அங்கே செய்தியாளர்கள் கூட்டத்தில், அந்த மூத்த செய்தியாளர் மனோகரைப் பார்த்து, “மன்னிப்பு கேளு” என்றார்.
“இப்படி பேசி விஷயத்தை திசை திருப்புறாங்க ஐயா.. நீங்களும் அவங்க தந்திரத்தில் ஏமாறுறீங்க!” என்றான் உருக்கமான குரலில்.
அவரோ, “முதல்ல நீ மன்னிப்பு கேளு.. அப்புறம் நான் கேட்க வேண்டியதை கேட்கிறேன்.” என்றார்.
பைரவி, “நான் ஏன் திசை திருப்பப் போறேன்! ஒருவேளை இந்த வழக்கை நீ திசை திருப்ப முயற்சிக்கிறியோ!” என்றாள்.
முறைப்புடன், “நான் ஏன் திசை திருப்பப் போறேன்?” என்றான்.
“இந்த வழக்கை திசை திருப்பவும், என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்றவும், கொலையாளியுடன் கூட்டு சேர்த்துட்டு, நீ இப்படி செய்து இருக்கலாமே!” என்று அவள் கூற,
அவன் கண்களில் சிறு பயம் வந்தது.
உண்மையில் அவன் அவ்வாறு செய்ய வில்லை என்றாலும், தன் மேல் இருக்கும் கோபத்தில், பொய்யான வழக்கைப் போட்டு உள்ளே வைத்து விடுவாளோ என்றும், இந்த வழக்கில் தன்னை கோர்த்து விட்டு விடுவாளோ என்ற பயமும் அவனுக்கு வந்தது. ஆனாலும், நொடி பொழுதில் தனது பயத்தை மறைத்துக் கொண்டு, அவளை முறைத்தபடி தான் நின்றான்.
அந்த மூத்த செய்தியாளர் அவனைச் சந்தேகமாக பார்க்கவும், “ஐயா நான் அப்படி செய்யலை” என்றான்.
அவர் அவனை தீர்க்கமாக பார்த்தபடி, “அப்போ மன்னிப்பு கேளு” என்றார்.
அவன் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்புடன் பைரவியைப் பார்த்து, “அம் சாரி” என்றான்.
“தமிழில் கேளு.. சாரி ஜஸ்ட் லைக் தட் ஈஸியா சொல்லிடலாம்.” என்று பைரவி கூற,
அவன் கோபம் கலந்த வெறுப்புடன், “என்னை மன்னிச்சிடுங்க.” என்றான்.
“மொட்டையா சொன்னா எப்படி? தெளிவா சொல்லு” என்றாள்.
அவன் கோபமும் எரிச்சலுமாக, “உங்களை பத்தி தவறா எழுதியதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்றான்.
“அப்போ பேசியதுக்கு?”
“அதுக்கும் தான்”
“அதுக்கும் தான்!” என்று அவள் இழுத்து நிறுத்த,
அவன் பல்லை கடித்தபடி, “அதுக்கும் மன்னிச்சிடுங்க” என்றான்.
அப்பொழுதும் அவள், “இவ்ளோ நேரம் சவுண்ட் விட்ட! இப்ப சத்தமே வரலை.. எல்லோருக்கும் கேட்கிற மாதிரி சத்தமா தெளிவாச் சொல்லு”
அவன் அதிகரித்த கோபத்துடன், “உங்களை பத்தி தவறா எழுதியதுக்கும், பேசியதிற்கும் என்னை மன்னிச்சிடுங்க.” என்று கத்தினான்.
அவளோ விடாமல், “நீ மனப்பூர்வமா சொன்னது போல் தெரியலை.. அதனால், உன் மீது மான நஷ்டயீடு வழக்கு போடப் போறேன்..” என்றாள்.
அவன் கோபத்துடன் அந்த மூத்த செய்தியாளரைப் பார்த்து, “பாருங்க ஐயா.. எப்படி பேசுறாங்க” என்றான்.
அவர் பதில் கூறும் முன், “அவரை கேட்டுட்டா எழுதின! அனுபவி.” என்றவள் யாருக்கும் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல்,
“இப்போ அந்த புகைப்படத்தை பத்திப் பேசலாமா?” என்று கேட்டு இருந்தாள்.
அதில் அனைவரும் அவளை ஆர்வத்துடன் பார்த்தபடி மனோகரை விட்டு விட்டனர்.
பைரவி, “இந்தச் சந்திப்பே தற்செயலாக நடந்தது.. முன்னாடியே திட்டமிட்டதா இருந்து இருந்தால், நான் காக்கி உடையில் போய் இருப்பேனா?
வேற ஒரு கேஸ் விஷயமா அந்த பக்கம் போய் இருந்த நான், ஜூஸ் குடிக்க அந்த ஹோட்டலுக்கு போனேன்.. அதே நேரத்தில் மிஸ்டர் ருத்ரேஷ்வர் அங்கே சாப்பிட வந்தார்..
அவர் மீது தொழில் பகையில் இருக்கும் VV கம்பனி ஓனர் மிஸ்டர் வினோதன், அவரை என்னிடம் கோர்த்து விட நினைத்து,
அவரோட காலை தட்டி விட்டார்.. என் மேல் விழாமல் இருக்க, அவர் செய்த முயற்சி வெற்றியடைந்தாலும், இந்த லேசான உரசலை தவிர்க்க முடியலை..
அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு நிமிர்ந்த அடுத்த நொடி, நான் மிஸ்டர் வினோதனை அடித்து இருந்தேன்.. அந்த ஹோட்டலில் விசாரித்தால் உங்களுக்கே உண்மை தெரியும்.. இல்லை மிஸ்டர் வினோதனை கேட்டுப் பாருங்க..
இன்னொரு விஷயம்.. நாங்க ஒரே டேபிளில் அமர்ந்து இருந்தாலும், நான் குடித்த ஜூஸ்ஸிற்கு நான் தான் பணம் செலுத்தினேன்.. மிஸ்டர் ருத்ரேஷ்வர் தனியே உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.” என்றாள்.
கூட்டத்தில் இருந்த பலரின் முகம், ‘இவ்ளோ தானா!’ என்று காற்றுப் போன பலூனாகச் சுருங்கி விட,
அப்பொழுதும் மனோகர் அடங்காமல், “அந்த சந்திப்பு வேணா தற்செயலா நடந்ததா இருக்கலாம்.. ஆனா, உங்களுக்குள் பழக்கம் இல்லைனு பொய் சொல்லாதீங்க.” என்ற படி அனைவரையும் நோக்கி தனது கைபேசியைக் காட்டி,
“இங்கே பாருங்க” என்று ஒரு காணொளியை ஓட்டினான்.
அதில் ருத்ரேஷ்வர் வசீகர புன்னகையுடன் ஏதோ கூறிய படி பைரவியைப் பார்த்து கண் சிமிட்டினான்.
அனைவரும் மீண்டும் அவளை ஆர்வத்துடன் பார்க்க, மனோகர் வெற்றிக் களிப்புடன் பார்த்தான்.
“ஆல்ரைட்” என்ற பைரவி, “இவன் சொல்றதை நான் மறுக்கலை.. எங்களுக்குள் பழக்கம் இல்லாமல் இல்லை.. இந்த வழக்கு என்னிடம் வருவதற்கு முன்பே ருத்ரேஷ்வர் என்னிடம் காதலை சொல்லி கல்யாணம் செய்துக்கலாமா என்று கேட்டிருந்தார்.. இப்ப வரை நான் அவருக்கு பதில் சொல்லலை.. ஆனா, இப்போ லைவா சொல்றேன்.” என்றவள் நிகழ்படக் கருவியைப் பார்த்து,
“ஈஸ்வர்.. உங்களை கல்யாணம் செய்துக்க நான் சம்மதிக்கிறேன்.” என்றாள்.
தன்னை இத்தனை முறை மன்னிப்பு கேட்க வைத்ததில் பைரவி மீது கூடுதலான வன்மத்தை வளர்த்துக் கொண்ட மனோகர், “அப்போ படுக்கைக்கு தயார் ஆகிட்டீங்க?” என்று இகழ்ச்சியுடன் கேட்டான்.
சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் அவனை நோக்கியவள், “அன்னைக்கு நீ தப்பா பேசியதுக்கு அப்படி பதில் சொன்னதில், நான் எவன் கூடயும் படுக்கைக்கு போக மாட்டேன்னு சொன்னேனே தவிர, கல்யாணமே செய்துக்க மாட்டேன் என்றோ என் கணவருடன் படுக்கையை பகிர்ந்துக்க மாட்டேன் என்றோ சொல்லலையே!” என்றவள் கூட்டத்தினரைப் பார்த்து, “ஏன் நான் கல்யாணம் செய்துக்க கூடாதா?” என்ற கேள்வியை கேட்டாள்.
அடுத்து அவர்கள் வேறு கேள்விகளை கேட்கும் முன்,
“கல்யாணம் என்னோட பெர்சனல் விஷயம்.. அதற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை.. என் அழைப்பை ஏற்று இங்கே வந்ததிற்கு நன்றி.” என்று கைகூப்பிக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
தழல் தகிக்கும்…