6.3௦ மணியளவில், அந்தப் பூங்காவின் அருகே இருந்த முட்டுச் சந்து தெருவில் இருக்கும் பெரிய மரத்தின் மறைவில், அந்த மன்ற உறுப்பினரின் மகன் நிர்மல் கண்கள், கைகள் மற்றும் வாயும் கட்டப்பட்ட நிலையில் திமிறிக் கொண்டு இருக்க, கையுறைகள் அணிந்திருந்த அசோக் அவனது புஜத்தை பற்றியபடி, அவன் அருகே நிற்க, அவன் எதிரே அனிதாவும், கையுறைகளை அணிந்திருந்த பைரவியும் நின்றிருந்தனர்.
நிர்மல் கோபத்துடன், ‘நான் யாருனு தெரியுமா? தைரியம் இருந்தா கட்டை அவிழ்த்துட்டு என் முன்னாடி நில்லுடா!’ என்று மிரட்டலாகக் கத்த முயற்சித்தபடி திமிற,
பைரவி, “சலம்பாம நில்லுடா ***” என்றாள்.
பின் நிர்மலை கோப விழிகளுடன் நோக்கிக் கொண்டிருந்த அனிதாவிடம் கை உறைகளை கொடுத்து, “இதைப் போடு” என்றாள்.
அனிதா பேசப் போக தனது உதட்டின் மீது விரலை வைத்து அவளை பேசவிடாமல் செய்த பைரவி, கண்களால் கையுறையை அணியக் கூறினாள்.
அனிதா கையுறைகளை அணிந்துக் கொண்டு இருந்த நேரம்,
நடப்பது புரியாமல் நிர்மல் அதிகமாக திமிறியபடி, ‘யாரு நீ? என்ன செய்துட்டு இருக்க?’ என்று கேட்க நினைத்தான்.
பைரவி அமிலம் இருந்த ஒரு கண்ணாடி பொத்தலை அனிதாவிடம் நீட்டிய படி, “இந்த அசிட்டை(acid) இவனோட ஆணுறுப்பின் மீது ஊத்து.” என்றாள்.
அனிதா அதிர்வுடன் பைரவியைப் பார்க்க,
இவ்வளவு நேரம் திமிராக நின்றிருந்த நிர்மலின் தலை, பீதியுடன் பைரவியின் குரல் வந்த திசை பக்கம் திரும்பியது.
பைரவியோ அனிதாவைப் பார்த்து, “என்னடா பாதி பாட்டிலுக்கும் கொஞ்சம் கம்மியா இருக்குதேனு பார்க்கிறியா? மொத்தமா ஊத்தி செத்துடக் கூடாது பாரு” என்றவள் நிர்மலை பார்த்தபடி,
“இந்த அளவுக்கு ஊத்தினா தான் உயிருக்கு ஆபத்து இல்லாம, ஆணுறுப்பு மட்டும் வெந்து கருகி போகும்.. அப்போ தான் ஒவ்வொரு நிமிஷமும் ஏன்டா உயிரோட இருக்கோம்னு துடிப்பான்” என்றாள்.
நிர்மல் மறுப்பாக தலையை அசைத்து பயத்துடன் கத்த முயற்சித்தபடி துள்ள ஆரம்பித்தான்.
பைரவி அனிதாவைப் பார்த்து, “ஹ்ம்ம்.. உன் கையாலேயே இவனுக்கு தண்டனை கொடு.” என்றாள்.
தனக்கு அவன் செய்த கொடுமையை நினைத்துப் பார்த்த அனிதா, பொங்கி எழுந்த உணர்வுகளுடன் அவனை ரௌத்திர விழிகளுடன் நோக்கியபடி, பைரவி கூறியது போல் அவனது ஆணுறுப்பின் மீது அமிலத்தை ஊற்றினாள்.
நிர்மல் அணிந்து இருந்த ஓட்டப் பந்தயப் பயிற்சி உடையின் காற்சட்டை அவனது ஆண் உறுப்புடன் சேர்ந்து பொசுங்கியது.
வாயை அடைத்து கட்டி இருந்ததால், நிர்மலின் அலறலும் கதறலும் முனங்கலாகத் தான் வெளியே கேட்டது. தரையில் விழுந்து அவன் வலியில் துடிப்பதைக் கண்டு மூவரின் மனதினுள் சிறிதும் இரக்கம் சுரக்கவில்லை.
தழலாக தகித்துக் கொண்டிருந்த பைரவியின் மனதின் ஓரம் சிறு நிம்மதி பிறந்தாலும், அவளது மனம் சாந்தமின்றி தகித்துக் கொண்டு தான் இருந்தது.
தகித்துக் கொண்டிருந்த அவளது மனதினுள் பாலாஜியின் முகம் ஒரு நொடி மின்னி மறைந்தது.
பைரவி நிர்மலின் வலது கரத்தினை பிரித்து அமிலம் இருந்த கண்ணாடி பொத்தலை அவனது கைதடம் பதியும் அளவிற்கு இறுக்கமாக பிடிக்க வைத்து எடுத்துக் கொண்டாள்.
நண்பன் காதில் மெதுவாக, “அஞ்சு நிமிஷம் கழிச்சு தூக்கி கொண்டு போய் ஹாஸ்பிடலில் போடு” என்ற பைரவி நிர்மலுக்கும் கேட்கும் குரலில்,
“வெளியே தெரியுற மாதிரி இந்த நாயை இழுத்து போட்டுட்டு நாம கிளம்பலாம்.. இந்த வழியே போற யாராவது ஹாஸ்பிடலில் சேர்க்கட்டும். இல்லை இப்படியே அழுகிச் சாகட்டும்” என்றாள்.
நிர்மலின் கால்களை பிடித்த அசோக் மரத்தின் அருகிலேயே மறைவில் இருப்பது போலவே அவனை நகர்த்தி விட்டு கிளம்புவது போல் காலினால் சத்தம் எழுப்பினான்.
சுற்றுப் புரத்தை கவனித்த பைரவி, அசோக்கிடம் தலை அசைத்து விட்டு அனிதாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குக் கிளம்பினாள்.
வீட்டினுள் சென்றதும் கைகளை கூப்பிய அனிதா விழிகளில் ஆனந்தக் கண்ணீருடன், “ரொம்ப நன்றி மேடம்.. கோர்ட்டில் அவனை நிற்க வைத்திருந்தால் கூட இந்த அமைதி எனக்கு கிடைத்து இருக்காது.. ரொம்ப ரொம்ப நன்றி மேடம்.” என்றாள்.
அவளது கையை இறக்கி தோளை தட்டிக் கொடுத்த பைரவி, “இனி இதை பத்தி நினைச்சுக் கூட பார்க்கக் கூடாது.. இன்னையோட எல்லாத்தை தலை மூழ்கிடு.. உனக்கு நடந்ததையும் தான் சொல்றேன்.” என்றாள்.
அனிதா கண்ணீருடனே ‘சரி’ என்பது போல் தலையை ஆட்ட,
பைரவி தனது கையில் இருந்த அமிலம் இருந்த பொத்தலைக் காட்டியபடி, “இதில் மிச்சம் இருக்கிறதில் ஒரு சொட்டு உன்னோட வலது கை மணிக்கட்டிலும் சுண்டு விரலிலும் ஊத்தனும்” என்றாள்.
(அந்தப் பொத்தலில் ஐந்தாறு துள்ளிகள் மட்டுமே மீதம் இருந்தது)
அனிதா அதிர்ச்சியுடன் பார்க்க,
“காரணமா தான் சொல்றேன்” என்ற பைரவி, “வேணும்னு தான் உன்னை அங்கே பேச வேண்டாம்னு சொன்னேன்.. ஒன்னா ரெண்டா! இதையே பொழப்பா வச்சிருக்க ***க்கு, நீ அங்கே பேசாததால் இதை செய்தது நீ-னு சட்டுன்னு கண்டு பிடிக்க முடியாது..
ஆனா ஒருவேளை அவன் உன்னை கண்டு பிடிச்சுட்டா! அதனால் எதுக்கும் நீ அவன் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திடு.. உன்னை காதல் டார்ச்சர் செய்தவன், உன் மறுப்பை ஏற்க முடியாம இன்னைக்கு உன்னோட முகத்தில் அசிட் ஊத்தப் போனப்ப, நீ அதை தட்டி விட்டதில் அது அவன் மேலேயே கொட்டிடுச்சுனும், அவனிடம் இருந்து பாதுகாப்பு வேணும்னும் கம்ப்ளைன்ட் கொடு.. தட்டி விட்டப்ப உன் கையில் அசிட் பட்டதா சொல்றதுக்கு தான் இப்போ உன் கையை காயப்படுத்தனும்னு சொல்றேன்..
இந்த பாட்டிலை மரம் கிட்ட இருக்கிற சின்ன புதரில் போட்டுடுவேன்.. நீ கம்ப்ளைன்ட் கொடுத்த அப்புறம் ஸ்பாட்க்கு விசாரிக்கப் போற மாதிரி போய் எடுத்துடுவேன்” என்றாள்.
“ஓகே மேடம்” என்றவள் கவலையுடன், “ஆனா உங்க குரலை அவன் கேட்டானே! உங்களுக்கு ஏதும் பிரச்சனை வருமா?” என்று கேட்டாள்.
“அவனோட கண்ணை கட்டி இருந்ததால் அது எடுபடாது.. என்னோட குரலை வச்சு என் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் என்னோட எதிரி யாரோ என் குரலை பயன் படுத்தியதா சொல்லி சுலபமா அவனோட கம்ப்ளைன்ட்டை செல்லாததா ஆக்கிடுவேன்..
அசோக், அவனுக்கு எதிரா சாட்சி சொல்லுவான்.. அதாவது அவன் உன் முகத்தில் ஊத்த வந்தப்ப அதை நீ தட்டி விட்டு அசிட் அவன் மேலேயே கொட்டியதும் நீ பயத்தில் ஓடிட்டதாவும்,
அந்த வழியே கொஞ்ச தூரத்தில் வந்துட்டு இருந்த அசோக் இதை பார்த்து நிர்மலை ஹாஸ்பிடலில் சேர்த்ததாவும் சொல்லுவான்.. தள்ளி வந்துட்டு இருந்ததால் உன்னோட முகம் தெரியலைனு சொல்லிடுவான்..
இப்போ ஹாஸ்பிடலில் அவனை சேர்த்துட்டு அவனோட செல்லில் இருந்து அவனோட அப்பனுக்கு போனை போட்டு ‘ரோட்டில் துடிச்சிட்டு இருந்தவனை ஹாஸ்பிடல் சேர்த்து இருக்கிறதா’ சொல்லுவான்.. அந்தாளு வரதுக்கு முன்னாடி அசோக் கிளம்பிடுவான்.” என்றாள்.
‘எவ்ளோ பிளானிங்!’ என்று நினைத்த அனிதா பிரம்மிப்புடன் பைரவியைப் பார்த்தாள்.
“ரெடியா?” என்று கேட்ட பைரவி, அனிதா தலை அசைக்கவும், “வலியைப் பொறுத்துக்கோ” என்று விட்டு அவளின் வலது கையின் மணிக்கட்டிலும் சுண்டு விரலிலும் ஒரு ஒரு துளி அமிலத்தை ஊற்றினாள்.
பின், “அசோக் உன்னை கூட்டிட்டு போன டாக்டர் கிட்ட கையை காட்டி ட்ரீட்மென்ட் எடுத்துட்டு, எட்டு மணிக்கு வந்து கம்ப்ளைன்ட் கொடு.. டாக்டர் சொன்ன அறிவுரையின் பெயரில் கம்ப்ளைன்ட் கொடுத்ததா சொல்லணும்.” என்றாள்.
தழல் தகிக்கும்…