“அப்புறம் இவர் கேட்ட கடைசி கேள்வி” என்றவளின் முகத்தில் கோபம் குடி கொண்டது. கோப முகத்துடனே,
“ ‘எப்பொழுதும் திரை மறைவில் நடக்கும் தொடர் கதை தானோ?’ னு கேட்டு இருக்கார்.. அப்போ என்னை வேசினு சொல்றாரா இவர்!
கையில் பேனா இருந்தா, என்ன வேணா எழுதலாமா? உங்களுக்குனு ஒரு எதிக்ஸ் இல்லை! ஒரு அதிகாரியான எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்ணின் நிலை என்ன?
கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானதுனு நம்புற ஆள் நான்.. மக்களுக்கு நேர்மையான முறையில் உண்மையை எடுத்துச் செல்லும் செய்தியாளர்களை மட்டுமே நான் மதிக்கிறேன், மதிப்பேன்.. இவனைப் போன்ற ஆட்களை மதிக்க மாட்டேன் தான்.. அதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை..
நியாயமாக பார்த்தால், இங்கே வரதுக்கு முன்னாடியே, நீங்களே இவரை தட்டிக் கேட்டு இருக்கணும்.. இப்போ கூட ‘ஆசை நாயகியா?’னு கமெண்ட் செய்தார்.. உங்களில் ஒருத்தர் கூட அதை தவறுனு சொல்லலை.” என்று கூறியவளின் குரலில் தெறித்த ஆளுமை கலந்த தார்மீக கோபத்திலும், கண்கள் வெளிபடுத்திய ரௌத்திரத்திலும் அங்கிருந்தவர்கள் பேச்சற்று நின்றனர்.
ஆனால் மனோகரோ எகத்தாளமாக, “இப்படி கோபமா பேசிட்டா, நீங்க செய்தது இல்லைனு ஆகிடுமா? நெருப்பு இல்லாமல் புகையாது.” என்றான்.
சட்டென்று கோபத்துடன் அவனை நெருங்கியவள், “என்ன நெருப்பு இல்லாம புகையாது? தைரியம் இருந்தா நேரிடையாப் பேசு.” என்றாள்.
அவளது வேகத்தில் பயத்துடன் ஒரு அடி பின்னே நகர்ந்தவன் பயத்தை மறைத்தபடி, “நான் ஒன்னும் இல்லாததை எழுதலை.” என்றான்.
“என்ன இல்லாததை எழுதலை! நான் எவன் கூடயாவது படுத்ததை பார்த்தியா? இல்லை.. அறைக்குள்ள போறதை பார்த்தியா?”
அவளது இத்தகைய நேரடி கேள்வியில் வாயடைத்துப் போனவனாக மனோகர் நிற்க,
சிலர் மனதினுள், ‘என்ன! இந்தம்மா இப்படி பேசுது!’ என்று நினைத்தனர்.
அந்த ஆய்வாளர் கூட, ‘அம்மாடி! இது பொண்ணா!’ என்று நினைத்தபடி அதிர்ச்சியுடன் பார்த்தார்.
கபிலனோ, ‘யார் கிட்ட ஆட்டம் காட்டுறீங்க. துச்சா பசங்களா!’ என்பது போல் பார்த்தபடி நின்றிருந்தான்.
அவளோ மனோகரிடம், “பதில் சொல்லு” என்று மிரட்டினாள்.
அவன் அதிர்வுடன் பார்த்தது பார்த்தபடி நிற்க, அவள் கோபத்துடன், “பார்த்தியா இல்லையா?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டாள்.
அவனது தலை அவனது அனுமதி இல்லாமலேயே ‘இல்லை’ என்பது போல் அசைந்தது.
கூட்டத்தினரைப் பார்த்தவள், “என்னடா இப்படி பேசுறேனேனு உங்களில் சிலருக்கு.. இல்லை எல்லோருக்குமே கூட தோனலாம்.. ஆனா எனக்கு தப்பாவே தெரியலை.. நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஒரு ஆண் எதை வேணாலும், எப்படி வேணாலும் பேசலாம் என்றும், பெண்கள் இதை மட்டும் தான் பேசணும் என்றும் யார் நிர்ணயிக்கிறா?
இவன் என்னை வேசினு எழுதினது தப்பில்லை, இத்தனை பேர் மத்தியில் ஆசை நாயகினு சொன்னது தப்பில்லை, ஆனா இவனது தவறை சுட்டிக் காட்ட நான் நேரிடையா பேசுறது தப்பா?
என் பக்க நியாயத்தை எடுத்துக் கூற, எனக்காக நான் பேசுறதில் என்ன தவறு?” என்று கேட்டாள்.
அவள் கேட்ட விதத்தில் ஒரு சிலருக்கு, ‘அதானே! என்ன தவறு?’ என்று தான் தோன்றியது.
இரண்டு நொடிகள் இடைவெளி விட்டவள் அதே ரௌத்திரத்துடன்,
“இந்த தவறான கேள்விகளை கேட்டதிற்காக இப்பவே இவன் என் கிட்ட மன்னிப்பு கேட்டாகணும் அண்ட் நாளைய செய்தித்தாளில் மன்னிப்பு செய்தி வந்திருக்கணும்.” என்று கட்டளையிட்டாள்.
சில நொடிகள் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு, அங்கே நிசப்தம் நிலவியது.
தொலைகாட்சியில் இதை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களும் சரி, சில பொதுமக்களும் சரி,
‘மன்னிப்பு கேளு’
‘அதானே!’
‘மன்னிப்பு கேளுடா’
‘என்னமா பேசுறாங்க! பிச்சு உதறுறாங்க!’
‘சும்மா கிழி கிழி தான்’
‘நேர்மையா இருக்கிறவங்களை டார்கெட் செய்றதே இவனை மாதிரியான ஆட்களுக்கு வேலை’
‘உண்மையில் இப்படி எழுதிய இவன் தான் யார் கிட்டயோ விலை போய் இருக்கணும்’
‘பேச்சிலேயும், தோரணையில் இருந்தே இந்தம்மா நெருப்புனு தெரியுது!’ என்றே கூற,
ஒருசில வயதில் மூத்த பெண்மணிகள்,
‘இப்படி எழுதியவன் நல்லா இருப்பானா! நாசமா போவான்.. அவன் கை வெளங்காம போக’ என்று சாபமிட்டனர்.
கஜேந்திரன் வீட்டில் ருத்ரேஷ்வர் பெருமையுடனும் காதலுடனும் பார்த்துக் கொண்டு இருக்க, மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பாலாஜியும் அவர் மகன்களும் கூடுதலாக அதிர்ச்சி கலந்த பயத்துடன் பார்த்தனர்.
செய்தித்தாளில் வந்திருந்த செய்தியை, புலனம் மற்றும் இணையதளத்தில் யாரோ பதிவு ஏற்றியதின் பலனாக காலையிலேயே அந்தத் தீ கஜேந்திரன் வீட்டிலும் பற்றி இருந்தது.
காலை எட்டேமுக்கால் மணி அளவில் வீட்டினர் கூடி இருக்க, ராதிகா தனது கைபேசியில் இருந்த புகைப்படத்தை ருத்ரேஷ்வரிடம் காட்டி, “என்ன ருத்ரா இது?” என்று அன்னையாக கண்டிக்கும் குரலில் கேட்டார்.
அதை சரியாகப் புரிந்து கொண்ட ருத்ரேஷ்வர், “இது தெரியாம நடந்த நிகழ்வு அத்தை.” என்று கூற,
கிருஷ்ணா, “பார்த்தா அப்படி தெரியலையே!” என்றான்.
“அது பார்க்கிறவங்க கண்ணையும் மனசையும் பொருத்து” என்ற ருத்ரேஷ்வர் ராதிகாவைப் பார்த்து,
“வினோதன் வேணும்னு என் காலை தட்டி விட்டதில் நான் பைரவி மேல விழப் போனேன்.. டேபிளை பிடித்து விழுவதை தடுத்தாலும், இந்த உராய்வை தடுக்க முடியலை..
இதை போட்டோ எடுத்து கண்டபிடி எழுதியவன் ஏற்கனவே தப்பா பேசி பைரவி கிட்ட அடி வாங்கி இருக்கிறான்.. பைரவியைப் பழி வாங்க இப்படி செய்து இருக்கிறான்.” என்றான்.
“நீ எதுக்கு அவளை பார்க்கப் போன?” என்று நரேன் வினவ,
ருத்ரேஷ்வர், “அதைத் தெரிந்து என்ன செய்யப் போற?” என்று வினவினான்.
பாலாஜி சிறு பதற்றத்துடன், “நேர்மை உண்மைனு நரேன் இன்ஸ்பெக்டருக்கு வீடு வாங்கிக் கொடுத்ததைப் பத்தி சொல்லத் தான் போனியா?” என்று கேட்டார்.
நரேன் மனதினுள்ளேயும் அதே பயம் இருக்கப் போய் தான் அக்கேள்வியைக் கேட்டான்.
“இதுக்கு முன்னாடி அவளை நான் சந்திச்சதே இல்லையா? அவள் என்னை விசாரிக்கவே இல்லையா?” என்று கேட்ட ருத்ரேஷ்வர் பொதுவாக அனைவரையும் பார்த்து,
“என்னோட வருங்கால மனைவியான பைரவியை பார்க்கப் போனேன்” என்றான்.
கஜேந்திரனைத் தவிர மற்றவர்கள் அவனை அதிர்வுடன் பார்க்க,
முதலில் சுதாரித்த நித்யா, “அவ உங்களுக்கு ஓகே சொல்லிட்டாளா?” என்று கேட்டாள்.
“அது உனக்கு தேவை இல்லாதது” என்றவன், “அவ இவனு பேசின பல்லை பேத்துருவேன்.. ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசி பழகு” என்றான்.
பின் மணியை பார்த்தவன், “எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குது.” என்று விட்டு கூடத்தில் இருந்த தொலைகாட்சியை இயக்கினான்.
அனைவரின் பார்வையும் தொலைகாட்சியில் தெரிந்த பைரவி மீது பதிந்தது.
பைரவியின் ஒவ்வொரு பதில்களையும் ரசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த ருத்ரேஷ்வரின் முகமே, அவனது காதலின் ஆழத்தை எடுத்துக் கூற, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தனர்.
கஜேந்திரன் மற்றும் ராதிகா மட்டுமே ருத்ரேஷ்வருக்காக மகிழ்ந்தனர்.
கஜேந்திரன் மகனைக் கனிவுடன் பார்க்க, ராதிகாவின் நெஞ்சின் ஓரம் ‘என் மகள் மேல் இப்படி ஒரு காதல் வந்திருக்கக் கூடாதா!’ என்ற ஏக்கம் இருந்தாலும், ருத்ரேஷ்வருக்காக உண்மையாக மகிழ்ந்தார்.
ஆனால் பைரவி யார் என்ற உண்மை தெரியும் நொடியில் இதே மகிழ்ச்சி ராதிகாவிடம் இருக்குமா?
பைரவி யார் என்ற உண்மையை அறிந்திருந்த பாலாஜியினால், இதை சற்றும் ஏற்க முடியவில்லை.
நித்யா கோபமும் வெறுப்புமாக பைரவியை பார்த்துக் கொண்டு இருக்க,
கிருஷ்ணாவும் நரேனும் கூட வெறுப்புடன் தான் பார்த்து கொண்டு இருந்தனர்.