“டேய்!” என்று பிரவீன் அதிர்ச்சி விலகாமல் அழைக்க,
ருத்ரேஷ்வர் சாதாரணமாக, “என்ன?” என்றான்.
“ஏசிபி நெருப்புனு கேள்விப் பட்டேன்”
“நான் பனிக்கட்டியா இருந்து அவளை அணைத்து குளிர்விச்சுக்கிறேன்.”
நண்பனின் அதிர்வில் மீண்டும், “என்ன?” என்றான்.
“நீ.. உன் மனசில்.. அது.. நீ..” என்று பிரவீன் சற்றே திணற,
ருத்ரேஷ்வர் மென்னகையுடன், “பைரவி தான் அம்மு” என்றான்.
“ஒரே நேரத்தில் எத்தனை அதிர்ச்சியை தான் தருவடா!” என்று அவன் கூறிய போது, கதவை தட்டிவிட்டு பைரவியும் கபிலனும் உள்ளே வந்தனர்.
புன்னகையுடன் பைரவி மற்றும் கபிலனைப் பார்த்து, “வாங்க.. உட்காருங்க” என்ற ருத்ரேஷ்வர்
பிரவீனைப் பார்த்து, “நீ கிளம்பு” என்றான்.
இருவரும் ருத்ரேஷ்வர் எதிரே அமர்ந்தனர்.
பிரவீனை கிளம்பக் கூறியதும், பைரவி கேள்வியாய் ருத்ரேஷ்வரைப் பார்க்க,
“இவன் பிரவீன்.. என்னுடை நெருங்கிய நண்பன் அண்ட் பி.ஏ.. மீட்டிங் முடிந்து கிளையன்ட் கூட லன்ச் போறதா பிளான்.. இப்போ இவன் மட்டும் அவங்க கூடப் போறான்.. அவங்க கடையை சுத்தி பார்த்துட்டு வர நேரம், அதான்.” என்று விளக்கம் கொடுத்தான்.
பிரவீன் சிறு தலை அசைப்புடன் கிளம்பியதும்,
கபிலன் சிறு நக்கலுடன், “என்னோட இத்தனை வருஷ சர்வீஸில் முதல் முறையா, விசாரணைக்கு வந்திருக்கப்ப, இப்படி ஒரு புன்னகையுடன் கூடிய வரவேற்பு” என்றான்.
“எப்போதுமே ஏசிபி மேடம் எனக்கு ஸ்பெஷல்” என்று ருத்ரேஷ்வர் மாறாத புன்னகையுடன் கூற,
கபிலன் அவனது நேரடி பதிலில் சிறு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்க,
அவனோ தன்னை முறைத்துக் கொண்டிருந்த பைரவியைத் தான் உதட்டோரப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘நித்யாவை கல்யாணம் செய்துக்க போறவன் மேடமை ஏன் இப்படி பார்க்கிறான்? பேசுறான்? மேடம் வேற இவன் நல்லவன்னு சொல்றாங்க!’ என்று குழம்பிய கபிலன் ருத்ரேஷ்வரை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க ஆரம்பித்தான்.
பைரவி கடின குரலில், “கபிலன்” என்று அழைக்க,
“எஸ் மேடம்” என்றவன் ருத்ரேஷ்வரைப் பார்த்து,
“கலைச்செல்வியை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
கபிலனின் விசாரணை தொடங்கியதும், தீவிர முகபாவதிற்கு மாறிய ருத்ரேஷ்வர், “நேத்தே இதுக்கு பதில் சொல்லிட்டேனே!” என்றான்.
“திரும்ப சொல்றதில் என்ன சிரமம்?”
“சிரமம் இல்லை, நேர விரயம்”
“காரணம் இல்லாம கேட்கலை.. ஸோ பதிலைச் சொல்லுங்க”
தோளை குலுக்கியவன், “தெரியாது” என்றான்.
“கலைச்செல்வி உங்களைப் பார்க்க உங்க பாக்ட்ரி வந்து இருக்கிறாங்க.”
அவன் அதிர்வுடன், “வாட்!” என்று கூற,
கபிலன், “எஸ்.. நாங்க பாக்ட்ரி போய் விசாரிச்சுட்டு தான் வரோம்.. கேட் செக்குரிட்டி தான் சொன்னார்.. உங்களை பார்க்க அரை மணி நேரம் வெயிட் செய்து இருக்கிறாங்க” என்றான்.
“ஆனா நான் சந்திக்கலையே!” என்றவன் கபிலனின் நம்பாத பார்வையில் அவனை நேர் பார்வையுடன் பார்த்து,
“எனக்கு அந்தப் பொண்ணை தெரியாது.. இதுக்கு முன் பார்த்தது கூட இல்லை.. அந்த பொண்ணு வந்ததை யாரும் என்னிடம் சொல்லவும் இல்லை” என்றான்.
“நம்புறது போல் இல்லையே!” என்று கபிலன் ஒரு மாதிரி குரலில் கூற,
தீர்க்கமான குரலில், “எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றவன் பைரவியைப் பார்த்து,
“எனக்கு இந்தப் பொண்ணை தெரியாது அ.. ஏசிபி” என்றான்.
அவன் மீது கொண்ட நம்பிக்கையோடு, அவனது நேர் பார்வையில் இருந்தே அவன் சொல்வது உண்மை என்பதை உணர்ந்த பைரவி, “ஓகே.. உங்களை பார்க்க வந்து இருக்கா.. என்னவா இருக்கும்?” என்று கேட்டாள்.
யோசனையான பாவனையுடன், “நோ ஐடியா” என்றான்.
“உங்க வீட்டு ஆண்கள் பற்றி கம்ப்ளைன்ட் செய்து, உதவி கேட்க வந்து இருக்கலாமே?”
“யாரைச் சந்தேகப்படுற?”
“பாலாஜி, கிருஷ்ணா, நரேன்.. யாரா வேணாலும் இருக்கலாம்.”
“நான் விசாரிச்சுச் சொல்றேன்.”
“செக்யூரிட்டிக்கு கலைச்செல்வி பாக்ட்ரிக்கு என்னைக்கு வந்தானு தெரியலை.. ஜி.எம் சிசிடிவி புட்டேஜ் பார்க்க விடலை.. ஸோ அதை பார்த்துச் சொல்லு.”
“சரி.. லன்ச் முடிச்சுட்டு பார்த்துச் சொல்றேன்”
இருவருமே அவர்களை அறியாமல் கபிலன் முன்னிலையில் ஒருமையில் பேசினர். அதை கபிலன் கவனித்தாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
“ஓகே” என்றபடி அவள் எழவும், கபிலனும் எழுந்தான்.
கபிலன் முதலில் வெளியேற, இவள் வெளியேறும் முன், “ஏசிபி” என்று ருத்ரேஷ்வர் அழைத்தான்.
கதவின் அருகே வெளிப்பக்கம் நின்ற கபிலனிடம், “நீங்க காரில் இருங்க, நான் வந்துர்றேன்.” என்றாள்.
“ஓகே மேடம்” என்று விட்டு அவன் கிளம்ப,
ருத்ரேஷ்வர் பக்கம் திரும்பியவள், ‘என்ன?’ என்பது போல் தீர்க்கமாகப் பார்த்தாள்.
அவனோ மாயக் கண்ணனின் புன்னகையுடன், “ஸோ ஏசிபி மேடம் என்னை பார்க்கும் ஆசையில் வந்து இருக்கிறீங்க!” என்று கூறி புருவம் உயர்த்தினான்.
“நித்யா கூட கல்யாணம் பிக்ஸ் ஆகி இருப்பதை கேள்விப்பட்டேன்.. வாழ்த்துக்கள்” என்றவள் அவனது பதிலை எதிர்பாராமல் வேகமாக வெளியேறி இருந்தாள்.
“ஏய்.. அம்மு!” என்றபடி அவசரமாக இருக்கையில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறி வேகமாகச் சென்றான்.
அவன் ஆடையகத்தின் வெளியே வர, அவளோ வேகமாக வந்தவனைப் பார்த்த படியே வண்டியை மின்னல் வேகத்தில் கிளப்பிச் சென்றிருந்தாள்.
வண்டியில் செல்லும் போது யோசனையில் அமைதியாக இருந்த கபிலனிடம் அலுவலகம் சென்றதும்,
“லன்ச் முடிச்சுட்டு என் ரூமுக்கு வாங்க” என்று விட்டு தனது அறையினுள் சென்றாள்.
மதிய உணவினை முடித்துக் கொண்டு மூன்று மணி அளவில் பைரவியின் அறைக்குச் சென்ற கபிலன்,
“மேடம் எனக்கு ஒரு சந்தேகம்.” என்றான்.
“என்ன?”
“ருத்ரேஷ்வர் பொய் சொல்லலாமே!”
“ருத்ரேஷ்வர் எனக்கு தெரிந்தவர் என்பதால் என் கண்ணோட்டம் தப்புதுனு நினைக்கிறீங்களா?”
“அப்படி இல்லை மேடம்” என்று பதறியவன், “எனக்கு என்னவோ அவர் மேல் சந்தேகம் வருது” என்றான்.
“நேத்து இல்லாத சந்தேகம், எதனால் இன்னைக்கு வந்தது?”
“அது” என்று அவன் தயங்க, “சொல்லுங்க” என்றாள்.
“நித்யா கூட மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்குது, ஆனா அவர்..” என்று தயங்கியபடி நிறுத்த,
அவன் கூற வருவது புரிந்தாலும் புரியாதது போல், “ஆனா அவர்?” என்று கேட்டாள்.
“அது.. உங்களிடம் அவர் பார்வையும் பேச்சும் சரி இல்லையோனு..” என்று இழுத்து நிறுத்தினான்.
“நித்யா கூட மரேஜ் பிக்ஸ் ஆகி இருக்காது.”
“மேடம்.. ஆனா!” என்று அவன் அதிர்ச்சியுடன் கூறி நிறுத்த,
“வீட்டில் பேசி இருப்பாங்க.. நித்யா அவசரப் பட்டு குரூப்பில் போட்டு இருப்பா…”
நம்ப முடியாத அதிர்வுடன் பார்த்தவன், “எப்படி மேடம் இவ்ளோ உறுதியா சொல்றீங்க?” என்று கேட்டான்.
“ஏன்னா ருத்ரேஷ்வரை எனக்குத் தெரியும்”
“மேடம்!”
“லீவ் இட்.. கேஸ் பத்தி பேசலாம்.”
“எஸ் மேடம்” என்றவன், “கலைச்செல்வி எதுக்கு ருத்ரேஷ்வரை பார்க்கப் போய் இருப்பா?” என்று யோசனையுடன் கேட்டான்.