
துளி 4
சில நொடிகள் யோசித்த பனிமலர், “உங்களுக்காக இல்லைனாலும் இளைய சமுதாயத்துக்கு முன்னோடியா இருப்பதால், சம்மதிக்கிறேன்.. ஒரு வருஷம் வீட்டோட மாப்பிள்ளையா நீங்க இருக்கலாம்.. ஆனா உங்க குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பிலும் நீங்க இருக்கக் கூடாது” என்றாள்.
வேலம்மாள் கத்த வாயை திறக்க, அவர் பேசும் முன் அபியுதித், “நான் பேசிக்கிறேன்” என்று அழுத்தத்துடன் கூறி அவரது வாயை அடைத்துவிட்டான்.
“என்னோட நிரந்திர குடும்பம், நீயும் நம்ம குழந்தைகளும் தான்” என்றவன் அவளது முறைப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, “அதுக்காக என் அப்பா, அம்மா, தங்கை என்னோட குடும்பம் இல்லைனு சொல்லிட முடியாது.. மாமா இறப்புக்கு நான் காரணம் இல்லைனாலும் என்னை வைத்து தான் என்னோட அம்மா பிரச்சனை ஆரம்பிச்சாங்க என்றதால், தண்டனை அனுபவிக்க நான் தயார்.. ஆனா அதுக்காக என் கடமையில் இருந்து நான் விலக முடியாதே!” என்றான்.
“தண்டனையா தானே விலக சொல்றேன்”
“மொத்தமா விலகினா என் கடமையை எப்படி செய்றது?”
“அது தானே உங்களுக்கான தண்டனை”
அவன் அவளை ஆழ்ந்து பார்க்க, அவளோ அதில் சிறிதும் பாதிக்கப் படாதவளாக திடமாக நின்றாள்.
‘இது உன்னுடைய குணமே இல்லையே டியு-ட்ராப்!’ என்று மனதினுள் பெரிதும் வருந்தியவன் சிறு பெருமூச்சை வெளியிட்டபடி பேசினான்.
“உன் கோபம், வெறுப்பு எல்லாம் என் அம்மா மேல தானே!” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“உங்க மேலயும் தான்” என்றாள்.
அவனோ மென்னகையுடன், “கோபம் இருக்கும் ஆனா உன்னால் என்னை வெறுக்க முடியாது டியு-ட்ராப்” என்றான்.
உதட்டை அலட்சியமாக வளைத்தவள், “நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்” என்றாள்.
“நம்ம விஷயத்தை தனியா பேசிக்கலாம்.. இப்போ பேசிட்டு இருக்க விஷயத்துக்கு வா.. என் அப்பாவும் தங்கையும் என்ன செஞ்சாங்க? என் தங்கைக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை.. அவளுக்கு செய்ற கடமை எனக்கு இருக்குது.. பாசமும் இருக்குது.. எப்படி மொத்தமா விலக முடியும்? தலைவியா நடுநிலையில் இருந்து யோசிச்சு சொல்லு” என்றான்.
“உங்க அப்பா மேல் தப்பே இல்லைனு சொல்ல முடியாது.. என்னைப் பொறுத்தவரை கண் முன் நடக்கும் தவறை தட்டி கேட்காம, அமைதியா இருப்பதும் தவறு தான்..
உங்க அப்பா உங்களோட குடும்பத்தில் அமைதி நிலவனும்னு அமைதியாவே இருந்து எங்க குடும்பத்தின் அமைதியை உருகுலைத்து, ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் சிதைச்சிட்டாங்க..
என்ன தான் அமைதியா இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில், பேசத் தான் செய்யணும்.. இன்னைக்கு பேசியவர் அன்னைக்கு பேசி இருக்கலாமே! தன் மனைவியை தடுத்து இருக்கலாமே!” என்றவளின் பார்வை அன்பரசைச் சுட, அவர் தவிப்பு கலந்த குற்ற உணர்ச்சியுடன் மன்னிப்பை யாசித்தபடி பார்த்தார்.
அன்பரசின் யாசிப்பை பொருட்படுத்தாதவள் அபியுதித்தைப் பார்த்து, “ஆக, ஒரு வகையில் உங்க அப்பாவும் தான் காரணம்.. தண்டனையை அனுபவிக்கலாம், தப்பில்லை..
அப்புறம் உங்க தங்கை! அவளை தனியா விட சொல்லலையே! உங்களை மட்டும் தான் விலகி இருக்க சொல்றேன்” என்றவள், “அவ மேல தப்பு இல்லை தான் ஆனா பெத்தவங்க பாவம் பிள்ளைகளை சேரும் தானே!” என்று முடித்துக் கொண்டாள்.
“அப்பா, மைத்தி கூட தொடர்பில் தான் இருப்பேன்”
உதட்டை சுழித்தவள், “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்றாள்.
வேலம்மாள் அதிர்வுடன், “அபி அப்போ அம்மா!” என்று வினவ,
பனிமலர், “இன்னும் நீங்க கிளம்பலையா?” என்று அலட்சியமும் நக்கலுமாக கேட்டாள்.
வேலம்மாள் முறைப்புடன், “எனக்கும் என் மகனுக்கும் நடுவில் நீ வராத” என்று எச்சிரிப்பது போல் கூற,
“அதான் அவரே சொல்லிட்டாரே! இனி அவர் உங்க மகன் இல்லை, இந்த பனிமலரோட கணவர் மட்டும் தான்” என்றவள் போலியான மென்னகையுடன் அபியுதித்தைப் பார்த்து, “அப்படி தானே?” என்று கேட்டாள்.
ஒரு நொடி கண்களை மூடி திறந்தவன் மென்னகையுடனே அழுத்தமான குரலில், “ஆமா” என்றான்.
வேலம்மாள் பெரும் அதிர்வுடன் நெஞ்சில் கை வைத்தபடி, “அபி!” என்று காற்றாகிய குரலில் அழைக்க,
உணர்ச்சியற்ற முகத்துடன் அன்னையைப் பார்த்தவன், “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் சொன்னேனே! நீங்க என்னவளுக்கு அப்பா இல்லாம செய்ததுக்கு தண்டனையா இனி எனக்கு அம்மா இல்லை” என்றான்.
“அவ தான் சொல்றானா நீயும் அப்படியே சொல்றியே! வீரா இறக்க நான் காரணம் இல்ல.. இவ லட்சணம்..” என்றவரின் பேச்சை இடையிட்டு,
“போதும்மா.. நீங்க எப்படி தான் விதவிதமா கலர் சுத்தினாலும் பொய் உண்மை ஆகிடாது” என்றவன் அடக்கப்பட்ட கோபத்துடன், “இனி ஒரு முறை என் மனைவியை தப்பா பேசினீங்க! நீங்க வேற அபியை பார்ப்பீங்க” என்று எச்சரித்தான்.
வேலம்மாள் பெரும் அதிர்வுடன் நிற்க,
பனிமலர் உதட்டோர வளைவுடன், “கிளம்புங்க.. காத்து வரட்டும்” என்றாள்.
உடனே அவர் கோபத்துடன், “அவன் உன் புருஷன் இல்ல, கூட்டிட்டு போனு சொல்லிட்டு இப்போ என்னடி சொந்தம் கொண்டாடுற?” என்று எகிறினார்.
நக்கலாக சிரித்தவள், “இப்பவும் என் முடிவில் மாற்றம் இல்லை.. நான் சொன்னது உங்க மகனோட நிலைபாட்டை மட்டும் தான்” என்றாள் தோள் குலுக்கியபடி.
“அப்போ உனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்றியா?”
அவள் பதில் கூறும் முன் அவசரமாக, “அம்மா!” என்று அபியுதித் எச்சரிக்கும் குரலில் அழைக்க,
“உனக்கு வேணா அம்மா தேவை இல்லாம இருக்கலாம், ஆனா எனக்கு என் மகன் வேணும்” என்றவர் பனிமலரைப் பார்த்தார்.
அவளோ இகழ்ச்சி கலந்த நக்கல் பார்வையுடன், “உங்க மகன் வேணும்னு போராடுறீங்களா, இல்ல இந்த பனிமலரை ஜெய்க்க போராடுறீங்களா?” என்றாள்.