
தழல் ~ 9
பைரவி வீட்டிற்கு செல்லும் வழியில் கபிலன் கைபேசியில் அவளை அழைத்தான்.
வண்டியை ஓரமாக நிறுத்தி அழைப்பை எடுத்தவள், “வீட்டுக்கு டிரைவ் செய்துட்டு இருக்கிறேன்.. சங்கவி சேஃபா? எனி எமர்ஜென்சி?” என்று கேட்டாள்.
“சங்கவி சேஃப் மேடம்.. நீங்க வீட்டுக்குப் போயிட்டு கூப்பிடுங்க”
“நீங்க வீட்டுக்கு போயாச்சா?”
“எஸ் மேடம்”
“ஓகே” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள், வண்டியை கிளப்பும் வேளையில் அஜய் அவளை அழைத்தான்.
அழைப்பை எடுத்து, “சொல்லு அஜய்” என்றாள்.
“மேம் அந்த ப்ரேஸ்லெட் எங்க காலேஜில் யாரும் போட்டு யாரும் பார்க்கலை.. ஸோ கொலையாளியோடதா தான் இருக்கணும்.”
“ஒருத்தர் விடாம எல்லா டிப்பார்ட்மென்ட் ஸ்டுடென்ட்ஸ் கிட்டயும் கேட்டாச்சு தானே!”
“எஸ் மேம்.. அதான் ஒரு நாள் மேல ஆகிடுச்சு.. கிளியரா செக் செய்தாச்சு மேம்.”
“ஓகே தேங்க் யூ” என்றவள், “இந்த விஷயம்..” என்று ஆரம்பிக்க,
“வெளியே போகாது மேம்.. நீங்க சொன்னது போல இந்த விஷயத்தைப் பற்றி வெளியே பேசக் கூடாதுனு சொல்லித் தான் விசாரிச்சோம்.” என்றான்.
“ஓகே பைன்”
“கொலையாளியை விட்டுறாதீங்க மேம்”
“கண்டிப்பா பிடிச்சிடலாம்.. ஓகே பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்து வண்டியை கிளப்பி வீட்டிற்குச் சென்றாள்.
வீட்டிற்குச் சென்றதும் ருத்ரேஷ்வர் கொடுத்த விரலியில் இருந்த மறைகாணி பதிவை பார்த்தவள், ஒரு இடத்தில் நிறுத்தி உன்னிப்பாகக் கவனித்தாள். பின் அதன் விவரங்களை கபிலனுக்குப் புலனம் மூலம் அனுப்பிவிட்டு அவனை கைபேசியில் அழைத்தாள்.
அழைப்பை எடுத்த கபிலன், “வீட்டுக்கு வந்தாச்சா மேடம்?” என்று கேட்டான்.
“வந்துட்டேன்.. உங்களுக்கு இப்போ வாட்ஸ்-அப்பில், ஒரு சிசிடிவி புட்டேஜ் அண்ட் சில கிளிப்பிங்ஸ் அனுப்பி இருக்கிறேன்.. பாக்டரி வெளியே யாரோ கலைச்செல்வியை கடத்தி இருக்கிறாங்க.. அதோட கிளிப்பிங்ஸ் தான்.. விவரம் எதுவும் கிளியரா இல்லை.. கடத்தியவன் முகம் தெரியலை அண்ட் காரோட நம்பர் பாதி தான் தெரியுது.. ஆனா.. காரோட மாடல் வச்சு கண்டு பிடிச்சிடலாம்.. ஸோ அதை பத்தி விசாரிச்சு சொல்லுங்க.. ட்ராபிக் சிக்னல் புட்டேஜ்ஜஸ் எதிலும் சிக்குறானானும் பாருங்க.”
“ஓகே மேடம்”
“இந்த புட்டேஜ் ருத்ரேஷ்வர் கொடுத்தது.” என்றவள் உணவகத்தில் வைத்து ருத்ரேஷ்வர் வழக்கு சம்பந்தமாகப் பேசியதைப் பற்றிக் கூறினாள்.
பின், “இன்னொரு முக்கியமான விஷயம்.. கலைச்செல்வியை கடத்தியவன் கையில் ப்ரேஸ்லெட் போட்டு இருக்கிறான். ஆனா அதுவும் சரியா தெரியலை.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அஜய் போன் செய்து, நாம கண்டு பிடிச்ச பிரெஸ்லெட்டை காலேஜில் யாரும் போட்டு யாரும் பார்க்கலைனு சொல்லிட்டான்.” என்றாள்.
“அப்போ இவன் தான் கொலையாளியா மேடம்?”
“இருக்கலாம்.. இல்லை கொலையாளியோட கையாளாகக் கூட இருக்கலாம்.” என்றவள்,
“சங்கவி விஷயம் என்னாச்சு?” என்று கேட்டாள்.
“சங்கவி பையனுக்கு உடம்பு சரி இல்லை மேடம்.. அந்த டென்ஷனில் உங்களுக்கு போன் செய்யலை” என்றான்.
“பையன் இப்போ எப்படி இருக்கிறான்?”
“இன்னும் முழுசா சரியாகலை.. ஆனா ரெண்டு நாளில் சரி ஆகிடுவான்னு சங்கவி பிரெண்ட் சொன்னாங்க.. பிரெண்ட்னா சங்கவி கூட வேலை பார்க்கிற இன்னொரு நர்ஸ் தான் மேடம்”
“உடம்புக்கு என்ன?”
“வீசிங் உண்டு போல மேடம்.. அடிக்கடி பிரீதிங் ப்ராப்ளம் வந்தாலும், இந்த முறை கொஞ்சம் அதிகம் போல.. சைல்டு கேர் ஹாஸ்பிடல், வீடுனு அலைச்சல் அதிகம்.. அதான் போன் செய்யலை.”
“சங்கவி நம்பர் கிடைச்சுதா?”
“இல்லை மேடம்”
“அட்ரெஸ்?”
“இல்லை மேடம்.. தூரத்து உறவுனு சொல்லி தான் சங்கவியோட பிரெண்ட் கிட்ட விசாரிச்சேன்.. அந்த பிரெண்ட் சின்ன பொண்ணு தான் மேடம்.. ஆனா, ‘சொந்தம்னு சொல்றீங்க! நம்பர், அட்ரெஸ் இல்லைனு சொல்றீங்க! அவங்க கணவர் பெயரோ, மகன் பெயரோ கூட தெரியலை.. உண்மையை சொல்லுங்க, இல்லை போலீஸ்ஸை கூப்பிடுவேன்’னு என்னையே மிரட்டுச்சு மேடம்..
‘தூரத்து சொந்தம்.. தொடர்பு விட்டு போச்சு.. இன்னைக்கு தான் இங்கே வேலை பார்க்கிறது தெரிய வந்தது.. அதான் பார்க்க வந்தேன்’னு சொன்னா, அதுக்கும் ‘இங்கே வேலை பார்க்கிறது எப்படி தெரியும்? யாரு சொன்னது’னு கேள்வி கேட்டுச்சு..
அப்புறம் ஒரு வழியா சமாளிச்சு ‘நீங்களே உங்க போனில் இருந்து உங்க பிரெண்ட்டை கூப்பிடுங்க.. நான் பேசுறேன்.. என்னை தெரியலைனு சொன்னா போலீஸ்ஸை கூப்பிடுங்க’னு சொன்ன அப்புறம் போன் போட்டு கொடுத்துச்சு..
நான் சங்கவி கிட்ட, ‘பைரவி அக்கா தம்பி கபிலன் பேசுறேன்.. அக்கா உங்க கிட்ட பேசணும்னு சொன்னாங்க.. உங்க நம்பர் எங்க கிட்ட இல்லை.. நீங்க எப்படி இருக்கிறீங்கனும் தெரியலை.. உங்க பிரெண்ட் வானதி கிட்ட உங்க நம்பர் கேட்டா, நான் உங்களுக்கு தூரத்து சொந்தம்னு சொன்னதை நம்பாம நம்பர் தரலை.. போலீஸ் கிட்ட போறேன்னு மிரட்டுறாங்க.. அதான் அவங்க போனில் இருந்தே ஸ்பீக்கர் போட்டு பேசுறேன்’னு சொன்னேன் மேடம்..
அதுக்கு சங்கவி ‘நான் நல்லா இருக்கிறேன்.. பையனுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை.. நானே பேசுறேன்னு பைரவி அக்கா கிட்ட சொல்லிடுங்க’னு சொல்லி போனை அந்த பொண்ணு கிட்ட கொடுக்க சொல்லிட்டாங்க..
நானும் போனை அந்த பொண்ணு கிட்ட கொடுத்துட்டேன்.. போனை வச்ச அப்புறம் தான் சங்கவி பையன் பத்தி அந்த பொண்ணு சொல்லுச்சு மேடம்”
“குட்.. ரெண்டு பேரும் உஷாரா இருக்கிறாங்க.. ஆனாலும் சங்கவி போனில் உங்களை தெரிந்தது போல் காட்டியது கூட ரிஸ்க் தான்..
ஒருவேளை நேத்து சங்கவி என் கிட்ட பேசியதை கவனிச்சு உங்க பெயரை பயன்படுத்தி வேற யாரும் ப்ளே செய்து இருந்தால்…!”
“எஸ் மேடம்.”
“சரி நாளைக்குப் பார்க்கலாம்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
மணியைப் பார்த்தவள் 8.3௦ என்றதும் குளித்து முடித்து தயாராகி சமையலறை சென்று அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை வைத்துவிட்டு தேங்காயை துருவ ஆரம்பித்தாள். தோசைக்கல் சூடானதும் தோசையை ஊற்றி இட்லி பொடியை லேசாக மேலே தூவி எண்ணெய் ஒற்றினாள். மூன்று தோசைகளை ஊற்றி எடுத்தவள், துவையலுக்கு தேங்காயை அரைத்த போது, அவள் மனம் ருத்ரேஷ்வருடன் நிகழ்ந்த சந்திப்பை அசை போட்டது.
அவனிடம் உணவை மறுத்து வந்ததை நினைத்து மனம் சற்றே சோர்வடைந்தாலும், சில நொடிகளில் சுதாரித்து அதை விட்டு வெளியே வந்தவள், ‘கேஸ் பத்தி மட்டும் யோசி பைரவி’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அவனது நினைவலைகளில் இருந்து வெளியே வந்தவள் உணவை முடித்துக் கொண்டு சிறு வயது முதல் தன்னை துரத்தும் நினைவலைகளையும் துரத்திவிட்டு நித்ராதேவியை தழுவிக் கொண்டாள்.
காலையில் எப்பொழுதும் போல் 5.3௦ மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு, மெது ஓட்டத்திற்கு செல்வதற்காக ஓட்டப்பந்தையப் பயிற்சி உடையை(track-suit) அணித்து கிளம்பிய பைரவி வீட்டின் அழைப்பு மணி அடித்ததில் மணியைப் பார்த்தாள்.
மணி 5.40 என்றதும் எதற்கும் இருக்கட்டும் என்று தனது துப்பாக்கியை கொசுவச் சட்டை(T-shirt) மறைவில் இடுப்பில் சொருகிவிட்டு கதவை திறந்தாள்.
வெளியே நின்ற அசோக்கை கண்டு, “நீ தானா!” என்றவள் முறைப்புடன், “இந்நேரம் இங்கே என்ன செய்துட்டு இருக்க? உனக்கு கொடுத்த வேலை என்னாச்சு?” என்று கேட்டாள்.
அவனோ சிறு கலக்கத்துடன் செய்தித்தாள் ஒன்றை அவளிடம் நீட்டியபடி, “என்னோட வீட்டு ஓனர் இந்த பேப்பரை வாங்குவார்.. நீ கொடுத்த வேலையை செய்ய கிளம்பி கீழே வந்தப்ப முதல் பக்கத்தில் இருந்த போட்டோவை பார்த்து கீழே கிடந்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன்” என்றான்.