செவிலி, “சார் அதிகம் பேசாதீங்கனு சொல்றேனே!” என்று கண்டிப்புடன் கூறியவர்,
திவ்யா மற்றும் ஹரீஷை பார்த்து, “இது ஐசியு சார்… கிளம்புங்க” என்று கறார் குரலில் கூறினார்.
திவ்யா மற்றும் ஹரீஷ் சிறு தலையசைப்புடன் வெளியேறினர்.
அதன் பிறகு ராகவனின் உடல் நிலை வேகமாக முன்னேறியது. அவர் சொன்னது போல் வீட்டிற்கு வந்து உடல் நிலை நன்றானதும், ராஜாராம் வீட்டிற்கே சென்று ராஜாராம் மற்றும் சுபாஷினியிடம் மனதார மன்னிப்பு கேட்டார். அன்று ஹரீஷும் அங்கே தான் இருந்தான்.
தன் மனதை மாற்றும் முயற்சியுடன், ராகவனுடன் அவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பேசிக் கொண்டிருந்த திவ்யா, பொதுவாக அனைவரையும் பார்த்து, “யாரையும் கஷ்டபடுத்த நான் விரும்பலை… நான் ஹாஸ்டலிலேயே இருக்கிறேன்… எய்த் செம் ஸ்டடி ஹாலிடேஸ்ஸில் எங்க கல்யாணத்தை வைங்க… நான் எங்க வீட்டுக்கே போறேன்.” என்றதை கேட்டு ராகவன், ராஜாராம், சுபாஷினி மற்றும் ஜனனி வருந்த,
ஹரீஷோ மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் தன்னவளை நோக்கினான்.
பிறகு தனிமையில் அவளை கையணைப்பில் வைத்தபடி, “ஸ்டடி ஹாலிடேஸ்ஸில் கல்யாணம்னு ஏன்டி சொன்ன?”
“ஹாஸ்டல் காலி செய்து, நேரா நம்ம வீட்டுக்கு வர தான்”
அவள் நெற்றியில் முட்டி, “கல்யாணம் செய்தும் சில நாட்கள் நான் பிரம்மச்சாரியா இருக்கணும்னு முடிவு செய்திட்ட!”
“ஏன்?”
“அப்புறம் எப்படி எக்ஸாம்க்கு படிப்ப?”
“அதெல்லாம் ரெண்டையும் டீல் செய்வா இந்த தியா”
“என்னால் முடியாதே” என்றவனது கை அவளது இடையை வளைத்து அவளை தன்னுடன் இறுக்கவும்,
அவள் அவன் கையை பிரிக்க முயற்சித்தபடி, “டேய்… பேச்சு பேச்சா இருக்கணும்.” என்றாள்.
“ஏன் நான் வேற என்ன செய்தேன்?” என்று விஷமச் சிரிப்புடன் வினவ,
அவள், “டேய் கேடி, கையை எடுடா” என்றாள்.
“கையை மட்டும் எடுத்தா போதுமா?”
“போதும்” என்றவள் பின், “டேய் உன் பார்வையே சரி இல்லை” என்று முடிக்கும் முன், அவளது செவ்விதழ்களை அவனது இதழ்கள் மூடியது.
சில நொடிகள் கழித்து இதழைப் பிரித்தவன், “லவ் யூ ஸோ மச் தியா பேபி.”
“மீ டு லவ் யூ ஸோ மச் டா”
“லவ்வை இப்படியா சொல்வாங்க? இந்த சப்ஜெக்டில் வீக் டி நீ”
“அதான் ஈஸியான சப்ஜெக்டில் அரியர் வைப்பேன்னு நீயே சொன்னியே.” என்று அவள் தலை சரித்து புன்னகையுடன் கண்ணடிக்கவும்,
“அப்போ ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துட்டா போச்சு” என்றவன் அவள் சுதாரிக்கும் முன், மீண்டும் அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு மூடினான்.
சில மாதங்களுக்கு பிறகு….
இரவு வீட்டில் ஹரீஷ் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. தூக்கக் கலக்கத்துடன் கதவை திறந்தவன், அங்கே நின்றிருந்த திவ்யாவை கண்டு கண்ணை தேய்த்துக் கொண்டு பார்க்க, அங்கே யாரும் இல்லை. அவன் மீண்டும் கண்ணை தேய்த்துக் கொண்டு திறக்க,
“பூம்” என்று கத்தியபடி பக்கவாட்டில் இருந்து புன்னகையுடன் குதித்து மீண்டும் தரிசனம் தந்தாள்.
அவன் கனவா நினைவா என்ற குழப்பத்துடன் நிற்கவும், வாய்விட்டு சிரித்த திவ்யா, “கனவில்லை நிஜம் தான்… முதல்ல நீ கண்ணை கசக்கவும், சைடில் ஒளிஞ்சிட்டேன்…”
சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தவன், “பன்னிரண்டு மணிக்கு பேய் மாதிரி வந்து நிற்கிற!”
அவள் முறைத்துவிட்டு, “போடா” என்று கிளம்பப் போக,
அவன் சட்டென்று அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து, அவளை வலது கையால் அணைத்து, இடது கையால் கதவை மூடினான்.
பிறகு அவள் இடையை வளைத்து நெற்றியில் செல்லமாக முட்டியபடி, “இந்த நேரத்தில் என் ரௌடி பேபிக்கு இங்கே என்ன வேலை? அதுவும் நான் வாங்கிய புடவையை எனக்கு தெரியாமல் திருடி கட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் தரீங்க!”
“நான் ஒன்னும் திருடலை… இது என்னோடது தானே!”
“ஆனா, நான் கல்யாணத்துக்கு அப்புறம் தானே தருவேன்னு சொன்னேன்… இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்க முடியலையா உன்னால்!”
“இதுக்கு விளக்கம் அப்புறம் சொல்றேன். அதுக்கு முன்னாடி” என்றபடி விலகப் பார்க்க,
அவன், “எதுவா இருந்தாலும் இங்கே இருந்தே சொல்.”
“இரு டா… இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்குது.”
“எதுக்கு?”
“சொல்றேன்… நீ முதல்ல என்னை விடு.”
“நீ என்னனு சொல்லு”
“என் செல்லக் குட்டில, விடு டா” என்று அவன் நாடியை பிடித்து கொஞ்சவும், அவன் அவளை விட்டான்.
“கண்ணை மூடியபடி இங்கேயே இரு.” என்றவள் வேகமாக சமையலறைக்குச் சென்றாள்.
“என்னடி செய்ற!” என்று அவள் அலுத்துக் கொண்டான்.
சில நொடிகளில், “இப்போ தான் மணி பனிரெண்டு… இப்போ கண்ணை திற.” என்றாள்.
அவன் கண்ணை திறந்ததும், இன்பமாக அதிர்ந்தான். அறையின் விளக்கு அணைக்கப் பட்டிருக்க, அவள் கையில் மெழுகுவர்த்திகள் ஏந்திய பிறந்த நாள் அனிச்சம் இருந்தது. அந்த சிறிய மெழுகுவர்த்திகளின் ஒளியில், அவள் தேவதையாகத் தெரிந்தாள். அவன் காதலுடன் அவளை நோக்க,
அவள், “ஹப்பிபிபிபிபி பர்த் டே ரிஷி கண்ணா” என்று மகிழ்ச்சியுடன் கத்தினாள்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் சிறு மேசையில் அனிச்சத்தை வைத்தபடி, “ஹ்ம்ம்… வந்து வெட்டு” என்றாள்.
“நீ மட்டும் வெட்டுறது இல்லை”
“ரிஷி-ன்ற முனிவர் கொடுத்த அறிவுரையை கேட்டு என் முடிவை மாத்திட்டேன்… இனி பழையபடி இந்த தியா பிறந்தநாளை கொண்டாடுவா”
“அடிங்க… நான் முனிவரா” என்றபடி அவளை அணைத்தவன், அவளது திமிரலை பொருட்படுத்தாமல், “முதல்ல பிறந்த நாள் பரிசு கொடு… அப்புறம் தான் கேக் கட்”
“நீ என் கையை ப்ரீயா விட்டால் தானே தர முடியும்” என்று சிணுங்கினாள்.
“நான் பரிசு பொருளை கேட்கல…”
“வேற!”
“எனக்கு ஸ்ட்ராபெரி சாக்லெட் வேணும்”
“ஸ்ட்ராபெரி சாக்லேட்டா…….” என்று ஆரம்பித்தவள் அவன் பார்வை தன் இதழில் பதியவும்,
“கேடி… அதெல்லாம் முடியாது… கல்யாணத்திற்கு பிறகு தான் நான் தருவேன்”
அவள் கண்களை பார்த்தபடி, “நான் கேட்கும் பிறந்த நாள் பரிசு இது தான்… அப்புறம் உன் இஷ்டம்.” என்றான்.
“ப்ளீஸ் டா” என்று அவள் கெஞ்ச, அவன் அசையவில்லை.
சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவள் மெல்லிய குரலில், “நீ கண்ணை மூடிக்கோ.” என்றாள்.
அவன் உதட்டோர புன்னகையுடன் கண்களை மூட, அவள் தயங்கியபடியே மெல்ல அவன் இதழ்களை நெருங்கி, தன் இதழ் கொண்டு மென்மையாக மூடினாள்.
அவள் மென்மையாக ஆரம்பித்த இதழொற்றலை அவன் வன்மையாக மாற்றி இருந்தான். அவளது வெற்று இடையில் பதிந்திருந்த அவனது கரம், அதன் மென்மையில் எல்லை மீறத் துடிக்க, அதை கஷ்டப்பட்டு அடக்கினான். அவனது முதல் இடை தீண்டலில் அவள் அவளாக இல்லாமல் உருகினாள்.
அவள் மூச்சுக் காற்றுக்கு திணறவும் இதழ்களை விடுவித்தவன், அவள் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்ததும், “ஸ்ட்ராபெரி சாக்லேட் செம்ம டேஸ்ட்” என்று கூறி கண் சிமிட்டவும், அவள் வெட்கத்துடன் அவனை அடித்தாள்.
அவள், “சரி இப்பவாது கேக் கட் பண்ணு” என்றதும், அவன் அறையின் விளக்கை ஒளிரவிட்டு, பின் அனிச்சத்தை வெட்டி அவளுக்கு ஊட்டினான். அவளும் அவனுக்கு ஊட்டினாள்.