
🙂 அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 🙂
தழல் ~ 7
பைரவியும் கபிலனும் தொழிற்சாலைக்குச் சென்ற போது ருத்ரேஷ்வர் அங்கே இல்லை. அவன் எங்கே இருப்பான் என்று விசாரித்த போது ஆடையகத்தில் இருக்கலாம். இல்லை, மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்ற பதில் கிடைத்தது.
வரவேற்பில் இருந்த பெண்ணிடம் கலைச்செல்வியின் புகைப்படத்தை காட்டிய பைரவி, “இந்தப் பொண்ணை பார்த்து இருக்கிறீங்களா? இங்கே வந்து இருக்கிறாளா?” என்று கேட்டாள்.
வரவேற்பாளினி, “இல்லை மேடம்.. பார்த்தது இல்லை.” என்றாள்.
“நல்லா யோசிச்சு சொல்லுங்க.. இங்கே வந்தது இல்லை?” என்று மீண்டும் கேட்டாள்.
“இல்லை மேடம்”
“சரி.. சிசிடிவி புட்டேஜ் பார்க்கணும்.”
“ஜி.எம்.. கிட்ட கேட்கணும் மேடம்.”
“கேளுங்க”
அகத் தொடர்பு தொலைபேசியை எடுத்து பொது மேலாளரிடம் பேசிவிட்டு வைத்தவள் பைரவியிடம், “சாரே வரேன்னு சொன்னார், மேடம்” என்றாள்.
இரண்டு நிமிடத்தில் அங்கே வந்த பொது மேலாளர், “சாரி மேடம்.. சார் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதால், சாரிடம் இப்போ பேச முடியலை.. சார் அனுமதி இல்லாமல் பார்க்க அனுமதிக்க முடியாது.” என்று தன்மையுடன் கூறினார்.
கபிலன், “எங்களுக்கு யார் அனுமதியும் தேவை இல்லை” என்று முறைப்புடன் கூற,
அவர் தன்மையாகவே, “ஆனா எனக்கு சாரோட அனுமதி வேணும்” என்றார்.
“நீங்க மறுப்பதை பார்த்தா ஏதோ மறைக்கிற மாதிரி தெரியுது”
“அதுக்கு அவசியமே இல்லை.. ஏன்னா, எங்க சார் எப்போதும் நேர்வழியில் செயல்படுறவர்.”
“அப்போ எங்களை பார்க்க விடுங்க”
“உங்களிடம் சர்ச் வாரன்ட் இருந்தால் இப்பவே அனுமதிக்கிறேன்.. இல்லை.. உங்களால் இங்கே அரை மணி நேரம் காத்திருக்க முடியும்னா சொல்லுங்க, மீட்டிங் முடிந்ததும் சாரிடம் போனில் பேசி, சார் அனுமதித்தால் உங்களை அனுமதிக்கிறேன்.”
கபிலன் ஏதோ கூற வர, அவனை பார்வையில் தடுத்த பைரவி, “ஓகே.. தேங்க் யூ” என்று கூறி வெளியேறினாள்.
வெளியே வந்தவள் கபிலனை வண்டியினுள் ஏறக் கூறிவிட்டு, வண்டியின் அருகே நின்றபடி ருத்ரேஷ்வரை கைபேசியில் அழைத்தாள்.
ஆடையகத்தில் தனது அறையில் ஒரு முக்கியமான சந்திப்பில் இருந்த ருத்ரேஷ்வர், இவளது அழைப்பைக் கண்டதும் வந்திருந்தவர்களிடம், “பைவ் மினிட்ஸ்.. ஒன் இம்பார்டன்ட் கால்” என்று கூறி,
தன்னை சிறு அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருந்த பிரவீனை, ‘கவனிச்சுக்கோ’ என்பது போல் பார்த்துவிட்டு தனது அறையினுள் இருந்த உள்ளறைக்குச் சென்றான்.
அழைப்பை எடுத்து உற்சாகக் குரலில், “குட் ஆஃப்டர் நூன் அம்மு.” என்றான்.
“என்னோட நம்பர் எப்படி தெரியும்?”
“உனக்கு என் நம்பர் எப்படி தெரியும்?”
“இந்த கேஸில் சம்பந்தபட்டவங்க எல்லாரோட நம்பரும் எனக்குத் தெரியும்.. உனக்கு எப்படி தெரியும்?”
“இது என்ன பெரிய விஷயமா?”
“என் நம்பரை ஸ்டுடென்ட்ஸ் கிட்ட பப்ளிக்கா கொடுத்து இருக்கிறேன்.. ஆனா, அவங்க மூலம் உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை.”
“சரி.. நான் சில வருஷமா உன்னை டிடெக்டிவ் மூலம் தேடிட்டு இருந்தேன்.. நேத்து உன்னை கண்டு பிடிச்சதும், டிடெக்டிவ் மூலம் உன்னை பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்.”
சட்டென்று இறுகியவள், “இப்போ எங்க இருக்க?” என்று கறார் குரலில் கேட்டாள்.
“வெளியே எங்கேயாவது சந்திக்கலாமா? லன்ச் சாப்பிட வரியா?” என்று அவன் மகிழ்ச்சியுடன் வினவ,
அவள் கடின குரலில், “கேஸ் சம்பந்தமா விசாரிக்கணும்.. எங்க இருக்க?” என்று கேட்டாள்.
“நிஜமாவே கேஸ் சம்பந்தமா தான் பேசணுமா? இல்லை, என்னை சந்திக்க..” என்று உல்லாச குரலில் பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சை கோபத்துடன் இடையிட்டவள்,
“எங்க இருக்கிறனு சொன்னா, கபிலன் வந்து விசாரிப்பார்.” என்றாள்.
அதற்கு மேல் விளையாடாமல், “ட்ரெஸ் ஷாப்பில், ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறேன்.” என்றான்.
“மீட்டிங் எப்போ முடியும்?”
“அதிக பட்சம் பதினைந்து நிமிடங்கள்” என்றவன், “நீயே வா அம்மு” என்றான்.
“கபிலன் வருவார்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவள் வண்டியில் ஏறிக் கிளப்பினாள்.
தொழிற்சாலையை விட்டு வெளியே செல்லும் முன் வாயிற் கதவின் அருகே வண்டியை நிறுத்தியவள், அங்கே நின்றிருந்த காவலாளியை அழைத்து,
“டெய்லி நீங்க தான் இங்கே கேட்டில் இருப்பீங்களா?” என்று கேட்டாள்.
“காலையில் நான் தான் இருப்பேன் மேடம்.. சாயுங்காலம் இன்னொரு செக்குரிட்டி வருவான்.”
“எத்தனை மணிக்கு கிளம்புவீங்க?”
“ஆறு மணிக்கு நைட் டியூட்டி செக்குரிட்டி வந்ததும், கிளம்புவேன் மேடம்”
கலைச்செல்வியின் புகைப்படத்தைக் காட்டி, “இந்தப் பொண்ண பார்த்து இருக்கிறீங்களா? இங்கே வந்து இருக்கிறாளா?” என்று விசாரித்தாள்.
சற்று உற்று பார்த்தவர், “ஆமா மேடம்.. அன்னைக்கு ஒரு நாள் வந்துது.. சாரை பார்க்கணும்னு சொல்லி வந்தது” என்றார்.
“என்னைக்கு? எந்த சாரை பார்க்க வந்தா? எப்படி பார்த்ததும் டக்குனு சொல்றீங்க?”
“என்னைக்குனு சரியா ஞாபகம் இல்லை.. ருத்ரன் சாரை பார்க்கத் தான் வந்துது.. அந்தப் பொண்ணு வந்தப்ப சார் இல்லை.. சார் வர நேரம் தான்னு சொல்லவும், உள்ள கூட போகாம என் பக்கத்திலேயே அரை மணி நேரம் நின்னுட்டே இருந்துது.. அப்புறம் கிளம்பிப் போய்டுச்சு.”
“சார் கிட்ட சொன்னீங்களா?”
“இல்லை மேடம்”
“ஏன்?”
“யாரு என்னனு பெருசா அந்தப் பொண்ணு சொல்லலை.. என்னனு சார் கிட்ட சொல்லனு விட்டுட்டேன்.. வேணும்னா, அந்தப் பொண்ணே திரும்ப வந்து பார்த்துக்கும்னு விட்டுட்டேன்.”
“இந்தப் பொண்ணு இறந்தது தெரியுமா? இந்தப் பொண்ணுக்காக தான் பசங்க எல்லோரும் போராட்டம் நடத்தினாங்க, தெரியுமா?”
“அது இந்தப் பொண்ணு தானா மேடம்? டிவில நான் போட்டோவை சரியா பார்க்கலை”
“நியூஸில் பெயரைக் கூடவா கவனிக்கலை?”
“அன்னைக்கு இங்கே வந்தப்ப நான் பெயரை கேட்டேன். ஆனா அந்தப் பொண்ணு பேச்சை மாத்தி வேற பேசி, கடைசி வரை பெயரைச் சொல்லலை”
“அன்னைக்கு அந்தப் பொண்ணு எப்படி இருந்தா? பதற்றம், பயம், கோபம் இப்படி ஏதும் அவளோட முகத்தில் தெரிந்ததா?”
“இல்லை மேடம்.. நார்மலா தான் தெரிந்தது.. ஆனா, செம அழுத்தம் மேடம்.. பெயர் மட்டுமில்ல, நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லலை மேடம்.. யாரு என்னனு கேட்டதுக்கு, அது எதுக்கு? தெரிந்து நான் என்ன செய்யப் போறேன்னு என் கிட்டயே திரும்ப கேட்டுது.. சார் கிட்ட சொல்லனு சொன்னதுக்கு, அதை நானே சொல்லிக்கிறேன்னு சொல்லிடுச்சு.”
“சரி” என்று விட்டு வண்டியை ருத்ரேஷ்வரின் ஆடையகம் நோக்கிக் கிளப்பினாள்.
தனது அறையினுள் இருந்தபடியே மறைகாணி பதிவின் மூலம் கடையின் உள்ளே நுழைந்த பைரவியைக் கண்ட ருத்ரேஷ்வரின் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.
நண்பனின் ஒளிர்ந்த கண்களைக் கண்ட பிரவீன் சிறு ஆச்சரியம் கலந்த மென்னகையுடன், “என்னடா கண்ணு டாலடிக்குது?” என்று கேட்டான்.
மறைகாணி பதிவை அவனிடம் காட்டி புன்னகையுடன் ருத்ரேஷ்வர் கண்ணடிக்க, நண்பனின் இந்தப் பரிமாணம் மற்றும் மறைகாணி பதிவில் பைரவியைக் கண்ட அதிர்வில், பிரவீன் கண்களை லேசாக விரித்துப் பார்த்தான்.