மருமகளை நெருங்கிய அன்பரசு, “என் மௌனம் உன்னை ரொம்பவே காயப்படுத்தி, பெரிய இழப்பை கொடுத்துருச்சு” என்றவர் கையை கூப்பி, “என்னை மன்னிச்சிருமா” என்றார்.
“அரசு!” “அண்ணே!” என்று சுப்பையாவும் நெல்லைவடிவும் சிறிது பதறியபடி கண்டன குரலை எழப்ப,
பனிமலரோ அவரது கையை இறக்கியபடி, “இனி இந்த தப்பை செய்ய மாட்டீங்கனு நம்புறேன்.. உங்க மக வாழ்க்கைக்கு அது தான் நல்லதும் கூட” என்றாள்.
“நன்றிமா.. என்னை மன்னிக்கலைனாலும், அதை கடந்து வர முயற்சிக்கிறனு புரியுது” என்றவர், “ஒன்னே ஒன்னு கேட்டுக்கிறேன்மா.. உடனே இல்லைனாலும், அபியை தனி மனிதனா பார்க்க முயற்சி செய்.. அது தான் உங்க ரெண்டு பேருக்குமே நல்லது” என்றார்.
இப்பொழுதும் அவளிடம் சலனமற்ற பார்வை மட்டுமே.
“சரி.. நாங்க கிளம்புறோம்” என்ற அன்பரசு மகளுடன் கிளம்பினார். அன்பரசு வெளியே திடமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் உடைந்து தான் இருந்தார். மைத்ரேயி தவிப்பு கலந்த கனத்த மனதுடன் விடை பெற்றாலும் அண்ணன் மேல் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தான் கிளம்பினாள்.
அங்கே பண்ணையார் சுந்தரலிங்கத்தின் வீட்டில் வேலம்மாள் மற்றும் லீலாவதி இடையே சொற்போர் நடந்துக் கொண்டு இருந்தது.
“எல்லாத்துக்கும் உன் பையன் தான் காரணம்” என்று லீலாவதி வரிந்துகட்டிக் கொண்டு சண்டையிட,
வேலம்மாளோ, “நீங்க சொன்னதை என் பையன் உண்மையாக்கி இருக்கிறான்.. நீங்க தான் அவனுக்கு அந்த நினைப்பைக் கொடுத்து இருக்கிறீங்க” என்றார்.
“நாங்க நினைப்பைக் கொடுத்தோமா!! அந்த பிளான் போட்டதே உன் பையன் தான்”
ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை மனதினுள்ளேயே மறைத்தபடி, “அவன் சொன்னா! உங்களுக்கு எங்க போச்சு புத்தி! சுய புத்தி இல்லை? எங்க அந்த வீராதி வீரன், சூராதி சூரன்?” என்றவர், “வெறும் வாய் சொல் வீரன் மட்டுமே!” என்று இகழ்ச்சியுடன் முடித்தார்.
மகனை பேசியதும் சுந்தரலிங்கம், “ஏ! வார்த்த தடிச்சுது, நாக்க நறுக்கிபுடுவேன்.. ஜாக்கிரத.. யெ வூட்டுலயே இருந்துபுட்டு யெ மவனையே பேசுவியா நீ!” என்று கோபத்துடன் எகிறினார்.
வேலம்மாளோ பயமின்றி, “வாயா பெரிய மனுஷா! இந்த வாயை அந்த சிறுக்கி முன்னாடி காட்ட வேண்டியது தானே! பையனை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை, என்னை பெருசா பேச வந்துட்டார்” என்றார்.
“ஏய்!” என்று எகிறியபடி சுந்தரலிங்கம் ஓரடி முன்னே வர,
அப்பொழுதும் வேலம்மாள் அச்சமின்றி, “நான் என்ன இல்லாதத சொல்லிட்டேன்? ஒழுங்கா ஒரு வேலையை உருப்படியா செய்றானா? தாலி கட்டுவேன், திமிரை அடக்குவேன்.. அது இதுனு ஆகாயகோட்டை கட்டமட்டும் தான் லாய்க்கு உம்ம மவன்” என்றார்.
இதில் அவமானம் கொண்ட சுந்தரலிங்கத்திற்கு ஆளவந்தான் மீது தான் கோபம் வந்தது. ஆம்! சிறு வயது முதல் பனிமலரிடம் மோதி தோல்வியை மட்டும் தழுவும் மகன் மீது கோபம் தான் வந்தது.
“ரொம்ப பேசுற வேலம்மா” என்று லீலாவதி சீற,
“நான் என்ன இல்லாதத சொல்லிட்டேன்? இவ்ளோ பிரச்சனை போய்கிட்டு இருக்குது.. இன்னும் உங்க மருமகன் வீடு வந்து சேரலை.. எங்க அந்த தொர?”
“மாமாவா அவளை கட்டிக்கிறேன்னு சொன்னாங்க? உங்க மகன் தான் அப்படி ஒரு எண்ணத்தை விதைச்சது.. எல்லாம் பக்கவா பிளான் போட்டு, கமுக்கமா கல்யாணம் செய்த உங்க பையன் சரியான சகுனி” என்று வைரலட்சுமி கோபமும் எரிச்சலும் வெறுப்புமாக கூறினாள்.
அதற்கும் வேலம்மாள், “சகுனி வேலை பார்க்க நினைக்கிற உன் மாமனை எதிர்த்து ஜெய்க்கும் கிருஷ்ணன்டி என் மகன்” என்று அசராமல் பதிலடி கொடுத்தார்.
லீலாவதி அதற்கு பதில் சொல்ல வாய் திறக்கும் முன் தங்கதுரை, “நிறுத்துங்க” என்று கத்தி இருந்தான்.
அனைவரும் அவனை பார்க்க,
அவன், “இது நாம அடிச்சுக்க வேண்டிய நேரம் இல்லை.. நமக்குள் அடிச்சுகிட்டு அவங்களுக்கு வெற்றி தர போறீங்களா?” என்றான்.
பின், “என்ன பார்க்கிறீங்க? இப்போ நாம அடிச்சுக்கிறது, பசுக்கள் சிங்கம் கதை முடிவில் போய் தான் முடியும்.. நாம எல்லாருமே தான் ஏமாந்து இருக்கோம்.. ஸோ, சண்டை போடாம, அமைதியா அடுத்து என்ன செய்றதுனு யோசிங்க.. நாம ஒன்னு சேர்ந்து வேலை பார்த்தாலே அபி அண்ட் மலரை ஜெய்க்க கஷ்டம், இதில் இப்படி அடிச்சுகிட்டீங்க! ஒன்னும் கிழிக்க முடியாது” என்றான்.
“அவள போய் சிங்கம்னு சொல்ற! உனக்கு வேற உதாரணமே இல்லையா?” என்று வைரலட்சுமி எரிச்சலும் கோபமுமாக கூற,
அவனோ முறைப்புடன், “இப்போ இதான் ரொம்ப முக்கியமா?” என்றான்.
அடுத்து அவள் பேசும் முன் சுந்தரலிங்கம், “துரை சொல்லுறது செரிதே லீலா.. அந்த புள்ள மலர, ஒட்டுக்கா இருக்கச்சியே சாய்க்கது செரமம்தே.. இதுல அபி வேற கூட சேந்துபுட்டான்” என்றார்.
“சும்மா எல்லாரும் அவள தூக்கி வச்சு பேசாதீங்க” என்று வைரலட்சுமி எரிச்சலுடன் சற்றே குரல் உயர்த்த,
தங்கதுரை, “எதிரியோட பலத்தை சரியா புரிஞ்சுகிட்டா தான் நாம ஜெய்க்க முடியும்” என்றான்.
“புரிஞ்சா மட்டும்!” என்றவள், “இதுக்கு மேல நாம செய்ய என்ன இருக்குது? அதான் எல்லாம் போச்சே!” என்றாள் இயலாமை தந்த கோபத்துடன்.
“எதுவும் போகலை.. இன்னும் ஒரு வருஷம் டைம் இருக்குது.. மலர் எப்படியும் சுலபத்தில் மனசு மாற மாட்டா.. அதுக்குள்ள அவங்களை நாம பிரிக்கணும்.. அது மட்டுமில்ல, மலர் மனசில் அபி மீது பகையை வளர்க்கணும்”
“என்னது!” என்று வேலம்மாள் குரல் கொடுக்க,
“அப்போ அபி அவ கூட வாழட்டுமா?” என்று கேட்டான்.
“சீ! கேட்கவே சகிக்கலை”
“அப்போ நாங்க சொல்றதை கேளுங்க”
“ஆனா அபி”
“அவனுக்கு என்ன! அவனை அவ கிட்ட இருந்து பிரிச்சதும் லஷ்மி அவனை கல்யாணம் செய்துப்பா” என்றவன் வைரலட்சுமி மறுப்பு சொல்ல வாய் திறக்கும் முன் வேலம்மாள் அறியாமல் கண்ஜாடை காட்டி தடுத்ததோடு, “என்ன லஷ்மி! அபியைக் கல்யாணம் செய்துப்ப தானே?” என்று கேட்டான்.
அவளும், “கண்டிப்பா” என்று கூற, வேலம்மாள் சற்றே சமாதானம் ஆனார்.
அண்ணனும் தங்கையும் அர்த்தம் பொதிந்த புன்னகையை உதிர்த்தனர். அவர்களுக்கு வேண்டியது அபியுதித் மற்றும் பனிமலரின் பிரிவும், அழிவும்.
பனித்துளி குளிர காத்திருப்போம்…