வேலம்மாளிற்கு என்ன தான் மகன் மீது பாசம் இருந்தாலும், அதை விட பனிமலரிடம் தோற்க கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதை அவள் சரியாக கண்டு கொண்டதில் பதில் சொல்ல முடியாமல் அவர் அவளை முறைக்க,
“யாருக்காது நீங்க உண்மையா இருந்து இருக்கிறீங்களா?” என்று வெறுப்புடன் கேட்டாள்.
“ஏய்!” என்று அவர் கத்த,
“சுப்! இந்த சவுண்ட் விடுற வேலையெல்லாம் உங்க வீட்டோட வச்சுக்கோங்க” என்றவள், “நீங்களே இடத்தை காலி செய்றது உங்களுக்கு நல்லது” என்றாள் ஆளுமை நிறைந்த மிரட்டும் குரலில்.
அவளது ஆளுமையில் சற்றே பயம் துளிர் விட்டாலும் அதை வெளிகாட்டாமல், “நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை” என்றார்.
“உங்களுக்கு பதில் சொல்ற அவசியம் எனக்கு இல்லை”
இளைஞர் கூட்டத்தில் ஒருவன், “யக்கா இந்தம்மா ஓவரா சலம்புது.. ஒங்க சொல்லுக்கு மருவாத தாராம, ரௌசு வுட்டுட்டே இருக்குதேக்கா.. சோலிய முடிச்சுப்புடவா?” என்று குரல் கொடுக்க, பனிமலர் பார்வையிலேயே அவனை அடக்கினாள்.
அபியுதித், “அம்மா கிளம்புங்க” என்றான்.
அவர் ஆங்காரத்துடன், “என் பையனை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டல! நீ நல்லாவே இருக்க மாட்டடி.. நாசமா தான் போவ..” என்று சாபமிட தொடங்க,
அவளோ, ‘உன் சாபம் என்னை எதுவும் செய்யது’ என்று தூசி தட்டுவது போல் அலட்சிய பார்வைப் பார்த்தாள்.
“அம்மா!” என்று குரலை உயர்த்தி அன்னையை நிறுத்திய அபியுதித், “உங்க பையனுக்கு தான் நீங்க சாபம் கொடுத்துட்டு இருக்கிறீங்க.. என்ன பார்க்கிறீங்க! மலர் வேறு நான் வேறு இல்லை.. என் நிம்மதியை கெடுக்காம கிளம்புங்க” என்றபடி கையை வெளிப்புறம் நீட்டியிருந்தான்.
அவர் ஆங்காரமும் கோபமுமாக பனிமலரை முறைத்துவிட்டு விறுவிறுவென்று மண்டபத்தை விட்டு வெளியேறினார். அபியுதித் மனம் வருந்தினாலும் அன்னை செய்த தவறுக்கு இது அவருக்கு தேவை தான் என்று தன்னைத் தானே தேற்றியபடி நின்றான்.
அவளது பார்வை அன்பரசு மற்றும் மைத்ரேயி மேல் படிந்தது. இருவருமே அடுத்து என்ன நடக்குமோ என்ற தவிப்பு கலந்த பதற்றத்துடன் அபியுதித்தைப் பார்த்து கொண்டிருந்தனர்.
அபியுதித் பேசும் முன்,
“மைத்ரேயிக்கு இப்போ தான் இருவத்தினாலு வயசு ஆகுது.. எப்படியும் இருவத்தியாரில் தானே கல்யாணம் செய்வீங்க! அதுக்குள்ளாற ஒரு வருஷ கெடு முடிஞ்சிரும்.. அதுக்கு அப்புறம் உங்க கடமையை செய்துக்கோங்க.. இந்த ஒரு வருஷம் எந்த விதமான தொடர்பும் இருக்க கூடாது” என்றவள், “இரண்டு பக்கமும் சமரசம் இருக்கணும்” என்றும் சேர்த்து கூறி முடித்தாள்.
ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவன், “ஆல்ரைட்! இந்த தண்டனைக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா ஒரு வருஷத்துக்கு தான்” என்றான்.
“நானும் அதை தானே சொன்னேன்!”
மறுப்பாக தலை அசைத்தவன், “ஒருவேள ஒரு வருஷம் கழிச்சு நீ என்னோட வாழ்ற முடிவை எடுக்கும் பட்சத்தில்…” என்று இழுத்து நிறுத்தி அவளை ஆழ்ந்து நோக்கினான்.
“அப்படி ஒரு சூழ்நிலை வந்தா.. அண்ணியா என் கடமையைச் செய்ய தவற மாட்டேன்.. ஆனா உங்க அம்மாவை என்னைக்குமே என்னால் ஏத்துக்க முடியாது” என்றாள் தீர்க்கமான குரலில்.
“பின்விளைவுகளை தெரிந்து தான் இந்த பந்தத்தில் நான் நுழைந்து இருக்கிறேன்”
“நல்லது”
“ஹ்ம்ம்” என்றவனின் பார்வை தங்கை மற்றும் தந்தையிடம் திரும்பியது.
மைத்ரேயி பரிதவிப்புடன் அண்ணனை நோக்க,
மகனின் நல்வாழ்விற்காக தனது துக்கத்தை தன்னுள் புதைத்து மென்னகைத்தபடி அவனது தலையில் ஆசிர்வதிப்பது போல் கை வைத்து, “நல்லா இருங்க” என்ற அன்பரசு, “விட்டு கொடுத்து போறதில் யாரும் தாழ்ந்து போறது இல்லை அபி.. மனைவி கிட்ட தோற்று, வாழ்க்கையில் ஜெயக்கலாம்.. வாழ்க்கைனு நான் சொல்றது உன் மனைவியுடனான நல்வாழ்வை தான்.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றபடி அவனது கன்னத்தை தட்டினார்.
அவரது கையை இரு கரங்கள் கொண்டு இறுக்கமாக பற்றியபடி இரு நொடிகள் அமைதியாக இருந்தவன் பின் மென்னகையுடன், “என் உடம்பில் உங்க ரத்தம் தான் அதிகம் ஓடுதுப்பா” என்றான்.
மகனின் மென்னகை பின் இருக்கும் வலியை உணர்ந்த அன்பரசு தானுமே வலியை மறைத்தபடி மென்னகைத்தார்.
“அண்ணா..” என்று தழதழத்த குரலில் கலங்கிய கண்களுடன் அழைத்த தங்கை பக்கம் திரும்பியவன் மென்னகையுடன் அவளது தலையை வருடியபடி, “ஒரு வருஷம் தானே! ஓடிடும்டா” என்றபோது அவளது கண்ணகளில் இருந்து கண்ணீர் இறங்கியது.
மறுப்பாக தலையை ஆட்டியபடி கண்ணீரைத் துடைந்தவன், “உப்பை தின்றவன் தண்ணி குடித்து தான் ஆகணும்.. அம்மா செய்தது மன்னிக்க முடியாத தவறுடா.. அவங்க திருந்துறது போல தெரியலை.. அப்போ, அதை நாம தானே சரி செய்யணும்! இதன் மூலம் உன் அண்ணிக்கு கொஞ்சமேனும் நிம்மதி கிடைக்கும்னா, நாம அதை தரது தானே சரி!
உன் அண்ணியோட இழப்பை என்னால் ஈடு செய்ய முடியாது, ஆனா என் அன்பால் அவளோட வலியை குறைக்க முடியும்.. என்னோட காதலால் அவளை இனிமையான சந்தோஷமான வாழ்வை வாழ வைக்க முடியும்.. ஒரு வருஷம் கழிச்சு அண்ணியோட தான் வருவேன்.. தைரியமா இரு.. நீ விரும்பியபடி சென்னை வேலைக்கு போ.. அப்பா உன் கூட வருவாங்க” என்றான்.
சற்றே தெளிந்தவள் தமையனை இறுக்கமாக கட்டிக் கொண்டு, “தன்க்யூ அண்ணா.. உங்க ரெண்டு பேர் வரவுக்காக, நானும் அப்பாவும் காத்துட்டு இருப்போம்” என்றவள், தமையனின் அணைப்பில் இருந்தபடியே மென்னகையுடன் பனிமலரைப் பார்த்து, “வந்துருங்க அண்ணி” என்றாள்.
பனிமலர் எந்த விதமான எதிர்விணையும் ஆற்றாமல் நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.