“நம்ம சின்னமா சொல்லுததும் செரி தானப்பா!”
“ஹும்ம்.. வாஸ்துவமான பேச்சுதேன்”
“அதேன் செரி.. அப்புடியே செஞ்சு புடுவோம்லே”
“சின்ன புள்ளயா இருந்தாலும் வெவரமா பாயிண்ட்டா பேசுதே!”
“இன்னும் என்னலே சின்ன புள்ளனுட்டு! ஒரு வருஷமானாக்க வோட்டு போடுற வயசு வந்துபுடுமே!”
“அதான! வீரையன் வாரிசு சோடை போவுமா!”
“சின்னதுல இருந்து ஐயா கூடவே இருக்கவுகளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன!” என்று பல ஆதரவு குரல்கள் எழவே சுந்தரலிங்கம் மற்றும் ஆளவந்தானின் எதிர்ப்பு குரல் அமிழ்ந்து போனது.
அதன் பிறகு அவள் தாத்தா சுப்பையா ஊர் தலைவராக இருக்க, இவள் கல்லூரி படிப்புடன் சேர்த்து ஊர் வளர்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டாள். சிறு பெண் என்று சொல்ல முடியாத அளவிற்கு, அனைவரும் பிரம்மிக்கும் வகையில் தான் அவளது ஆக்கபூர்வமான செயல்கள் இருந்தது. தந்தையின் இழப்பில் துவண்டு போகாமல், தனது வலியை வைராக்கியமாக மாற்றி ஆளுமையுடன் நிமிர்ந்து நின்றாள். அதன் விளைவாக, ஒரு வருடம் கடந்த நிலையில், ஊர் மக்கள் அவளையே தலைவியாக தேர்ந்தெடுத்தனர்.
கல்லூரி ஆசிரியர்கள் மூலம் எந்த காரியத்திற்கு யார் யாரை சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டவள், கல்லூரி நண்பர்கள் மற்றும் ஊரின் இளவட்டங்கள் உதவியுடன் வேலைகளை செய்தாள். தந்தையின் பெயரை சொல்லியே, பல இடங்களில் பல வகையில் நேர்மையான முறையிலேயே காரியத்தை சாதித்தாள். அனைத்திலும் அவளுக்கு உறுதுணையாக இருந்தது அவளது தாய்மாமன் ஆவுடையப்பன்.
தற்போது, வீரையன் இறந்து 10 வருடங்கள் கடந்த நிலையில், ஊரை நன்றாகவே மேம்படுத்தி இருக்கிறாள். ஆம்! சுற்று வட்டாரத்திலேயே, சுத்தமான தரம் நிறைந்த விலை குறைந்த பொருட்களுக்கு பெயர் போனது பூங்காவனத்தூர் என்ற பெயரை உருவாக்கி இருக்கிறாள்.
இயற்கை விவசாயத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற தந்தையின் லட்சியத்தை நிறைவேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்தாள். மற்றவர்கள் சிறு தொழில் செய்ய உதவியதோடு, மரச்செக்கு எண்ணெய்களை மட்டுமே தயாரிக்கவும் உபயோகிக்கவும் வலியுருத்தினாள்.
ஆற்று நீரை சுத்தமாக வைக்க சிலவற்றை கடைபிடித்தாள். வீட்டு உபயோகதிற்கு தண்ணீர் எடுக்கும் இடம், குளிக்கும் இடம், துவைக்கும் இடம், என்று பிரித்தாள். வழலைக்கட்டி(soap) தாள், பீடி வெண்சுருட்டு(cigarette) துண்டுகள், தண்ணீர் பொத்தல் போன்ற பொருட்களை ஆற்று நீரிலோ கரையிலோ போட்டால் அபராதம் விதித்து, அவற்றை நடைமுறைபடுத்த ஆற்றங்கரையில் ஆட்களை காவலுக்கு போட்டாள்.
தந்தை நிறுவிய மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்களை கொண்டு வந்திருந்தாள். எட்டாவது வரை மட்டுமே இருந்த பள்ளியில் 12வது வகுப்பு வரை கொண்டு வந்திருந்தாள். கட்டாய கல்வி கொண்டு வந்ததோடு, கணினி மையமும் கொண்டு வந்திருந்தாள். இப்படி படிபடியாக ஊரை வல்லரசாக மாற்றி இருக்கிறாள்.
விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் ஊரினுள் இயற்கை பொருட்கள் கிடைக்கும் பல் பொருள் அங்காடி, நாட்டு மாட்டு பண்ணை, தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, கலை கூடம், நாட்டு மருத்துவம் போன்றவற்றை நிறுவியவள்,
ஊரை சுற்றி மேல்நிலை பள்ளி, கணினி மையம், மருத்துவமனை, பசும் பால் உணவு பொருட்கள் தயாரிக்கும் ஆலை, மரச்செக்கு எண்ணெய் ஆலை, ரசாயனம் கலக்காத இயற்கை முறையிலான சாயம் உபயோகிக்கும் பருத்தி ஆடை ஆலை என்று இன்னும் சில ஆலைகளை நிறுவி இருந்தாள். அதிலும் ஆலைகளின் கழிவுகளை இயற்கையை பாதிக்காத வகையில் சரியான முறையில் வெளியேற்றும் முறைகளையும் பின்பற்றி இருந்தாள்.
அனைத்திலும் இவளது பங்கே அதிகம் என்றாலும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இளவட்டதை பங்குதாரராக நியமித்து, தான் மட்டும் வளராது, தன்னுடன் சேர்த்து மற்றவர்களையும், முக்கியமாக ஆண் பெண் பேதமின்றி இளைய சமுதாயத்தையே தூக்கி நிறுத்தியதோடு ஊரையே மேம்படுத்தி இருந்தாள்.
இன்று….
முகூர்த்தம் காலை 6 – 7.30 என்பதால், வைகறை 3 மணி அளவில் பனிமலரை எழுப்பிய அவளது அன்னை நெல்லைவடிவு அகம் நிறைந்த மந்தகாச புன்னகையுடன் அவளது முகத்தை திரிஷ்டி கழிப்பது போல் செய்து, “ராஜாத்தி” என்றவர், “வெரசா கெளம்புடா தங்கம்.. இன்னு ஒன்னர மணி நேர செண்டு பொண்ணழைக்க மாப்புள வூட்டுல இருந்து வந்துருவாக” என்றார்.
அன்னைக்காக மட்டும் உதட்டின் ஓரம் சிறு மென்கீற்றை உதிர்த்தவள் எழுந்து அறையில் இருந்த குளியலறையினுள் சென்றாள்.
மகள் சென்றதும் அவ்வறையில் இருந்த கணவரின் புகைப்படத்தை பார்த்தவர், ‘சாமி! மவராசா! போறப்ப நம்ம புள்ளயோட சிரிப்பையும் சந்தோசத்தையும் சேத்து எடுத்துட்டு போயிட்டியளே! இனியாவது அவெ வாழ்க்கையில வெளக்கேத்தி வையிக.. ஒங்கல நம்பிதே இருக்கேன்’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டார்.
அதற்குள், “அத்தாச்சி!” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கவும்,
“தோ வாரேன்” என்று குரல் கொடுத்தவர் மகளுக்கு வேண்டிய ஆடை மற்றும் அணிகலன்களை எடுத்து வைத்துவிட்டு வேகமாக வெளியேறினார்.
அதன் பிறகு நிற்க நேரம் இல்லாமல் தான் சுழன்று கொண்டு இருந்தார்.
காலைகடன்களை முடித்து குளித்துவிட்டு வந்த பனிமலர் மேசை மீது இருந்த குளம்பியை(coffee) எடுத்துக் கொண்டு திறந்து இருந்த ஜன்னல் அருகே சென்றாள். நிலவொளியில் மெல்லிய தென்றலின் இசைக்கு ஏற்ப தென்னங்கீற்று அசைந்தாடிய காட்சி பார்க்கவே ரம்மியமாக இருந்தது. ஆனால் அது அவளது மனதை குளிர்விக்கவுமில்லை, பதியவுமில்லை. நிலவு மங்கையை வெறித்தபடி குளம்பியை பருகிய மங்கையவளின் மனதினுள் பல எண்ண அலைகள்.
பதினொரு வயது பனிமலர் சிரிப்புடன் முற்றதில் அமர்ந்திருந்த வீரையன் கழுத்தை பின்னால் இருந்து கட்டியபடி இருக்க, அவரும் மகளின் கையை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் ஆடியபடி வேலையாளிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
வேலையாள் அகன்றதும் வீரையனின் அன்னை பாப்பாத்தியம்மாள், “என்னப்பு இது! இன்னு சின்ன கொழந்தயா இவெ.. ஒன்னு ரெண்டு வருசம் போனாக்க குத்த வெச்சிடுவா.. செத்த வெலகியிருக்க பழக்கு அப்பு” என்றார்.
அவரோ புன்னகையுடன், “யெ ராஜாத்தி எப்பயும் எனக்கு கொழந்ததே ஆத்தா” என்றார்.