
குறிப்பு: எழுதியதும் போட்டுட்டேன்.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் இருக்கலாம்.. மன்னிச்சு..
துளி 6
அபியுதித் உதவியது அதிர்ச்சி தான் என்றாலும், அவனது காதலின் ஆழத்தில் தான் அசைவற்று நின்றிருந்தாள். அதுவும் அதை அவன் வெளிப்படுத்திய விதம்! அந்த கடைசி வரி அவளை என்னவோ செய்தது. அவனின் அன்பெனும் சுழலுக்குள் சிக்குவது போன்ற பிரம்மை தோன்றியது.
என்ன தான் அவனது காதலில் அவளது மனம் இளக பார்த்தாலும், அந்த காதலால் ஏற்பட்ட இழப்பு அவளை இறுக்கி பிடிக்கத் தான் செய்தது.
இரண்டிற்கும் நடுவே தத்தளித்தவளின் மனம் சற்றே தணிய ஆரம்பிக்க, அதை தடை செய்வது போல் கேட்ட அவனது கைபேசி அழைப்பு பாடலில், மீண்டும் அவளது மனம் தகிக்க தொடங்கியது.
“மஞ்சள் இளங்குளிராய்
நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய்
என்னையே தேடிடும் பார்வை எங்கே
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீங்குதியோ
எற்றடி குற்றமுற்றேன்.. பிரிவை
சாபாமாய் தந்தனையோ
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ”
என்ற ‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட பாடலின் வரிகளில் அவனுக்கு தேவையான வரிகளை மட்டும் அழைபேசி அழைப்பு சத்தத்திற்கு வைத்திருந்தான்.
கைபேசியை தேடி எடுத்து அழைப்பை நிறுத்தி, அதை அமைதி நிலையில் போட்டுவிட்டு அவளைப் பார்த்தான்.
அவள் அவனை கடுமையாக முறைக்க,
அவனோ அலட்டிகொள்ளாமல், “இந்த பாட்டு ரிலீஸ் ஆனதில் இருந்து இதான் என் ரிங்டோன்.. இன்னைக்கு புதுசா வைக்கலை” என்றான்.
உதட்டோர வளைவுடன் அவனைப் பார்த்தவள், “ரொம்ப பொருத்தமான வரிகள் தான்” என்றாள்.
அவன் அவளை சந்தேகமாக பார்க்க,
“ஆதித்த கரிகாலனோட காதல் இல்லைனா நந்தினி துன்பத்தை அனுபவிச்சு இருக்க மாட்டா.. நிம்மதியா இருந்து இருப்பா..”
சுருக்கென்று நெஞ்சில் வலி ஏற்பட, உணர்ச்சியற்ற குரலில், “இதையே எவ்ளோ நாள் சொல்லிட்டு இருக்கப் போற?” என்று கேட்டான்.
சட்டென்று ‘இறுதி வரை’ என்று தான் சொல்ல வந்தாள், ஆனால் ஏனோ அவனை வருத்த விரும்பாமல் அவ்விரு வார்த்தைகளை தொண்டைகுழியில் புதைத்துக் கொண்டாள். இருப்பினும் மனம் தந்தையின் நினைவில் வெம்மி தவிக்க, சிறிது கலங்கிய விழிகளை அவனுக்கு காட்டாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ சொன்னதை ஒத்துக்கிறேன்.. அண்ட் நந்தினி அப்பாவை கரிகாலன் நேரிடையா கொன்றான், இங்கே நான் கருவியாகிட்டேன்.. இந்த பொருத்தம்லாம் மட்டும் தான் உனக்கு தெரியுதா?
அங்கே கரிகாலன் சூழ்நிலை கைதியா இருந்த மாதிரி தானே நானும் மாட்டி தவிக்கிறேன்.. அந்த வரிகளில் வெளிப்படுற கரிகாலனோட வலி, வேதனைக்கு ஈக்குவலா நான் அனுபவிக்கிறது உனக்கு தெரியலையா?”
அவனை திரும்பி பார்த்தவள் கட்டுபடுத்திய விழிநீருடன், “உங்களை விட நான் அதிகமா வலியை, வேதனையை அனுபவிக்கிறேனே!” என்று துயரத்துடன் கூறினாள்.
இரண்டு நொடிகள் இடைவெளிவிட்டு, “நந்தினிக்கும் எனக்கும் ரெண்டு பெரிய வித்யாசம் இருக்குது.. ஒன்னு அவ அப்பானு தெரியாம அப்பாவை கண் முன் இழந்தாள், இன்னொன்னு அவளுக்கு அவன் மேல் இருந்த காதல் போல் என் மனசில் எந்த காதலும் இல்லை” என்றாள்.
“ஓ!” என்று அவன் நம்பாத குரலில் கூற,
“நிஜமாத் தான் சொல்றேன்.. உங்க மேல எனக்கு காதல் இல்லை.. பிடித்தம் இருந்தது தான்.. இருந்தது, அதாவது அது இறந்த காலம்.. அதுவும் அந்த வயசில் வந்ததெல்லாம் என்னனு சொல்ல?”
“விவாதத்துக்காக பேசாத டியுட்ராப்.. உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன்னோட பார்வையில் வெறும் பிடித்தம் மட்டும் தான் இருந்துதா? அதைத் தாண்டி வேற எதுவும் இல்லையா?
காதலோட ஆரம்ப கட்டத்தில் நீ இல்லையா? உன் மனசு என்னை ஸ்பெஷல்லா நினைக்கலையா? என் கூட இருந்த நிமிடங்கள் உன் மனசுக்கு இதத்தையும், மகிழ்வையும் தரலையா? அந்த நொடிகளை தனிமையில் நினைத்து நீ ரசிச்சது இல்லையா?”
“இதமும் மகிழ்ச்சியும் தந்தது தான்.. ஆனா பிடித்தம் வேற காதல் வேற”
உதட்டோர சிரிப்பை உதிர்த்தவன், “வசதியா ரசிப்பை விட்டுட்டியே! அந்த ரகசிய ரசிப்பு தானே காதலோட அடித்தளம்” என்றான்.
“ப்ச்.. புரிஞ்சுக்கோங்க.. அதெல்லாம் இறந்த காலம்.. சிறு மொட்டா இருக்கும் போதே கருகி போச்சு”
“அதனால என்ன! இப்போ காதலி” என்றதும் அவள் முறைத்தாள்.
“சும்மா முறைச்சுட்டே இருக்காத டியுட்ராப்.. நீ முறைக்கலைனாலும் எனக்கு முறைப்பொண்ணு தான்..
இந்த பத்து வருஷத்தில் எத்தனை ஆண்களை பார்த்து பழகி இருப்ப! யார் மேலயும் வராத பிடித்தம், ரசிப்பு எல்லாம் என் மேல மட்டும் தான வந்துச்சு.. அதை திரும்ப மலர வைக்க என்னால் முடியும்”
“எனக்கு அது தேவை இல்ல” என்று இறுகிய குரலில் கூற,
“நீ வெறுக்கிறேன்னு சொல்ற அந்த காதல் தான் என்னை உயிரோட வச்சிருக்குது ஆனா உயிர்ப்புடன் இல்லை.. என் வாழ்க்கைக்கு உயிர் கொடுக்க உன்னால் மட்டும் தான் முடியும்”