திவ்யா, “இவன்களை மட்டும் வெளியே போகச் சொல்லலை… நாங்க மட்டும் ஏன் போகணும்?”
ஹரீஷ்(மாணவன்) அலட்டிக்கொள்ளாத பாவனையுடன், பாடத்தில் இருந்து சில கேள்விகளை கேட்டான்.
விஜய் பதில் தெரியாது நிற்க, திவ்யா மூன்றில் ஒரு கேள்விக்கு பதிலைச் சொன்னாள்.
ஹரீஷ்(மாணவன்), “அவுட்” என்றான்.
திவ்யாவும், விஜயும் வெளியே சென்றது போல் சற்று தள்ளி நின்றனர்.
ஹரீஷ்(மாணவன்) மீண்டும் பலகையில் எழுதுவது போல் பாவனை செய்ய, வகுப்பு முடிந்தது போல் மணி அடித்தது.
திவ்யாவும் விஜயும் உள்ளே வர ஹரீஷ்(மாணவன்), “நடத்தியதை நாளைக்கு டென் டைம்ஸ் எழுதிட்டு வாங்க.”
“ஸ்கூலில் கூட இம்போஷிஷன் கொடுக்கிறது இல்லை… நீங்க இன்னும் வளரனும் சார்.” என்று திவ்யா நக்கல் குரலில் கூற,
விஜய், “இந்த உயரமே அதிகமா இல்லை மச்சி!” என்று கூற, ஹரீஷ்(மாணவன்) இருவரையும் முறைத்து விட்டுச் சென்றான்.
அதன் பிறகு தங்ககுமார் போல் ஒரு மாணவன் வர,
திவ்யா சந்தேகம் என்ற பெயரில், ‘நீங்க பதினெட்டு கேரெட் தங்கமா ,இருபத்துயிரண்டு கேரெட் தங்கமா? கோழியா, முட்டையா! எது முதலில் வந்தது சார்?’ போன்ற கேள்விகளை கேட்க தங்ககுமார் (மாணவன்) பதில் தெரியாமல் திணறுவது போல் நடித்தனர்.
இப்படி ஒவ்வொரு ஆசிரியரைப் போல் நடித்துக் காட்ட, மாணவர்கள் இடையே சிரிப்பலையும் கரகோஷமும் எழுந்தது.
இவர்கள் நாடகத்திற்கு பிறகு இரண்டு நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
பிறகு, திவ்யாவின் இசைக் குழு மேடை ஏறியது. ஹரீஷ் ஆரவத்துடன் நிமிர்ந்து அமர்ந்தான்.
அந்த குழுவில் சில மாணவர்கள் இசை வாத்தியங்களுடன் அமர்ந்திருக்க, திவ்யாவை சேர்த்து இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் முன்னணிப் பாடகர்களாக இயங்க, மூன்று மாணவிகளும் இரண்டு மாணவர்களும் பின்னணி (கோரஸ்) பாடகர்களாக இயங்கினர்.
அரை மணி நேரம் பல பாடல்களை பாடினர். திவ்யா பாடியபோது மாணவர்கள் பக்கமிருந்து விசில் சத்தமும், கூச்சலும், அதிகமாக இருந்தது.
அரை மணி நேரம் கழித்து திவ்யாவை தவிர, மற்ற பாடகர்கள் அமர்ந்து விட, திவ்யா மட்டும் மைக்கை பிடித்துக்கொண்டு சற்று முன்னால் வந்து நின்றாள்.
திவ்யா புன்னகையுடன், “இது எனக்கு கடைசி வருஷம். ஸோ கடைசியா ஒரு ஸ்பெஷல் சாங்.” என்றவள் ஹரீஷை பார்த்தபடி பாட ஆரம்பித்தாள்.
‘இவ்வளவு நேரம் ஏன் பார்க்கலை..’ என்பது போல் முறைத்தவன், அவள் பாட ஆரம்பித்ததும் சுற்றத்தை மறந்து காதலுடன் அவளை மட்டும் பார்த்தான்.
‘அச்சம் என்பது மடமையடா!’ என்ற திரைப்படத்தில் இருந்து ‘தள்ளிப் போகாதே’ பாடலை பெண்பாலாக மாற்றி பாட ஆரம்பித்தாள்.
“ஏனோ வானிலை மாறுதே…
மணி துளி போகுதே…
மார்பின் வேகம் கூடுதே!
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே!
கண்ணெல்லாம்… நீயேதான்… நிற்கின்றாய்…
விழியின் மேல் நான் கோபம் கொண்டே இமை மூடிடு என்றேன்…
……………………………………………………………………
எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது…
கடல் போல பெரிதாக நீ நின்றாய்…
சிறுமி நான் சிறு அலை மட்டும் தான் பார்க்கிறேன்… பார்க்கிறேன்…
………………………………………………………………………
………………………………………………………………………
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே!
கை நீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன்… ஏன் அதில் தோற்றேன்!!
………………………………………………………………………
தள்ளிப் போகாதே…… எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே…
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே…
…………………………………………………………………………………….
………………………………………………………………………………………
கனவினில் தெரிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய்…….”
அவன் சட்டென்று எழுந்து சென்றுவிட, அவள் தவிப்புடன் தொடர்ந்து பாடி முடித்தாள்.
அவள் பாடி முடித்ததும், திரைக்கு பின்னால் இருந்து மேடைக்கு வந்த விஜய், “இந்த காலேஜ் வரலாற்றில் முதல் முறையாக…” என்று கூறி ஒரு நொடி நிறுத்தியவன், குரலை உயர்த்தி,
“இப்போ நமக்காக, ஹரி சார் பாடப் போகிறார்.” என்றதும் கூச்சலுடன் பலத்த கரகோஷம் எழுந்தது.
அடுத்த இரண்டு நிமிடங்களில், முன் பக்கமாக மேடை ஏறி வந்த ஹரீஷ் விஜயிடமிருந்து மைக்கை வாங்கிப் புன்னகையுடன், “ஹாய் பிரெண்ட்ஸ்” என்றதும், மாணவர்கள் கரகோஷத்துடன் கூச்சலிட்டனர்.
ஹரீஷ், “என்னை போல் நடித்த தினேஷிற்கு என் பாராட்டுக்கள்…”
கரகோஷம் அடங்கியதும்,
அவன், “இவர்களை போல் நான் பாடகன் இல்ல… பாத்ரூம் சிங்கர் தான்… மாணவர்கள் ஆசைக்காக சில வரிகள் பாடுகிறேன்.” என்றான்.
அவனாக முன் வந்து பாடும் உண்மை அறிந்தவர்கள், ‘என்னமா எடுத்து விடுறா(ன்)ர்’ என்று நினைத்தனர்.
திவ்யா அவனைப் பார்த்தபடி நிற்க, ஹரீஷ் பார்வையாளர்களை பார்த்தபடி ‘என் சுவாச காற்றே’ திரைப்பட பாடலை பாட ஆரம்பித்தான்.
“என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
(இந்த வார்த்தையின் போது மட்டும் திவ்யாவை பார்த்தான்)
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி!
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்
கைகள் தீண்டுமா…
கண்கள் காணுமா… கா
தல் தோன்றுமா
(கஷ்டப்பட்டு பார்வையை பார்வையாளர்களிடம் பதித்திருந்தான்)
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி
இதயத்தை திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…” என்று முடித்தான்.
“வாவ்… கலக்கிட்டீங்க சார்”, “சூப்பர் சார்”, “யாரிடம் காதல் மயக்கம் சார்?” போன்ற வாசங்ககள், விசில் மற்றும் கரகோஷத்தின் நடுவே கேட்டது.
விஜய் வந்து, “பாத்ரூம் சிங்கர்னு சொல்லி, இப்படி கலக்கிட்டீங்களே சார்!”
ஹரீஷ் புன்னகைத்தான்.
விஜய், “தேங்க்ஸ் அ லாட் சார்… நாங்க கேட்டோம்னு யோசிக்காம, தயங்காம, சூப்பரா பாடியதிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சார்.” என்றான்.
“தாங்க் யூ பிரெண்ட்ஸ்” என்ற ஹரீஷ், தன்னவளை ஒரு நொடி பார்த்துவிட்டு கீழே இறங்கிச் சென்றான்.
அடுத்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வந்து மேடையில் திரையை போட்டதும், வேகமாக மேடைக்குப் பின்புறம் சென்ற திவ்யா, சற்று தனியாக ஒதுங்கி நின்று ஹரீஷை கைபேசியில் அழைத்தாள். அவன் அழைப்பை எடுக்கவில்லை.
“ப்ச்” என்று அவள் சலித்த போது, பின்னால் இருந்து இரு கரங்கள் அவளை அணைத்தது.
இணைய காத்திருப்போம்…