பயணத்தின் போது ஹரீஷ் அவளிடம் பேசிக்கொண்டே தான் என்றான். அவன் கூறிய ஒன்றிரண்டு ஆறுதல் வாக்கியங்கள் அவள் காதில் விழுந்தாலும், மூளையை எட்டவில்லை.
மருத்துவமனை வந்ததும், வேகமாக இறங்கி ஓடினாள் திவ்யா.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த ராகவனை, கண்ணாடி தடுப்பு வழியே பார்த்தவள் கண்ணீர் சிந்தினாள்.
சூர்யா ஓடி வந்து அவள் இடையை கட்டிக்கொண்டு, “அக்கா… அப்பா” என்று அழுதான்.
தம்பியை ஆதரவாகப் பற்றினாலும், அவளது பார்வை ராகவனிடமே இருந்தது.
அப்பொழுது பார்வதி கோபத்துடன், “உன்னை யாருடி இங்கே வரச் சொன்னது?” என்று கத்தியவர் சுரேஷை நோக்கி, “இந்த ஆள் வேலையா?” என்றுவிட்டு மீண்டும் திவ்யா பக்கம் திரும்பி, “உன் நடிப்பை நம்ப இங்கே யாருமில்லை… முதல்ல இங்கிருந்து கிளம்பு… உன்னால் தான் அந்த மனுஷன் இப்படி இருக்கிறார்… நீ தான் அவருக்கு…” ‘எமன்’ என்று சொல்லும் முன்,
ஹரீஷ், “ஹே நிறுத்து…! அவருக்கு இந்த நிலைமை உன்னால் தான்… உன் பேச்சை கேட்டு கேட்டு தான் இப்படி இருக்கிறார்… இந்த பிரச்சனை ஆரம்பித்ததே உன்னால் தான்… பழியை திவ்யா மேல் போட்டு தப்பிக்கலாம்னு பார்க்காதே!” என்றவன் அவரை நெருங்கி ஆள்காட்டி விரலை நீட்டி, “மூச்…! இனி ஒரு முறை என் திவ்யாவை பற்றி தப்பா ஒரு வார்த்தை பேசின, சொல்லிட்டு இருக்க மாட்டேன்… பக்கத்து பெட்டில் உன்னை படுக்க வச்சிருவேன்… ஜாக்கிரதை!” என்று கண்கள் சிவக்க கூறியவனின் கோபத்தில், பார்வதி ஆடித் தான் போனார்.
சுரேஷும், “ராகவனோட மருந்தே திவ்யா தான்… நீங்க கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தால் நல்லது… முடியலையா, தயவு செய்து இங்கிருந்து கிளம்புங்க” என்று கூற,
சூர்யாவும் தன் பங்கிற்கு அழுகையுடன், “எனக்கு அப்பா வேணும்… நீ கிளம்பு மா.” என்றான்.
அதன் பிறகு, அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
ராகவனை பரிசோதித்துவிட்டு வெளியே வந்த மருத்துவர், “நவ் ஹீ இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்… உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை… மைல்ட் அட்டாக் தான்… மன அழுத்தத்தினால் வந்தது போல் தான் தெரியுது… அதை குறைக்கப் பாருங்க… அதிக அதிர்ச்சியோ சந்தோஷமோ தர விஷயம் எதுவும் சொல்ல வேணாம்… அவர் ஹெல்த் கண்டிஷன் பார்த்துட்டு, நாளைக்கே கூட ரூமுக்கு ஸிப்ட் செஞ்சிரலாம்.”
திவ்யா, “உள்ளே போய் பார்க்கலாமா டாக்டர்?”
“ஒருத்தர் மட்டும் போங்க… அவரை டிஸ்டர்ப் செய்யாம பார்த்துட்டு வாங்க.” என்று கூறி சென்றார்.
திவ்யா மெல்ல உள்ளே சென்று அவர் அருகில் நின்று, அவர் கையை மென்மையாகப் பற்றினாள். மருந்தின் வேகத்தில் மயக்கத்தில் இருந்த அந்த நிலையிலும், அவளது தொடுகையை உணர்ந்தார் போல் அவருள் சிறு அதிர்வலை ஓடியது.
அமைதியாக அவரைப் பார்த்தவள் மனதினுள், ‘சாரி பா… எனக்கு உங்க மேல் கோபம் தான். ஆனா நான் கோபப் படவாவது நீங்க எனக்கு வேணும்.’ என்று கூறியவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாதது போல் தோன்றவும், வேகமாக வெளியே சென்றாள்.
வெளியே வந்தவள் ஹரீஷின் தோளில் சாய்ந்து, “என்னால் முடியலை ரிஷி.” என்று அழுதாள்.
அவளது முதுகை வருடியவன், “ஒன்னுமில்லை டா… அதான் டாக்டரே சொல்லிட்டாரே! அப்பறமென்ன? நாளைக்கே நல்லா பேசுவார் பார்” என்று அவளை தேற்றினான்.
மெல்ல அவளது அழுகை நின்றதும், “சரி, நீயும் விஜய்யும் கிளம்புங்க… நான் இங்கே இருக்கிறேன்.” என்றான்.
அவள் மறுப்பாக தலையை அசைக்கவும்
அவன், “தியா, சொன்னா கேட்கணும்… இன்னைக்கு எப்படியும் கண் முழிக்க மாட்டார்… ஸோ நீ போயிட்டு நாளைக்கு காலையில் வா.”
“நான் உன் கூடவே இருக்கிறேனே… ப்ளீஸ் டா.”
“இங்கே எப்படி டா!”
“ரிசெப்ஷனில் சேரில் உட்கார்ந்துக்கலாம்… ப்ளீஸ் டா…”
“சரி” என்றவன் விஜய் பக்கம் திரும்பி, “ரொம்ப தேங்க்ஸ் விஜய்…” என்று ஆரம்பிக்க,
அவன், “என்ன சார் தேங்க்ஸ்லாம் சொல்லிட்டு…” என்றான்.
ஹரீஷ், “சரி… நீ கிளம்பு…”
“சரி சார்… எதுவும் ஹெல்ப் வேணும்னா, எந்த நேரம்னாலும் போன் செய்யுங்க சார்.” என்றவன், “நான் நாளைக்கு வரேன் திவி” என்றான்.
திவ்யா, “பவிக்கு போன் செஞ்சு சொல்லிடு.”
“சரி டா… டேக் கேர்” என்று கூறி கிளம்பினான்.
திவ்யா சுரேஷிடம் சென்று, “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” என்றவள், “நீங்களும் வேணா கிளம்புங்க அங்கிள்…”
அவர் சிறிது தயங்க,
“அப்பா கண் முழிச்சதும் போன் செய்றேன் அங்கிள்”
“சரி மா… பார்த்துக்கோ… என்னிடம் சொன்ன அப்பா-ன்ற வார்த்தையை, அவனிடம் நீ சொன்னாலே அவன் எழுந்து உட்கார்ந்திருவான்.”
திவ்யா அமைதியாக சரி என்பது போல் தலையை ஆட்டினாள். அவரும் கிளம்பிச் சென்றார்.
அதன் பிறகு திவ்யா ஹரீஷ் தோளில் சாய்ந்து அமர்ந்திருக்க, சூர்யா அவள் மடியில் தலை வைத்தபடி அமர்ந்திருந்தான். பார்வதி தனியாக அமர்ந்திருந்தார். அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.
அடுத்த நாள் காலையில் ராகவன் கண் விழித்ததாக செவிலி வந்து கூறவும், திவ்யா வேகமாகச் சென்றாள்.
அவளைப் பார்த்ததுமே ராகவன் கண்களில் தனி ஒளி வந்தது. அவர் கைகளை பற்றியவள் கலங்கிய கண்களுடன், “அப்பா… சாரி பா” என்றாள்.
அவளது கையை இறுக்கமாக பற்றிய ராகவன், “நீ எதுக்கு டா சாரி சொல்ற? நான் தான் சொல்லணும்… அப்பாவுக்கு ஒன்னுமில்லைடா… நீ மனசை போட்டு குழப்பிக்காதே… உன்னால் எதுவும் இல்லை… நான் செய்த பாவம் தான் காரணம்… என் குட்டிமா எப்பவும் ஹப்பியா இருக்கணும் சரியா.”
அவள் சரி என்பது போல் தலையை அசைத்தாள்.
அவர், “நீ சொன்னது தான் சரி டா… நான் தான் உன் அப்பானு உரக்கச் சொல்லணும்னு ஆசையா தான் இருக்குது, ஆனா அதை சொன்னால் உனக்கு தான் களங்கம்… சாரி டா… அப்பாவை மன்னிச்சிடு.” என்று சற்று கரகரத்த குரலில் கூறவும்,
அவர் இந்த நிலைமையில் உணர்ச்சிவசப்படுவது நல்லதில்லை என்று, “இப்போ எதுக்குப்பா அதைப் பற்றி பேசிட்டு… விடுங்க.” என்றாள்.
அவர், “அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுடா… அதான் நீ அப்பானு கூப்பிட்டுட்டியே! இன்னைக்கே அப்பா எழுந்து உட்கார்ந்திடுவேன்.” என்றவர், “தனியா வா இருக்க?”
“ரிஷி, இங்கே தான் பா இருக்கிறான்… சித்தியும் சூர்யாவும் கூட இருக்காங்க.”
“சூர்யா ரொம்ப பயந்துட்டானா?”
“ஹும்ம்… இப்போ கொஞ்சம் பரவாயில்லை… தூங்குறான்”
“சரி, மாப்பிள்ளையை கூடிட்டு வா”
செவிலி, “சார் நீங்க அதிகம் பேசக் கூடாது”
“எனக்கு ஒன்னுமில்லை… நீ போய் கூட்டிட்டு வா.”
திவ்யா, “கஷ்டப்பட்டு தானே பா பேசுறீங்க… ரெஸ்ட் எடுங்க”
“ஒரே ஒரு நிமிஷம் டா ப்ளீஸ்…”
“ஒரு நிமிஷம் தான்” என்று கூறி வெளியேறி, ஹரீஷை அழைத்து வந்தாள்.
ஹரீஷின் கையை பற்றியவர், “திவ்யாவை நல்லா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை… அன்னைக்கு நான் பேசினதை மனசில் வச்சிக்காதீங்க… என்னை மன்னிச்சிருங்க”
“பெரிய வார்த்தையெல்லாம் வேணாம் சார்…….”
“மாமா சொல்லாமே….”
அவன் திவ்யாவை பார்க்க,
ராகவன், “அவளுக்கு இன்னமும் என் மேல் கோபம் இருக்குது தான்… என் உயிரை காப்பாத்த தான் அப்பானு கூப்பிட்டு பேசுறா…”
“அப்பா” என்று திவ்யா தயங்க,
அவர், “என் மகளை எனக்கு தெரியாதா!”
திவ்யா, “எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க பா… பழையபடி மாற”
“நீ இவ்ளோ பேசுறதே எனக்கு ரொம்ப சந்தோசம் டா… நான் மன்னிக்கிற தப்பை செய்யல… பழைய ராகவன் செத்துட்டான்… நீ இப்போ அப்பானு கூப்பிட்டதில் புதுசா பிறந்துட்டேன்டா… உன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டதா சொல்லு… உடம்பு சரியானதும், நேரில் போய் நானே மன்னிப்பு கேட்கிறேன்.” என்றபோது சிறிது சிரமப்பட்டு தான் பேசினார்.