கைபேசியை எடுத்த ஹரீஷ், “சொல்லுங்க சார்.”
“திவிமா, எதை நினைத்து கலங்குறா?”
“அது…”
“ராகவனை நினைத்து வருந்துறாளா?”
“ஆமா சார்… அவளோட மனசே அவ செய்தது சரி தப்புனு பேசி அவளை வதைக்குது… அதுவும் இப்போ அவர் முன்னிலையில் உங்களை அப்பானு கூப்பிட்டு அதன் பிறகு பேசியது எல்லாம், அவரை ரொம்ப காயப்படுத்தி இருக்கும்னு ரொம்ப பீல் செய்றா.”
“ஹும்ம்… அவ சொல்றது சரி தான்… ராகவன் ரொம்பவே உடைந்து போனது மாதிரி தான் தெரிந்தது… உடனே வேற கிளம்பிட்டார்… திவிமா உடனே என்னை அப்பானு அழைப்பாள் என்றோ, அப்படி பேசுவானோ நானே எதிர்பார்க்கலை. சரி, திவிமா வந்திடுவா… நான் வைக்கிறேன்… நீங்களும் வாங்க.” என்று கூறி அழைப்பை துண்டித்தார்.
அவர் அழைப்பை துண்டிக்கவும், திவ்யா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
அவர் எழுந்து வந்து அவளை தோளில் சாய்த்து, “இந்த குட்டி மண்டைக்குள் என்ன ஓடுது? என்ன கலக்கம்? யாரும் உன் பிறப்பை பற்றி பேச மாட்டாங்க… நீ பிறந்தது நம்ம ஹாஸ்பிடலில் தான்… அங்கே இருக்கும் ரெக்கார்டில் உன் அப்பா பெயராக, என் பெயர் தான் இருக்கிறது…”
அவள் ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்க,
“சுபாவோட அண்ணன் சரவணனும் நானும் பிரெண்ட்ஸ்… எனக்கு சுபாவை ரொம்பப் பிடிக்கும்… என் காதலை அவளிடம் சொல்றதுக்கு முன்னாடி என்னென்னவோ நடந்துருச்சு… என் அம்மாவுக்கு என் காதல் பற்றி தெரியும்… சுபா நிலை பற்றி தெரிந்த பிறகும், எனக்கு மனைவினா அது சுபா தான்னு நான் சொன்னதும், அவங்களும் சந்தோஷத்துடன் ஏத்துகிட்டாங்க… அவங்க தான் சுபாக்கு டெலிவரி பார்த்தாங்க. என் சின்ன வயசுலேயே என் அப்பா இறந்துட்டாங்க…
நீ பிறக்குறதுக்கு முன்னாடியே, உன் அம்மாவிடம் என் காதலை சொல்லி என்னை கல்யாணம் செய்துக்கக் கேட்டேன். குழந்தை பிறக்கும் போதே என் குழந்தையா தான் பிறக்கணும்னு நினைத்தேன்.
ஆனா, உன் அம்மா சம்மதிக்கல… என் அன்புக்கு அவ தகுதியற்றவள்னு நினைத்தா… அவள் வாழ்க்கை அவள் குழந்தை மட்டும் தான்னு சொல்லி, என்னை கல்யாணம் செய்துக்க மறுத்துட்டா… அப்புறம் நீ பொறந்த…
சரவணன் சுபா வாழ்க்கையை நினைத்து, உன்னை யாரிடமோ கொடுத்து அனாதை ஆசிரமத்தில் சேர்க்கச் சொல்லிட்டான்… அதை செய்த பிறகு தான், அம்மாவிடமும் என்னிடமும் சொன்னான்… கூடவே நீ பிறக்கும் போதே இறந்துட்டதா, சுபா கிட்ட சொல்லச் சொன்னான்… நாங்க அவனைத் திட்டி உன்னை கூட்டிட்டு வரச் சொன்னோம்…
அவன் அரை மனசுடன் அந்த ஆளை பார்க்கப் போனான். ஆனா அவரோ, ஒரு அக்சிடென்ட்டில் இறந்திருந்தார்… உன்னை யாரிடம் கொடுத்தார்னு கண்டு பிடிக்க முடியலை… அப்புறம் சுபா கிட்ட நீ இறந்துட்டதா சொன்னோம்… அப்போ, அவ எப்படி அழுதா தெரியுமா?
அப்புறம் போராடி அவ மனசை கரைத்து, என்னை கல்யாணம் செய்துக்க சம்மதம் வாங்கினேன்… அப்புறம் மெல்ல மாறினா, ஆனா ஜனனி பிறந்தப்ப… எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருந்தா… என்னன்னு கேட்டப்போ, உன்னை நினைத்து ரொம்ப அழுதா… அப்போ தான் நீ உயிருடன் இருப்பதை அவளிடம் சொன்னேன்.
ரொம்ப சந்தோஷப்பட்டா… அதே நேரத்தில் ரொம்ப கோபப்பட்டா… சரவணன் கூட இன்னையவரை பேசுறது இல்லை… என் மேல் கூட ரொம்ப கோபப்பட்டு பேசாம இருந்தா… என் சுயநலத்திற்காக உன்னை அவளிடமிருந்து பிரிச்சிட்டதா கோபப்பட்டா…! ஹாஸ்பிடலில் இருந்த டீட்டேல்ஸ் காட்டினேன்… உன் அப்பாவா என் பெயர் இருப்பதை பார்த்து தான் கொஞ்சம் சமாதானம் ஆனா…!
அப்புறம் ஒரு டிடெக்டிவ் மூலம் உன்னை கண்டுபிடிச்சு, அந்த ஆசிரமத்திற்கு நாங்க போன போது, ராகவனும் சாருலதாவும் உன்னை தத்தெடுத்திட்டு இருந்தாங்க…! உன்னை பார்க்கும் போது சாருலதா முகத்தில் இருந்த பரவசத்தையும், அன்பையும் பார்த்த சுபா… என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா…!
ஆனாலும், உன்னை நான் கண்காணிச்சிட்டே தான் இருந்தேன்… ஆனாலும் உண்மை தெரிந்து நீ ஆசிரமத்திற்கு போனதை, நான் வைத்த ஆட்கள் எப்படியோ கவனிக்க விட்டுட்டாங்க.. உன்னை மீண்டும் கண்டு பிடிக்கும் வரை, நாங்க தவிச்சது எங்களுக்குத் தான் தெரியும்… அதுக்கு மேல் உன்னை அங்கே விட்டு வைக்க கூடாதுனு சுபா சொன்னதும் தான், நானும் சுபாவும் வந்தோம்…” என்று நிறுத்தியவர்,
“அன்னைக்கு நாங்க பேசிட்டு இருந்ததை நீ கேட்டுட்டு இருந்தது எனக்கு தெரியாதுடா… தெரிந்து இருந்தால், சுபாவை தடுத்து கூட்டிட்டு வந்திருப்பேன்… ராகவனிடம் தனியா பேசியிருப்பேன்… ச்ச்… சாரி டா.”
“நீங்க எதுவும் செய்யலையே!”
“அவங்க ரெண்டு பேரும் பேசியது, உன்னை எவ்ளோ காயப்படுத்தி இருக்கும்னு எனக்கு தெரியும்டா… இப்பவரை தான் பேசியதை சுபா உணரல…. அதனால் அது உன்னை வதைப்பதையும், அவள் அறியலை…”
“பழசை விடுங்க.” என்றவள் அப்பொழுது தான் உணர்ந்தவளாக, “ரிஷியை காணும்.” என்றாள்.
அவர் மென்னகையுடன், “நமக்கு தனிமை கொடுக்க நினைத்து இருப்பார்” என்றவர், “இன்னொரு முறை அப்பானு கூப்பிடு டா.” என்று ஆசையுடன் கேட்டார்.
சட்டென்று அவளுக்கு ராகவனின் ஏக்கம் நினைவிற்கு வர, அவள் கண்கள் அவளையும் மீறி கலங்கியது.
அவள் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்தவர், “சரி விடுடா… உனக்கா எப்போ வருதோ அப்போ கூப்பிடு.”
சட்டென்று முகத்தை நிமிர்த்தியவள், “அப்படி இல்லைப்பா… ஆனா அது… அவர்…” என்று நிறுத்தி தயங்க,
ராஜாராம், “என் கிட்ட ப்ரீயா பேசுடா… நீ ராகவனை நினைத்து கலங்குவது எனக்கு புரியுது…”
“எது எப்படியோ! அவர் என்ன தான் மன்னிக்க முடியாத தப்பை செய்து இருந்தாலும், எனக்கு நல்ல அப்பாவா தான் இருந்தார்… இப்பவும் அவர் மேல் எனக்கு கோபமும் வெறுப்பும் இருக்குது… அவரை என்னால் மன்னிக்க முடியலை தான். ஆனாலும் சில நேரம் மனசு கேட்க மாட்டிக்குதே!”
அவள் கன்னத்தை வருடியவர், “உன் அம்மா போலவே இருக்க டா…! என்ன தான் தைரியமானவளா இருந்தாலும், உங்க மனசு பூ போல் ரொம்ப மென்மையானது… ராகவன் செய்ததுக்கு அவனை கொலை செய்யும் அளவுக்கு எனக்கு அவன் மேல் கோபம் இருந்தது தான்…
ஆனா, இப்போ உனக்காக அவன் ஏங்குவதை பார்க்கும் போது, எனக்கே பாவமா தான் இருக்குது… என்னைக் கேட்டால், காலம் தான் இதுக்கு சிறந்த மருந்து… கொஞ்ச நாள் ஆறப்போடுடா…”
“ஹும்ம்”
“உங்க பாசப்பிணைப்பில் நானும் சேர்ந்துக்கலாமா?” என்ற ஜனனியின் குரலில், இருவரும் திரும்பினர். அங்கே சுபாஷினியும் இருந்தார்.
இப்பொழுது சுபாஷினியை புரிந்துக் கொண்ட திவ்யா, முதல் முறையாக பாசத்துடன் அவரைப் பார்த்தாள். அந்த ஒற்றை பார்வையிலேயே சுபாஷினி கலங்கிய விழிகளுடன், பலமிழந்து தரையில் அமர்ந்தார்.
ராஜாராம், “சுபா” என்றபடி அவரை நோக்கிச் செல்ல, அவருக்கு முன் அவரது மகள்கள் சுபாஷினியின் இருபுறம் அமர்ந்திருந்தனர்.
திவ்யா, “அ…ம்…மா” என்று மெல்லிய கரகரத்த குரலில் அழைக்கவும், சுபாஷினி கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவர் திவ்யாவை இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அவளும் அவரை அணைத்துக் கொண்டு, “சாரி மா” என்றாள்.
ஜனனி மெல்ல எழுந்து தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டாள். இருவரும் அம்மா மகள் இணைப்பை மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.