குளிரூட்டப்பட்ட பகுதியில் பொதுவாக இருந்த மேசை ஒன்றில் அமர்ந்து மேசை பணியாளரிடம் தனக்கு பழச்சாறு ஒன்றை கொண்டு வரக் கூறிவிட்டு, ருத்ரேஷ்வரை கைபேசியில் அழைத்து தான் அமர்ந்து இருக்கும் இடத்தைக் கூறினாள்.
“இப்படி ஃபுல் ஆனது இல்லை.. சாரி” என்றான்.
“பரவாயில்லை.. இதைச் சொல்ல தான் கூப்பிட்டேன்.. நேரில் பேசிக்கலாம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்து இருந்தாள்.
மேசை பணியாளர் பழச்சாறை வைத்து செல்லவும், ருத்ரேஷ்வர் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
தன்னவளை பார்த்துக் கொண்டே வந்த ருத்ரேஷ்வர் அவள் அமர்ந்து இருந்த மேசைக்கு அடுத்த மேசையில் அமர்ந்து இருந்த வினோதனை கவனிக்கத் தவறினான்.
ஆனால் இவனை கண்ட வினோதனின் மனதினுள் சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. பைரவி ஒரு நெருப்பு என்பதை அறிந்து இருந்தவன் ருத்ரேஷ்வரை அவளிடம் கோர்த்து விடும் எண்ணத்துடன் ருத்ரேஷ்வர் தனது மேசை அருகே வரவும், அவனது காலை தட்டி விட்டான்.
அதன் விளைவாக ருத்ரேஷ்வர் பைரவி மீது விழப் போனான். மேசையை பிடித்து தன்னை நிலைபடுத்திக் கொள்ள ருத்ரேஷ்வர் முயற்சித்ததால் பைரவி மீது விழவில்லை. ஆனால் சரிந்த வேகத்திற்கு அவனது உதடு லேசாக அவளது கன்னைத்தை தீண்டி இருந்தது.
நொடி பொழுதில் நடந்திருந்த நிகழ்வில் பெரிதும் அதிர்ந்த ருத்ரேஷ்வர், “சாரி அம்மு” என்று சிறிது பதறியபடி நிமிர்ந்து நின்று நடந்ததை யோசித்து தனது காலை தட்டிவிட்டது யார் என்று அறிய பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க,
அவன் கண்டதோ பைரவியிடம் அடி வாங்கிய வினோதனை.
ஆம், ருத்ரேஷ்வர் யோசிக்க எடுத்த இரண்டு நொடிகளில் அவள் செயலில் இறங்கி இருந்தாள்.
ருத்ரேஷ்வருக்கு அடி விழும் என்று நினைத்து இருந்த வினோதன், பெரும் அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்க,
அவன் மனைவி காக்கி உடையில் இருந்த பைரவியிடம், “ஹெலோ மேடம்! போலீஸ்னா என்ன வேணா செய்யலாமா? இப்போ எதுக்கு இவரை அடிச்சீங்க?” என்று எகிறினாள்.
பைரவி சீற்றத்துடன் வினோதனை முறைத்தபடி மீண்டும் அவனது கன்னத்தில் அறைய, அப்பொழுது தான் வினோதனிற்கு பைரவியின் கோபத்திற்கு தான் ஆளானது புத்தியில் உரைக்க,
பயத்துடன், “சாரி மேடம்” என்றான்.
அவன் மனைவி யோசனையுடன் பார்க்க,
ருத்ரேஷ்வர், “விடு பைரவி” என்று கூற,
ருத்ரேஷ்வரை முறைத்த பைரவி கைகளை கட்டிக் கொண்டு வினோதனை சீற்றத்துடன் தீர்க்கமாகப் பார்த்தாள்.
அந்த பார்வையில் வெடவெடத்தவன் பார்வையை தாழ்த்தியபடி,
“சா.ரி.. மேடம்.. சாரி.. அது.. ருத்ரனை உங்க கிட்ட கோர்த்து விட நினைத்து..” என்று இழுத்து நிறுத்தினான்.
“இவர் கிட்ட மன்னிப்பு கேளு” என்ற பைரவியின் கட்டளையில் ருத்ரேஷ்வரைப் பார்த்து சின்ன குரலில், “சாரி” என்றான்.
“மன்னிப்பு கேட்கச் சொன்னேன்” என்றவளை அவன் புரியாமல் பார்க்க, “இவர் முகம் பார்த்து தமிழில் கேளு” என்றாள்.
ருத்ரேஷ்வரைப் பார்த்த வினோதன், “என்னை மன்னிச்சிடு” என்றான். பின் பைரவியைப் பார்த்து, “என்னை மன்னிச்சிடுங்க மேடம்.. தெரியாம செய்துட்டேன்” என்றான்.
“இவரை நீ பழி வாங்க நினைக்கிறனா, ஏதோ தப்பு செய்து இவர் கொடுத்த தண்டனையினால் நீ பாதிக்கப்பட்டு இருக்கணும்” என்றவள் ருத்ரேஷ்வரைப் பார்த்து, “என்ன செய்தான்?” என்று கேட்டாள்.
வினோதன் பயத்துடன் கலவரமாக ருத்ரேஷ்வரைப் பார்க்க,
ருத்ரேஷ்வர் அவனை முறைத்தபடி, “விடு.. நான் பார்த்துக்கிறேன்” என்றதும் தான் வினோதனிற்கு மூச்சு சற்று சீரானது.
பைரவி வினோதனைப் பார்த்து, “இனி ஏதாவது சின்னதா தப்பு செய்தாலும் உன்னை உள்ளே தூக்கி வச்சிடுவேன்.” என்று மிரட்டிவிட்டே தனது இடத்தில் அமர்ந்தாள்.
ருத்ரேஷ்வர் பைரவி எதிரே அமர, வினோதன் விட்டால் போதுமென்று மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
பைரவி, “யாரு?” என்று கேட்டாள்.
“வினோதன்.. உனக்கு ஞாபகம் இருக்குமா தெரியலை.. அப்பாவோட பிரெண்ட், சாரதி அங்கிளோட பையன்.”
“எனக்கு ஞாபகம் இல்லை”
“VV கம்பனி ஓனர்ஸ்.. பிஸ்னெஸ் சண்டை.. நான் பார்த்துக்கிறேன்.. விடு.”
“நீ ஏன் அவனை அடிக்கலை?”
“அதான் நீ ரெண்டு அடி வச்சியே!”
அவள் அழுத்தத்துடன் பார்க்க,
வசீகர புன்னகையுடன், “அவன் எனக்கு நல்லது தானே செய்தான்.” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவள் அதிகமாக முறைக்க,
அவனோ, “புடவை இல்லைனாலும் ஒரு சல்வார்.. இல்லை அட்லீஸ்ட் ஒரு கலர் பேன்ட் சட்டையிலாவது வந்து இருக்கலாம்” என்றான்.
அவள் மிடுக்குடன், “ஏசிபியா தானே உன்னை பார்க்க வந்து இருக்கிறேன்” என்றாள்.
“என்ன சாப்பிடுற?”
பழச்சாற்றை சுட்டிக் காட்டியவள், “உனக்கு மட்டும் சொல்லிக்கோ” என்று விட்டு மேசை பணியாளரை கையை தூக்கி அழைத்தாள்.
மேசை பணியாளரிடம் தனக்கு வேண்டியதை சொன்னவன் சிறு வயதில் அவள் விரும்பி உண்ட ‘சில்லி பரோட்டா’ என்ற பதார்த்தத்தை அவளுக்காக கூறி அனுப்பினான்.
அதை உணர்ந்தாலும் அவனிடம் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் பழச்சாறை ஒரு மிடறு அருந்தியவள், “என்ன ஹின்ட்? சொல்லு” என்றாள்.
“சிசிடிவி புட்டேஜ் பார்த்ததில் சில விஷயங்கள் தெரிய வந்தது.. கலைச்செல்வி இறந்த அன்னைக்கு தான் என்னைப் பார்க்க பாக்டரி வந்து இருக்கா.. அரை மணி நேரம் காத்திருந்தவ நான் வரலைனதும் கிளம்பிட்டா” என்றவன்,
“இது பெருசு இல்லை.. ரெண்டு முக்கியமான விஷயம் சொல்ல தான் உன்னை வரச் சொன்னேன்.. ஒன்னு யாரோ பாக்டரி கேட்டில் இருக்கிற சிசிடிவி புட்டேஜ்ஜை எடிட் செய்து இருக்கிறாங்க..
ரெண்டாவது, பாக்டரியில் இருந்து கிளம்பிய கலைச்செல்வியை யாரோ கடத்தி இருக்கிறாங்க.” என்றான்.
“ஓ!”
“உனக்கு கொஞ்சம் கூட அதிர்ச்சியா இல்லையா?”
“கொலை செய்தவன் அவளை கடத்தியது பெரிய விஷயம் இல்லையே!”
“அது ஓகே.. ஆனா ஒரு பரபரப்பு கூட உன்னிடம் இல்லையே!”
“எதுக்கு பரபரப்பாகனும்? கடத்தியவன் யாருனு தெரிந்தாலே கூல்லா தான் கையாளுவேன்.. இதில் யாருனே தெரியலைனு சொல்ற.. எடிட் செய்ததை எப்படி கண்டுபிடிச்ச? கடத்தியவன் பற்றி ஏதாவது க்ளு இருக்கணுமே!”
“சிசிடிவி புட்டேஜ் வைத்து தான் சொல்றேன்.. என்னோட பாக்டரியில் சில சிசிடிவி கேமராஸ் ரகசியமா வச்சு இருக்கிறேன்.. அது இருப்பது எனக்கும் பிரவீனுக்கும் மட்டும் தான் தெரியும்.. அதில் ஒரு கேமராவில் ஒரு வைட்(white) காரில் வரவன் அவளை கடத்திட்டு போறது பதிவாகி இருக்குது.. ஆனா கேமரா இருந்த அங்கிளுக்கு(angle) அவனோட முகம் தெரியலை அண்ட் காரோட நம்பரும் பாதி தான் தெரியுது” என்றவன் அவளிடம் ஒரு விரலியை(pendrive) கொடுத்து, “இதில் அந்த புட்டேஜ் இருக்குது” என்றான்.
பின், “முதல்ல கேட் கேமரா எடிட் செய்தது எனக்கு தெரியலை.. இந்த புட்டேஜ் பார்த்ததும் தான், அந்த கார் பாக்டரி கேட்டை தாண்டி தானே வந்து இருக்கணும் ஆனா புட்டேஜ்ஜில் வரலையேனு அந்த புட்டேஜ்ஜை திரும்பப் பார்த்தேன்.. உன்னிப்பா கவனிச்சப்ப தான் எடிட் செய்தது தெரிந்தது.. கார் கிராஸ் ஆனது ஜஸ்ட் ரெண்டு அல்லது மூனு செகண்ட்ஸ் தான் இருக்கும்.. அதான் பார்த்ததும் எடிட் செய்ததை கண்டுபிடிக்க முடியலை” என்றான்.