விலகல் – 30
ராகவன் கோபத்துடன் மேடையை நோக்கிச் செல்லவும், ஹரீஷ் சென்று ஒலிபெருக்கியை(மைக்) அணைத்திருந்தான்.
அதனால், ராகவன் பேசியதோ… திவ்யா பேசியதோ… ஜனனி மற்றும் ராஜாராமை தவிர, வேறு யாருக்கும் கேட்கவில்லை.
திவ்யா ராஜாராமிடம், “இவரோட ரெண்டாவது மனைவி என் பிறப்பை பற்றி இகழ்வா சொல்றதை மாதிரி, எல்லோரும் பேசணும்னா உண்மையை சொல்லச் சொல்லுங்க…! என் மேல் உண்மையிலேயே கொஞ்சமாச்சும் பாசம் இருந்தால், என் நிம்மதியை கெடுக்காமல் இங்கிருந்து போகச் சொல்லுங்க.” என்றாள்.
திவ்யா ராஜாராமை ‘அப்பா’ என்று அழைத்ததை கேட்டே செயலற்று நின்றிருந்த ராகவன் திவ்யா அடுத்து பேசியதை கேட்டு உயிருடன் மரித்தார் என்று தான் சொல்ல வேண்டும்… மூளை மரத்துப் போய், கண்கள் மகளை பார்த்தபடி நிலைகொத்தி நின்றார்.
‘இதற்கு மேல் நான் உயிருடன் இருக்கனுமா!’ என்று அவரது மனம் கூக்குரலிட்டதை யாரும் அறியவில்லை. ஒருவேளை திவ்யா அவர் முகத்தைப் பார்த்திருந்தால் புரிந்து கொண்டிருப்பாளோ என்னவோ!
ராஜாராமின் கண்ணசைவில், இருவர் ராகவனை அழைத்துச் செல்ல, ஹரீஷ் ஒலிபெருக்கியை இயக்கினான்.
ராஜாராம் திவ்யாவை அணைத்துப் புன்னகைத்தபடி, “திவ்யாவோட அப்பா நான்னு சொல்லிக்க, நான் ரொம்ப பெருமைப் படுறேன்…” என்று பெருமையுடன் கூறினார்.
திவ்யா புன்னகைத்தாள்.
ராஜாராம், “மிஸ்டர் ராகவனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றதும், ஜனனி அவரை முறைத்தாள்.
சபை நாகரிகத்திற்காக அவர் அப்படி சொன்னார் என்பதை புரிந்துக் கொண்ட திவ்யா, அமைதியாக இருந்தாள்.
“இனி ப்ரோக்ராம் தொடங்கலாம்.” என்று கூறி ஒலிபெருக்கியை விட்டு அகன்றவர், இரு மகள்களையும் பார்த்து, “நீங்க கீழே போய் உட்காருங்க… நான் வரேன்.” என்றார்.
பிறகு விருந்தினர் அருகே சென்று, “நாம் கீழே உட்கார்ந்து ப்ரோக்ராம்ஸ் பார்க்கலாம் சார்.” என்று அழைத்துச் சென்றார்.
மேடையில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட, மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கீழே தங்களுக்கென போடப் பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
மேடையை விட்டு இறங்கும் போதே, ஜனனி திவ்யாவின் கையை பற்றி மகிழ்ச்சியுடன், “சூப்பர் கா… தேங்க்ஸ் கா… ஐ லவ் யூ கா.” என்றாள்.
திவ்யா புன்னகையுடன், “எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும்.” என்றாள்.
ஜனனி, “அப்போ ஏன் என்னை மாதிரி ஐ லவ் யூ சொல்லல…! ஓ! அது மாம்ஸ்க்கு மட்டுமா.” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.
“ஏய் வாலு”
“உன் தங்கை வாலா தானே இருப்பேன்.”
“அது சரி” என்று மெலிதாக சிரித்தபடி பார்வையை சுழற்றினாள். அவள் பார்வை ராகவனையும், ஹரீஷையும் தேடியது.
ஜனனி, “யாரை தேடுற? மாம்ஸ் ஆ?”
“அவரை மட்டுமில்லை.”
“ஓ! அந்த ஆளை ஷ்… சாரி கா… அப்பா திட்டியும் என்னால் மாற்ற முடியல…”
திவ்யா ஒட்டாத சிரிப்புடன், “விடு”
“அவர் பாமிலியோட கிளம்பிப் போனதை பார்த்தேன்.”
“ஓ” என்று சுரத்தே இல்லாமல் கூறியவளின் பார்வையில், ஹரீஷ் தென்பட்டான். மனதை அரித்துக் கொண்டிருந்த அழுத்தத்தையும், சிறு கவலையையும் மீறி அவள் கண்கள் பிரகாசித்தன.
இவ்வளவு நேரமும், அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கைபேசியை சுட்டிக் காட்டவும், அவள் கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
அதில் ஹரீஷிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
“மேடம் தங்கையை பார்த்ததும், என்னை மறந்துட்டீங்க.” என்று அனுப்பி இருந்தான்.
சட்டென்று கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்க்க, அவன் உடனே கைபேசியில் அவளை அழைத்தான்.
அவள் அழைப்பை எடுத்ததும்,
“ஹே லூசு… நான் சும்மா தான் விளையாட்டுக்குச் சொன்னேன்”
“….”
“இப்படி அனுப்பினா கோபப்பட்டு என்னை திட்டுவ… அப்புறம் சமாதானம் செய்யனு உன்னை டைவர்ட் செய்ய நினைத்தேன்டா… உன்னை பற்றி எனக்கு தெரியாதா!”
அவள் அமைதியாகவே இருக்கவும்,
“தியா பேசுடா” என்று பரிவுடன் கூறினான்.
அவள் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, “எனக்கு உன் தோளில் சாய்ந்துக்கணும் போல் இருக்குது.” என்றாள்.
“சரி, நான் பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் மரத்துக்கிட்ட நிற்கிறேன்.”
“ஹும்ம்”
“சரி, நான் அங்கே போறேன்… போனை வைக்கட்டுமா?”
“ஹூம்ஹும்” என்றபடி மறுப்பாக தலையை அசைத்தாள்.
“என்னடா!”
“…”
“என் தியா தைரியமானவ தானே!”
“ஹும்ம்”
“நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன்டா… நீ எதுக்கும் கலங்கக் கூடாது.”
“ஹும்ம்”
“நான் இப்போ வைக்கிறேன்… ரெண்டு நிமிஷத்தில் அங்கே இருப்பேன்.” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
அவள் ஜனனியை தேட, அவளோ சற்று தள்ளி நின்று பவித்ரா மற்றும் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் அருகே சென்றவள்… அவர்கள் முகத்தை பார்க்காமல், “நான் ரிஷி கிட்ட பேசிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு சென்றாள்.
விஜய் சற்று கவலையுடன் போகும் அவளையே நோக்க,
ஜனனி, “என்னாச்சு?”
பவித்ரா, “திவி டிஸ்டர்ப்ட்டா இருக்கா.” என்றவள்
விஜய்யை பார்த்து, “ஹரி சார், அவளை மாத்திடுவார்டா… கவலைப்படாதே!”
ஜனனி, “என் கிட்ட சிரிச்சு தானே பேசினா!”
“வெளியே சிரிச்சாலும், உள்ளுக்குள் உடைந்து போய் தான் இருக்கிறா…”
“ஏன்?”
பவித்ரா, “என்ன தான் அவளோட அப்பாவை அவ வெறுத்தாலும், அவர் கஷ்டப்படும் போது இவளும் வருந்தத்தான் செய்வா.”
“அந்த ஆளுக்காக அக்கா ஏன் வருந்தணும்?”
“அவளோட பதினைந்தாவது வயது வரை, அன்பை கொட்டி வளர்த்து இருக்கிறார்… அவளுக்கு அவ அப்பாவை ரொம்ப பிடிக்கும்… அதுவும் சாரும்மா இறந்த பிறகு, அப்பா கூட இன்னும் க்ளோஸ் ஆகிட்டா… அவருக்கும் இவள் தான் எல்லாம்…”
“அப்போ… எப்படி சூர்யா வந்தான்?”
“ஜனனி, சில விஷயங்களுக்கு நாம விளக்கம் சொல்ல முடியாது… எது எப்படி இருந்தாலும், அவர் திவ்யா மேல் உயிரையே வைத்திருந்தார். இப்பவும் அப்படி தான்…”
“நீங்க சொல்றதை என்னால் ஏத்துக்க முடியலை… அவரால் தான் அக்கா கஷ்டப்படுறா…”
“இருக்கலாம். ஆனா பாசத்தை கொட்டி வளர்த்தாரே! அவர் தானே அவளை சந்தோஷமா வைத்திருந்ததும்… ஒருவேளை உன் அம்மா..”
“அக்காவுக்கும் அவங்க தான் அம்மா… அப்பாவும் எங்களுக்கு ஒருவர் மட்டும் தான்.” என்று முறைப்புடன் கூறினாள்.
பவித்ரா, “சாரி… உங்களுடைய அம்மா உண்மையை சொல்லாமல் இருந்து இருந்தால், இன்னமும் அவரோட பாசத்தில் தானே வாழ்ந்துட்டு இருப்பா… தான் அனாதை என்று அவள் மறுகியதை நிச்சயம் தன் அன்பால் போக்கி இருப்பார்… அவர்…”
“அப்போ நாங்க தான் அக்காவோட சந்தோஷத்தை கெடுத்துட்டோம்னு சொல்றீங்களா?” என்று கோபத்துடன் வினவினாள்.
விஜய், “பவி, இப்போ எதுக்கு இந்தப் பேச்சு! விடு.”
ஜனனி, “அது எப்படி! எப்படி நீங்க அப்படி சொல்லலாம்?”
பவித்ரா, “நான் உங்களை எதுவும் தப்பா சொல்லல… அவர் பொசிஷனை சொன்னேன்… அது கூட திவிக்கு அவர் மேல் இருக்கும் பாசத்தை புரிய வைக்க… அவ்ளோ தான்…! நான் சொல்லியிருந்தது உன்னை ஹர்ட் செய்திருந்தால், ரொம்ப சாரி.”
“ஜனனி அம்மா கூட போய் உட்காரு.” என்ற ராஜாராமின் குரலில் பவித்ராவும் விஜய்யும் சிறு பதற்றம் கொள்ள,
ஜனனி, “அப்பா இவங்க…” என்று ஆரம்பிக்க,
அவர், “நானும் கேட்டேன்… பவித்ரா சொன்னதில் தவறு எதுவும் இல்லை… நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல், மற்றவர்கள் கோணத்தில் இருந்தும் நாம் யோசிக்கணும்.”
ஜனனி அப்பொழுதும் கோபத்துடன், “அந்த ஆளுடன் போய் நாணயத்தை கம்பேர் செய்றீங்களே… அவரிடம் நேர்மை இருக்கிறதா?”
“முதலில் மரியாதையா பேசிப் பழகு… இல்லை, திவிமா வருத்தப் படுவா.”
“ஹும்ம்… அக்காவுக்காக முயற்சிக்கிறேன்.”
“சரி, நீ அம்மா கிட்ட போ” என்றவர், அவள் சென்றதும் பவித்ரா மற்றும் விஜய் பக்கம் திரும்பி, “திவ்யா எங்கே?”
பவித்ராவும், விஜயும் சிறிது தயங்க
அவர், “ஹரீஷை பார்க்க போயிருக்காளா?” என்று மென்னகையுடன் வினவினார்.
இருவரும் ‘ஆம்’ என்பது போல் தலையை அசைத்தனர்.
“சரி, நீங்க போய் ப்ரோக்ராம்ஸ் பாருங்க”
“சரி சார்” என்று கூறி இருவரும் சென்றனர்.