செய்தித்தாளை விரித்துப் பார்த்தவளின் முகத்தில் கோபமோ பதற்றமோ சிறிதும் இல்லை.
முதல் பக்கத்தில் ‘ஏசிபியின் திரைமறைவு செயல்கள் வெட்ட வெளிச்சம்’ என்ற தலைப்பில் ருத்ரேஷ்வர் இவளது கன்னத்தில் முத்தமிடும் புகைப்படம் வெளியாகி இருந்தது.
அதன் பொருளடக்கத்தில் ‘இவரும் விலை போய்விட்டாரா? இல்லை, ஆண்களை பாடைக்கு மட்டுமே அனுப்புவேன் என்றவர், தற்போது படுக்கைக்குத் தயார் ஆகிவிட்டாரா?
இல்லை, இது எப்பொழுதும் திரை மறைவில் நடக்கும் தொடர் கதை தானோ?’ போன்ற கேள்விகள் இருந்தது.
அலட்டிக் கொள்ளாமல் நண்பனைப் பார்த்த அவள், “அன்னைக்கு என் கிட்ட அடி வாங்கியதுக்கு பழி தீர்த்து இருக்கிறான்.” என்றாள்.
நண்பனின் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து, “கோபம் இருந்தா கூட ஓகே.. இது என்ன பாவனை? உனக்கு செட்டே ஆகலை.” என்றவள்,
“சும்மாவே உன் முகத்தை பார்க்க முடியாது.. இதில் இப்படி வச்சா!” என்று கிண்டலாக நிறுத்தினாள்.
அவளைச் செல்லமாக முறைத்தவன், “என்ன நடக்குது?” என்று புகைப்படத்தை சுட்டிக் காட்டி கேட்டான்.
முன் தினம் நடந்ததைக் கூறியவள், “நேத்து ஹோட்டலில் அந்த **** என் கண்ணில் படலை.. அந்த நாதாரி என்னைப் பின் தொடரலை.. ஸோ தற்செயலா என்னையும் ருத்ரேஷ்வரையும் பார்த்ததும், மறைந்து இருந்து போட்டோ எடுத்து இருக்கணும்.. ஓகே இதை நான் பார்த்துக்கிறேன்.. நீ போய் நான் கொடுத்த வேலையைச் செய்.. சீக்கிரம்.” என்று விரட்டினாள்.
சிறிதும் தளராமலும், தேங்கி நிற்காமலும் திடமாக இருக்கும் தோழியை சிறு அதிர்ச்சியும் பிரம்மிப்புமாக பார்த்தபடி அவன் நிற்க,
“கிளம்புடா” என்றவள் கைபேசியில் கபிலனை அழைத்தாள்.
அழைப்பை எடுத்த கபிலன், “குட் மார்னிங் மேடம்” என்றான் விறைப்பு கலந்த தூக்கக் கலக்க குரலில்.
“குட் மார்னிங் கபிலன்.. நேத்து நீங்க பயந்தது நடந்துருச்சு.. *** பத்திரிக்கையை வாங்கிப் பாருங்க.. ஒன்பது மணிக்கு லைவ் ப்ரெஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யுங்க.. முக்கியமா *** பத்திரிக்கையை சேர்ந்த மனோகர் இருக்கணும்.”
“ஓகே மேடம்” என்று கூறி, அவன் அழைப்பைத் துண்டித்ததும் நண்பனைப் பார்த்து, “நீ இன்னுமா கிளம்பலை!” என்றாள்.
“உன்னோட துணிச்சலையும் துணிவையும் பார்த்து பெருமையா, பிரம்மிப்பாவும் இருக்குது, பயமாவும் இருக்குது.”
“கடையை சாத்திட்டு கிளம்புறியா?”
முறைப்புடன், “கிளம்பிட்டேன்” என்றவன்,
“அந்த பதரு ஆறு மணிக்கு தான் வீட்டை விட்டு வெளியே வருவான்.. வேலையை கச்சிதமா முடிச்சிட்டு கூப்பிடுறேன்” என்றுவிட்டு கிளம்பினான்.
அவன் கிளம்பியதும் ஆணையரை அழைத்த பைரவி, அவர் அழைப்பை எடுத்ததும், “குட் மார்னிங் சார்.. இந்த நேரத்தில் அழைத்து தொந்தரவு செய்ததுக்கு மன்னிக்கவும்” என்றாள்.
“குட் மார்னிங் பைரவி.. தொந்தரவுலாம் இல்லை.. சொல்லுங்க”
“நேத்து மிஸ்டர் ருத்ரேஷ்வரை *** ஹோட்டலில் கலைச்செல்வி கேஸ் விஷயமா சந்திச்சேன்.. அவர் கேஸ் சம்பந்தமா நிறைய தகவல்கள் கொடுத்தார்.” என்றவள் வினோதனின் செயலை பற்றிக் கூறி,
“ஒரு நொடி நிகழ்ந்த நிகழ்வை படம் பிடித்து *** ரிப்போர்ட்டர் மனோகர் நியூஸ் பேப்பரில் போட்டதோடு தேவை இல்லாதது நிறைய எழுதி இருக்கிறான்.. கேரக்டர் அசாஸ்ஸினேஷன் செய்ததோடு என்னோட நேர்மையை சந்தேகிக்கிற மாதிரி எழுதி இருக்கிறான்.” என்றாள்.
“ரிவென்ஜ் எடுத்து இருக்கிறான்”
“எஸ் சார்” என்றவள், “ஒன்பது மணிக்கு லைவ் ப்ரெஸ் மீட்டிற்கு கபிலனை ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறேன்.” என்றாள்.
“ஸோ.. தகவல் தான் சொல்றீங்க!”
சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், “எஸ் சார்.. இது அஃபிஷியல் இல்லை, என்னை பற்றிய நேரடி தாக்குதலுக்கான பதில்களை கூறப் போறேன்.. ஸோ.. அனுமதி கேட்கலை, தகவல் தான் சொல்றேன்.” என்றாள்.
அவளது இத்தகைய பதிலையே எதிர் பார்த்திருந்த ஆணையர் லேசாகச் சிரித்த படி,
“ஓகே ப்ரோசீட்” என்றார்.
“ஓகே சார்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
அதே நேரத்தில் தோட்டத்தில் மெதுவாக ஓடிக் கொண்டிருந்த ருத்ரேஷ்வர் முன், செய்தித்தாளுடன் பிரவீன் நின்றிருந்தான்.
செய்தித்தாளை படித்தவன் கோபத்துடன், “யாரு வேலை?” என்று கர்ஜித்தான்.
பிரவீன், “இனி தான் விசாரிக்கணும்” என்றான்.
சில அடி தூரம் வேகமாக முன்னும் பின்னும் நடந்த ருத்ரேஷ்வர் சில நொடிகளில் நடையை நிறுத்தி, “வி.ஓ.சி கிரௌண்ட் வாசலில் பைரவி ஒருத்தனை அடிச்சாளே! அவன் இந்த பத்திரிக்கை தானே!” என்று கேட்டான்.
“ஆமாடா.. அவன் வேலையா தான் இருக்கும்”
“தூக்கிடு”
“அவசரப்படாத ருத்ரா..” என்றவனின் பேச்சை கோபத்துடன் இடையிட்ட ருத்ரேஷ்வர்,
“அவன் எழுதி இருக்கிறதை பார்த்துட்டு எப்படி பொறுமையா போகச் சொல்ற?” என்றான்.
“எப்போதும் உன்னிடம் இருக்கும் நிதானம் இப்போ மிஸ்ஸிங்.. அதான் சொல்றேன்.”
“அம்மு விஷயத்தில் இத்தனை வருஷம் நான் நிதானமா இருந்தது போதாதா?”
“புரிஞ்சுக்கோ ருத்ரா.. அம்மு சாதாரண பொண்ணு இல்லை. இப்போ.. உன்னோட செயல் அம்முவை பாதிக்கக் கூடாது” என்றதில் சற்றே வேகம் தணிந்தவன், பைரவியை கைபேசியில் அழைத்தான்.
ஆனால் அவள் அழைப்பை எடுக்கவில்லை. அவன் மீண்டும் அழைக்க, அவள் அழைப்பைத் துண்டித்தாள்.
அவன் மீண்டும் கோபத்துடன், “எடுக்க மாட்டிக்கிறா.. என்ன நினைக்கிறானே தெரியலை.” என்றான்.
“என்ன நினைத்தாலும் உன்னை தப்பா நினைக்க மாட்டா..ங்க”
“நேத்து நான் தான் அவளை வரச் சொன்னேன்.. சொல்லி இருக்கவே கூடாது.”
“சரி செய்திடலாம்டா”
“ஏற்கனவே கொஞ்சம் கூட அவளோட மனசை நெருங்க முடியலை.. இப்போ இது வேற.. ப்ச்..” என்று கோபத்துடன் தனது தொடை மீது வேகமாக குத்திக் கொண்டான்.
அவன் கூறியதை கேட்டபடி அங்கே வந்த கஜேந்திரன் மகனின் முகத்தை கண்டு, “என்னாச்சு ருத்ரா?” என்று கேட்டார்.
“எல்லாம் உங்க பிரெண்டோட பையன் செய்த வேலை.. அன்னைக்கே அவனை கம்பி எண்ண வச்சு இருக்கணும்” என்றான் கோபத்துடன்.
“என்னாச்சு?”
“நேத்து நைட் ஏசிபி பைரவியை *** ஹோட்டலில் சந்திச்சேன்” என்று ஆரம்பித்தவன் வினோதனின் செயலையும், அதைத் தொடர்ந்து பைரவியின் எதிர்வினை பற்றி மட்டும் கூறி முடித்து செய்தித்தாளை நீட்டினான்.
செய்தித்தாளைப் பார்த்து அதிர்ந்தவர், தனது அதிர்வை மறைத்து நிதான குரலில், “என்ன செய்யப் போற?” என்று கேட்டார்.
“யோசிக்கணும்”
“ஏசிபி கிட்ட பேசினியா?”
“கால் போட்டா கட் செய்றா”
“ஒருவேளை ஏசிபி பார்க்கலையோ என்னவோ”
மறுப்பாக தலை அசைத்தவன், “பார்த்ததால் தான் கட் செய்றா.. ஆனா அவளோட எதிர்வினை என்னவா இருக்கும்னு கெஸ் செய்ய முடியலை.” என்றான்.
“அம்மு கிட்ட பேசினியா?”
“அதை தானே சொல்லிட்டு இருக்கிறேன்”
முதலில் குழப்பத்துடன் பார்த்தவர் பின் அதிர்வுடன், “ஏசிபி தான் அம்முவா?” என்று கேட்டார்.
ருத்ரேஷ்வர் ‘ஆம்’ என்று தலையை அசைத்தப் பொழுது, அவனது கைபேசிக்கு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
சிறு யோசனையுடன் அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றான்.
“சார் பைரவி மேடம் டீமில் இருக்கும் எஸ்.ஐ கபிலன் பேசுறேன்.. இது என்னோட மனைவி நம்பர்.. மேம் இப்போ போனில் பேசிக்க வேணாம்னு சொல்லச் சொன்னாங்க.. அவங்களே உங்களை தொடர்பு கொள்வாங்களாம்.. ஒன்பது மணிக்கு லைவ் ப்ரெஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்காங்க.”
“ஓகே.. தகவல் சொன்னதுக்கு தேங்க்ஸ்” என்றவன், “உங்க மேடம் எப்படி இருக்கிறாங்க?” என்று கேட்டான்.
“எப்போதும் போல் கூலா நிதானமா தான் இருக்கிறாங்க.”
சிறு உதட்டோர புன்னகையுடன், “ஓகே” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன், தந்தையை மென்னகையுடன் பார்த்து,
“உங்க மருமக ஒன்பது மணிக்கு லைவ் ப்ரெஸ் மீட் வச்சு இருக்கிறா” என்று விட்டு நண்பனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாத மகன் பைரவி விஷயத்தில் நிதானம் இழந்ததும், இவ்வளவு நேரம் கொந்தளித்தவனின் மனம் பைரவி பற்றி பேசியதிலேயே நிதானம் திரும்பியதில் இருந்தும், பைரவி அவனுள் நீக்கமற கலந்திருப்பதை உணர்ந்துக் கொண்டார்.
அத்துடன், அவன் ‘அவளோட மனசை நெருங்க முடியலை’ என்று கூறியதை நினைத்து அவரது மனம் சற்று கலக்கம் கொண்டது.