“நல்ல விளையாண்ட போ” என்று செல்லமாக மகனை கடிந்தவர், “வந்ததும்…” என்று ஆரம்பிக்க,
“வாமா மின்னல்னுலாம் கிளம்ப முடியாதுமா.. அம்மாச்சியும் விட மாட்டாங்க.. ஆனா டோன்ட் வொர்ரி.. சீக்கிரம் கிளம்பிடுறேன்” என்றவன், “ஆனா உங்க ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே ராஜமாதா” என்றான்.
“என்ன டா சொல்ற?”
“பனியில் உறைந்த மலரை பார்க்க விடாம என்னை இத்தனை வருஷம் பொத்தி பொத்தி காத்தீங்களே! அதை சொல்றேன்”
“அபி!” என்று பெரிதும் அதிர்ந்தவர், “அபி.. அம்மா அப்படிலாம் நினைக்கலை” என்றார்.
சிரிப்புடன், “மம்மி.. மம்மி.. நான் மைத்தி இல்ல.. ஓகேமா ஊரில் பார்க்கலாம்.. மாமன் மக ரத்தினமா வைரமானு வந்து பார்க்கிறேன்” என்றான்.
“அவளாம் ஒரு ஆளு! அவளை போய் இப்புடி ஒப்பிடுற!”
“ஆனாலும் மா.. இந்த கியூரியாசிட்டி வர நீங்க தான் காரணம்”
“என்ன சொல்ற அபி? குரியாசிட்டினா?”
“ஹ்ம்ம்.. என்ன சொல்ல? ஹான்.. ஆர்வம்.. பனிமலரைப் பார்க்கும் ஆர்வம்.. அதை சொல்றேன்.. அதுக்கு நீங்க தான் காரணம்.. சின்ன வயசில் இருந்து பார்த்து பழகி இருந்தா, பனிமலரும் மைத்தி லக்ஷ்மி போல தான் தோன்றி இருக்கும்.. ஆனா இப்போ! ஹ்ம்ம்.. பார்க்கலாம்..”
“அபி!” என்றவருக்கு பகிர் என்றானது. கணவர் வரும் வரை காத்திருந்து, ஏதேனும் காரணம் கூறி இவனை தடுத்து இருக்கணுமோ! என்ற எண்ணம் தான் அவருள் ஓடியது.
அதை யூகித்தவன் போல், “டோன்ட் வொர்ரி ம்மா.. அப்படி ஒன்னும் மயங்கிட மாட்டேன்” என்றான்.
“அபி.. அம்மா இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. அம்மா பார்த்து சொல்ற பொண்ண தான் நீ கட்டிக்கிற?”
“ஓ! கட்டிக்க ஒட்டிக்க கூட பொண்ணு பார்த்து தருவீங்களா! அவ்ளோ மார்டனான அம்மாவா நீங்க! சூப்பர் மாம்”
முதலில் அவன் கூற வருவது புரியாமல் விழித்தவர் பின் புரிந்ததும் கோபத்துடன், “அபி! என்ன பேச்சு இது? அம்மா கல்யாணத்தை பத்தி பேசுறேன்” என்றார்.
“அது புரியாமலா பதில் சொன்னேன்!”
“அபி!”
“என் பதிலில் இருந்தே புரியலையாமா! என் மனசுக்கு பிடிச்சு இருந்தா தான் கல்யாணம் செய்வேன்”
“நீ ஊருக்கு வர வேண்டாம்” என்று அவர் வேகமாக கூற,
மீண்டும் சத்தமாக வாய்விட்டு சிரித்தவன், “மாமன் மகள் ரதிதேவி தான் போல!” என்றான்.
“சீ!”
“பின்ன என்ன! ப்ரீயா விடுங்க”
“இல்ல நீ ஊருக்கு வர வேண்டாம்”
“அம்மாச்சி கிட்ட நான் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டேன்.. வேலம்மா பையன் வாக்கு தவறினதா இருக்கக் கூடாது பாருங்க.. ஸோ நான் வருவேன்..”
“அப்போ அம்மாக்கு வாக்கு குடு”
“நான் இன்னும் பனிமலரை பார்க்க கூட இல்லை.. ஏன்மா இவ்ளோ அலம்பு பண்றீங்க?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீ வாக்கு குடு”
“இப்போ தான் எனக்கு பதினெட்டு வயசு.. இப்போவே ஏன் கல்யாணத்தை பத்தி பேசுறீங்க? அது நடக்க குறைந்தது பத்து வருஷம் ஆகும்.. ஸோ இப்பவே நீங்க பார்க்கிற பொண்ண தான் கல்யாணம் செய்வேன்னு வாக்கெல்லாம் கொடுக்க முடியாதுமா.. இப்போவரை என் மனசில் யாரும் இல்லை.. ஸோ நீங்க பார்க்கிற பொண்ணு மேல கூட எனக்கு பிடித்தம் வரலாம்.. இப்பவே அதை பத்தி யோசிக்காம ரெஸ்ட் எடுங்க.. ஊரில் பார்க்கலாம்.. பை” என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டான்.
வேலம்மாளுக்கு தான் இருப்பு கொள்ளாமல் நெஞ்சம் படபடத்தது. இந்த நேரத்திலா பனிமலர் பருவமடைய வேண்டும்! என்று காரணமே இல்லாமல் அவள் மேல் கோபம் வந்தது.
அன்னையிடம் பேசிவிட்டு எஃகு நிலைப்பேழையை திறந்து அவர் கூறிய புடவையை எடுத்து பார்த்தவனுக்கு அன்னை மீது கோபம் தான் வந்தது. வேலம்மாள் வீட்டு வேலை செய்பவருக்கு கொடுக்க எடுத்து வைத்து இருந்த தனது பழைய பட்டு புடவையை தான் அபியுதித்தை எடுத்து வர கூறி இருந்தார். அந்த புடவை மோசமாக இல்லை என்றாலும் அவனுக்கு அன்னை பயன்படுத்திய புடவை என்று புரிந்தது. அதை எடுத்த இடத்தில் வைத்து விட்டு, தந்தையை கைபேசியில் அழைத்து பேசியவன் தனது முடிவை கூற, அவரும் சரி என்று கூறி அதற்கு தகுந்த பணத்தை அவனது வங்கி கணக்கில் போட்டார்.
முதலில் பட்டுப்புடவைக்கு பெயர் போன ஆர்.எம்.கே.வி கடைக்கு சென்று அழகிய ஆகாய வண்ண நிறத்தில் பட்டுப் புடவையை பத்தாயிரம் ரூபாய் விலையில் எடுத்தவன் அடுத்து பிரபலமான நகைக்கடைக்கு சென்று தந்தை கூறியது போல் ஐந்து பவுனில் தங்க அட்டிகையையும் அதற்கு ஜோடியான காதணிகளையும் வாங்கினான். சுத்தமான காஞ்சிபுர பட்டுப்புடவையை எடுக்க கூறி இருந்த அன்பரசு அதிகபட்ச விலையாக பதினைந்தாயிரம் கூறி இருந்தார்.
மகனின் வரவிற்காக முற்றத்திலேயே காத்திருந்த வேலம்மாள் சரியாக அவன் வந்த நேரம் கழிவறைக்கு சென்று இருந்தார்.
அபியுதித் வீட்டிற்கு வந்த போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் இருக்க, அவனை வரவேற்க யாரும் இல்லை.
‘இது என்னடா வீட்டுக்குள்ள குடிசை!’ என்ற சிந்தனையுடன் குடிசையினுள் சென்றான்.
அந்நிய ஆண்மகனை கண்டதும் முதலில் பதற்றம் கொண்ட பனிமலர் பின் தந்தையின் அறிவுரையை நினைவிற்கு கொண்டு வந்து, “ஆருல நீ! வெளிய போ” என்று மிரட்டினாள்.
என்ன தான் தொனி மிரட்டலாக இருந்தாலும் குரல் சத்தமாக இல்லை என்பதோடு அவளது கண்ணில் சிறு பதற்றம் தெரிய தான் செய்தது. அதுவும் அவன் முதலில் கண்ட அந்த மருண்ட விழிகள் அவனுள் ஆழமாக பதிந்ததை அவன் அந்நொடி உணரவில்லை.
உள்ளே சென்றதும் அவள் யார் என்பதை புரிந்து கொண்டவன், “ரிலாக்ஸ் மலர்.. நான் அபி.. அபியுதித்.. உன்னோட வேலம்மா அத்தை மகன்” என்றான் வசீகர புன்னகையுடன்.
சட்டென்று அந்த விழிகளில் பயம் நீங்கி மென்மை குடியேற, உடலும் சற்றே தளர்ந்தது.
மெல்லிய குரலில், “நீக இங்கன வாரக் கூடாது” என்றவள் பார்வையை தாழ்த்தி கொண்டாள்.
சுவாரசியமாக அவளைப் பார்த்தவன், “ஏன்?” என்றான்.
“அது.. அது.. அப்பாச்சிதே சொன்னாவ.. வேத்தாம்பள ஆரும்..” என்றவளின் பேச்சை இடையிட்டவன்,
“நான் வெளி ஆள் இல்லையே!”
“ஆனா ஆம்பளதேன! யே அப்பாவே இங்கன வார மாட்டவ”
“ஓ! சரி என்னை பார்த்து பேசு.. நான் வெளிய போறேன்”
பார்வையை நிமிர்த்தியவள் ஏனோ அவனது பார்வையை சந்திக்க முடியாமல் தாழ்த்திக் கொண்டாள்.
“ஆரும் வார மின்ன கெளம்புக”
அதிகரித்த சுவாரசியத்துடன், “என்னை பார்த்து சொல்லு, நான் வெளிய போறேன்.. இல்ல உன் பக்கத்துல வந்து உட்கார்ந்திடுவேன்” என்று கூறியபடி அவன் ஓரடி எடுத்து வைக்க,
விலுக்கென்று அவனை பார்த்தவளின் விழிகளில் அத்தனை பதற்றம்.
அதை கண்டதும் அவனது கால்கள் நகர மறுத்து நின்றுவிட, “ஓகே ரிலாக்ஸ்.. நான் சும்மா தான் சொன்னேன்.. வெளிய போறேன்” என்று அவன் கூறிய போது,
“அபி.. அங்க என்ன செய்ற?” என்றபடி வேலம்மாள் நொண்டியபடி வேகமாக வந்து கொண்டிருந்தார்.
“ஓகே மலர்.. அப்புறம் பார்க்கலாம்” என்று புன்னகையுடன் கூறியவன் கண் சிமிட்டிவிட்டு வெளியேற பனிமலர் சில நொடிகள் அசைவற்றுத் தான் போனாள்.
பனித்துளி குளிர காத்திருப்போம்…
முக்கிய குறிப்பு: இன்று(29Oct)-யில் இருந்து 6Nov வரை எனக்கு இன்டெர்னல் எக்ஸாம், அதனால் அபியும் அவனது டியுட்ராப்பும் 8Nov தான் அடுத்து வருவார்கள். நேத்து எப்பி எழுதி முடிச்சிட்டேன் ஆனா அப்டேட் போட நேரம் கிடைக்கவில்லை.. இன்னைக்கு maths எக்ஸாம் நல்ல எழுதிட்டேன்.. மற்ற exams நல்ல எழுத வேண்டும். அதனால் தோழமைகளை காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.