ஹரீஷை பார்த்த திவ்யா, அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.
“என்னடா?” என்று ஹரீஷ் சிறிது பதறினான்.
அவள், “எனக்கு என்னவோ போல் இருக்குது… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குதுடா”
அவள் கண்களை துடைத்துவிட்டவன், “இப்போ நீ சந்தோஷமா இருக்கனும்டா… சேர்மன் சார் எவ்ளோ அழகா உன்னை அறிமுகப்படுத்திட்டார்.”
“ஹும்ம்… இதை நான் எதிர் பார்க்கவே இல்லை… யாருக்கும் சந்தேகம் வராதபடி எப்படி சொல்லிட்டார்! ஆனா…” என்று நிறுத்தியவளின் முகத்தில் மீண்டும் வருத்தம் எனும் மேகம் சூழ்ந்து கொண்டது.
“என் ரௌடி பேபிக்கு என்னாச்சு?” என்று அவன் பரிவுடன் கேட்டான்.
“அது… எங்கே உணர்ச்சிவசப்பட்டு மைக் முன்னாடி அவர் உண்மையை சொல்லிடுவாரோனு பயந்தேன்… கூடவே ராஜா அப்பாவும் இவரை எதுவும் சொல்லிட கூடாதேனும் பயந்தேன்… அதனால்…”
“அதனால்?”
“அவர் முன்னாடியே ராஜா அப்பாவை அப்பானு கூப்பிட்டு, அவரை கீழே போகச் சொன்னேன்… அவர் துடிச்சிருப்பார் தானே!
என் பிறப்பை பற்றி தெரிந்ததில் இருந்து, நான் அவரை அப்பானு கூப்பிடவே இல்லை… அதுக்காக எவ்ளோ ஏங்கினார் தெரியுமா? எனக்கு தெரிந்தும் என்னால் அப்படி கூப்பிட முடியல… அதன் காரணத்தை சொன்னால் அவர் தாங்கிக்க மாட்டார்னு எனக்குள்ளேயே புதைத்து மறுகினேன்…
அன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் நான் கருவில் இருந்ததை பற்றி எப்படி பேசிக்கிட்டாங்க தெரியுமா? ரெண்டு பேருமே என்னை கருவில் அழிக்க நினைத்து இருக்காங்க… அவங்க, அதான் ஜனனி அம்மா நான் பிறக்கும் போதே இறந்துட்டதா நினைத்ததாச் சொன்னாங்க…
அதைக் கூட கஷ்டப்பட்டு டைஜெஸ்ட் செய்ய முயற்சித்தேன். ஆனா, அவர் சொன்னதை இப்போ வரை என்னால் ஜீரணிக்க முடியல… நான் கருவில் கலைஞ்சுட்டதா நினைத்து, நிம்மதியா சாரும்மா கூட வாழ்ந்ததா சொன்னார்டா…” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் மீண்டும் வழிந்தது.
அவன் ஆதரவுடன் அவளை இறுக்கமாக அணைக்கவும்,
சில நொடிகளில் தன்னை மீட்டவள், அழுகையை நிறுத்தி அவனைப் பார்த்து, “அப்போ நான் அவர் பொண்ணுனு தெரிந்து இருந்தால், என்னை தத்தெடுத்திருக்கவே மாட்டார் தானே! அப்போ இந்த பாசமே பொ…ய்…னு தானே ஆகுது.” என்று கரகரத்த குரலில் கூற,
அவளது முதல் பாதி உண்மை தான் என்ற போதிலும், அவள் மனதை தேற்றும் நோக்கத்துடன் அவன், “அப்படி இல்லைடா… நீ அவரோட மகள்னு தெரிந்ததும், அவர் ரொம்ப சந்தோஷம் தானே பட்டார்.” என்றான்.
அவள் மறுப்பாக தலையை அசைக்கவும்…
“இல்லைடா… நிஜமாவே அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்… அப்புறம் நீ மயங்கி விழுந்ததும், அவர் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிந்து இருக்க… அவ்ளோ நேரம் கோபத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தவர், உன் ராஜா அப்பாவும் சுபாமாவும் இருந்ததையே மறந்தவர் போல் நடந்திருக்கார்… அப்போ அவர் கண்ணுக்கு நீ மட்டும் தான்டா தெரிந்து இருக்க… சேர்மன் சார் தான் இதையெல்லாம் சொன்னார்…”
“அப்போ, நான் தப்பு செஞ்சிட்டேனாடா?” என்று தவிப்புடன் கேட்டாள்.
அவன், “அப்படி சொல்ல முடியாது டா… அவர் செய்தது மன்னிக்க முடியாத தப்பு… அதுக்கு நீ தண்டனை கொடுத்து இருக்க.”
“ஹும்ம்… ஆனா இன்னைக்கு நான் கொடுத்தது அதிகபடியான தண்டனை… எனக்கு அப்போ வேறு வழி தெரியலை… ரெண்டு பேரையும் ஆஃப் செய்யனும்னு நினைத்தேன்… அப்பா (ராகவனை பல மாதங்கள் கழித்து அப்பா என்று அழைக்கிறாள்) அதிர்ச்சியில் ஆஃப் ஆவார் ராஜா (அப்)பா சந்தோஷத்தில் ஆஃப் ஆவார்னு அப்படி கூப்பிட்டேன்.
அப்பறமும் இனி எப்போதுமே அவர் உண்மையை வெளியே சொல்லிடக் கூடாதுங்கிற பயத்தில், ‘இவரோட ரெண்டாவது மனைவி என் பிறப்பை பற்றி இகழ்வா சொல்றதை மாதிரி எல்லோரும் பேசணும்னா உண்மையை சொல்லச் சொல்லுங்க… என் மேல் உண்மையிலேயே கொஞ்சமாச்சும் பாசம் இருந்தால் என் நிம்மதியை கெடுக்காமல் இங்கிருந்து போகச் சொல்லுங்க’ னு சொல்லிட்டேன்… சொன்ன பிறகு தான் நானே உணர்ந்தேன்… அவர் ரொம்ப துடிச்சிருப்பார்.” என்றவளின் கண்கள் கலங்கியது.
சில நொடிகள் மௌனத்தில் கழிய…
ஹரீஷ், “நான் அவரிடம் பேசட்டுமா டா?”
மறுப்பாக தலை அசைத்தவள், “எனக்கு அவரைப் பார்க்கணும். ஆனா… பார்க்க வேண்டாம்… என்ன செய்ய?” என்று பாவம் போல் வினவினாள்.
அவளை மீண்டும் அணைத்துக் கொண்டவன், அவள் தலை மீது கன்னம் பதித்து, “எல்லாம் சரியாகிடும் டா… கவலைப் படாதே.” என்றான்.
“ஹும்ம்”
மீண்டும் சில நொடிகள் மௌனத்தில் கழிய… சட்டென்று நிமிர்ந்தவள், “ஒருவேளை ராஜாப்பா சொன்ன மாதிரி, என்னை யாரும் கடத்தி… அப்புறம் தான் ஆசிரமத்தில் சேர்ந்தேனோ! ஆனா, நான் பிறக்கும் போதே இறந்துட்டதா நினைத்ததாகத் தானே சொன்னாங்க.” என்று சிறு யோசனையுடன் கூறினாள்.
“யாரு சொன்னாங்க? அவங்க யாரு உனக்கு?”
“அது…” என்று சுபாஷினியை ‘அம்மா’ என்று சட்டென்று அழைக்க முடியாமல் திணறியவள் பின் மெல்லிய குரலில், “ஜனனி அம்மா.” என்றாள்.
“சேர்மன் சாரை அப்பா-வா ஏத்துகிட்ட… இவங்களை ஏன் முடியல?”
“அது என்னவோ ஒன்னு தடுக்குது… அவங்க மேல தப்பு இல்லை தான். ஆனா என்னை ஆசிரமத்தில் விட்டது.”
“அவங்க உன்னை ஆசிரமத்தில் விடல….”
“அப்படியா! உனக்கு தெரியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
“ஹும்ம்… உன்னை யாரும் கடத்தல. ஆனா நீ பிறந்ததும் உன்னை உன் தாய் மாமா, ஒரு ஆளிடம் கொடுத்து ஆசிரமத்தில் சேர்க்கச் சொல்லிட்டு உன் அம்மா கிட்ட நீ பிறக்கும் போதே இறந்துட்டதா சொல்லிட்டார்.
அது கூட தன் தங்கையின் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தான் அப்படி செய்துட்டார்… நீ உயிருடன் இருக்கும் உண்மை தெரிந்ததில் இருந்து, உன் அம்மா ஒற்றை சொந்தமான அண்ணனுடன் பேசுவதை நிறுத்திட்டாங்க.”
“என்னடா சொல்ற?”
“அதுமட்டுமில்லை… அவங்க உன்னை கருவில் கலைச்சிட்டதா சொன்னது கூட, உன் அப்பாவை தவிர்க்கத் தான்… உன் அப்பா உன் அம்மாவுக்கு செய்த கொடுமையை பற்றி தெரிந்த உன் பாட்டி, அதாவது உன் அப்பாவோட அம்மா, சுபாம்மா கிட்ட போய் உன் அப்பாவை கல்யாணம் செய்துக்க கேட்டு இருக்காங்க…
அவங்க மறுக்கவும், உன் அப்பாவுக்கு ‘தன்னை ஒரு பெண் வேணாம்னு சொல்வதா? அதுவும் உன் அம்மா!’ என்று தன்மானப் பிரச்சனை ஆகிருச்சு… அவர் உன் அம்மாவை தன்னை கல்யாணம் செய்துக்கச் சொல்லி போர்ஸ் செய்யவும், அவங்க வேறு வழி இல்லாம கருவை கலைச்சிட்டதா சொல்லி இருக்காங்க…
அப்புறம் யாரிடமும் சொல்லாமல், உன் தாய் மாமா உன் அம்மாவை கூட்டிட்டு போய்ட்டார்… அப்புறம் உன் பாட்டி சொல்லி, உன் அப்பா தன்னை விரும்பின தன் தாய் மாமா மகளான உன் சாரும்மாவை கல்யாணம் செய்திருக்கிறார்.”
அப்பொழுது, ராஜாராமிடமிருந்து ஹரீஷிற்கு அழைப்பு வந்தது.
அவன் எடுத்ததும்,
“திவிமா எப்படி இருக்கா?”
“இப்போ கொஞ்சம் பரவாயில்லை சார்…”
“ரெண்டு பேரும் என் ரூமுக்கு வாங்க… இப்போ நீங்க போனை கட் செய்யாதீங்க, முதல்ல திவ்யாவை என் ரூமுக்கு வரச் சொல்லுங்க… அப்புறம் ரெண்டு நிமிஷம் கழித்து நீங்க வாங்க.”
“சரி சார்”
“இன்னும் என்ன, சார்னு கூப்பிடுறீங்க?”
“காலேஜ்ஜில் இதான் சார் சரி.”
“சரி வாங்க.”
ஹரீஷ் அழைப்பை துண்டிக்காமல் கைபேசியை சட்டை பையில் வைத்துவிட்டு, “சார் ரெண்டு பேரையும் அவர் ரூமுக்கு வரச் சொல்றார்… முதல்ல உன்னை வரச் சொன்னார்… நீ போய் ரெண்டு நிமிஷத்தில் நான் வரேன்… நீ இப்போ போ.”
“எதுக்கு டா?”
“போனால் தெரியப் போகுது.”
“சரி… நீ உடனே வா.” என்றுவிட்டு கிளம்பினாள்.