“நிச்சயம் நான் சொன்ன ரீசனா தான் இருக்கும்.” என்றவள் சிறு யோசனையின் பின்,
“கிருஷ்ணா பொறுப்பில் இருக்கும் நகைக் கடை வண்ணார்பேட்டையில் தானே இருக்குது?” என்றாள்.
“எஸ் மேடம்”
“கலைச்செல்வி ஏன் அங்கே பார்ட் டைம் ஜாப் பார்த்து இருக்கக் கூடாது? 5.45 வரை டியூஷன் எடுத்து இருக்கிறா, ஸோ பக்கத்தில் இருக்கிற இடத்தில் தான் வேலை பார்த்து இருக்கணும்.. நகைக்கடை டியூஷன் சென்டரில் இருந்து நடந்து போற தூரம் தான்.. ஸோ.. அங்கே ஆறு மணியில் இருந்து ஒன்பது மணி வரை பார்ட் டைம்மா வேலை பார்த்து இருக்க வாய்ப்பு இருக்குது.”
“சூப்பர் மேடம்.. ஆனா கிருஷ்ணா கலைச்செல்வியை தெரியாது என்றாரே!”
உதட்டை அலட்சியமாக வளைத்தவள், “எந்த வழக்கிலும் முதற்கட்ட விசாரணையில் சொல்றதை அப்படியே நம்பிடுவீங்களா என்ன?” என்றாள்.
“ஆனா மேடம்..” என்று தயக்கத்துடன் நிறுத்த, “என்ன?” என்றாள்.
“இப்போ நாம போன ருத்ரா ட்ரெஸ் கடையும் வண்ணார்பேட்டையில் தான் இருக்குது.”
“எஸ்.. ஆனா ட்ரெஸ் கடையில் வேலை பார்த்து இருந்தால், ருத்ரேஷ்வருக்கு அவளை தெரிந்து இருக்குமே!” என்றவள்,
“ருத்ரேஷ்வரை நம்புறேன்னு சொல்றீங்களா? அதுக்காக அவரை இப்போ விசாரிக்காம இருக்கலையே! சரி, ரெண்டு இடத்திலும் விசாரிக்கலாம்.” என்றாள்.
பின், “ஆனா.. எனக்கு என்னவோ கலைச் செல்வி நகைக்கடையில் பார்ட் டைம் ஜாப் பார்த்து இருப்பாளோனு தான் தோனுது” என்றவளின் முகம் சிறு யோசனையை பிரதிபலிக்க,
“என்ன மேடம்?” என்று கேட்டான்.
“அந்த நர்ஸ் இன்னும் ‘கால்‘ செய்யலை”
“ஆமா மேடம்.. நான் அதை மறந்துட்டேன்” என்ற பொழுது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
பைரவி, “எஸ்.. கம் இன்” என்றதும், கதவை திறந்துக் கொண்டு அனிதா வந்தாள்.
பைரவி அவளை ஊடுருவும் பார்வை பார்க்க,
அவளோ திடமான குரலில், “கௌன்சிலர் பையன் நிர்மல் மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வந்து இருக்கிறேன் மேடம்.” என்றாள்.
“கம்ப்ளைன்ட் கொடுத்து?”
“அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து, ஜெயிலில் போடணும்.”
“அதுக்கு நீ பல முறை கோர்ட்டில் தீ குளிக்கணும்.”
ஒரு நொடி கூட தாமதிக்காமல் கண்ணில் ரௌத்திரம் கலந்த உறுதியுடன், “தீ குளிக்க நான் தயார் மேடம்.. அவனை சும்மா விடக் கூடாது.. கண்டிப்பா ஜெயிலில் போடணும்.” என்றாள்.
“அது லேசான விஷயம் இல்லை”
“தெரியும் மேடம்.. நான் போராடத் தயார்”
“அசோக்கை உனக்கு எப்படி தெரியும்?”
“அசோக் அண்ணா, எங்க தெருவில் தான் இருக்கிறாங்க”
“இந்த விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்?”
“நான் வேலை முடிந்து வீட்டுக்குப் போயிட்டு இருந்தப்ப, அவன் என்னை கடத்திட்டுப் போய்” என்று நிறுத்தியவள்,
பைரவியின் தீர்க்கமான பார்வையில், “என்னை ரேப் செய்தவன், கிட்ட திட்ட மயக்க நிலையில் இருந்த என்னை ரோட்டில் போட்டுட்டுப் போயிட்டான்..
அன்னைக்கு அப்பா ஊரில் இல்லை.. அம்மா அசோக் அண்ணா கிட்ட தான் என்னை தேடச் சொல்லி உதவி கேட்டு இருக்காங்க.. என்னை தேடிட்டு இருந்த அண்ணா ரோட்டில் கிடந்த என்னைப் பார்த்து, அவருக்கு தெரிந்த லேடி டாக்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போய் வைத்தியம் பார்த்தாங்க..
அப்புறம் விடியற் காலையில் யாருக்கும் தெரியாம எங்க வீட்டில் விட்டாங்க.. விஷயம் தெரிந்து அம்மா அழுது புலம்பினப்ப தைரியம் சொன்னாங்க.. அடுத்த நாள் வந்த அப்பா கிட்ட பக்குவமா விஷயத்தை சொல்லி திடப்படுத்தினாங்க.. ரெண்டு நாள் அந்த டாக்டரை எங்க வீட்டுக்கே வர வச்சு எனக்கு கௌன்சிலிங் கொடுத்தாங்க.. அதில் தான் நான் தெளிய ஆரம்பித்தேன்.. அண்ணாவும் நிறைய பேசினாங்க.. மொத்தத்தில் எங்க குடும்பத்துக்கு பக்க பலமா நிற்கிறாங்க..” என்றாள்.
“இந்த இன்சிடென்ட் எப்போ நடந்தது?”
“ஒரு வாரம் முன்ன…”
“இப்போ நீ இங்கே வந்தது, உன்னோட அப்பா அம்மாக்கு தெரியுமா?”
“தெரியாது.. ஆனா நான் உறுதியா இருக்கிறேன் மேடம்”
“உன் அப்பா அம்மா மானம் போச்சு, வாழ்க்கை போச்சுனு வந்து கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கச் சொல்லுவாங்க.. ஸோ..” என்றவளின் பேச்சை இடையிட்டவள்,
“இல்லை மேடம்,. நான் வாபஸ் வாங்க மாட்டேன்” என்றாள்.
“கொலை மிரட்டல் வரும்.. உன் குடும்பத்து ஆட்களை தாக்கலாம்.”
“நீங்க எங்களுக்கு பாதுகாப்பு தர மாட்டீங்களா, மேடம்?”
கைகளை தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறித்தபடி, “அவனோட குணத்தையும் தவறையும் உலகத்திற்கு காட்டனும்னு நினைக்கிறியா? இல்லை, அவனை தண்டிக்கணும்னு நினைக்கிறியா?” என்று கேட்டாள்.
“ரெண்டும் தான் மேடம்”
“நல்லா யோசிச்சுச் சொல்லு”
“புரியலை மேடம்”
“நீ என்ன தான் போராடினாலும் கோர்ட் கேஸில் நீ ஜெயிக்க முடியாது.”
“அசோக் அண்ணா அவனை நிச்சயம் ஜெயிலுக்கு அனுப்பிடலாம்னு சொன்னாங்க”
“பணம் பாதாளம் வரை போகும்.. அரசியல்வாதி வேற!”
“அப்போ அவனுக்கு தண்டனை கிடைக்காதா மேடம்?”
“நீ நினைத்தால் முடியும்.”
அவள் குழுப்பத்துடன், “எப்படி மேடம்?” என்று கேட்டாள்.
“நாளைக்கு காலை ஆறரை மணிக்கு என்னை பார்த்த பார்க்குக்கு(park) பக்கத்தில் இருக்கிற முட்டுச் சந்து தெருக்கு வா!”
“எதுக்கு மேடம்?”
“நாளைக்கு சொல்றேன்.. இப்போ கிளம்பு.”
குழப்பம் தீரவில்லை என்றாலும் பைரவி மேல் கொண்ட நம்பிக்கையில், ‘சரி’ என்று தலையை ஆட்டிக் கிளம்பினாள்.
சட்டென்று, “ஒரு நிமிஷம்” என்ற பைரவி, அனிதா நின்றதும், கலைச்செல்வியின் புகைப் படத்தைக் காட்டி,
“இந்தப் பொண்ணை உனக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.
“நியூஸ்ஸில் பார்த்தேன் மேடம்”
“அதைக் கேட்கலை.. அதுக்கு முன்னாடி தெரியுமா? எங்கேயும் பார்த்து இருக்கிறியா?”
“இல்லையே மேடம்”
“நல்ல யோசிச்சுச் சொல்லு.. நீ வேலை பார்க்கிற ஏரியாவில் எங்கேயும் பார்த்து இருக்கிறியா?”
“நிச்சயம் இல்லை மேடம்.. ஏன் கேட்கிறீங்க?”
“அந்தப் பொண்ணு வண்ணார்பேட்டையில் இருக்கிற ‘விங்க்ஸ்’ டியூஷன் சென்டரில் வேலை பார்த்து இருக்கிறா.. நீயும் அந்த ஏரியாவில் தானே வேலை பார்க்கிற, அதான் சும்மா கேட்டேன்.”
“ஓ! ஆனா.. எனக்கு அந்த டியூஷன் சென்டர் தெரியாது மேடம்.. நான் அந்தப் பக்கம் போனது இல்லைனு நினைக்கிறேன்.”
கபிலன், “உங்க கடையில் எத்தனை லேடீஸ் வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.
“அது.. முப்பத்தி அஞ்சு கிட்ட இருப்போம்.”
“எல்லாரையும் உங்களுக்கு தெரியுமா?”
“ஏன் கேட்கிறீங்க?” என்று அவள் குழப்பத்துடன் வினவ,
பைரவி, “இது நமக்குள் இருக்கட்டும்.. அந்த பொண்ணு, உங்க கடையில் பார்ட் டைம்மா வேலை பார்த்து இருக்குமோனு சின்ன டவுட்.” என்றாள்.
“இல்லை மேடம்.. எல்லாரோடவும் பழக்கம் இல்லைனாலும் ஒரு முறையாவது நிச்சயம் எல்லோரையும் பார்த்து இருப்பேன்.. அப்படியே நான் பார்த்தது இல்லை என்றாலும்,
இந்தப் பொண்ணு இறந்தப்ப, யாராவது ஒருத்தர் கூடயா அந்த பொண்ணு எங்க கடையில் வேலை பார்த்தது பத்தி பேசி இருக்க மாட்டாங்க!
இன்னொரு முக்கியமான விஷயம், எங்க கடையில் யாரும் பார்ட் டைம் வேலை பார்க்கலை.” என்று உறுதியுடன் கூறினாள்.
“ஓகே.. நீ கிளம்பு. அண்ட் இந்த விஷயம்..” என்ற பைரவியின் பேச்சை இடையிட்டவள்,
“நிச்சயம் வெளியே போகாது மேடம்” என்றாள்.
பைரவி தலை அசைக்கவும் கிளம்பினாள்.
தழல் தகிக்கும்…