நித்யா, “கடைசி வரை எனக்காக நீங்க எதுவும் செய்யப் போறது இல்லை” என்று கோபமும் ஆதங்கமுமாக அன்னையிடம் கத்தி விட்டு அழுகையுடன் தனது அறைக்குச் செல்ல,
ராதிகா தமையனைப் பார்த்தார்.
“ருத்ரா சொன்னது சரி தான்.. நானாவது உனக்கு புத்தி சொல்லி இருக்கணும்!” என்று வேதனையான குரலில் கூறிய கஜேந்திரன்,
“உப்பை தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்” என்று விட்டு சென்று விட்டார்.
அதே நேரத்தில் அனுமதி பெற்றுக் கொண்டு பைரவி அறையினுள் சென்ற கபிலன் வணக்கம் செலுத்திவிட்டு, “கங்ராட்ஸ் மேடம்” என்றான்.
லேசான உதட்டோர மென்னகையுடன், “தேங்க் யூ கபிலன்” என்றாள்.
“சாரி மேடம்”
“எதுக்கு?”
“அது.. சாரை பத்தி தப்பா பேசியதுக்கு”
“நீங்க எதுவும் தப்பா பேசலையே! இப்போ கூட அவர் மேல் சந்தேகப்படலாம்.. தப்பில்லை”
“மேடம்!”
“எஸ்.. சில நேரம் சந்தர்ப்ப சூழ்நிலை நல்லவனைக் கூட தவறு செய்ய வைக்கும்.. அந்த மாதிரி நேரத்தில் நம்ம நம்பிக்கை பொய்த்துப் போக வாய்ப்பு உண்டு.. ஸோ சந்தேகப்படுறது தப்பில்லை.. ருத்ரேஷ்வர் மேல் நம்பிக்கை இருந்தாலும் அவரை விசாரிக்கும் போது அவர் கண்ணில் தெரிந்த நேர்மையையும் உண்மையையும் வைத்துத் தான், அவர் இந்த கொலையை செய்யலைனு சொன்னேன்”
“உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்குது மேடம்” என்றவன், “ஒன்னு கேட்கலாமா மேடம்?” என்று கேட்டான்.
அவள் ‘சரி’ என்பது போல் தலை அசைக்கவும், “இந்த கேஸ் முடிந்த அப்புறம் கல்யாணத்தை பத்தி அறிவிப்பு கொடுத்து இருக்கலாமே!” என்றான்.
“அந்த நொடியில்.. எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லணும்னு தோனுச்சு சொன்னேன்”
அவன் தயக்கத்துடன் அவளைப் பார்க்கவும், “என்ன கேட்கணும்?” என்று கேட்டாள்.
“ஒரு பெர்சனல் கேள்வி” என்றான் தயக்கத்துடன்.
“கேளுங்க”
“உங்களுக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் தானே? இல்லை.. ப்ரெஸ் பீப்பிளை சமாளிக்க இந்த அறிவிப்பா? உண்மையிலேயே மிஸ்டர் ருத்ரேஷ்வர் உங்களை விரும்பி கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டாரா?”
“ஒரு கேள்வினு சொல்லிட்டு மூனு கேள்விகள் கேட்டு இருக்கிறீங்க!” என்று அவள் கூற, அவன் முழித்தான்.
“நான் என்ன சொன்னாலும் ஏதாவது பேச தான் செய்வாங்க.. ஏன் அந்த கேள்விக்கு ‘கண்ணடித்தவரை போய் கேளுங்க’னு சொல்லி இருக்க முடியாதா? நாம நமக்காக தான் வாழனும்..
ருத்ரேஷ்வர் என்னை காதலிப்பதும், கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டதும் உண்மை தான்” என்றாள்.
தயக்கத்தை மீறி, “இந்த கல்யாணத்தில் முழு சம்மதமானு கேட்டேனே மேடம்” என்று மீண்டும் கேட்டான்.
லேசான மென்னகையுடன், “இந்த கல்யாணத்தில் முழு சம்மதமா! உண்மையை சொல்லனும்னா அதை பற்றி நான் இன்னும் ஆராயலை..” என்றவள், “உங்களோட உண்மையான அக்கறைக்கு தான் இந்த விளக்கம்.. இனி இப்படி விளக்கம் கொடுப்பேன்னு எதிர்பார்க்கக் கூடாது” என்று மிரட்டலாவே முடித்தாள்.
அதற்கு மேல் விளக்கம் கேட்காமல், “உங்க கல்யாண வாழ்க்கை சிறக்க என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்” என்றான்.
“நன்றி” என்ற போது அவளது கைபேசியில் அழைப்பு வந்தது.
அதை எடுத்துப் பேசிவிட்டு வைத்தவள், “செந்திலோட பொண்ணுக்கு உடம்பு சரி இல்லைனு தச்சநல்லூரில் *** ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்குதாம்.. அவன் இங்கே வர அதிக வாய்ப்பு இருக்குது.. பி அலர்ட்.”
“எஸ் மேடம்” என்ற போது, கதவைத் திறந்து கொண்டு அசோக் உள்ளே வர, அவன் பின்னால் ஏட்டு பதற்றத்துடன் வந்தார்.
ஏட்டைப் பார்த்து, “நீங்க போங்க.. நான் பேசிக்கிறேன்.” என்றவள் அவர் கிளம்பியதும் கபிலனைப் பார்க்க, அவன் வணக்கம் செலுத்திக் கிளம்பினான்.
அசோக் முறைப்புடன் அவள் எதிரே அமர, அவள் அலட்டிக் கொள்ளாமல், “என்ன?” என்றாள்.
“ப்ரெஸ் பீப்பிளுக்காக கல்யாணம்னு அறிவிப்பு கொடுக்கிற ஆள் நீ இல்லை.. எதுக்காக இந்தக் கல்யாணம்?”
“நீ என்ன நினைக்கிற?”
“அது புரியாம தானே கேட்கிறேன்.” என்று அவன் முறைப்புடன் கூற,
அவள் கைபேசியை எடுத்து ருத்ரேஷ்வரை அழைத்து ஒலிபெருக்கியை இயக்கினாள்.
அறைக்கு சென்ற ருத்ரேஷ்வர் குளிர்ந்த நீரைப் பருகி, ஒருவாறு தன் உணர்வுகளை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தான்.
பின் அமைதி நிலையில்(silent mode) வைத்திருந்த தனது கைபேசியை எடுத்துப் பார்த்தான். சில தொழிற்முறை நண்பர்களும் வம்பர்களும் அழைத்து இருக்க, அவற்றை விடுத்து இரண்டு முறை அழைத்து இருந்த பிரவீனை அழைத்தான்.
அழைப்பை எடுத்த பிரவீன் ஆர்ப்பாட்டமான உற்சாக குரலில், “கன்ங்ராட்ஸ் மச்சி” என்றான்.
“தேங்க்ஸ் மச்சி” என்ற ருத்ரேஷ்வரின் குரலில் மகிழ்ச்சி இருந்தாலும் குதூகலமின்றி இருக்கவும்,
பிரவீன், “என்னாச்சு ருத்ரா? வீட்டில் பிரச்சனையா?” என்று கேட்டான்.
“வீட்டில் பிரச்சனை வரும்னு தெரிந்தது தானே! இந்த கல்யாணத்தை நிறுத்தப் போராடுவாங்க தான்.. விடு பார்த்துக்கலாம்”
“வேற என்ன?”
“வேற என்ன!”
“டேய்! உன்னோட பத்து வருட காதல் சக்சஸ் ஆகி இருக்குது! இந்நேரம் நீ குத்தாட்டம் போட்டிருக்க வேணாமா!”
லேசாக சிரித்தவன், “குத்தாட்டமா! இங்கே லவ் பீலை முழுசா அனுபவிக்கக் கூட முடியலை” என்றான் கிண்டல் கலந்த சிறு வருத்ததுடன்.
“இப்போ ஏன்டா பக்கி, வயோலின் வாசிக்கிற? வீட்டில் இருக்கிறவங்களை நீ அசால்ட்டா சமாளிப்ப”
“இவங்கல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை”
“பின்ன!”
“நான் சமாளிக்கத் திணறும் ஒரே ஆள், என்னோட சண்டிராணி தான்”
சத்தமாக சிரித்த பிரவீன், “ஏன், என்னாச்சு?” என்று கேட்டான்.
“உனக்கு குதூகலமா இருக்கோ!”
“டெபினெட்லி! டெபினெட்லி!” என்று சிரிப்புடன் நகைச்சுவை நடிகர் வடிவேல் போல் கூறியவன், “ருத்ரனுக்கே ருத்ர தாண்டவம் காட்ட ஒரு ஆள்” என்று கூறி வாய்விட்டுச் சிரித்தான்.
நண்பனின் கூற்றில் தானும் சிரித்தவன், “இருடி ஒரு நாள் உன்னை அவ கிட்ட கோர்த்து விடுறேன்.” என்றான்.
“நான்லாம் உன்னை மாதிரி இல்லை.. சாஷ்டாங்கமா காலில் விழுந்துருவேன்.”
“பார்த்துடா அப்படியே உன்னை புட்பால் மாதிரி எட்டி உதைச்சிடப் போறா!”
“அப்படிங்கிற!! அப்போ உனக்கே கூஜா தூக்கிறேன்.. தயவு செய்து கோர்த்து விட்டுடாத, மச்சி” என்று வெற்றிகரமாகப் பின் வாங்கினான்.
ருத்ரேஷ்வர் மனதாரச் சிரிக்கவும்,
“இப்போ சொல்லு.. என்ன பிரச்சனை?” என்று நிதான குரலில் கேட்டான்.
நண்பனின் அன்பில் மனம் கனிந்தவன், “டேய்.. அவ காதலை சொல்லலை.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்கா.. அதுக்கு பின்னாடி என்ன காரணமோனு யோசிச்சே மண்டை காஞ்சு போய்டும்.” என்றான்.
“நீ ரொம்ப யோசிக்கிற”
“ஏன்னா என்னோட ஆளு அப்படி”
“டேய்!”