சுடும் பனித்துளியே! ~ துளி 7.1

அபியுதித் மற்றும் பனிமலரின் நினைவுகள் பின்னோக்கி அவர்களின் முதல் சந்திப்பிற்கு சென்றது.

இருவரும் சந்தித்து பேசியது சொற்ப முறைகளே ஆயினும் அவை அவர்களின் நெஞ்சினுள் பசுமரத்தாணியைப் போல் பதிந்திருந்தது.

அவர்களின் முதல் சந்திப்பு, பனிமலர் பதிமூன்றாவது வயதில் பூப்பெய்திய போது தான் நடைப்பெற்றது.

திருமணமான புதிதில் அடிக்கடி பூங்காவனத்தூருக்கு குடும்பத்துடன் வந்து  கொண்டிருந்த வேலம்மாள், அவர்கள் செல்வ நிலை சற்று ஏற தொடங்கவும் வரவை குறைத்துக்கொள்ள ஆரம்பித்தார். அதுவும் வரும் போதெல்லாம் தங்களைப் பற்றி பெருமை பேசுவதோடு இங்கிருக்கும் வசதிகளை குறை கூறுவார்.

அபியுதித்திற்கு மூன்று வயது இருந்த போது தான், வீரையன் தங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நெல்லைவடிவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். அதற்கு முழுமூச்சாக எதிர்ப்பு தெரிவித்தது வேலம்மாள் தான்.

பகட்டு வாழ்க்கை வாழும், செல்வம் மற்றும் தராதரத்தின் மீது மோகம் கொண்ட வேலம்மாளால் தங்கள் வீட்டில் வேலை செய்யும் நெல்லைவடிவை மதினியாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரது எதிர்ப்பை பொருட்படுத்தாமல் வீரையன் நெல்லைவடிவை திருமணம் செய்ததும், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத கோபமும் ஆங்காரமும் வன்மமும் நெல்லைவடிவின் மீது தான் திரும்பியது.

வீரையன் தனது காதல் மனைவியைப் பற்றி தாழ்த்தி பேச அனுமதித்ததே இல்லை, அதனால், வேலம்மாளின் நெல்லைவடிவு மீதான வன்மம் எல்லாம் தம்பி அறியாமல் தான் அரங்கேறும். நெல்லைவடிவும் அதை கணவன் காதிற்கு கொண்டு சென்றது கிடையாது. பாப்பாத்தியம்மாளையும் சொல்ல விட்டது கிடையாது. கணவரை பற்றி நன்கு அறிந்தவர், தன்னால் குடும்பம் உடைந்ததாக இருக்க கூடாது என்று நினைத்து அமைதி காத்தார்.

ஆனால் பனிமலர் விவரம் தெரிய ஆரம்பித்ததும் வேலம்மாளின் பேச்சை தந்தையிடம் கூறிவிட, வீரையன் தமக்கையிடம் பிறந்த வீட்டு சொந்தமும் சீரும் வேண்டுமென்றால் தனது மனைவி மற்றும் மகளை மதிக்க வேண்டும் என்று கறாராக கூறிவிட வேலம்மாள் சற்று அடங்கினார். தமையனின் பற்றற்ற குணத்தையும், தம்பியின் குணத்தையும் அறிந்திருந்தவர், தம்பியின் உறவு தேவைப்படும் என்றதாலேயே சற்று அடங்கினார். ஆனால், ‘வேலைக்காரி மவளுக்கு இம்புட்டு திமிரா! என்னிய அடக்குவதா?’ என்று சிறு வயது பனிமலர் மீது தீரா வன்மம் பிறந்தது.    

காளிங்கன் மற்றும் லீலாவதி வீரையன் திருமணத்தில் பெரிதாக நாட்டம் காட்டவில்லை. விவரம் அறியாத, எதிர்த்து பேசாத அமைதியின் திருஉருவமான நெல்லைவடிவு இரண்டாவது மருமகளாக வருவதை அவர்கள் மனதினுள் வரவேற்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இருவருமே நெல்லைவடிவை சிறிதும் மதிக்காமல் கீழாகத் தான் பார்ப்பர், ஆனால் நிதானித்து செயல்படும் லீலாவதி எப்போதுமே வேலம்மாள் மற்றும் வீரையனை நேரிடையாக பகைத்துக் கொள்ளவே மாட்டார். நேரத்திற்கேற்ப, காரியத்திற்கேற்ப தான் பேசுவார்.

காளிங்கன் எப்பொழுதுமே தன்னை மட்டுமே யோசிக்கும் சுயநலவாதி, அவருக்கு உடன் பிறந்தவர்கள் மீது என்றுமே பாசம் இருந்தது கிடையாது. லீலாவதியும் சுயநலவாதி தான் என்றாலும் அண்ணன் மீது பாசம் கொண்டவர். அதனால் தான் தன் தமையனை தோற்கடித்து ஊர் தலைவரான வீரையன் மீதும், அவர் குடும்பத்தின் மீதும் பகையும் வன்மமும் பிறந்தது. அதையே தன் பிள்ளைகளிடமும் போதித்து வளர்த்திருந்தார். ஆனால் எப்பொழுதும் போல் அதை வெளியே காட்டியது கிடையாது.

இறக்கும் தருவாயில் தான் இவர்களின் உண்மை குணத்தை வீரையன் அறிந்தார். குள்ளநரிகளின் கூட்டத்தில் தனது மனைவியையும் மகளையும் தனியே விட்டு செல்வதை நினைத்து துடிதுடித்து தான் இறந்தார்.

பனிமலர் பிறந்த வீட்டில் அபியுதித்தையும் அவளையும் இணைத்து ஒரு உறவுக்கார பெண்மணி பேசியதும் வேலம்மாள் ஆடித் தீர்த்ததோடு அதற்கு பின் அபியுதித்தை பூங்காவனத்தூருக்கு அழைத்து வருவதை நிறுத்தி இருந்தார். ஏதேதோ காரணங்களை கூறி அவனை கணவருடன் நிறுத்தி கொள்பவர் மகளை மட்டுமே அழைத்து வந்தாலும், மகளையும் பனிமலருடன் பெரிதாக ஓட்ட விடமாட்டார். ஆனால் அதையும் மீறி இருவருக்கும் இடையே மெல்லிய பாசம் இழையோடியது தான்.

அபியுதித்திற்கு சின்ன மாமனின் மகளை பார்க்காமலேயே அவளை பற்றிய விவரங்கள் தங்கையின் மூலம் தெரிந்துவிடும். அதே போல் பனிமலருக்கும் அத்தை மகனைப் பற்றி முழுவதுமாக இல்லை என்றாலும் இலைமறை காயாக தெரியும். மைத்ரேயி பனிமலரிடம் பேசுவது சொற்ப நிமிடங்களே ஆனாலும் அதில் தனது தமையனைப் பற்றி ஒரு வரியேனும் பேசாமல் இருக்க மாட்டாள்.

வேலம்மாள் ஒரு நிலம் சம்பந்தமாக ஊரிற்கு வந்திருந்த நேரத்தில் பனிமலர் தனது பருவ நிலையை அடைந்தாள். வீரையன் அதை பெரிய விழாவாக கொண்டாட திட்டமிட்டார்.

வேலம்மாள் ‘தான் வந்திருக்கும் நேரத்திலா அவள் பருவமடைய வேண்டும்!’ என்று மனதினுள் குமைந்தார். மற்ற நேரம் என்றால் ஏதாவது காரணம் கூறி தட்டிக்கழித்து வராமல் வீட்டிலேயே இருந்து இருக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு. போதாதிற்கு அன்று காலையில் தான் வீட்டு தோட்டத்தில் கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொண்டது.

“எந்த நேரத்துல ஒக்காந்தாளோ! யே கால ஒடச்சிபுட்டா!” என்று வேலம்மாள் பேச,

பாப்பாத்தியம்மாள் கோபத்துடன், “கண்ண பொடதியில வெச்சி நீ வாரியெடுத்துபுட்டு, யே பேத்திய கொற சொல்லுதியா?” என்று கூற,

வீரையன் மென்னகையுடன், “யெல்லாமே நாம எடுக்கதுலதே இருக்கு க்கா.. யே ராஜாத்தி சமஞ்ச நேரம் நல்லாயிருக்க போயித்தே ஒங்க காலு ஒடையாம வெறும் சுளுக்கோட போச்சு” என்றதும்,

“அப்புடி சொல்லு ராசா” என்று சுப்பையா மகனை பாரட்டினார்.

எரிச்சலுடன் அமைதியான வேலம்மாள், அன்பரசு தொழில் நிமித்தம் வெளியூர் சென்றிருக்கும் நிலையில், தனது காலை காரணம் காட்டி பனிமலருக்கு சீர் செய்வதை தவிர்க்கப் பார்க்க,

பாப்பாத்தியம்மாள் அபியுதித்தை கைபேசியில் அழைத்து நலம் விசாரித்துவிட்டு, “ஓ சின்ன மாமன் மவ பெரிய மனிஷியாயிட்டா ராசா.. அத்தை சீரா ஒரு பட்டு பொடவயும் நகைநட்டும் வாங்கிட்டு வாயா.. எப்புடி யன்ன வாங்கங்கிற வெவரமெல்லா ஓ அம்மைட்ட கேட்டுகிடு” என்று கூறி கைபேசியை மகளிடம் நீட்ட,

“அம்மா கூப்பிடுறேன் அபி” என்று கூறி அழைப்பைத் துண்டித்து கைபேசியை அன்னையிடம் கொடுத்தவர் சிரமத்துடன் எழுந்து தனது அறை நோக்கி நகர்ந்தார்.

“பெரிய ராஜரகசியம்! போடி போக்கத்தவளே” என்ற அன்னையின் கூற்றை கண்டுகொள்ளாமல் தனது அறைக்கு சென்ற வேலம்மாள் மகனை அழைத்து,

“அபி.. ஸ்டீல் பீரோல, கீழ் தட்டுல ஒரு மரூன் பட்டுப் பொடவ இருக்கும்.. அதை எடுத்துட்டு, நம்ம வீட்டு பக்கம் இருக்க பாலாஜி நகக்கடையில பத்து இல்ல பன்னிரண்டு கிராம்ல ஒரு தங்க செயின் வாங்கிட்டு வா.. செய்கூலி சேதாரம் கொறச்சு பேசி வாங்கிட்டு வரணும்.. அப்புறம் வந்தோமா என்கிட்ட கொடுத்தோமா கெளம்பினோமானு இருக்கோணும்.. வெளங்குச்சா?” என்று கறாராக கூறினார்.

அவனோ சிரிப்புடன், “ஊருக்கு போனா தன்னால ஊர் பாஷை வந்துடுது ம்மா” என்றான்.

“அபி”

“ஓகே.. ஓகே.. செய்கூலி சேதாரம் குறைச்சு கேட்டு பத்து இல்ல பன்னிரெண்டு பவுன்ல வாங்கனும்.. சரியா?

“டேய்!” என்று அலறிய வேலம்மாள், “பத்து கிராம்டா” என்றார்.

“ஹா ஹா” என்று வாய்விட்டு சிரித்தவன், “தெரியும்மா.. சும்மா விளையாண்டேன்” என்றதும் தான் அவருக்கு நிம்மதியாக மூச்சே வந்தது.

error: Content is protected !!