
துளி 5
மூடிய அறையில் தன்னை முறைத்துக் கொண்டு இருந்த பனிமலரைப் பார்த்து,
“ஹே டியுட்ராப்! அத்தை தான் ‘வெளியாட்களுக்கு பேசுபொருளா இருக்கக் கூடாது’, ‘வீட்டு கௌரவம்’ அது இதுன்னு சொல்லி, என்னை உன்னோட ரூமில் தங்க சொன்னாங்க” என்றான்.
அவள் இன்னுமே முறைத்தபடி, “இது கூட தெரியாம நான் கல்யாணம் செய்யலை” என்றதும்,
“அப்புறம் எதுக்கு முறைக்கிற? நானே முதல் ஃபஸ்ட் நைட் நினைச்சு படபடப்பா இருக்கேன்! நீ இப்படி முறைச்சா சின்ன பையன் ரொம்ப பயந்துருவேன்” என்று போலியான பயந்த குரலில் கூற,
“ரொம்ப பயந்தவர் தான்”
“ஆமா.. அதுவும் நீ டாக்டர்ர்ர்ர் னு சொல்றப்ப உள்ளுக்குள்ள டர் ஆகுதா இல்லையா!”
“ஹஹான்”
“ஹான்.. அதுவும் நானே துணை இல்லாம புகுந்த வீட்டுக்கு தன்னந்தனியா வந்து இருக்கேன்.. அண்ட் பேசிக்கலி, ஐ ஹவ் பிஞ்சு நெஞ்சு, யூ நோ!”
“அந்த பிஞ்சு நெஞ்சு பிஞ்சு தான் போக போகுது”
“அப்போ டாக்டருக்கே டாக்டரா நீ மாறிட வேண்டியது தான்”
“நெனெப்பு தான்.. ஆமா அது என்ன முதல் ஃபஸ்ட் நைட்? மத்தவங்களாம் நிறைய ஃபஸ்ட் நைட் கொண்டாடுறாங்களா என்ன?”
“செகண்ட் மேரேஜ் செய்துக்கிறவங்க கொண்டாடுவாங்களே!”
“பெரிய கண்டுபிடிப்பு தான்”
“நன்றி.. நன்றி” என்று அவன் விரிந்த புன்னகையுடன் கூற,
“சாமர்த்தியமா பேச்சை மாத்தியதா நெனைப்போ! சடங்கில் என்ன செஞ்சீங்க?” என்றாள்.
“என்ன செய்தேன்? ஆமா யாரு சடங்கை சொல்ற? உன்னோடதா? நீ சமஞ்சு தான் ரொம்ப வருஷம் ஆச்சே! ஞாபகம் இல்லையே!”
‘அடப்பாவி! நான் எதை சொன்னா, இவர் எதை சொல்றார்!’ என்று மனதினுள் நினைத்தவள் அவனிடம், “விரல் சூப்ப தெரியாத பாப்பா லுக் விட்டீங்க! உங்களை சூப் வெச்சிடுவேன்”
மென்னகையுடன், “அந்த சூப்பை நீயே குடிச்சிடு” என்றான்.
அவள் கோபத்துடன் பல்லைக் கடிக்க, அவன் புருவம் உயர்த்தினான்.
“வர கோபத்துக்கு எதையாவது தூக்கி உங்க மண்டையில் போடத் தோனுது”
“இதுக்கேவா! இதெல்லாம் டீசருக்கும் டீசர் மாதிரி தான்”
“டாக்கடர் என் கையில் டர் ஆகுறது உறுதி”
“அய்யோ பயமா இருக்கே”
“பால் பழம் சாப்பிட்ட சடங்கில் செய்தது போல இனி செய்யாதீங்க.. இன்னொருமுறை செய்தா, யோசிக்காம உங்க தலையிலேயே கொட்டிடுவேன்” என்று எச்சரித்தாள்.
“இன்னொரு முறை என்னோட எச்சில் பாலை குடிக்க ஆசைப்படுறியா! இப்போ கூட செம்பில் பால் இருக்குமே! எங்க அந்த செம்பு?” என்றபடி அவன் பால் சொம்பைத் தேட, நிஜமாகவே அதனை எடுத்து அவன் தலையில் பாலை ஊற்றிவிடும் வேகம் அவளுள் எழுந்தது.
அந்தளவிற்கு பால் பழம் அருந்தும் சடங்கில் அலப்பறை செய்து இருந்தான். எந்த சடங்குகளும் வேண்டாம் என்றவளை ஊர் பாட்டிமார்கள் சரிகட்டி சம்மதிக்க வைத்து இருந்தனர்.
பால் அடங்கிய சிறு குவளையை அவனிடம் கொடுத்து ஒரு மிடறு அருந்திவிட்டு அவளிடம் கொடுக்கக் கூற, அவன் அவளை ஓரவிழியால் குறும்புப் பார்வை பார்த்தபடி வாய் வைத்து அருந்தினான். சாதாரணமாக அருந்தாமல், குவளையை வாயில் இருந்து எடுக்காமல் ஒரு மிடறு அருந்துவதற்குள் அதனை சுற்றி, விளிம்பு முழுவதும் அவனது உதடு படுவது போல் செய்து இருந்தான். அதுவும் பிறர் கவனத்தை ஈர்க்காமல், அவளுக்கு மட்டும் தெரியும்படி செய்து இருந்தான்.
அவள் பல்லைகடித்தபடி முறைக்க, அவனோ கண்சிமிட்டியபடி அவளிடம் குவளையை நீட்டினான்.
“யனக்குதே பாலு புடிக்காதுனுட்டு ஒங்களுக்கு தெரியுமேம்மா” என்று கூறி அவள் தப்பிக்கப் பார்க்க,
அவரோ, “ஒரு வாயி குடிடா தங்கம்” என்று கெஞ்சலாக கூற, வேறு வழி இல்லாமல் அவனை பார்க்காமல் குடித்து முடித்தாள். ஆனால் அவனது குறுநகையை அவளால் உணர முடிந்தது.
அடுத்து பழத்தை எடுக்க, “பழத்த நா மொத உண்குறே” என்று அவள் கூற,
ஒரு கிழவி, “மாமனையு ஓ எச்சிக்கு இப்பவே பழக்குதியாத்தா! அதுவும் செர்தே” என்று கூறவும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
அபியுதித் வாய்விட்டு சிரிக்க,
‘சுளுக்கெடுக்க டாக்டருக்கே சுளுக்கெடுத்துப்புடுவேன் சாக்கிரத’ என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தாள்.
அவனோ உதட்டோர குறுநகையுடன், ‘இன்ட்ரெஸ்டிங்’ என்று முணுமுணுத்து கண்சிமிட்டினான்.
அவனை முறைத்துவிட்டு திரும்பியவளின் கையில் பாதி தோல் உரித்த பழம் கொடுக்கப்பட, அதில் சிறு துண்டை பியித்து உண்டுவிட்டு அவனிடம் நீட்டினாள்.
அவளது விரலை தீண்டியபடி அதை வாங்கியவன் ஒரு துண்டு கடித்து உண்டபடி அவளிடம், ‘இப்போ உன்னோட விரலுக்கு முத்தம் கொடுத்ததா நினைச்சுத் தான் பழத்தை உதடு பட கடித்தேன்’ என்று முணுமுணுத்து, மீண்டும் கண்ணடித்தான்.
இவற்றை நினைத்து பார்த்தவள் அவனது கையில் இருந்த சொம்பை வேகமாக பிடுங்க,
“ஊத்திடாத! உன்னை விட அது ஹாட்டா இருக்குது” என்று நிஜமாகவே அலறினான்.
அதை அவனிடம் நீட்டினவள் உதட்டோர கோணல் புன்னகையுடன், “குடிங்க” என்றாள்.
அவன் புருவம் உயர்த்தி பார்க்க,
“ஹ்ம்ம் குடிங்க” என்றாள்.
அவளது விழிகளை பார்த்தபடி அதை வாங்கியவன் முழுவதையும் குடித்து முடித்து, “ஹாப்பி?” என்றான்.
அவள் தோள்களை குலுக்க,
அவன் ஆழ்ந்த குரலில், “ஸோ எதையும் நீ மறக்கலை.. நான் மிதமான சூட்டில் மட்டும் தான் குடிப்பேன்னு நீ மறக்கலை, ரைட்!” என்றான்.
“அப்படியா! எனக்கு ஞாபகம் இல்லையே! நீங்க ஆசப்பட்டீங்கனு குடிக்கச் சொன்னேன்”
உதட்டோர புன்னகையுடன், “என்னை உனக்கும், உன்னை எனக்கும் நல்லா தெரியும் டியுட்ராப்.. இப்போ நீ, தண்டனையா தான் சூடான பாலை குடிக்க சொன்னனு எனக்கு தெரியும்” என்றவன், “இல்லைனு பொய் சொல்லி உன்னோட நேச்சரை மாத்தாத.. எப்போதும் நீ நீயா இரு” என்றும் சேர்த்து கூறினான்.
அவள் பதில் கூறாமல் அறையில் இருந்த மண்பானையில் இருந்து தண்ணீரை எடுத்து நீட்டினாள்.‘இதான் நீ டியுட்ராப்’ என்று மனதினுள் காதலுடன் கூறிக் கொண்டவன் அவளை சீண்டாமல், அந்த குளிர்ந்த நீரை வாங்கி அருந்தினான்.