“அவ மட்டும் எப்படி பார்த்தாளாம்?”
“அது சரி… ரெண்டும் ஜாடிக்கு ஏத்த மூடி தான்.”
ஹரீஷ் அமைதியாக இருக்கவும் அரவிந்த், “என்ன டா யோசிக்கிற?”
“காலையிலேயே ப்ராக்டிஸ் இருக்குமா?”
“இன்னும் ரெண்டு நாள் தானே இருக்குது. அதான், இன்னைக்கும் நாளைக்கும் புல் டே ப்ராக்டிஸ் தான்.”
“ஓ…”
“ஏன் கேட்கிற?”
“சும்மா தான்.”
அரவிந்த் சிறு தோள் குலுக்கலுடன் தனது வேலையைத் தொடர்ந்தான்.
சிறிது நேரம் கழித்து ஹரீஷ் வகுப்பிற்குக் கிளம்பவும்,
“உனக்கு இன்னைக்கு காலையில் கிளாஸ் கிடையாதே!”
“மணிமேகலை மேடம் ஹவரை நான் எடுத்துக்கிட்டேன்.”
“எப்படி இருந்த நீ, இப்படி ஆகிட்டடா!”
“ஏன்!”
“செய்றதையெல்லாம் செய்துட்டு இப்படி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி கேட்டா, நாங்க நம்பிடுவோமா! மதியம் உன் ஆளைப் பார்க்க முடியாதுன்னு தானே, இப்போ கிளாஸ் மாத்திக்கிட்ட!”
“அதான் தெரியுதுல! அப்புறம் என்ன கேள்வி? வேலையப் பாரு.” என்று வெளியேறினான்.
அன்று முழுவதும் திவ்யா ஆண்டு விழா பயிற்சியில் மும்முரமாக இருந்ததால், அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை.
அடுத்த நாள் ஆண்டு விழாவிற்கு முன் தினம் என்பதால், வந்ததும் பயிற்சிக்குக் கிளம்பியவள், பயிற்சிக்கு செல்லும் முன் ஆசிரியர் அறைக்குச் சென்றாள். உள்ளே வந்த பிறகு தான், ஹரீஷ் அரவிந்த் மட்டுமின்றி… தங்ககுமாரும் இருப்பதைப் பார்த்தாள். கீழே விழுந்த பேனாவை குனிந்து தேடிக் கொண்டிருந்த தங்ககுமார், அவள் உள்ளே வந்த போது தான் நிமிர்ந்தார்.
அரை நொடி மட்டுமே திடுக்கிட்டு நின்றவள், பின் தங்ககுமார் அருகே சென்று, “ஒரு டவுட் சார்” என்றாள்.
அவர், “என்ன?” என்றதும், அவர் மேசையில் இருந்த அவரது புத்தகத்தை வைத்தே சந்தேகம் என்ற பெயரில், பல கேள்விகளை கேட்டு அவரை திணறடித்தாள்.
அவளது பிறந்தநாள் அன்று அவர் தெரியாமல் சீக்கிரம் வந்ததின் விளைவு தான் இது என்பதைப் புரிந்து கொண்ட ஹரீஷும், அரவிந்தும், சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தனர்.
பத்து நிமிடங்கள் கழிந்தும் அவள் விடுவதாக இல்லை என்றதும் தங்ககுமார், “உனக்கு என் மேல் என்ன கோபம்?” என்று பரிதாபக் குரலில் கேட்டே விட்டார்.
அப்போதைக்கு அவரை விட்டவள், “என்னகென்ன கோபம்?” என்றாள்.
ஹரீஷ் உதட்டோரப் புன்னகையுடன், “எதுக்கும் இனி காலையில் லேட்டாவே வாங்க சார்.” என்றான்.
தங்ககுமார், “இனி சீக்கிரம் வருவேன்… சான்ஸ்சே இல்லை..” என்று கூற,
ஹரீஷ் தங்ககுமார் அறியாமல், திவ்யாவைப் பார்த்து கண் சிமிட்டினான்.
அவனை முறைத்தவள் தங்ககுமாரிடம், “சார், உங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்லவா?”
தங்ககுமார் சந்தேகமாகப் பார்க்கவும்,
“இதில் எந்த உள் குத்தும் இல்லை சார்” என்றவள் ஹரீஷை பார்த்தபடி, “உங்களுக்கு சேர்மன் சாரிடம் காரியம் ஆகணும்னா, ஹரி சாரை பிடிங்க… இப்போ அவர் தான் சேர்மன் சாருக்கு ரொம்ப(அழுத்தம் கொடுத்து கூறினாள்) நெருக்கமானவர்.” என்றாள்.
ஹரீஷ் அவளை முறைத்தபடி, “சும்மா சொல்றா சார்” என்றான்.
திவ்யாவோ தங்ககுமாரிடம், “நிஜம் சார்… என்னை விட இவர் தான் ரொம்ப க்ளோஸ் இப்போ… இவர் என்ன சொன்னாலும், சேர்மன் சார் மறுபேச்சின்றி கேட்பார்…” என்றவள் ஹரீஷைப் பார்த்து, “இவரை கவனித்தால் தான், இவர் மத்தவங்களை நல்லா கவனிப்பார்னு நினைக்கிறாரோ என்னவோ!” என்றபடி புருவம் உயர்த்தினாள்.
தங்ககுமார், “என்ன சொல்ற?”
திவ்யா புன்னகையுடன் தங்ககுமாரை பார்த்தபடி, ஹரீஷை நோக்கி கையை நீட்டி, “இவரை கேளுங்க… விம் போட்டு விளக்கிச் சொல்வார்.” என்று விட்டு வெளியேறினாள்.
தங்ககுமார் ஹரீஷை பார்க்க,
“அவளுக்கு வேறு வேலை இல்லை சார்” என்றுவிட்டு கைபேசியை எடுத்து நோண்டத் தொடங்கினான்.
படிகளில் இறங்கிக் கொண்டிருந்த திவ்யா, கைபேசியில் வந்த சிறு சத்தத்தில் அதைப் பார்த்தாள்.
“தனியா சிக்கும் போது கவனிச்சுக்கிறேன் உன்னை.” என்று ஹரீஷ் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
அவள் புன்னகையுடன் பயிற்சிக் கூடத்திற்குச் சென்றாள்.
அரவிந்த் ஹரீஷ் காதில், “மறைமுகமா சம்மதம் சொன்ன மாதிரி தெரியுதே!”
“அவ நேத்தே மறைமுகமா சம்மதம் சொல்லிட்டா… அவளை நான் சுத்தல்ல விட்டேன்னு இப்படி செய்றா…”
“ஹும்ம்… யாரிடமெல்லாம் உன்னை மாட்டி விடப் போறாளோ!”
“இதெல்லாம் விஷயமே இல்ல.”
“அது சரி” என்றவன், “உன் ஆள் நாளைக்கு காலேஜ் டே-யில் என்ன செய்யப் போறானு தெரியுமா?”
“என்ன?”
“எப்போதும் ஆர்கெஸ்ட்ரா-வில் மட்டும் தான் இருப்பா, ஆனா இந்த வருஷம் ஏதோ ஸ்கிட் செய்றா போல… அதுவும் இந்த வாரம் தான் ஆரம்பிச்சு இருக்கா… லாஸ்ட் மினிட் ப்ரோக்ரம் எதுவும் அனுமதிக்க மாட்டாங்க. பட் உன் ஆள் தான் விதி விலக்காச்சே!”
“ஆர்கெஸ்ட்ரா-வில் இன்ஸ்ட்ருமென்ட் ப்ளே செய்வாளா, பாடுவாளா?”
“பாடுவா… அவ வாயிஸ்க்கு பலர் ஃபேன்.”
“ஓ”
அரவிந்த் மென்னகையுடன், “பலர் அவளுக்கு ஃஃபேன் ஆக இருக்கலாம், ஆனா அவ உனக்கு தானே ஃபேன்”
‘எதுக்கு இந்த விளக்கம்!’ என்பது போல் ஹரீஷ் பார்க்கவும்,
“உன் ஓ-வில் தெரிந்த பொறாமைக்கு தான் இந்த விளக்கம்” என்றவன், “நாளைக்கு ஃபுல் டே ப்ரோக்ராம்ஸ் இருக்கும்… சாயங்காலம் தான் பெரென்ட்ஸ் & பிரெண்ட்ஸ் வருவாங்க… காலையில் ஸ்டுடென்ட்ஸ் அண்ட் ஸ்டாஃப்ஸ் மட்டும் தான்… உன் ஆள் சாயங்காலம் ஆர்கெஸ்ட்ரா-வில் இருக்க மாட்டா.” என்றான்.
அரவிந்தின் கடைசி வாக்கியத்தில் இருந்து, மாலையில் ராகவன் வருவார் என்பதைப் புரிந்து கொண்டான்.
அதன் பிறகு அவரவர் வேலையில் ஈடுபட்டனர்.
……………
அடுத்த நாள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கல்லூரியே அதிர்ந்தது.
நான்கு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, திவ்யா தனது குழுவுடன் சிறு நகைச்சுவை நாடகத்தை (ஸ்கிட்) இயற்றினாள்.
திரை விலகியது.
இரு மர இருக்கைகள் போடப் பட்டிருக்க, முதல் இருக்கையில் திவ்யாவும் விஜயும் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் இரு மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
ஒரு மாணவன் ‘FINAL CSE CLASS’ என்ற வார்த்தைகள் கொண்ட அட்டையை தூக்கிக் காட்டிவிட்டு, வலது பக்க திரைக்குப் பின் சென்று மறைந்தான்.
இடது பக்க திரை வழியாக, வேறொரு மாணவன் வந்தான்.
“குட் மார்னிங் பிரெண்ட்ஸ்… அம் ஹரீஷ்… உங்களுக்கு கிரிப்டோகிராபி பேப்பர் எடுக்கப் போறேன்.” என்றவனது நடை உடை பாவனை அனைத்தும், தொன்னூறு சதவிதம் ஹரீஷ் போலவே இருந்தது.
அந்த மாணவன் ‘ஹரீஷ்’ என்றதும், ஹரீஷ் சற்று நிமிர்ந்து அமர, அவன் அருகில் அமர்ந்திருந்த அரவிந்த் நமட்டு சிரிப்புடன் மேடையை பார்க்க ஆரம்பித்தான்.
திவ்யா பின்னால் அமர்ந்திருந்த மாணவர்கள், தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வது போல் பாவனை செய்ய, ஹரீஷ் என்று சொல்லிக் கொண்ட மாணவன், “இங்கே வந்து பேசினால் நாங்களும் கேட்போம்” என்றதும், அந்த மாணவர்கள் சிறு பயத்துடன் எழுந்து நின்றனர்.
ஹரீஷ் (மாணவன்) கூர்மையான பார்வையுடன் அவர்களை பார்க்கவும், அவர்கள், “சாரி சார்” என்றனர்.
பின், விரல் அசைவில் அவர்களை அமர சொன்னான்.
பிறகு பாடத்தை பற்றி ஒரு வரியை சொல்லிவிட்டு, திரும்பி நின்று பலகையில் எழுதுவது போல் பாவனை செய்தான்.
திவ்யா, “ஹரீஷ் என்றதும், பிக் பாஸ் ஹரீஷ் மாதிரி சாக்லேட் பாய் மாதிரி இருப்பான்னு பார்த்தா, இப்படி விறைப்பா இருக்கான்!”
விஜய், “அது ஒன்னுமில்லை மச்சி… சட்டைக்கு போடும் கஞ்சியை ப்ரேக்-பாஸ்ட்-க்கு குடிச்சிருப்பாரா இருக்கும்.”
இருவரும் சிரிக்க, ஹரீஷ்(மாணவன்) சட்டென்று திரும்பி இருவரையும் விரலால் சுட்டிக் காட்டி, “அவுட்” என்றான்.