லேசாகச் சிரித்தவன், “தங்களின் பெரிய மனசுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம். அன்னைக்கு பவியும் விஜய்யும் பாவம்… பவி வீட்டுக்கே வந்து சண்டை போட்டா தெரியுமா?”
“பார்டா! என் கிட்ட சொல்லவே இல்லை.”
“நீ கொடுத்த தண்டனைக்குப் பிறகு, என் பெயரைக் கூட சொல்லும் தைரியம் அவளுக்கு வந்திருக்காது.”
“எனக்காக தான் செய்தாங்க. பட், எனக்குனு இருக்கிற உறவு நம்பிக்கை எல்லாம் அவங்க மட்டும் தானே…? முறைக்காதடா.. நானும் அப்போ இருந்த நிலவரத்தை தான் சொல்றேன்.
அவங்க என் கூட தானே நின்னிருக்கணும். விஜய் எப்போதுமே என் நலனைக் கருதி, எனக்கு பிடிக்கலைனாலும் சிலதை செய்வான். ஸோ அவன் மேல் கூட பெருசா கோபம் இல்லை.
ஆனா, பவி இப்படி செய்வானு நான் நினைக்கலடா… நடுல வீக்-எண்டு வந்ததால் தான், மூனு நாள் அவளுடன் பேசாத மாதிரி ஆகிருச்சு. இல்லைனா ஒரே ஒரு நாள் தான், அவ பக்கத்துல இருந்துட்டே விலகி இருக்கணும் நினைத்தேன்.
உன் கிட்டயாவது வாயால் தான் சண்டை போட்டா… நான் பேசியதும் எனக்கு செம்ம அடி.”
“பவியும் விஜய்யும் கிடைத்ததில் நீ ரொம்ப லக்கி”
“உனக்கு ஜந்துவும், சாரி.. நந்துவும், கருத்து கந்தசாமியும் கிடைத்தது போல்.”
“ஹும்ம்… காதலை சொன்னதில் வேணா நான் இரண்டாவதா இருக்கலாம். ஆனால் முதலில் காதலித்தது நான் தான்.”
அவள் இன்ப அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அவன் மென்னகையுடன், “இங்கே நீ கிரிகெட் விளையாடினப்ப, ஸ்க்ரீன் பின்னாடி இருந்து பார்த்தது நான் தான்…”
“ப்ராடு.”
“தியேட்டரில் நீ அந்த மாமாவை கலாட்டா செய்தது… என் கிட்ட நேர்கொண்ட பார்வையோட திடமா பேசியதுனு எல்லாத்தையுமே ரசித்தேன். அப்புறம் உன்னை இங்கே பார்த்தேன்… கோவிலில் நீ விக்கி அக்கா கிட்ட பேசியது, எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஆனா அப்போ காதல்லாம் இல்லை… அப்புறம் என்னையும் அறியாம என் மனசுக்குள் நீ புகுந்துட்ட…”
“அடப்பாவி… லவ் செய்தவளை கொஞ்சம் கூட யோசிக்காம, எல்லோர் முன்னாடியும் அடிச்சு இருக்க.”
“அது அப்போ எனக்கு என் மனசு தெரியாதே… இருந்தாலும், நீ செய்தது தப்பு தானே?”
“நீ செய்தது அதை விட பெரிய தப்பு.”
“சாரிடி” என்றவன் அவள் வலது கன்னத்தில் முத்தமிட்டான்.
“நீ அடிச்சது லெப்ட் கன்னம்.”
“அங்கேயும் கொடுத்துட்டா போச்சு” என்றபடி முத்தமிட வர,,
அவனை தள்ளி விட்டவள், “ஒன்னும் வேணாம் போ” என்றாள்.
“என் செல்ல குட்டிக்கு கோபம் போக இன்னொரு விஷயம் சொல்லவா?”
அவள் அமைதியாக இருக்க,
“உன்னைப் பற்றி சேர்மன் சார் சொன்னதும், அவரிடம் பொண்ணு கேட்டேன் தெரியுமா?” என்று அவன் பெருமையுடன் கூற,
அவளோ எழுந்து நின்று இடுப்பில் கைவைத்தபடி, அவனை முறைத்தாள்.
அவன், “என்ன பேபி?”
“ஸோ, உன் காதலை என்னிடம் சொல்றதுக்கு முன்னாடி ஊரில் இருக்க எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கிற! என்ன பார்க்கிற! அரவிந்த் சாருக்கும், நந்துவுக்கும் என் கிட்ட சொல்றதுக்கு முன் தெரியும் தானே!”
அவன் ஆம்… என்று பாவம் போல் தலையை ஆட்ட,
அவள் இன்னும் அதிகமாக முறைத்தாள்.
“ஹே குட்டிமா, அப்படி இல்லைடி” என்றபடி அவளை அமர வைத்தவன், “என் செல்லக் குட்டி… புஜ்ஜு குட்டி…” என்று பலவாறு கொஞ்சி, கெஞ்சி அவளை மலை இறக்கினான்.
அதன் பிறகு இருவரும் பொதுவான விஷயங்களில், தங்களின் ஈடுபாடு, விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசினர்.
ஹரீஷ், “உனக்கு மேலே படிக்கனுமா…? இல்லை, வேலைக்கு போகணும்னு நினைக்கிறியா?”
“வேலைக்குப் போறேன்… நான் பைனல் இயர் முடிச்சதும் கல்யாணம் செய்துக்கலாமா?”
அவள் நெற்றியை காதலுடன் முட்டியவன், “செய்துக்கலாமே!” என்றான்.
அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும்,
“இந்த நேரத்தில் யாரு?”
“பூஜை வேளை கரடியா?”
“அப்படி சொல்லலை… நாம இங்கே இருக்கிறது தெரியாதேனு கேட்டேன்.”
“லன்ச் வந்திருக்கும்…”
“சூப்பர் டா… வாங்கிட்டு வா… என்ன பார்க்கிற! உன் கிட்ட பேசிட்டு இருந்தால், பசியே தெரியலைனு வசனமெல்லாம் பேச முடியாது… உன் கிட்ட பேசி பேசி செம்ம பசி வந்திருச்சு.” என்றாள்.
அவன் மென்னகையுடன் எழுந்து சென்று உணவை வாங்கி வந்து மேசையில் வைத்தான்.
இருவரும் உணவை முடித்துக் கொண்டு, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு கிளம்பி கல்லூரிக்குச் சென்றனர்.
காலையில் செய்தது போலவே, இருவரும் வெவ்வேறு வழியில் உள்ளே சென்றனர். திவ்யா பவித்ராவுடன் அமர்ந்து கொள்ள, ஹரீஷ் அரவிந்துடன் அமர்ந்து கொண்டான்.
அரவிந்த், “என்னடா… கல்யாணத்துக்கு முன் பஸ்ட் டே கொண்டாடிட்டு வரியா?”
ஹரீஷ் முறைக்கவும்,
அரவிந்த், “ட்ரைலர் கூட ஓட்டாமயா வந்திருப்ப!”
‘ட்ரைலர்’ என்றதும் திவ்யா சொன்னதை நினைத்துப் பார்த்தவன், முகத்தில் புன்னகை அரும்பியது.
“என்னடா! நிறைய ட்ரைலர் ஓடியிருக்கும் போல”
“அடங்குடா… அவ உன் ஸ்டுடென்ட்”
“உன் மனசை மாற்ற, நான் பேசியபோது இது தெரியலையா!”
“டேய்… இம்சை செய்யாதடா”
“இனி உன் தியாவின் இம்சைகள் தானே உனக்கு…..”
“போதும்டா… தனியா என்ன வேணா ஓட்டித்தொலை… இப்போ விடு.”
“பொழச்சு போ”
திவ்யா வந்ததும் அங்கே வந்த விஜய், “என்ன மேடம், முகம் பிரகாசமா இருக்குது… ஒரே ரொமன்ஸ் தானா!”
“டேய்…”
“பார்டா! நம்ம திவி கூட வெட்கப்படுறா”
“டேய்… சும்மா இருடா…” என்றபடி அவனை இரண்டு அடி அடித்தாள்.
பவித்ரா தோழியின் மகிழ்ச்சியை சந்தோஷத்துடன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஜய், “அம் வெரி ஹாப்பி மச்சி.” என்று நெகிழ்ச்சியுடன் கூறினான்.
பவித்ரா திவ்யாவின் கையை இறுக்கமாகப் பற்றி, ‘எனக்கும் ரொம்ப சந்தோசம்’ என்று சொல்லாமல் சொன்னாள்.
அப்பொழுது “அக்கா” என்று கலங்கிய கண்களுடன், சூர்யா ஓடி வந்தான்.
அவன் அவள் அருகே வரும் முன் எழுந்து கொண்ட திவ்யா, அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு, “எப்படிடா இருக்க?”
“நீ ஏன் என்னுடன் பேசவே இல்லை? வீட்டுக்கு வரதே இல்லை? நான் எவ்ளோ மிஸ் செய்றேன் தெரியுமா?” என்றபடி அழ ஆரம்பித்தான்.
அவன் கண்களை துடைத்தவள், “என் தம்பி ப்ரேவ் பாய் ஆச்சே! அழவே மாட்டான்.”
“அப்போ, நீ என் கூடவே இருப்பியா?”
“அது முடியாதுடா… ஆனா, இனி அக்காவை தேடினா நீ வந்து என்னை பாரு.”
“ப்ராமிஸ்” என்றபடி கையை நீட்ட,
அவளும், “ப்ராமிஸ்” என்றபடி அவன் கை மீது கை வைத்தாள்.
“சித்தி வந்திருக்காங்களா?”
“ஆமா… அப்பாவும் அம்மாவும் முன்னாடி இருக்காங்க.”
“ஒரு நிமிஷம் இரு.” என்றவள் தன் கைபேசியில் ஹரீஷை அழைத்தாள்.
அவன் அழைப்பை எடுத்ததும், “உடனே நான் இருக்கும் இடத்திற்கு வா.”
“என்னடி சொல்ற?”
“ரிஷி… நீ உடனே வர…”
அவளது குரலில் இருந்து, “ஏதும் பிரச்சனையாடா?”
“இல்லை… ஆனா கொஞ்சம் முக்கியமான விஷயம் தான் வா.”“சரி வரேன்” என்று அழைப்பை துண்டித்தவன், அரவிந்துடன் அங்கே வந்தான்.