
தழல் ~ 11
பைரவி தனது சம்மதத்தை கூறிய நொடி ருத்ரேஷ்வரின் வீட்டில் ‘கணீர்’ என்ற சத்தத்துடன் பீங்கான் பூஜாடி ஒன்று கீழே எறியப்பட்டு, சில்லு சில்லாக உடைந்தது.
அனைவரும் திரும்பிப் பார்க்க, நித்யா இயலாமை தந்த கோபத்துடன் கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தாள்.
ருத்ரேஷ்வரை தவிர அனைவரும் அவளை கவலையுடன் பார்த்தனர். ருத்ரேஷ்வர் மனதினுள் அவளுக்காக வருந்தினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதை அவள் தவறாக தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு மேலும் வருந்த வேண்டாமே என்ற நல்ல எண்ணம் தான் அதற்குக் காரணம்.
ருத்ரேஷ்வர் நித்யாவை கண்டு கொள்ளாதது போல் பார்வையை தன்னவள் மீது திருப்பிக் கொள்ள,
அடுத்த நொடி நித்யா ஆவேசத்துடன் இன்னொரு பீங்கான் பூஜாடியைக் கொண்டு தொலைகாட்சி மீது எறிந்து, அதனை உடைத்து இருந்தாள்.
“நித்யா!” என்று சிறு கோபத்துடன் கத்தியபடி ருத்ரேஷ்வர் எழுந்து நிற்க,
கஜேந்திரன், “ருத்ரா” என்று அழைத்து மறுப்பாக தலையை அசைத்தார்.
பாலாஜி கோபத்துடன், “என் பொண்ணை கண்ணீர் சிந்த வச்சிட்டு, அந்த பைரவியை நீ கல்யாணம் செய்துக்க நான் ஒத்துக்கவே மாட்டேன்.” என்று கூற,
கிருஷ்ணா, “ஆமா.. இந்த வீட்டுக்கு போயும் போய் ஒரு அனாதை மருமகளா வரதா? அதுவும் நித்யாவை அழ வச்சிட்டு எப்படி இந்தக் கல்யாணத்தை நடத்துறனு பார்க்கிறேன்.” என்று சவாலிடுவது போல் கூற,
நரேன், “ஒரு பொண்ணோட கண்ணீரில் உன்னோட வாழ்க்கையை ஆரம்பிக்கனுமா! யோசி ருத்ரா.” என்றான்.
பாலாஜியைப் பார்த்து, “நான் தான் சொல்லிட்டேனே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.” என்ற ருத்ரேஷ்வர்,
“என்னோட கல்யாணத்துக்கு உங்க சம்மதத்தை நான் கேட்கவே இல்லையே” என்றான்.
பின் கிருஷ்ணாவை அலட்சியமாக பார்த்து,
“முடிந்தா தடுத்துப் பாருடா!” என்று சவாலிட்டவன் நரேனைப் பார்த்து,
“ஒரு சின்ன பொண்ணை கண்ணீர் சிந்த வைத்த பாவம் தான், இப்போ உன் தங்கையை கண்ணீர் சிந்த வைக்குது.” என்றான்.
ராதிகா சட்டென்று, “ருத்ரா!” என்று கோபம் கலந்த கலங்கிய குரலில் அழைத்தார்.
“நான் சொன்னது பொய்னு சொல்றீங்களா?” என்று ஆவேசத்துடன் தான் கேட்டான்.
கஜேந்திரன் அவனை அழைக்கப் போக, அவன், “நான் பேசணும் பா” என்று கூறி அவரை தடுத்து இருந்தான்.
தன்னிடம் இத்தகைய ஆவேசத்தை வெளிப்படுத்தும் ருத்ரேஷ்வரை சிறு அதிர்வுடன் பார்த்த ராதிகா,
“இப்போ எதுக்கு பழசை பேசுற?” என்று கேட்டார்.
“பேச வேண்டிய நேரம் வந்து இருக்குதே! ‘மஞ்சரிக்கு நடந்த கொடுமையை நடந்தது நடந்த படி, உண்மையை அப்படியே சொன்னால் என் மகளை கல்யாணம் செய்துப்பியா?’னு உங்க கணவர் என்னிடம் கேட்டார்.. அதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்குப் புரியுதா?” என்று கேட்டான்.
பதற்றமடைந்த பாலாஜி அதை மறைக்க கோபத்துடன், “ருத்ரா.. வேணாம்.” என்று கத்தினார்.
அவரை கோபத்துடன் பார்த்தவன், “என்ன செய்ய முடியும் உங்களால்? உங்க பிள்ளைகளுக்கு பாவத்தை சேர்த்து வைத்திருப்பதை தவிர வேற என்ன செய்ய முடியும்?” என்று கேட்டான்.
ராதிகா கணவரின் அக்கூற்றில் அதிர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், “இத்தனை வருஷம் கழிச்சு அதைப் பற்றி தெரிந்து என்ன ஆகப் போகுது? இல்லை, அதை பற்றி தெரிஞ்சுக்கிட்டா நித்யாவை நீ கல்யாணம் செய்துப்பியா என்ன! இந்த பேச்சை விடு.” என்று கணவரை விட்டுக் கொடுக்காமல் தான் கூறினார்.
அதிருப்தியுடன் அவரைப் பார்த்தவன், “மஞ்சரி விஷயத்தில் நீங்க எப்போதுமே ராட்ஷசி தான்.” என்றான் வேதனையுடன். தன்னை அன்னையாக பேணிக் காத்த அத்தை இப்படி தவறுகிறாரே என்ற வேதனை அது.
அவனது ‘ராட்சசி’ என்ற விழிப்பில் ராதிகா அதிர்வுடன், “ருத்ரா!” என்று மெல்லிய குரலில் அழைக்க,
தங்கையை, அந்த நிலையில் பார்க்க முடியாமல் கஜேந்திரன், “ருத்ரா விடு” என்றார்.
“இதுக்கெல்லாம் நீங்களும் ஒரு காரணம்பா” என்று வேதனை கலந்த ஆற்றாமையுடன் கூறியவன்,
“அண்ணனா பொறுப்பா முதல்லேயே இவங்க செய்றதை தவறுனு சொல்லி திருத்தி இருந்தா..” என்று நிறுத்தியவன் கோபத்துடன்,
“எப்படி சொல்லி இருப்பீங்க! உங்களுக்கே தான் மஞ்சரியை பிடிக்காதே! யாரோ செய்த தவறுக்காக, எல்லோரும் சேர்ந்து அந்த சின்ன பொண்ணை காரணமே இல்லாம அநியாயமா தண்டிச்சிட்டீங்களே!” என்று வலியுடன் முடித்தான்.
பின் ராதிகாவைப் பார்த்து, “மஞ்சரி விஷயத்தில் நீங்க தான் முக்கிய குற்றவாளி.” என்று ஆதங்கமும், இயலாமையும், வேதனையும் கலந்த கோபத்துடன் கூறினான்.
பைரவி பற்றி பேசாமல் மஞ்சரி பற்றியே பேசும் ருத்ரேஷ்வரை, கிருஷ்ணா யோசனையுடன் பார்க்க,
நரேன் ‘யார் இந்த மஞ்சரி? ஒரு வேளை, சின்ன வயசில் ஒரு பொண்ணு ருத்ரா கூடயே இருக்குமே! அதுவா’ என்ற யோசனை கலந்த குழப்பத்துடன் பார்க்க,
நித்யாவோ, ‘இப்போ எதுக்கு யாரையோ பற்றி பேசிட்டு இருக்காங்க!’ என்ற எரிச்சலுடன் பார்த்தாள்.
(பதினோரு வயது மஞ்சரிக்கு அநியாயம் நடந்த பொழுது நரேன் ஒன்பது வயதிலும், நித்யா ஏழு வயதிலும் இருந்தனர். அதனால் அவர்களுக்கு மஞ்சரி பற்றி பெரிதாக ஞாபகம் இல்லை)
ராதிகா அதிர்வு கலந்த கோபத்துடன், “என்ன பேசுற ருத்ரா?” என்று கூற,
அவன், “ஆமா நீங்க தான் முதல் குற்றவாளி.. நீங்க சரியா இருந்து இருந்தா, இந்த ஆள் மஞ்சரிக்கு கொடுமை செய்து தான் இருப்பானா?” என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினான்.
ராதிகா கோபத்துடன், “மாமாவை மரியாதையா பேசு” என்று கூற,
அவனோ நெற்றிக் கண் திறந்த ருத்ரேஷ்வரனாக பாலாஜியைப் பார்த்து, “உண்மையை நான் கண்டு பிடிக்கிற அன்னைக்கு இருக்குது இந்தாளுக்கு!” என்று கூறி விட்டு தனது அறைக்குச் சென்று விட்டான்.
பைரவியா! ருத்ரனா! என்று பாலாஜியின் இதயம் இரு தலைக் கொள்ளியாக பயத்துடன் அடித்துக் கொண்டது. பைரவியிடம் அடி வாங்கிய நொடி, அவள் கண்களில் ஜொலித்த ரௌத்திரத்தை இப்பொழுது நினைத்தாலும் அது அவரை குலை நடுங்க செய்து கொண்டிருக்க, இப்பொழுது ருத்ரேஷ்வரின் ருத்ர தாண்டவம் வேறு அதனுடன் சேர்ந்து கொண்டது.
‘பைரவி யாரு? எப்போ எப்படி அந்த அனாதை ஆசிரமத்துக்கு வந்தானு கண்டு பிடிக்கணும்.’ என்று நினைத்தபடி கிருஷ்ணா கடைக்கு கிளம்பிச் செல்ல,
‘நாம அந்த இன்ஸ்பெக்டருக்கு வீடு வாங்கிக் கொடுத்ததை வைத்து நம்மளை உள்ள தள்ளிடுவாளோ இந்த பைரவி!’ என்ற பயத்துடன் நின்ற நரேனின் மனதினுள், ‘ருத்ராவை கல்யாணம் செய்தால் இந்த வீட்டோட மானத்தை காக்க அப்படி செய்ய மாட்டா தானே!’ என்ற எண்ணம் புதிதாக தோன்ற, ‘அப்போ ருத்ரா அந்த பைரவியை கல்யாணம் செய்றது நல்லது தானோ! ஆனா நித்தி பாவமே!’ என்று குழம்பியவனாக தனது அறைக்குச் சென்றான்.