சுபாஷினி, “சாரி எதுக்கு டா! நீ எதுவும் செய்யலையே! உன் நிலையில் யாரா இருந்தாலும் இப்படி தான் நடந்துப்பாங்க”
அவர் கண்களை துடைத்தவள், “எனக்கு ஒரு அடி போட்டு சொல்றதை கேளுடினு சொல்லி உண்மையை சொல்லி இருக்கலாமே!” என்று சிறு ஆதங்கத்துடன் சொன்னாள்.
“பழசை விடுடா… இனி நாம சந்தோஷமா இருப்போம்.” என்று சுபாஷினி கூற,
ஜனனி, “யூ டோன்ட் வொர்ரி சிஸ்… இனி அதை நான் பாலோ செய்றேன்.” என்றாள்.
திவ்யாவும் சுபாஷினியும் அவளை முறைக்க,
அவளோ, “எவ்ளோ நேரம் தான் இந்த படத்தை ஓட்டுவீங்க… வெளியே தனியா மாம்ஸ் பாவம் போல உட்கார்ந்து இருக்கார்.”
திவ்யா மெல்லிய புன்னகையுடன், “ஏன் நீ பேச வேண்டியதானே!”
“எங்கே! அவர் தான் உன்னை தவிர வேறு பெண்ணுடன் பேச மாட்டாரே!”
“நீ என் தங்கைனு தெரிந்த பிறகு, அன்னைக்கு உன்னிடம் பேசலயா?” என்று வினவி புருவம் உயர்த்த,
ஜனனி, “எப்பா! இப்போவே மாம்ஸ்க்கு என்னமா சப்போர்ட் செய்ற!”
“உண்மையை சொன்னேன்” என்றவள் சுபாஷினியை எழுப்பியபடி தானும் எழுந்து, கைபேசியில் ஹரீஷை அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்ததும்,
“உள்ளே வா”
“இல்லை டா… நான்…” என்று அவன் தயங்க,
இவள், “உன்னை உள்ளே வரச் சொன்னேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
ஹரீஷ் சிறு தயக்கத்துடன் உள்ளே வர, வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்த ஜனனி, “அப்பா, இனி உங்க நிலைமை தான் மாம்ஸ்க்கும் போல! நான் கூட மாம்ஸ் ஒரு டெரர் பீஸ்னு நினைத்தேன்… ஆனா…” என்று நிறுத்தி மீண்டும் சிரிக்க,
ஹரீஷின் கையை இருகரம் கொண்டு பற்றிய திவ்யா, “ஓய்! என் ரிஷி என்னிடம் மட்டும் தான் பாசக்காரன்… மத்தவங்களுக்கு டெரர் தான்.”
“ஓ” என்று ஜனனி ராகம் இழுக்க,
ராஜாராமும் சுபாஷிணியும் புன்னகையுடன் பார்த்தனர்.
சுபாஷினி, “வாங்க மாப்பிள்ளை” என்று புன்னகையுடன் கூற, ஹரீஷ் அவரைப் பார்த்து சிறு தலை அசைப்புடன் புன்னகைத்தான்.
‘நான் உன்னுடன் தான் எப்பொழுதும் இருக்கிறேன்.’ என்பதை சொல்லாமல் சொல்வது போல், திவ்யா ஹரீஷ் கையை பற்றியதும்… அவன் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், பெரியவர்கள் முன் அப்படி இருக்க சங்கோஜப்பட்டு கையை உருவப் பார்த்தான்.
அவனைப் பார்த்த திவ்யா, “சுபிமாவும், ராஜாப்பாவும் ஒன்னும் சொல்ல மாட்டங்க… அமைதியா இரு.” என்றாள்.
ராஜாராம், “ப்ரீயா இருங்க மாப்பிள்ளை… என்னை சேர்மனா பார்க்காமல் அப்பாவா பாருங்க.” என்று கூற,
ஹரீஷ், “மாமா, அத்தை… எங்களை ஆசிர்வாதம் செய்யுங்க” என்று கூறி, திவ்யாவுடன் அவர்கள் காலில் விழுந்தான்.
இருவரும், “நல்லா இருங்க… எப்போதும் இதே அன்புடன் சந்தோஷமா இருங்க.” என்று மனமார வாழ்த்தினர்.
ஹரீஷ் ராஜாராமிடம், “ரொம்ப நேரம் நாம இங்கேயே இருக்க முடியாது… அதுவும் நீங்க அங்கே இருக்கணும்.” என்று சிறு தயக்கத்துடன் கூற,
ஜனனி கைகளை தேய்த்தபடி, “ஸ்ப்பா… உங்கள் கடமை உணர்ச்சியை கண்டு புல்லரிக்குது மாம்ஸ்”
“வீட்டில் ஒருத்தருக்காவது பொறுப்பு வேணாமா?” என்று ஹரீஷ் கண்ணில் சிறு புன்னகையுடன் கூற,
ஜனனி, “அப்போ அப்பாவுக்கு பொறுப்பில்லைனு சொல்றீங்களா!” என்று குறும்புடன் வினவ,
“ஜனனி” என்று கண்டிப்புடன் அழைத்த சுபாஷினி, “தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை… இன்னும் விளையாட்டு பொண்ணாவே இருக்கா.”
“இப்போ இப்படி இல்லாமல் வேற எப்போ இருக்கிறது.” என்று மென்னகையுடன் கூறியவன்…
ஜனனியை பார்த்து, “நான் மாமாவை சொல்லலை… என் வீட்டை பற்றி சொன்னேன்.” என்றவனது பார்வை தன்னவளை நோக்கியது.
ஜனனி, “இப்போ நாங்க மூணு பேரும் மறைந்து போயிருப்போமே!”
சுபாஷினி, “என்னடி சொல்ற?”
“அதுவா மா! அக்காவும் மாம்ஸ்ஸும் கனவு லோகத்தில் நுழையும் போது, நாம மறைந்து போயிருவோம் தானே! அதை சொன்னேன்”
ஹரீஷும் திவ்யாவும் சிறிது அசடு வழிய,
ராஜாராம், “சரி வாங்க ப்ரோக்ராம் நடக்கிற இடத்திற்கு போகலாம்” என்றார்.
ஹரீஷ், “நீங்க எல்லோரும் முதலில் போங்க சார்… நான் பின்னாடி வரேன்” என்றான்.
திவ்யா கண்ணசைவில் தன்னவனிடம் விடை பெற்று சென்றாள்.
அங்கே சென்றதும் திவ்யா, “நான் பவிகிட்ட போறேன்” என்று கூற
சுபாஷினி சிறு தவிப்புடன் பார்க்க…
திவ்யா புன்னகையுடன் அவர் கையை பற்றி, “நான் எப்படி இருக்கிறேனோனு கவலையில் இருப்பாமா… நான் போய் பேசிட்டு வரேன்.” என்றதும், அவர் முகம் தெளிந்தது.
ஜனனி, “பவி அக்கா, விஜய் அண்ணா போல் எனக்கு பிரெண்ட்ஸ் இல்லையே!” என்று கூற,
திவ்யா, “அதான், இனி நான் இருக்கப் போறேனே” என்று கூற,
ஜனனி புன்னகையுடன் திவ்யாவுயடன் கைதட்டினாள்.
கடைசி வரிசையில் சென்று அமர்ந்த திவ்யா, பவித்ராவையும் விஜய்யையும் அங்கே வரச் சொன்னாள். அவர்கள் வந்ததும் இருவருக்கும் நடுவில் அமர்ந்தபடி, தாழ்ந்த குரலில் நடந்ததை சுருக்கமாகக் கூறினாள்.
பின், “ரிஷி கிட்டயும், ராஜாப்பா கிட்டயும் பேசிய பிறகு, மனசு கொஞ்சம் தெளிவா இருக்குது…” என்றாள்.
விஜய், “சேர்மேன் சார் சொன்னது போல், காலம் தான் இதுக்கு மருந்து டா… பார்க்கலாம்.” என்றவன், “அப்புறம்… எப்போ கல்யாணம்?” என்று கேட்டு கண் சிமிட்டினான்.
திவ்யா சிறு வெட்கத்துடன், “நான் படிப்பை முடிச்ச அப்புறம்”
“பார் டா! ஹரி சார் பேச்சு வந்தாலே பயபுள்ளைக்கு வெக்க வெக்கமா வருது”
“டேய்” என்றபடி அவன் கையில் ஒரு அடி போட்டாள்.
அதன் பிறகு இருவரிடமும் பேசியபடி ஹரீஷிடம் குறுஞ்செய்தி மூலம் பேசிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து, திவ்யாவிற்கு ராகவனின் நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை எடுத்துப் பேசியவள் சிலையென அமர்ந்திருக்க, பவித்ராவும் விஜய்யும் அவளை அழைத்துப் பார்த்தும் பலனில்லை.
இவற்றை தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷ், திவ்யாவின் கைபேசிக்கு அழைத்தான்.
கைபேசியின் ஒலியில் ஒருவாறு சுய உணர்வை பெற்றவள்…
அழைப்பை எடுத்து, “ரிஷி… ரிஷி…” என்று வார்த்தை வராமல் திணறினாள்.
“என்னாச்சு டா? யாரு போன் செய்தா? என்ன சொன்னாங்க?”
“அப்பா… அப்பாக்கு ஹார்ட் அட்டாக்… என்னால் தான்… நான் பேசியது தான் காரணம்.” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.
“அப்படியெல்லாம் இல்லைடா… நீயா மனசை குழப்பிக்காதே… அவருக்கு ஒன்னும் ஆகாது.”
“ஒன்னும் ஆகாது தானே ரிஷி!”
“ஒன்னும் ஆகாது டா… உன் நல்ல மனசுக்கு, அவர் நல்லா தான் இருப்பார்… நாம போய் பார்க்கலாம்… எந்த ஹாஸ்பிடல்?”
“அது… அது… தெரியலையே! நான் அதிர்ச்சியில் கவனிக்கல…”
“உனக்கு யாரு போன் செய்தா?”
“அப்பா பிரெண்ட், சுரேஷ் அங்கிள்”
“சரி அவர் நம்பரை எனக்கு அனுப்பு… நான் அவரிடம் பேசுறேன்… நீ விஜய் கூட பார்கிங் ஏரியா போ”
“ஹும்ம்” என்று அழைப்பை துண்டித்தவள், சுரேஷின் எண்களை அனுப்பினாள்.
விஜயும் பவித்ராவும், “அப்பாவுக்கு ஒன்னும் ஆகாதுடா… கவலைப் படாத” என்றனர்.
“ஹும்ம்” என்றவளின் மனம் பெரிதும் தவித்துக் கொண்டிருந்தது. தவிப்புடன், குற்ற உணர்ச்சி வேறு அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.
நண்பர்களுடன் வண்டி நிறுத்துமிடத்திற்குச் சென்றாள்.
அவள் சென்ற இரண்டு நிமிடத்தில், ஹரீஷ் ராஜாராமுடன் வந்தான்.
ராஜாராம் திவ்யாவின் கையை பற்றி, “ராகவனுக்கு ஒன்னும் ஆகாதுடா” என்றார்.
ஹரீஷ், “நாங்க பார்த்துக்கிறோம் சார்… மேடமும் ஜனனியும் வேற இருக்காங்க.” என்றான்.
ராஜாராம் தயங்கவும்,
ஹரீஷ், “நான் பார்த்துக்கிறேன் சார்” என்றான்.
ராஜாராம், “சரி அங்கே போயிட்டு போன் போட்டு நிலைமையை சொல்லுங்க.”
“சரி சார்” என்றவன்,
பவித்ராவை பார்த்து, “நீ இங்கேயே இரு…”
“இல்லை சார்… திவி”
“நான் பார்த்துக்கிறேன்… நிலைமை எப்படினு தெரியாது… உன்னை வேற வீட்டில் விடனும்னா கஷ்டம்…” என்றதும்,
அரை மனதுடன், “சரி சார்” என்றவள், திவ்யாவின் கையை ஆறுதலாக பற்றி, “ஒன்னும் ஆகாது… தைரியமா இரு” என்றாள்.
அதன் பிறகு ஹரீஷும், திவ்யாவும், ஹரீஷின் இரு சக்கர வண்டியிலும், விஜய் அவனது இரு சக்கர வண்டியிலும் கிளம்பினர்.