அடுத்த பத்தாவது நிமிடம், இருவரும் இருசக்கர வண்டியில் பயணித்தனர்.
அவன், “என்ன சொல்றாங்க உன் பிரெண்ட்ஸ்?”
“கிண்டல் செஞ்சாங்க… ரெண்டு பேரும் செம்ம ஹாப்பி… உன் காட் பாதர் என்ன சொன்னார்?”
“அவரும் ரொம்ப ஹாப்பி… பார்த்து போயிட்டு வாங்கனு சொன்னார்.” என்றவன், “எனக்கு மட்டுமா அவர் காட் பாதர்?” என்று வினவினான்.
“ஹும்ம்… எனக்கும் காட் பாதர்… பாதர் எல்லாம் அவர் தான்.” என்று அவள் கூற, சட்டென்று வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்தான்.
அவள், “நமக்குள் எந்த ஒளிவு மறைவிற்கும் இடமில்லை… அதான் என் மனதில் உள்ளதை சொன்னேன்… ஆனா, இதை அவரிடம் சொல்லிடாதே… நான் விலகி இருப்பது தான் நல்லது.”
“யாரோ செய்த தப்புக்கு, அவருக்கு ஏன் தண்டனை தர?”
“நான் அவருடன் சேர்வது தான் அவருக்குத் தண்டனை… என்னை யாருன்னு சொல்வார்? அவர் மனைவியின் மகள்னு சொல்ல முடியுமா? விடு ரிஷி… எனக்கு நீ… உனக்கு நான்… நமக்கு நம் குழந்தைகள்.”
அவளது முடிவை அவன் ஏற்கவில்லை என்றாலும், அவள் சொல்வது யோசிக்க வேண்டியதாக இருக்கவும், அவன் மெளனமாக வண்டியை கிளப்பினான்.
அவள் அமைதியாகவே வரவும்,
அவன், “குழந்தைகள்னு சொன்னியே! எத்தனை?
“ரெண்டு… உன்னை போல் ஒரு பொண்ணு, என்னை போல் ஒரு பையன்.” என்று கற்பனையுடன் சொன்னவளின் கரங்கள், அவன் இடுப்பை வளைக்கவும், வண்டி அவன் கையில் பறந்தது.
வீட்டிற்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்றவன் புன்னகையுடன், “வெல்கம் மை டியர் ரௌடி பேபி.” என்று கூறி சிரம் தாழ்த்தினான்.
அவள் புன்னகையுடன் வலது காலை உள்ளே வைத்து நுழைந்தாள்.
உள்ளே வந்ததும் ஜன்னலை கண்டவள், அன்றைய நினைவில் அவனைப் பார்த்தாள். அவனும் அதே நினைவுடன் அவளைப் பார்த்தான்.
சில நொடிகள் இருவர் விழிகள் மட்டும் காதல் பேசியது.
பின் அவள், “போட்டோவை அனுப்பி ஐ லவ் யூ னு சொல்லியிருக்க… இன்னைக்கு தான் உன் வாட்ஸ்-அப் மெசேஜ் எல்லாம் பார்த்தேன்… அந்த போட்டோ ரொம்ப அழகா இருக்குதுல…!”
(அன்று நந்தகுமார் ஜன்னல் அருகே இருவரையும் எடுத்த புகைப்படத்தை புலனத்தில் அனுப்பி, தன் காதலை சொல்லி இருந்தான்)
அவனோ காதல் கலந்த சிறு தாபத்துடன் நெருங்கி அவளது இடையை வளைத்தபடி, “கொஞ்ச நேரம் ரிஷிகேஷா இல்லாமல், உன் ரிஷியா இருக்கவா?” என்று கிசுகிசுப்பான குரலில் வினவினான்.
வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க, அவனை விழிவிரித்து நோக்கினாள்.
“ஐ லவ் யூ தியா.” என்றவன், அவளது இதழை தன் இதழ் கொண்டு சிறை செய்திருந்தான்.
அவள் மூச்சுக் காற்றுக்கு திணறியபோது இதழைப் பிரித்தவன், “சாரி டி… உன்னை கஷ்டபடுத்திட்டேன்.” என்று வருந்திய குரலில் கூறினான்.
“இல்லையே, என் உதட்டை நீ கடிக்கவே இல்லையே!”
அவளை முறைக்க முயற்சித்து தோற்றவன், மென்னகையுடன் அவள் நெற்றியை முட்டி, “நான் எதை சொன்னால் நீ எதை சொல்ற!” என்றான்.
“நீ லூசுத்தனம் செய்தா, நானும் அப்படி செய்ய முடியுமா?”
இப்பொழுது அவன் செல்லமாக முறைக்க,
“பின்ன… காதலை சொல்லிட்டு சாரி சொன்ன ஒரே ஆள்.. நீயா தான் இருப்ப!”
“காதலை சொன்னதுக்கும், சாரி சொன்னதுக்கும் நடுவே வேறு எதையும் செய்யலையா!” என்று விஷமத்துடன் கேட்டவனின் கை, அவளது இடையை லேசாக அழுத்தியது.
அவன் கையை பிரிக்க முயற்சித்தபடி, “கேடி… பேச தானே கூட்டிட்டு வந்த…”
“ஏன் பேச மட்டும் தான் செய்யனுமா?” என்றவனின் பிடி இன்னும் இறுகியது.
பலம் கொண்டு அவன் கையை பிரித்தவள், “கல்யாணம் வரை நீ ரிஷிகேஷ்ஷாவே இரு.” என்று கூறி சோபாவில் அமர்ந்தாள்.
கதவை மூடிவிட்டு அவள் அருகே அமர்ந்தவன், அவள் கையை பற்றியபடி பேச வாய் திறக்க,
அவள், “பழசை விடுடா, நீ ஏன் உன் மனதை மறைத்தேனு தான் சொல்லிட்டியே! அதையே ஏன் பேசணும்?”
“ஹும்ம்… ஆனா என் மனதை அடக்க எவ்ளோ பாடுபட்டேன் தெரியுமா! நீ என் கிட்ட பேசும் போது, சிரிக்கும் உன் கண்களை பார்க்கும் போது, கிளாஸ்ஸில் என்னை சைட் அடிக்கும் போது, கண் சிமிட்டிய போதுனு பல இருக்குது… அதுவும் அன்னைக்கு லேப்பில் உன் மனசை அழகா சொல்லி நீ ப்ரபோஸ் செய்தப்ப, எனக்கு வார்த்தையே வரலை…! உன் காதலை வேணாம்னு சொல்ற என் அனாதரவான நிலைமையை அன்னைக்கு நான் அறவே வெறுத்தேன்…” என்றவன் அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான்.
அவள் தாய்மையுடன் அவன் தலையை கோதிவிட, “எனக்கு ஒரு தாயா, தோழியா, காதலியா, மனைவியா கடைசி வரைக்கும் நீ வேணும்டி.” என்றவனது குரல் கரகரத்தது.
அவனது நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவள், “நிச்சயமா இருப்பேன்டா… நான் உன்னுடைய தியா தான்.” என்றாள்.
அவளது கையை நெஞ்சில் வைத்து பிடித்துக்கொண்டவன், கண்களை மூடி அமைதியாக இருந்தான்.
சில நொடிகள் கழிந்தும் அவன் கண் விழிக்க வில்லை என்றதும், தலையை கோதியபடி அவள், “என்னடா?” என்று பரிவுடன் கேட்டாள்.
கண்களை திறந்தவன், “என்னால் இன்னும் கூட நம்ப முடியலடா…” என்றவன் அவள் கன்னத்தை லேசாகப் பற்றி, “இந்தப் பொக்கிஷம் எனக்கே எனக்கானு நம்பத் தான் முடியல…” என்றவன் ஒரு நொடி இடைவெளி விட்டு,
“சின்ன வயசில் விவரம் தெரிவதற்கு முன், அன்புக்கு ஏங்கியிருக்கிறேன்… பொருட்கள் மீது கூட ஆசைப்பட்டு ஏங்கி இருக்கிறேன். ஆனா, விவரம் தெரிந்து நான் ஆசைப்பட்டு ஏங்கிய ஒரே விஷயம், உன் அன்புக்கும் காதலுக்கும் தான்.”
“நீ நினைப்பது போல், நான் பொக்கிஷம் எல்லாம் இல்லடா”
“நீ விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம்டி. உறவுகளை விலக்கிய நீ உன் மொத்த அன்பையும், காதலையும் எனக்குத் தானே தர நினைக்கிற!”
“நீ மட்டும் என்னவாம்!”
“நீயும் நானும் ஒன்னா? எனக்கு தான் அன்பை காட்ட யாரும் இல்லையே.”
அவன் வாயின் மீது ஒரு அடி போட்டவள், “உனக்கு தான் நான் இருக்கிறேனே!”
“முன்னாடி இருந்த நிலவரத்தை சொன்னேன்டி”
“ஹும்ம்… நான் உன் காதலை பொய்னு சொல்லலடா” என்று வருத்ததுடன் சொன்னவள், “யாரும் வேணாம்னு விலகிய நான்… என்னை எனக்காகவே விரும்பி காதலை சொல்லி, அன்பு மழை பொழியும் ஒருத்தன் வேணும்னு நினைத்திருந்தேன்…
என்னை போல் நீயும் என்னைப் பற்றி அறியும் முன் காதலை சொல்லணும்னு நினைத்தேன். நீ அவர் கிட்ட பேசியது, அவர் என்னை பற்றி சொன்னதுனு.. எனக்கு பழசை வேற கிளறி விட்டிருச்சு… நீயும் எனக்கே எனக்குனு இல்லையோனு தவித்தேன்……” என்றபோது, அவளது குரலும் கண்களும் கலங்கிவிட…
அவன் சட்டென்று எழுந்து, அவளை தன் தோள் சாய்த்துக் கொண்டான்.
அவன், “ரொம்ப சாரி டா… நான்…”
அவன் வாயை மூடியவள், “அதான் அன்னைக்கே சொல்லிட்டியே… விடு… உன் நிலையை நீ சொன்னது போல், என் நிலையை உனக்கு சொன்னேன்… அவ்ளோ தான்… விடு…”
“ஹும்ம்… ஒரு வாரம் எதுக்கு என்னை தவிக்கவிட்ட!”
“ஏன் உனக்கு தெரியாதா?”
“முதல்ல என் மனசை மறைச்சதுக்கா…!”
“ஹும்ம்… ஐயோ பாவம்னு அஞ்சு நாள் மட்டும் தவிக்க விட்டேன்.”