மென்சிரிப்புடன், “தேங்க்ஸ்” என்றவன், “இன்னைக்கு நிறைய முறை நினைப்பு னு சொன்ன.. நீ எதையெதையோ நினைச்சு சொன்னாலும், என் நினைப்பு முழுவதும் உன்னைப் பற்றி தான்” என்று கூறி கண் சிமிட்டினான்.
“ஓஹோ! இத்தனை வருஷம் அந்த நினைப்பு எங்க போச்சாம்?” என்று அவள் நக்கலும் கோபமுமாக வினவ,
அவனோ மகிழ்ச்சியுடன், “வாவ்!” என்றான்.
அவள் எரிச்சலுடன், “இப்போ எதுக்கு இந்த குதூகலம்?”
“உன்னோட கேள்விக்கான உள் அர்த்தம் என்ன டியுட்ராப்! உன் கோபத்தோட அடித்தளம் என்ன?”
“என்ன?”
“நான் உன்னை தேடி வரலைனு பீல் பண்ற.. அப்போ என்னை நீ தேடி இருக்க! அது எனக்கு சந்தோசம் தானே!”
“மண்ணாங்கட்டி! இந்த பத்து வருஷத்தில் ஒரு நொடி கூட தான் உங்களை தேடியது இல்லை”
“என்னை நினைச்சது கூட இல்லையா?”
“தேடுறது வேற நெனைக்கிறது வேற?
“ஏதோ ஒன்னு……”
“அது எப்படி! உங்களை நெனைக்கிறதுக்கு விருப்பம் தான் காரணமா இருக்கணும்னு இல்ல, அதிக வெறுப்பு கூட காரணமா இருக்கும்”
அவனோ வசீகர முகிழ்நகையுடன், “நீயே நினைச்சாலும் உன்னால என்னை வெறுக்க முடியாது” என்றான்.
“என்ன ஒரு கான்ஃபிடென்ஸ்! ஆனா பாருங்க! இந்த உலகத்திலேயே நான் அதிகமா வெறுக்கிறது உங்க காதலைத் தான்.. என்னோட அப்பாவை நான் இழந்ததுக்கு முழுக்க முழுக்க அதான் காரணம்” என்று கோபமும் வெறுப்புமாக கூறினாள்.
மனதினுள் பெரும் வலியை உணர்ந்தவன் அதை துளியும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “அப்போ உன் வெறுப்பு என்னோட காதல் மேல தான், என் மேல இல்லை!” என்றான்.
அவள், ‘நீ என்ன லூசா!’ என்பது போல் பார்க்க,
அவன் புன்னகையுடன், “இதான் பாசிட்டிவிட்டி” என்றான்.
“பாசிட்டிவிட்டிக்கும் உளறலுக்கும் வித்யாசம் இருக்கு”
அவன் மாறாத புன்னகையுடன், “எதிலும் முடிந்தளவு பாசிடிவ்வா யோசிக்கிறது தான் என்னோட குணம்னு..” என்றவனை இடையிட்டவள்,
“என் அப்பாவோட இறப்பில் எதை பாசிடிவ்வா பார்த்தீங்க?” என்று சீறினாள்.
இரண்டு நொடிகள் அவளை அமைதியாக பார்த்தவன், அமைதியான குரலில், “உன்னோட வளர்ச்சி.. உன்னோட தனித்துவம்” என்றான்.
“என் அப்பா இருந்து இருந்தா இதைவிட சிறப்பா, பெருசா வளர்ந்து இருப்பேன்.. ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு நிமிஷமும், என்னோட அப்பாவை நான் எவ்ளோ தேடினேன் தெரியுமா? அவர் எனக்கு அப்பா மட்டுமில்ல, நெருங்கிய நண்பன், ஆசான், தாயுமானவர்னு சொல்லிக்கிட்டே போகலாம்.. அவர் இல்லாம, இருட்டான காட்டில் தன்னந்தியா இருப்பது போல நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியுமா?” என்று வெடித்து சிதறினாள்.
கலங்கிய விழிகளுடன் கண்ணகியை போல் தன் முன் நின்றிருந்தவளை, அப்படி பார்க்க முடியாமல் இழுத்து அணைத்தான்.
அவள் திமிற, அவனோ அவளது முகத்தை தனது நெஞ்சில் புதைத்து, “கொஞ்ச நேரம் இப்படியே இரு டியுட்ராப்.. என்னோட மன்னிப்பு உன் வலியை, இழப்பை சரி செய்யாது தான், இருந்தாலும் கேட்கிறேன்.. என்னை மன்னிச்சிடு.. அம் வெரி வெரி சாரிடாமா.. நான் இருக்கேன்.. உனக்காக நான் இருக்கேன்.. எப்பவும் இருப்பேன்” என்றவன் மறு கரத்தால் அவளது முதுகை ஆறுதலாக வருடினான்.
சில நொடிகளில் அவனிடம் தளர பார்த்த மனதை இழுத்து பிடித்தவள், அவனை உதறி தள்ளியபடி கோபத்துடன், “என்னோட அப்பா இறப்புக்கு காரணமான உங்களிடமே ஆறுதல் தேடுவேன்னு நினைச்சீங்களா?” என்று சீறினாள்.
பின், “இந்த அக்கறை சக்கரை, காதல் கீதல்னு சொல்ற நீங்க, இத்தனை வருஷம் என்ன செஞ்சிட்டு இருந்தீங்க? நான் கஷ்டப்படும் போதெல்லாம் என்ன செஞ்சீங்கலாம்? என் அப்பா மேல சத்தியமா நான் உங்களை தேடலை.. அதை கேட்டு தப்பிக்காம என் கேள்விக்கு நேரடியா பதில் சொல்லுங்க” என்றாள்.
“உனக்கே தெரியும் மாமா இறந்த நேரம் நான் என்னோட ஹையர் ஸ்டடீஸ்கு அப்ராட் போறதா இருந்தேன்.. என்னால அதை தவிர்க்க முடியாம, மாமா இறந்த பத்தாவது நாள் கிளம்பிட்டேன்..
ஆனா அங்க போய் நான் நிம்மதியா இல்ல.. உன் கூட இல்லைனாலும் என் நண்பர்கள் மூலம் உன்னை கவனிச்சுட்டு தான் இருந்தேன்.. உனக்கு வேண்டிய உதவியை மறைமுகமா செஞ்சிட்டு தான் இருந்தேன்..
இதை நான் செஞ்சதை சொல்லிக் காட்ட சொல்லலை.. என்னை பற்றி விளக்க மட்டுமே சொல்றேன்.. நீ என்ன நினைக்கிற? என்ன தான் மாமா பெயரை சொன்னாலும், ஒரு பதினேழு வயசு பொண்ணு சொல்றதைக் கேட்டு எல்லோரும் உதவி செஞ்சிடுவாங்கனா? அதுவும் கவர்மென்ட் ஆபீஸ்ஸில்!
அப்போ தான் பதினேழு வயசு.. சூழ்நிலையும் வயசும் உன்னை பெருசா யோசிக்க விட்டிருக்காது.. இப்போ யோசிச்சு பாரு” என்று கூறி இரண்டு நொடிகள் இடைவெளி விட்டவன்,
“ஒவ்வொரு இடத்திலும் திரைமறைவா நான் உனக்கு உதவி இருக்கிறேன்.. என்னோட பிரெண்ட்ஸ் சர்க்கிள் மூலம் ஒவ்வொருத்தரையா பிடிச்சு காரியத்தை செய்து இருக்கிறேன்.. சில இடத்தில் காரியம் முடிய அதிகாரி கிட்டயே பேசி இருக்கிறேன்.. சில இடத்தில் உனக்கு தேவையான விவரம் கிடைக்க செய்தேன். யாரை எங்கே எப்படி பார்க்கணும் என்ற விவரமெல்லாம் தானா உனக்கு கிடைக்கலை..
ஆக்கமும் செயலும் உன்னோடது தான்.. ஆனா அதை வெற்றிகரமா செயல்படுத்த நான் உனக்கு மறைமுகமா துணை நின்றேன்.. நான் அப்ராட் போகாம இருந்து இருந்தாலும் நான் இப்படி தான் செயல்பட்டு இருப்பேன்.. ஏன்னா நீ என்னை நெருங்க விட்டு இருக்க மாட்ட, அண்ட் நீ இப்படி இன்டிபென்டென்ட் லீடரா இருக்கிறதை பார்க்க தான் நான் ஆசைப்படுறேன்..
எப்பவும் நான் உன் கூடவே தான் இருக்கிறேன்.. இத்தனை வருஷம் உனக்கே தெரியாம உன் கூட இருந்தேன், இனி தெரிந்தே இருப்பேன்.. என் மூச்சே நின்னாலும், நான் உன்னை சுற்றி தான் இருப்பேன்” என்று முடித்தான்.
அவள் அதிர்வுடன் அசைவற்று நின்றிருந்தாள்.
பனித்துளி குளிர காத்திருப்போம்…
குறிப்பி: Maths கிளாஸ்கு வாரத்தில் மூன்று நாட்கள் காலேஜ் போக ஆரம்பித்து இருக்கிறேன்.. மத்த 5 subjects ஸ்டாப்ஸ் சொல்லி தர மாட்டாங்க.. நானே தான் படிச்சுக்கணும்.. அண்ட் first இன்டெர்னல் எக்ஸாம் வேற nov4 ஆரம்பிக்குது.. assignments வேற தாரங்க.. இப்போ கூட நாளைக்கு submit பண்ண வேண்டிய assignment இனி தான் எழுத போறேன்.. also அப்பப்போ பையனுக்கு வேற பாடம் சொல்லித் தரனும்..
இப்போ இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா.. இனி பனித்துளி முடிந்தால் தான் வாரத்துக்கு 3 யூடி வரும்.. 2 யூடி கண்டிப்பா வரும்.. ப்ளீஸ் அட்ஜஸ்ட் தோழமைகளே..