி உள்ளே சென்று விட்டான்.
செய்தியாளர்கள் கிளம்பி சென்றதும் தொழிற்சாலைக்கு கிளம்பி சென்றவன் கைபேசியை பிரவீனிடம் கொடுத்து விட்டு வேலையை தொடங்கினான். பிரவீன் தான் தொழிற்முறை நண்பர்கள், வம்பர்கள் என்று அனைத்து அழைப்புகளையும் எடுத்து அவரவருக்கு ஏற்ற பதிலை கூறி வைத்தான்.
அதே நேரத்தில் பைரவியை அழைத்த ஆணையர் அவள் அழைப்பை எடுத்து, “எஸ் சார்” என்றதும்,
“இண்டர்வியூ பார்த்தேன்.. குட் மூவ்” என்றார்.
“தேங்க் யூ சார்”
“கங்ராட்ஸ்.. மிஸ்டர் ருத்ரேஷ்வர் ஸ்பீச்சும் பார்த்தேன்.. யூ போத் ஆர் மேட் ஃபார் ஈச் அதர்.”
“தேங்க்ஸ் அகேன் சார்.”
“சீக்கிரம் கேஸை முடிக்கப் பாருங்க.. அதான் நல்லது.”
“ஷூர் சார்.”
“இன்னொரு முக்கியமான விஷயமா தான் கூப்பிட்டேன்.. *** ஏரியா கவுன்சிலரோட மகன் மீது யாரோ அசிட் ஊத்தி இருக்காங்க.. அவரை கண்ணை, கையை காலைக் கட்டிய நிலையில் வைத்து அவரோட ஆண் உறுப்பின் மீதே அசிட் ஊத்தி இருக்காங்க.. அதை பற்றி அன்-அஃபிஸியலா விசாரிக்கச் சொல்லி பொலிட்டிகல் ப்ரெஷர்.” என்றவர்,
“நான் கேள்விப் பட்டவரை அந்த கவுன்சிலரும் சரி, அவர் பையனும் சரி யோக்கியமானவங்க இல்லை.. ஏதோ பொண்ணு விஷயமா தான் இருக்கும்.. அவனுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தான். ஆனா என்ன செய்ய! பொலிடிகல் ப்ரெஷர்.” என்றும் சேர்த்து கூறினார்.
அவள் அனிதா கொடுத்த புகாரைப் பற்றி கூறவும்,
“ஸோ இது உங்க வேலை தானா!” என்ற ஆணையர், “அடுத்து என்ன செய்றதா இருக்கிறீங்க?” என்று கேட்டார்.
“ரெண்டு நாள் ஹோல்டில் வைக்க முடியுமா, சார்? அதற்குள் அனிதாவை நான் சேஃப் ஆக்கிடுறேன்.”
“ஆனா புகார்?”
“எஃப்.ஐ.ஆர் பைல் செய்யலை சார்.. தேவைப்பட்டா மட்டும் புகாரை பயன்படுத்திக்கலாம்.”
“ஓகே.. குருமூர்த்தி உங்களை மாதிரி நேர்மையானவர்.. அவர் கிட்ட விஷயத்தை சொல்லியே இந்த கேஸை ஒப்படைக்கிறேன்.” என்றவர்,
“இந்த விஷயத்தை பற்றி நாம பேசிக்கவே இல்லை” என்று சிறு மென்னகையுடன் கூறினார்.
அவளும் சிறு மென்னகையுடன், “ஓகே சார்” என்றாள்.
“ஓகே, கேரி ஆன்.” என்று விட்டு அவர் அழைப்பைத் துண்டித்தார்.