
தழல் ~ 10
பைரவியின் அலுவலகத்தின் முன் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிறுவனச் செய்தியாளர்கள் கூடி இருந்தனர்.
பைரவியை பிடிக்காத அந்த ஆய்வாளர், தனக்கு துதி பாடும் துணை ஆய்வாளரிடம் குதூகலத்துடன் பேசிக் கொண்டிருக்க, அவர்களை கபிலன் வெறுப்புடன் பார்த்தான்.
அப்பொழுது தனது அறையில் இருந்து சற்றும் குறையாத மிடுக்குடன் வெளியே வந்த பைரவி, “கபிலன்” என்று அழைத்தாள்.
“எஸ் மேடம்” என்றபடி விரைந்து வந்தான்.
“எல்லோரும் வந்தாச்சா?”
“எஸ் மேடம்”
அப்பொழுது அந்த ஆய்வாளர், “கொஞ்சமாவது அடங்குறாளாப் பாரேன்!” என்று முணுமுணுக்க,
சட்டென்று அவர் பக்கம் அவள் திரும்பவும், அவர் தன்னை அறியாமல் எழுந்து நின்று வணக்கம் செலுத்தி இருந்தார்.
கபிலன் உதட்டோரச் சிரிப்புடன் அதனைப் பார்க்க,
பைரவி அவரிடம், “எனக்கு தவறு செய்றவங்களை அடக்கி தான் பழக்கம்.. தலை வணங்கி இல்லை.” என்று விட்டு வேகமாக வெளியேறி இருந்தாள்.
அவள் வெளியே சென்றதும்,
“உங்களுக்கும் மிஸ்டர் ருத்ரேஷ்வருக்கும் என்ன உறவு?”
“எத்தனை நாள் இந்தப் பழக்கம்?”
“உங்களுக்குள் எப்படி பழக்கம் ஏற்பட்டது?”
“ரெண்டு பேரும் காதலிக்கிறீங்களா? முதலில் காதலை யார் சொன்னது?”
“இந்தக் காதல் கல்யாணத்தில் முடியுமா?”
“ஏன் இந்த விஷயத்தை ரகசியமா வைத்து இருக்கிறீங்க?”
“எப்பொழுதும் விரைந்து செயல்படும் நீங்க, இந்த வழக்கை இழுத்தடிப்பது ஏன்? உங்க காதலனை காப்பாற்றவா?”
“ருத்ரேஷ்வர் தான் குற்றவாளியா?”
“அவர் மட்டுமா இல்லை அவர் குடும்பத்தில் யாரும் கூட்டா?”
“மிஸ்டர் நரேன் பொறுப்பில் தானே காலேஜ் இருக்கிறதா சொல்றாங்க? அப்போ மிஸ்டர் ருத்ரேஷ்வர் கொலையை செய்து விட்டு, மிஸ்டர் நரேன் மேல் பழியை போடப் பார்க்கிறாரா?”
“ருத்ரேஷ்வரை காப்பாற்றத் தான் இந்த வழக்கை நீங்க எடுத்தீங்களா?”
“நீங்களும் விலை போயிட்டீங்களா?” என்று பல கேள்விகளை செய்தியாளர்கள் சரமாரியாக கேட்க,
அனைத்திற்கும் முத்தாப்பாய், “விலை போனாங்களா, ஆசை நாயகியா போனாங்களோ!” என்று மனோகர் (அவளிடம் அடி வாங்கியவன்) இகழ்ச்சியும் நக்கலுமாக கூறினான்.
அவனது கூற்றில் கோபம் அதிகரித்ததாலும், அதை சிறிதும் முகத்தில் காட்டாமல் நிமிர்ந்து நின்ற பைரவி கூட்டத்தினரைப் பார்த்து, “முடிச்சுட்டீங்களா? இப்போ நான் பேசலாமா?” என்று கேட்டாள்.
“என்ன சொல்லப் போறீங்க! இதில் இருப்பது நான் இல்லை.. கிராபிக்ஸ்னு சொல்லப் போறீங்களா?” என்று நக்கலாக மனோகர் கேட்டான்.
சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “நான் ஏன் பொய் சொல்லணும்!” என்று அவனைப் பார்த்து கூறியவள், மற்றவர்களைப் பொதுவாக பார்த்து, “உங்க எல்லோருக்குமே இவருக்கு என் மேல் இருக்கும் பழிவெறி பற்றி தெரியும்!” என்று ஆரம்பிக்க,
ஒருவர், “ஆனா புகைப்படம் போலி இல்லைனு நீங்களே சொல்றீங்களே!” என்றார்.
“அந்த புகைப் படத்தை பற்றி அப்புறம் பேசலாம்..” என்றவளின் பேச்சை மீண்டும் இடையிட்டவர்,
“இது சரியான பதில் இல்லையே!” என்றார்.
“அங்கே நடந்ததே வேறு.. எல்லாம் தெரிந்த இவர் என்னை தவறாகக் காட்ட என்றே இப்படி செய்து இருக்கார்.. புகைப்படத்தை பற்றியும் சொல்றேன்.. ஆனா அதுக்கு முன்னாடி, முதல்ல அதில் இவர் உபயோகித்து இருக்கும் வார்த்தைகளும், இப்போ கொஞ்சம் முன்னாடி பேசியதும் சரியானு சொல்லுங்க..” என்ற போது,
“அது எப்படி?”
“முதல்ல அதைப் பத்தி சொல்லுங்க”
“அதானே! நாங்க வந்ததே அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தானே!”
“பேச்சை மாற்றி, உண்மையை மறைக்கப் பார்க்கிறீங்களா?” போன்ற பல எதிர்ப்பு குரல்கள் வர,
அவள், “உண்மையை மறைக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை.. உங்களோட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லாம நான் எங்கேயும் போகப் போறது இல்லை.. கொஞ்சம் பொறுமையா என்னோட விளக்கத்தை கேளுங்க..
அதன் பிறகு நான் சரியா பதில் சொல்லாமல் மழுப்புறேன்னு உங்களுக்கு தோணினா, கமிஷனர் சார் கிட்ட இந்த வழக்கில் இருந்து என்னை விலக்கச் சொல்லுங்க” என்றாள்.
மீண்டும் சிலர் குரல் எழுப்ப, நேர்மையான மூத்த செய்தியாளர் ஒருவர், “இருங்கப்பா.. அவங்க முதல்ல பேசட்டும்.” என்றதும் முணுமுணுப்புடன் அமைதியாகினர்.
பைரவி, “இவர் எழுதி இருக்கும் தலைப்பே தப்பு தான்.. அந்த புகைப் படத்தில் நாங்க அறையிலா இருக்கிறோம்? பொது இடத்தில் தானே இருக்கிறோம்! அப்போ அதை எப்படி ‘திரைமறைவு செயல்’னு சொல்ல முடியும்?
‘விலை போய்விட்டாரா?’ என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பலை.. உண்மையான கொலையாளியைக் கண்டு பிடித்து, இந்த வழக்கை இன்னும் இரண்டு நாட்களில் நான் முடிக்கிறப்ப, என்னோட செயலே இதற்கு பதில் சொல்லிவிடும்..
அடுத்து என்ன சொல்லி இருந்தார்! ஆங்.. ‘ஆண்களை பாடைக்கு மட்டுமே அனுப்புவேன் என்றவர், தற்போது படுக்கைக்குத் தயார் ஆகி விட்டாரா?’ என்று கேட்டு இருந்தார்.. அந்த புகைப்படத்தில் நான் முத்தம் கொடுக்கலையே! கொடுத்தவரை கேட்க வேண்டிய கேள்வி இது.” என்ற போது,
ஒருவர், “இது பொறுப்பான பதில் இல்லையே! ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிற நீங்களே இப்படி நடந்துக்கலாமா? பொது இடத்தில் இப்படியா நடந்துப்பாங்க?” என்று கேட்டார்.
“பொறுப்பான பதவியில் இருக்கும் நானோ, இல்லை சமூகத்தில் பிரபலமா இருக்கிற ருத்ரேஷ்வர் தான் இப்படி நடந்துப்பாரா? நாங்க இருவருமே பொறுப்பற்றவர்கள் இல்லை.. அப்போ இதன் பின்னணியில் ஏதோ சதி இருக்க வேண்டும் என்று சிறந்த செய்தியாளரான உங்களுக்கு புரிய வில்லையா?” என்று திருப்பி கேட்டாள்.
ஒரு நொடி மௌனித்தவர், “நேரிடையா பதில் சொல்லுங்க.” என்றார்.
“புகைப் படத்தை பற்றி பேசும் போது உங்களுக்கே இதற்கான பதில் கிடைக்கும்” என்றவள், “புகைப்படம் மட்டும் தான் உங்களுக்கு தெரியும்.. அதற்கு முன்போ, பிறகோ அங்கே என்ன நடந்ததுனு உங்களுக்கு தெரியாதே! ஆனால் உங்கள் நண்பருக்குத் தெரியும்.” என்றபடி மனோகரைப் பார்த்தாள்.
அவனோ அலட்சியமாகப் பார்த்தபடி உதட்டை சுளித்தான்.
அவனை வெகு அலட்சியமாக பார்த்தவள் மற்றவர்களைப் பார்த்து, “தப்பு செய்றவங்க எதையும் பொதுவில் செய்ய மாட்டாங்க.. இப்படி உங்க முன்னாடி தைரியமா லைவ் ப்ரெஸ் மீட்டில் பேசிட்டு இருக்கிறதில் இருந்தே, என்னிடம் தவறு இல்லைனு நேர்மையானவங்களுக்கு புரிந்து இருக்கும்” என்றாள்.
“உங்க தப்பை தட்டிக் கேட்டா, எங்களை நேர்மை இல்லாதவங்கனு சொல்லுவீங்களா?” என்று ஒருத்தர் கோபமாக கேட்க,
அவளோ நேர்பார்வையுடன் அந்த மூத்த பாத்திரிக்கையாளரைப் பார்த்து,
“நீங்க சொல்லுங்க” என்றாள்.
அவர், “உங்களிடம் தவறு இருக்கும் என்று எனக்கு தோனலை.. நீங்க அழைத்ததை மதித்து, உங்க விளக்கத்தை கேட்க தான், நான் இங்கே வந்து இருக்கிறேன்.” என்றார். “தேங்க்ஸ்” என்றவள் கேள்வி கேட்டவரைப் பார்க்க, அவர் வேறு வழி இல்லாமல் அமைதியாக நின்றார்.