மேடையில் நின்றிருந்த பனிமலர் தனது ஆளுமையான குரலில், “என்னிய பத்தி தெரிந்த, என்னிய நம்புற யெ ஊர் மக்களுக்கு எந்த வித வெளக்கமும் தேவயில்ல.. எனக்கு சம்பந்தம் இல்லாத ஒங்களுக்கு எந்த வெளக்கமும் கொடுக்க வேண்டிய அவுசியம் எனக்கில்ல.. நீக யெல்லாரும் அப்புடியே ஒங்கூருக்கு கெளம்புக” என்றாள்.
அபியுதித் எதற்கும் அசராத அவளது ஆளுமையை அணு அணுவாக ரசித்துக் கொண்டு இருக்க,
மைத்ரேயி, “மலர் செம.. இல்லணா!” என்றிருந்தாள்.
தன்னவளை ரசித்து பார்த்தபடி, “மலர் இல்லை, அண்ணி” என்று தங்கையை திருத்த,
“இந்த ரணகளத்திலும் உனக்கு குதூகலம் கேட்குதோ!” என்றாள்.
“டெபனெட்லி!” என்றபடி தங்கையைப் பார்த்து கண்ணடித்தவன் அடுத்த நொடியே பார்வையைப் பனிமலர் பக்கம் திருப்பி இருந்தான்.
ஆளவந்தான் இடது புறத்தில் இருந்த தனது ஆட்களைப் பார்த்து சமிக்கைச் செய்ய,
ஒருத்தன், “அது எப்புடிங்க! ஒங்க மேல தப்பு இல்லனாக்க நிரூபிக” என்று கூற,
இன்னொருத்தன், “அதான! இல்லனாக்க இந்த வெசயம் வெளிய பரவினா, அடுத்து ஆரும் ஒங்கள கட்டிக்கிட வர மாட்டான்க” என்றான்.
நெல்லைவடிவு, “அய்யோ!” என்றபடி நெஞ்சில் கைவைத்து கதறி அழ, பனிமலர் வேகமாக சென்று அன்னையைத் தாங்கினாள்.
ஒரு மூதாட்டி, “நீ ஏ தாயி வெசனப் படுற! ஏதோ ஒரு கிறுக்கன் சொல்லுறது நடந்துபுடுமா யென்ன! நம்ம தங்கத்துக்கு ஏத்த மவராசன் சீமையில இருந்து வருவான்” என்று நெல்லைவடிவைத் தேற்றினார்.
இது தான் சமையம் என்று ஆளவந்தான் தான் அவளை திருமணம் செய்துக் கொள்வதாக கூற வாயைத் திறக்கப் போக, அவனுக்கு பின்னால் இருந்த இருவர் அவனது வாயை மூடி இழுத்துச் சென்றனர்.
அபியுதித் சுப்பையாவைப் பார்த்து கண்காட்டவும்,
உரத்த குரலில், “நா ஏன்லே அசல்ல மாப்புள்ள தேடனும்! யெ மகவழி பேரன் அபியுதித், யெ மவென் வழி பேத்தி பனிமலரை இதே மேடையில, இப்பவே கட்டிக்கிடுவான்” என்ற சுப்பையா அவனைப் பார்த்து, “யென்னடா பேராண்டி?” என்று முடித்தார்.
அவன் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்தபடி, “மலருக்கு சம்மதம்னா, எனக்கும் சம்மதம் தாத்தா” என்றான்.
“அபி” என்று கத்தியபடி வேலம்மாளும்,
“நோ.. இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்” என்று கத்தியபடி வைரலட்சுமியும் வர,
பனிமலர் பேசும் முன் அவளைப் பார்த்தபடி சுப்பையா, “யெ சொல்ல, வாக்க, யெ பேத்தி யென்னிக்கும் மீற மாட்டா” என்றிருந்தார்.
தாத்தாவை முறைத்தவள் அடுத்து அபியுதித்தை பார்வையால் சுட்டெரிக்க, அவனோ வசீகர புன்னகையுடன் கண்ணடித்தான்.
பனிமலரின் மனநிலையை நன்றாக அறிந்திருந்த ஆவுடையப்பனுக்கு இத்திருமணத்தில் சிறிதும் உடன்பாடு இல்லை என்றாலும் சபையில் பெரியவரை எதிர்க்க மனமின்றி அமைதி காத்தார்.
வேலம்மாள் வெறி வந்தவர் போல், “இந்த கல்யாணத்துக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்” என்று கத்த,
அன்பரசு, “பையானோட அப்பா நான் முழு மனசுடன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்” என்றார்.
வேலம்மாள் அதிர்வும் கோபமுமாக கணவரைப் பார்க்க, அவரோ இவரை கண்டுகொள்ளவே இல்லை. மைத்ரேயி கூட அதிர்வுடன் தான் தந்தையை பார்த்தபடி இருக்க, அபியுதித்தோ அதே மென்னகையுடன் தந்தையை கனிவுடன் நோக்கினான்.
“பொறவென்ன! வேண்டாதவங்கள தொரத்திபுட்டு ஆக வேண்டியத பாருங்கப்பா” என்று ஒரு பெரியவர் குரல் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டினர் வெளியேற ஆரம்பித்தனர். அந்த மாப்பிள்ளை பனிமலரைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே செல்ல, அவளது பார்வையோ அபியுதித்தை எரித்துக் கொண்டு இருக்க, அவனோ தனது சிரிப்பினால் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு இருந்தான்.
வேலம்மாள், “என்ன! எல்லோரும் ஒன்னு சேர்ந்துட்டு இந்த சிறுக்கிய என் வீட்டு மருமகளாக்க பார்க்கிறீங்களா! நான் இருக்கிறவரை அது நடக்காது” என்று கத்தினார்.
நெல்லைவடிவை தேற்றிய மூதாட்டி, “அப்போ இருக்காத, கெளம்பு.. ஊரே ஒன்னு கூடி இந்த கலியாணத்த ஜாம் ஜாமுனுட்டு நடத்த போவுது.. யென்ன நா சொல்லுறது செரி தான!” என்று ஊராரைப் பார்த்து கூற,
ஊர் மக்கள், “ஆமா” என்றும், “ஜமாயிச்சிபுடுவோம்ல” என்றும் கத்தினர்.
வேலம்மாள் ஒன்றும் செய்ய முடியாமல், “அபி” என்று அழைக்க,
அவன் மென்னகையுடன் அவரைப் பார்த்து, “நடக்கிறது நடக்கட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்மா” என்றான்.
இதற்கு மேல் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்பதை புரிந்து அவர் அமைதியானாலும் கடைசி முயற்சியாக லீலாவதியைப் பார்த்தார்.
லீலாவதி, “அது எப்படி! என் மகளைத் தான் அபி கட்டுவான்னு இவ எனக்கு வாக்கு கொடுத்து இருக்கா” என்று பிரச்சனையை ஆரம்பித்தார்.
ஆனால் அதை முளையிலேயே கிள்ளி எரிவது போல் சுப்பையா, “கட்டிக்க போறவென் வாக்கு கொடுத்தானா?” என்று கேட்டார்.
லீலாவதி, ”அது..” என்று இழுக்க,
அவர், “அப்போ யவ சொன்னாளோ, அவ கிட்ட ஓ பஞ்சாயத்த வெச்சுக்கிடு” என்று முடித்துவிட்டார்.
வைரலட்சுமி உருக்கமான குரலில், “தாத்தா நானும் உங்க பேத்தி தானே! சொல்லப்போனா, எனக்கு தான் அதிக உரிமை.. இவளை விட மூப்பு, உங்க மூத்த பையனோட மகள்.. நான் தான் அபி மாமாவை கட்டிக்குவேன்” என்றாள்.
“தாத்தா! இந்த வார்த்தலா ஒனக்கு தெரியுமுனுட்டு இப்பதேன் யனக்கு தெரியுது.. இந்த கிழவன் இப்பதே ஓ கண்ணுல ஆம்புடுறேனா! பத்து வருஷமா இந்த பாசத்த புல்லு மேய வுட்டு இருந்தியாக்கும்?” என்று நக்கலாக கேட்ட சுப்பையா, “ஓ பசப்பு வேலய என்னாண்ட காட்டாத.. ஓ அம்மைக்கு சொன்னதுதே ஒனக்கும்.. அபிக்கு ஓ மேல நெனப்பு இருந்தா மட்டும் வாய தொர” என்று கறாராக முடித்துவிட்டார்.
[கதாபாத்திரங்களின் உறவுமுறை பற்றிய விளக்கம்:
சுப்பையா பாப்பாத்தியம்மாள் தம்பதியர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் காளிங்கன், அடுத்து வேலம்மாள், அடுத்து கடைக்குட்டி வீரையன்.
காளிங்கன் பண்ணையார் சுந்தரலிங்கத்தின் தங்கை லீலாவதியை திருமணம் செய்திருக்க, அவர்களுக்கு தங்கதுரை, வைரலட்சுமி என்று இரு பிள்ளைகள். 33 வயது தங்கதுரைக்கு திருமணமாகி மூன்று வயதில் மகள் இருக்க, வைரலட்சுமிக்கு 28 வயது.
வேலம்மாள் அன்பரசு தம்பதியர்களின் பிள்ளைகள் 32 வயது அபியுதித் மற்றும் 24 வயது மைத்ரேயி.
வீரையன் நெல்லைவடிவு தம்பதியரின் ஒற்றை மகள், 27 வயது பனிமலர்.
பண்ணையார் சுந்தரலிங்கம் ஜெகதம்பாள் தம்பதியருக்கு ஒற்றை மகன், 29 வயது ஆளவந்தான்.
நெல்லைவடிவின் அண்ணன் ஆவுடையப்பனின் மனைவி வேணி. அவர்களின் ஒற்றை மகன், 26 வயது செந்தூரன்.]
பனித்துளி குளிர காத்திருப்போம்…