பனிமலர், “அம்மா!” என்று கத்த,
வேலம்மாள், “என்னங்கடி ஆத்தாலும் மவளும் நாடகம் போட்டு என் மகனை உங்க பக்கம் இழுக்குறீங்களா! நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது” என்று கத்தினார்.
அவரை கண்டுகொள்ளாத நெல்லைவடிவு மகளிடம், “யெ முடிவ சொல்லிபுட்டேன்.. பொறவு ஓ இஷ்டம்” என்று கூறிவிட,
அவள் கோபத்துடன் அவனை முறைக்க, அவனோ வெற்றிப் புன்னகையை உதிர்த்தான்.
அதில் இன்னும் கோபம் கொண்டவள், “எதுக்கு சும்மா இளிச்சசுட்டே இருக்கீங்க? யாரும் உங்களுக்கு சிறந்த இளிச்சவாயன்னு விருது கொடுக்கப் போறாங்களா?” என்று கேட்டாள்.
சத்தமாக சிரித்தவன் ஆங்கிலேயர் பாணியில் கையை மடக்கி தலை வணங்குவது போல் லேசாக தலையை தாழ்த்தி நிமிர்த்தியபடி, “புன்னகை மன்னன் என்ற பட்டதிற்கு மிக்க நன்றி இளைய ராணி” என்றான்.
மகனின் செயலில் வேலம்மாள் பனிமலரை துவேசப் பார்வைப் பார்க்க, அவரைக் கண்டுகொள்வோர் தான் யாரும் இல்லை.
அபியுதித்தின் செயலில் இன்னும் கடுப்பான பனிமலர் உதட்டோர நக்கல் புன்னகையுடன், “கிளினிக்கில் ஈ ஓட்டிட்டு இருக்கிறீங்களா! அதான் என் கூட ஒட்டிக்க வாரீங்களா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற,
அவனோ விஷமப் புன்னகையுடன், “ஒட்டிக்கலாமா?” என்று கேட்டு கண்ணடித்தான்.
அவளோ இரு விரல்களை அசைத்தபடி, “ஒட்ட நறுக்கிடுவேன்” என்று மிரட்டினாள்.
‘அடிப்பாவி!’ என்பது போல் அவளை அவன் பார்க்க,
நக்கல் புன்னகையுடன், “என்ன டாக்.டர்ர்ர்ரு! டர் ஆகுதா!” என்றாள்.
“நான் பிஸியோதெரபிஸ்ட்மா”
“இங்கன நீங்க டாக்டர் தான்.. படிப்பிலும் பி.எச்.டி முடிச்சிட்டீங்க தானே! டாக்டர் சொன்னா தப்பில்லை” என்றவள், “ஆனா நான் உங்களை அப்படி சொல்லலையே!” என்றாள் புருவத்தை உயர்த்தி இறக்கியபடி.
அவன் புரியாமல் பார்க்கவும், உதட்டோர கிண்டலான சிரிப்புடன், “எப்படி பிரிச்சு சொன்னேன்!” என்றாள்.
‘டாக்.டர்ர்ர்ரு’ என்று மனதினுள் சொல்லிப் பார்த்தவன் அதிர்வுடன், “அடிப்பாவி!!!!” என்றான்.
அவள் விரிந்த புன்னகையுடன், “புரிஞ்சுடுச்சு போல!” என்றாள்.
‘உன்னோட இந்த சிரிப்புக்காக எதுவாவும் இருக்க நான் தயார்’ என்று மனதினுள் கூறிக் கொண்டாலும் தன்னவளின் மாற்றத்திலும், அடாவடி பேச்சிலும் மனம் வருந்தியவன் தன்னை மீறி, “இது நீ விளையாட்டா தான் சொன்னனு தெரியும்.. ஆனாலும் நீ ரொம்ப மாறிட்ட டியு-ட்ராப்(dewdrop-பனித்துளி)” என்றான்.
அவன் எப்பொழுதும் அழைக்கும் அந்த பிரத்தியேக அழைப்பில் சட்டென்று இறுகியவள், “மாற்றியது நீங்க தான்” என்றாள்.
அவனும் சட்டென்று சுதாரித்து மெல்லிய புன்னகையுடன், “உன்னோட இந்த மாற்றத்துக்கு என்னை சேர்ந்தவங்க காரணமா இருக்கலாம்.. ஆனா மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது.. உன்னை பழையபடி மாற்ற என்னால் முடியும்..” என்றவன் அவளது கண்களை ஆழ்ந்து நோக்கியபடி அழுத்தமான குரலில், “என்னால் மட்டும் தான் முடியும்” என்றான்.
அதற்கு அவள் பதில் சொல்லும் முன்,
“அபி!” என்று சற்றே குரலை உயர்த்தி அழைத்த வேலம்மாள் பொருமலுடன், “இப்படி கூடவே இருந்து ஏமாத்திட்டியே! இதை உன் கிட்ட நான் எதிர்பார்க்கலை” என்றார்.
“எதிர்பார்த்து இருக்கணும்” என்றவன், “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்றதோடு முடித்துக் கொண்டான். அப்பொழுதும் அவன் முகத்தில் சிறு மென்னகை குடிகொண்டிருந்தது தான், ஆனால் அதன் பின் மறைந்து இருந்த வலியை அவர் உணரவில்லை.
“போயும் போய் இந்த சிறுக்கிக்காக அம்மாவை விலக்குறியா?”
சட்டென்று கோபத்துடன் அன்னையை முறைத்தவன், “பார்த்து பேசுங்கம்மா.. மலர் இந்த ஊரோட தலைவி” என்றான்.
“உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. ஒரு வேலைக்காரியோட மகளும் வேலைக்காரி தான்” என்று அவர் முடித்த நொடி,
கீழே இருந்த இளைஞர் பட்டாளம், “ஏய்!” என்றும்,
“ஆர பாத்து யன்ன வார்த்த சொல்லுற?
உசுரோட ஊரு போயி சேர மாட்ட!” என்றும் கத்த,
ஒருவனோ, “எட்றா அந்த வீச்சருவாள” என்று வேற கூற, வேலம்மாள் சற்று பயந்து தான் போனார்.
ஆனால் பயத்தை வெளியே காட்டாமல் அவர்களை முறைக்கவே செய்தார்.
ஒரு பெரியவர், “பாத்து பேசு வேலம்மா.. வீரையன் தங்கச்சிங்கிற ஒரே காரணத்துக்காகதே அமைதியா இருக்கோம்.. ஆனா யங்க பொறுமைக்கு ஒரு யெல்ல வுண்டு” என்றார்.
பனிமலர், “வுடுங்க ஐயா.. சூரியனைப் பார்த்து குரைக்கிற நாயை கண்டுக்கிடுறோமா என்ன!” என்று கூற,
“யாரை பார்த்துடி நாய்னு சொல்ற! பார்த்து பேசு.. இல்ல பேசுற நாக்கை இழுத்து வச்சு அறுத்திடுவேன்!” என்று வேலம்மாள் எகுற,
மீண்டும் இளைஞர் பட்டாளம், “ஏய்!” என்றும்,
“எங்க! அக்கா கிட்டக்க வா பார்க்கலாம்!” என்றும்,
“அதுக்கு மொத ஓ ஒடம்புல கை இருக்கணுமே!” என்றும்,
“ஒரு அடி மின்ன வெச்சா ஒரே சீவா சீவிபுட மாட்டோம்!” என்றும் ஒரே நேரத்தில் எகிறிக் கொண்டு முன்னேற, ஒற்றை பார்வையில் அவர்களை அடக்கிய பனிமலர் வேலம்மாள் பக்கம் திரும்பி,
அலட்டிக் கொள்ளாமல், “யே கை மட்டும் பூ பறிச்சுட்டு இருக்குமா?” என்றாள், பின், “தப்பு தான்.. நாய் அன்பும் பாசமும் கொண்டது, நன்றி உள்ளதாச்சே! உங்களை போய் நாய் கூட ஒப்பிடலாமா?” என்றாள்.
பனிமலரின் கூற்றில் இளைஞர்கள் சத்தமாக சிரித்தனர். அதில் அவமானமாக உணர்ந்த வேலம்மாள் பெரும் கோபம் கொண்டாலும் இளைஞர்களின் ஆவேசத்தில் அச்சம் கொண்டவராக அவளை முறைக்க மட்டுமே செய்தார்.
அந்த பெரியவர் பனிமலரிடம், “செரி தாயி.. இப்ப முடிவா யன்ன சொல்லுற?” என்று கேட்டார்.
“நாதே அப்பவே இவுரு கூட வாழ விருப்பமில்லனுட்டு சொல்லிபுட்டேனே ஐயா” என்று பனிமலர் கூற,
அவரோ, “இத ஓ கழுத்துல தாலி ஏற மின்னல நீயி சொல்லி இருக்கோணும்” என்றார்.