சுடும் பனித்துளியே! ~ துளி 2.3

“ஒன்னுமில்ல.. எங்க சொந்தத்துல ஒருத்தர் தவறிட்டாராம்” என்று சமாளித்தவர் வேலம்மாள் திரும்பியதும்,

“ஓ புத்தி என்ன புல்லு மேய போயிட்டுதாலே! அந்த எடுபட்ட சிறுக்கிய போய் கல்யாணம் கட்டப் போறேனுட்டு சொல்லுற?” என்று குரலை தாழ்த்தி சீறினார்.

ஓ மருமவென் அம்புட்டு வெவரம் இல்லாதவனா! அவ கழுத்துல நா கட்டப்போறது மூக்கணாங்கயிறு.. அவெளோட திமிர ஒட்டுக்கா அடக்கி ஆளோனும்.. அவெ ஆட்டத்த நிறுத்தி, நம்ம குடும்ப மருவாதய திருப்பப் போறேன்”

“ஓ! அப்புடி வாரியா நீ! இதுவும் நல்ல ஐடியா தான்லே” என்று அவர் புன்னகையுடன் பாராட்ட,

அவனோ, “இந்த ரோசனய சொன்னதே அந்த அபிதேன்.. ஆனா இப்போ கமுக்கமா போய் எதிரி கூட்டதுக்கிட்ட இழிச்சிட்டு ஒக்காந்து இருக்கியான்” என்றான்.

“என்னடா சொல்ற?”

“ரெண்டு நாளு மின்ன, போன போட்டு அவென்தே சொன்னியான்.. அத நம்பி  நானும் சில திட்டங்கள போட்டு வெச்சு இருக்கேன்.. ஆனா அவென், இதில் தனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி காட்டி நல்ல பேரு யெடுக்க பார்க்கிறானோனுட்டு சந்தேகமா இருக்கு”

“அவனுக்கு நல்ல பெயர் கிடைச்சா என்ன! கெட்ட பெயர் கிடைச்சா நமக்கென்ன! நமக்கு வேண்டியது நடந்தா செரி”

வில்லத்தனமான சிரிப்பை உதிர்த்தவன், “அப்புடி யெல்லா வுட முடியாது அயித்த.. நா ஆடப் போற ஆட்டமே அவென வெச்சுத்தே” என்றான்.

அவர் ‘என்ன?’ என்பது போல் பார்க்க,

அவரைப் பார்த்து சிரிப்புடன், இந்தா ஆரம்பிக்குது பாரு” என்றவன் கூட்டதில் இருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து தலை அசைக்க, அவர் வேகமாக மாப்பிள்ளையின் அன்னையிடம் சென்று ஏதோ பேசத் தொடங்கினார்.

அதன் விளைவாக, முகூர்த்த புடவை அணிந்து பனிமலர் வெளியே வந்த போது அந்த இடமே கலவரமாக இருந்தது.

ஆளாளுக்கு பேசி சண்டை போட்டுக் கொண்டு இருக்க, நெல்லைவடிவு அழுது கொண்டு இருக்க, அதைப் பார்த்து வேலம்மாளும் லீலாவதியும் குரூரமாக அகமகிழ்ந்து புன்னகைத்து கொண்டிருந்தனர்.

சுப்பையா கலக்கத்துடன் இருக்க, அவரது கையை பற்றிய அபியுதித் கண்களை மூடி திறந்தான்.

மைத்ரேயி சிறு பதற்றத்துடன், “என்ன அண்ணா அமைதியா இருக்கிற?” என்று வினவ,

அவனோ சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “நான் என்ன செய்யணும்?” என்றான்.

“அவங்க உன்னையும் சேர்த்து தான் கேவலப்படுத்துறாங்க”

“ஸோ வாட்?”

அவள் அதிர்வுடன் பார்க்க,

அவனோ மென்னகையுடன், “எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் செய்துட்டு! இப்போ உன் அண்ணி வந்து ஷார்ட் அண்ட் கிரிஸ்ப்பா முடிச்சு வைப்பா பார்” என்றான்.

அவள் வாயை திறந்தபடி அதிர்வுடன் அவனை நோக்க, அவளது நாடியில் கைவைத்து வாயை மூடியபடி கண்ணடித்தான்.

அப்பொழுது சரியாக, “நிறுத்துங்க” என்று பனிமலர் கத்திய கத்தலில் இடமே அமைதியானது.

பின், “இங்கயென்ன நடக்குது?” என்று அவள் வினவ,

மாப்பிள்ளையின் அன்னை, யெல்லாம் நீயி அடிச்ச, அடிக்கிற கூத்துதேன் சந்தி சிரிச்சிகிட்டு இருக்கு” என்றவர், “பேரும் மதிப்பும் இருக்க பெரிய குடும்பம்னுட்டு சொல்லுறது யெல்லா, சும்மானாக்க பூசி மொழுகுறதுதே போல! இங்கன வந்தாக்க தான இவுக மௌசு தெரியுது! பொழப்பு சிரிப்பா சிருக்குதே!” என்று நீட்டி முழக்கினார்.

மாப்பிள்ளை அவசரமாக, செத்த சும்மா இரு ஆத்தா” என்றுவிட்டு பனிமலரைப் பார்த்து, தப்பா யெடுத்துக்காதீக.. ஆத்தா வெவரம் இல்லாம ஒளறுது.. நீங்க வாங்க” என்று அழைத்தான்.

அவரோ, ஆருல ஒளறுறது! நா ஒன்னு இல்லாத பொல்லாதத சொல்லல.. நெருப்பு இல்லாம புகையாதுல! இதையும் மீறி, மானங்கெட்டுப் போய் இவள நீயி கட்டிக்கிட்ட! அடுத்த நிமிஷம் நா உத்தரத்துல தொங்கிபுடுவேன்” என்று கத்தினார். 

அவள் தனது தாய்மாமன் மகன் செந்தூரனை நோக்க,

கோபத்துடன், ஒன்னியவும் அபி அண்..” என்று ஆரம்பித்தவன் அவளது தீ பார்வையில் வார்த்தையை விழுங்கியபடி அபியுதித்தை சுட்டி காட்டியபடி, “இவுரையும் ஒன்னியவும் சேர்த்து வெச்சு தப்பு தப்பா பேசுறாயிங்க.. அடுத்து..” என்று ஒரு நொடி நிறுத்தி பின் சற்றே கலங்கிய விழிகளுடன், யென்னியவும் கூட சேர்த்..” என்று கூறும் பொழுதே கையை உயர்த்தி அவனை தடுத்து இருந்தாள்.

அபியுதித்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி கூட்டத்தினரைப் பார்த்தவள், இவுக சொல்லுற குற்றசாட்டை நம்புறவெக இடதுபுறமும், நம்பாதவெக வலது புறமும் வாங்க” என்றாள்.

“ஏய்! யென்ன பேசி..” என்று பேச ஆரம்பித்த மாப்பிள்ளையின் அன்னையை முறைத்தவள், “நீக பேசினப்ப நானு அமைதியா தான கேட்டுகிட்டு இருந்தேன்.. இப்போ நீக..” என்றபடி தனது உதட்டின் மீது ஆள் காட்டி விரலை வைத்தாள்.

அவளது ஆளுமையில் வாயை மூடிக் கொண்டவர் அமைதியாக சென்று தனது சொந்தங்களுடன் சேர்ந்து நின்றாலும், மனதினுள் அவளை திட்ட தவறவில்லை. 

மாப்பிள்ளையைத் தவிர அவனது சொந்தங்கள் அனைவரும் இடதுபுறம் நிற்க, லீலாவதி தனது கணவர் காளிங்கன் மற்றும் நாத்தனார் வேலம்மாளையும் இழுத்துக் கொண்டு இடதுபுறம் சென்று நின்று கொண்டார். லீலாவதியின் மகள் வைரலட்சுமி, மகன் தங்கதுரை மற்றும் அவன் மனைவி, குழந்தையும் அதில் அடக்கம். சுந்தரலிங்கமும் அவரது ஆட்கள் சிலரும் இடதுபுறம் நிற்க, அவரது மனைவியும் மகனும்(ஆளவந்தான்) வலதுபுறம் ஊருடன் சேர்ந்து நின்றிருந்தனர். அபியுதித், அன்பரசு மற்றும் மைத்ரேயி சுப்பையா அருகே தான் நின்றிருந்தனர்.

சுந்தரலிங்கம் மகனை அதிர்ச்சியுடன் பார்க்க, லீலாவதி அண்ணனுக்கு ஆளவந்தானின் திட்டத்தை மெல்லிய குரலில் விளக்கினார்.

வேலம்மாள், “அதுக்காக, என் பையன் பெயரை ஏன் அந்த சிறுக்கி கூட இழுத்து விட்டான்?” என்று கோபத்துடன் மெல்லிய குரலில் சண்டையிட,

லீலாவதியோ, “அதுக்கு தானே ஆதாரம் இருக்குது! என்ன பார்க்கிற! வீரையன் சாவுக்கு அதான் காரணம்னு சொல்லித் தான் அந்த அம்மாவை நம்ப வச்சு இருக்குது” என்றார்.

“அதுக்காக!” என்று வேலம்மாள் இழுக்க,

லீலாவதியோ, “இப்ப என்ன! அபி பெயர் கெட்டு போகுமேனு கவலப்படுறியா? இங்கே நடக்கிறது திருநெல்வேலியில் தெரியப் போறது இல்லை.. எப்படியும் லஷ்மி தான் அவனை கட்டிக்க போறா.. பொறவென்ன!” என்றதும், அரை மனதுடன் ‘சரி’ என்பது போல் தலையை ஆட்டினார்.

error: Content is protected !!