
துளி 1
பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம்.
பூங்காவனத்தூர் கிராமம் – திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலைக் கொண்ட அருமையான நவீன கிராமம் தான் பூங்காவனத்தூர்.
அனைத்து கிராமங்களுக்கும் முன்னோடியாக இருக்கும் இந்த பூங்காவனத்தூரில் இயற்கை விவசாயமும், சுத்தமான பசும்பாலும் மரச்செக்கு எண்ணெய்களும், கலப்படமில்லாத தானியங்களும் பொருட்களும், சிறந்த பள்ளியும் மருத்துவமனையும், இயற்கை வளத்தை பாதிக்காத வகையில் விஞ்ஞான வளர்ச்சியையும் நடைமுறைபடுத்தியது ஒரு ஆண் இல்லை, பெண்! அவள் பனிமலர்.
பெயருக்கு ஏற்றார்ப் போல் குளுமையான மலரை போன்று மென்மையே உருவாய் இருந்தவள், தனது 17வது வயதில் நெருங்கிய சொந்தங்களின் வஞ்சகத்தில் தந்தையை இழந்த பின் சுடும் நெருப்பாய் மாறிய புதுமை பெண் அவள். தன்னுள் தகிக்கும் ஜுவாலையை தனக்கு அரணாக மாற்றி நல்வழியில் உயிர்த்தெழுந்து, தன்னுடன் சேர்த்து தனது கிராமத்தையும் உயர்த்திய சாதனை பெண் அவள்!
அங்கே யாரும் அவளிடம் கேட்காமல் எதையும் செய்வதும் இல்லை, அவள் அறியாமல் எதுவும் நடப்பதும் இல்லை. அவள் ஒன்று சொன்னாலோ செய்தாலோ, அது நூறு சதவீதம் சரியாக தான் இருக்கும் என்று நம்பும் ஊர் மக்களின் அன்பை பெற்ற தலைவி அவளே. ஆனால், விதிவிலக்காய் அவள் மீது அதீத வன்மம் கொண்டவர்கள் சுந்தரலிங்கத்தின் குடும்பமும், அவரது விசுவாசிகளும், இன்னும் சிலர். அந்த சிலர் வேறு யாரும் இல்லை, அவளது நெருங்கிய சொந்தங்களே. அவர்கள் இவ்வூரில் இல்லை என்றாலும் அவர்களின் வன்மம் அப்படியே தான் இருக்கிறது.
17 வருடங்களுக்கு முன்புவரை பண்ணையார் குடும்பமான சுந்தரலிங்கத்தின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வழி வழியாக ஊர் தலைவராக இருந்து வந்தனர். சுந்தரலிங்கத்தின் தந்தை, ஊருக்கு செய்வதை விட தன் குடும்பதிற்கு சொத்து சேர்ப்பதில் தான் குறியாக இருந்தார். அதையே தான் சுந்தரலிங்கமும் தலைவரான பின் செய்தார். இப்படியே சென்று கொண்டு இருந்த நிலையில் சுந்தரலிங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டதோடு ஊருக்கு நல்லது செய்ய ஆரம்பித்த பனிமலரின் தந்தை வீரையனை ஊர் மக்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர். வீரையன் ஊர் தலைவரான போது பனிமலருக்கு வயது 12.
வீரையன் இறந்த பிறகு விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என்ற சுந்தரலிங்கத்தின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சுயம்பு அவள்!
அன்று, பதினேழு வயதிலேயே சுந்தரலிங்கத்திற்கு எதிராக மக்களிடம், “என் அப்பா எடத்துல இருந்து நா(ன்) ஒங்களுக்கு செய்யிறேன்” என்று குரல் எழுப்பினாள்.
பிறந்ததில் இருந்து தந்தையுடனே சுற்றியவளுக்கு ஊரின் நிலவரம் அத்துபடி. வீரையனும் இயல்புபோல் சிறு வயது முதல் மகளுக்கு அனைத்தையும் போதித்தே வளர்த்து இருந்தார். எனவே, பள்ளி பாடத்தை விட அனுபவ பாடத்தையே அதிகமாக கற்று இருந்தாள்.
சுந்தரலிங்கத்தின் மகன் ஆளவந்தான், “பொட்டப்புள்ள ஒனக்கு எதுக்குடீ இந்த வேண்டாத வேலயத்த வேல! கோட்டிதனமா சலம்பாம, எப்பயு போல இருக்க எடம் தெரியாம கம்முனு கெட” என்று ஏளனத்துடன் பேச,
நிமிர்வுடன் அவனை நோக்கியவள், “சவடாலு வுடுற ஒன்னிய விட எனக்கு வெவரமும் அதிகம்.. நம்மூரு நெலவரமும் நல்லாவே தெரியும்லே” என்றாள்.
“ஏய்!” என்றபடி அவன் எகிற, அவளோ சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் பார்த்தாள்.
அதில் இன்னும் கோபம் கொண்டவன், “மருவாதயா பேசுடி! இல்ல பல்ல பேத்துப்புடுவேன்!” என்றான்.
நக்கலாக, “யெ கையி மட்டு பூவு பறிச்சிகிட்டு இருக்குமோ?” என்றவள், “நீயி கொடுக்கது தான்லே ஒனக்கு திரும்ப கெடைக்கும்” என்றாள்.
“ஏய்!” என்று பல்லை கடித்தபடி அவன் மீண்டும் எகிற,
“சும்மா சவுண்டு வுட்டு சலம்பாம, நம்மூரு பள்ளிக்கூடத்துல எத்தனாப்பு வர இருக்குனுட்டு சொல்லுலே பாப்போம்” என்று சவாலிடும் குரலில் கேட்டாள்.
அவன் பதில் தெரியாமல் முழிக்க, அவன் அருகே இருந்த அவனது அல்லக்கை வாய் திறக்கும் முன்,
சுட்டு விரலை நீட்டியபடி, “ஏலேய்! துப்பு கொடுத்த.. கொடுத்த வாய நார் நாரா கிழிச்சிபுடுவேன்” என்று மிரட்டினாள்.
அவளது மிரட்டலில் ஊரே, ‘நம்ம சின்னம்மாவா இது!’ என்று ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தனர்.
சுந்தரலிங்கம், “ஏளா என்ன வாயி நீளுது! பொட்டப் புள்ள அடக்க ஒடுக்கமா வூட்டுக்குள்ளார தான் கெடக்கணும்” என்று கோபத்துடன் கூற,
அவளும் கோபத்துடன், “இன்னும் எத்தினி நாளு இதயே சொல்லிக்கிட்டு திரிய போறீய? நீர் கீழா சொல்ற பொட்டப்புள்ள தொண இல்லாம ஒம்மால வாழவே முடியாதுவே! தாய் மனசு வச்சாதேன் ஒங்க பிறப்பு.. பொஞ்சாதி மனசு வச்சாதேன் ஒங்களுக்கு தந்தை ஸ்தானம்! பெண் ஒரு ஆக்க சக்தி” என்றாள்.
அவளது தோற்றத்திலும் பேச்சிலும் ஒரு நொடி பேச்சற்று இருந்தவர் பின் கோபத்துடன், “ஒனக்கு வோட்டு போடுற வயசு கூட இல்ல….” என்று ஆரம்பிக்க,
அவளோ ஊராரைப் பார்த்து, “இதே, நா(ன்) பையனா இருந்தாக்க இப்புடி சொல்லுவியலா? ஏன் பொண்ணால முடியாதா என்ன?
நமக்கு வாழ்வு தார பூமிய தாய்னு தானே சொல்லுறோம்! தந்தைனுட்டு சொல்லலியே! ஏன்னா பெண்ணை விட சிறந்த ஆக்க சக்தி அகிலத்திலே இல்ல.. நாட்டை சிறப்பா ஆண்ட ராணிகள் இல்லியா? அரசியல் தலைவிகள் தான் இல்லியா? ஒரு பெண் நாட்டையே சிறப்பா ஆளும் போது, நம்மூரை என்னியால பார்த்துக்கிட முடியாதா?
ஒங்க ஐயாவோட பொண்ணு மேல நம்பிக்க இல்லியா? ஏட்டு பாடத்தை விட பெரிதான, வெலமதிக்க முடியாத அனுபவ பாடத்தை நா நெறயவே கத்துக்கிட்டு இருக்கேன்.. நம்மூர் வளர்ச்சிக்கான ஒங்க ஐயாவோட கனவு எனக்குள்ளாற வெதைக்கப்பட்டுதே இருக்கு.. அப்பா பெயர நான் நிச்சயமா காப்பாத்துவேன்..
எனக்கு 18 வயசு ஆகலதே.. இனிமேலு சின்னப்புள்ள சொல்லுததேன் கேக்கணுமானுட்டு வெசனப்பட்டாக்க, யெ தாத்தன தலைவரா தேர்ந்தெடுங்க.. எனக்கு பதவி முக்கியம் இல்ல.. நம்மூருக்கு நல்லது செய்யுறதுதே யெ நோக்கம்.. பொறவு யாரு தலைவரா இருந்தாக்க ஒனக்கு என்னனுட்டு நீக கேக்கலாம்!
நல்லது செய்யிறதுக்கு கூட இந்த காலத்துல அதிகாரம் தேவையா இருக்குதே! அதேன் ஒங்க ஐயாவோட அய்யனை தலைவராக்க சொல்லுதேன்.. ஒரு வருசமோ, ஆறு மாசமோ பாருக.. யெ மேல ஒங்களுக்கு நம்பிக்க வாரலனாக்க, நா வெலகிடுதேன்” என்று நீளமாக பேசி முடித்தாள்.