
விலகல் – 28
அன்று காலையில் ஹரீஷும் அரவிந்தும் மட்டும் ஆசிரியர் அறையில் இருந்த போது, உள்ளே நுழைந்த திவ்யா அரவிந்தை பார்த்து, “குட் மார்னிங் சார்.” என்றாள்.
அரவிந்த் நண்பனைப் பார்த்து விட்டு அவளிடம், “குட் மார்னிங்.” என்றான்.
திவ்யா ஹரீஷை பார்த்த படி, “ஊருக்குப் போயிட்டு வந்துட்டீங்களா சார்?”
அரவிந்த் அமைதியாக இருக்க,
“என்ன சார், பதில் சொல்ல மாட்டிக்கிறீங்க?” என்று வினவியவளின் பார்வை, இப்பொழுதும் ஹரீஷிடம் தான் இருந்தது. அவனும், அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அரவிந்த், “நீ என் கிட்டயா கேட்ட?”
“நீங்க தானே ஊருக்கு போயிட்டு வந்திருக்கீங்க?”
“ஆமா… ஆனா உன் பார்வை ஹரி கிட்ட இருக்கே! அதான் அவனை கேட்கிறியோனு நினைச்சேன்.”
“நீங்க அவரையும், என்னையும் மாத்தி மாத்தி பார்த்து பேசுறீங்க… நான் அவரை மட்டும் பார்த்து பேசுறேன்… அவ்ளோ தான் வித்யாசம்”.
“ஓ…”
“நீங்களும் உங்க பிரெண்ட்டை மாதிரி ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு, வீட்டில் இருந்துட்டு வரீங்களோனு நினைச்சேன். நீங்க நிஜமாவே ஊருக்கு தான் போயிட்டு வந்திருக்கீங்க போல…! சரி சார், நான் கிளம்புறேன்.”
“இதைச் சொல்லவா வந்த?”
“ச.. ச.. நான் உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வந்தேன்.”
“எனக்கா, ஹரிக்கா?”
“உங்களுக்கு தான்.”
“பார்த்தா, அப்படி தெரியலையே!”
“பின்ன. எப்படி தெரியுது?”
“ஹரிக்கு சொன்னது போல தான் தெரியுது.”
“நான் இவ்வளவு நேரம் உங்க கிட்ட தானே பேசினேன்.”
“வாய் என் கிட்ட தான் பேசுது, ஆனா கண்ணு இப்போ கூட அவன் கிட்ட தானே பேசிட்டு இருக்குது.”
“கண்ணு பேசுமா? எனக்கு தெரியாதே!”
“நம்பிட்டேன்.”
“காலேஜ் டே-க்கு ப்ராக்டிஸ் செய்யப் போறேன்… போறதுக்கு முன்னாடி உங்களுக்கு விஷ் பண்ணிட்டு போக வந்தேன். சரி சார், நான் கிளம்புறேன்.” என்றவள் வெளியேறியிருந்தாள்.
அவள் சென்றதும் அரவிந்த், “என்னடா நடக்குது? ஒரு நாள் தானே நான் வரல..!”
ஹரீஷ் மெலிதாக புன்னகைக்கவும்,
அரவிந்த், “எப்படி டா! நீ பக்கம் பக்கமா பேசியும்… ரெண்டு நாளா உன்னை கண்டுக்காமத் தானே இருந்தா?”
ஆம், பவித்ரா வீட்டில், ஹரீஷ் பேசி விட்டு சென்றதும், பவித்ரா மற்றும் விஜய் பேசியதை காதில் வாங்காமல், உடனே கிளம்பி விடுதிக்கு வந்தவள், அடுத்து வந்த இரண்டு நாட்களும் யாருடனும் பேசாமல் தனிமையில் தான் கழித்தாள்.
திங்கட்கிழமை கல்லூரிக்கு வந்தவள், பவித்ரா அருகே அமராமல்.. தனியாக கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
ஹரீஷ் வகுப்பினுள் நுழைந்ததும், மேஜை மீது கைகளை வைத்து அதில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ஹரீஷ், ஆசிரியராக மாறி, “திவ்யா கெட் அவுட்” என்றதும், அதற்காகவே காத்திருந்தது போல் அவனைப் பார்க்காமல் வெளியே சென்றுவிட்டாள்.
அவள் வகுப்பு வாசலில் நிற்பாள் என்று அவன் நினைக்க, அவளோ வெளியே சென்று விட்டாள். அவளது செய்கையில் காதலனாக வருந்தித் தவித்தாலும், ஆசிரியராக அவள் மீது கோபம் கொண்டான்.
மதிய இடைவேளையில் திவ்யா அருகே பவித்ராவும், விஜயும் வந்தனர். அவள் அவர்களைக் கண்டு கொள்ளாமல் உணவை உண்ணத் தொடங்கினாள்.
பவித்ரா, “ப்ளீஸ்டி, பேசு.” என்று கலங்கிய குரலில் கெஞ்சினாள்.
விஜய், “திவி, நாங்க உனக்காக தான் செஞ்சோம்னு உனக்கு நல்லா தெரியும்… ஆனாலும், நாங்க செய்தது தப்பு தான்… எங்களை எப்போ மன்னிக்கிறியோ, அப்போ பேசு…! நீ பேசலைனு நான் பேசாம இருக்க மாட்டேன்… நான் எப்போதும் போல் தான் இருப்பேன்… ஆனா, ஹரி சார் கூட நீ சொல்லாம பேச மாட்டேன்.”
அவள் சட்டென்று நிமிர்ந்து அவனை முறைக்கவும்,
அவன், “அன்னைக்கு உன்கிட்ட சொன்னதில் இருந்து இப்ப வரை நான் அவர் கிட்ட பேசல… அன்னைக்கு அவர் சொன்னதை கேட்டுக்கிட்டேன், அவ்ளோ தான்.”
அவள் கண்ணசைவில் கூட பதில் கூறாமல், உணவில் கவனத்தை திருப்பினாள்.
அதன் பிறகு பவித்ரா அவளிடம் அழுது கெஞ்சிய போதும், அவள் மனம் இறங்காமல் அமைதியாகத் தான் இருந்தாள்.
அதன் விளைவாக, அன்று மாலை பவித்ரா ஹரீஷ் வீட்டிற்குச் சென்று சண்டை போட்டாள்.
பவித்ரா கோபமாக, “நீங்க சொன்னீங்கனு தானே ஹெல்ப் செஞ்சேன்… இப்போ என் முகத்தை கூட பார்க்க மாட்டிக்கிறா… இதுவரைக்கும் அவ என்னை ஒதுக்கியதே இல்லை. எல்லாம் உங்களால் தான்… உங்களை யாரு இங்கே வரச் சொன்னது?” என்று கத்தினாள்.
ஹரீஷ் அமைதியாக இருக்க,
நந்தகுமார் தான், “ஹே! பிள்ளைப் பூச்சி மாதிரி இருந்துட்டு ஓவரா சவுண்ட் விடுற…” என்று எகிற,
“நீ சும்மா இருடா… நான் உன்கிட்ட பேசல…” என்று பவித்ரா அவனை விட அதிகமாக எகிறினாள்.
ஒரு நொடி அதிர்ச்சியில் மௌனமான நந்தகுமார், அடுத்து பேசும் முன்,
“நந்து அமைதியா இரு” என்று அவனை அடக்கிய ஹரீஷ் பவித்ராவிடம்,
“சாரி… நானும் இதை எதிர்பார்க்கல…” என்றான்.
அவன் மன்னிப்பு கேட்டதும், பவித்ராவிற்கு ஒரு மாதிரி ஆகி விட… கோபம் வடிந்தவளாக, “சாரி சார்… திவி என்னை ஒதுக்கவும்… சாரி” என்று சிறிது திணறினாள்.
ஹரீஷ், “புரியுது… கவலைப்படாத… நீங்க அவளுக்காக தான் செஞ்சீங்கனு அவளுக்கு தெரியும். இருந்தாலும், அவ பக்கம் நிற்காம நீங்க எனக்கு ஹெல்ப் செஞ்சதால் தான் இப்படி நடந்துக்கிறா… சீக்கிரம் உங்க கூட பேசுவா… நாளைக்கே கூட பேசலாம்.” என்றவன் மனதினுள், ‘ஆனா, என்னைப் பற்றி தான் அவ என்ன நினைக்கிறானு எனக்குத் தெரியல..’ என்று கூறிக் கொண்டான்.
“தேங்க்ஸ் சார்.” என்று விடை பெற்றாள்.
நந்தகுமார், “உன் ஆள் பயங்கரமான ஆள் தான்டா… புயலை போன்ற உன்னை பூவா மாத்துறா, பூவை போன்ற பவித்ராவை புயலா மாத்துறா!”
“இப்படியே பேசிட்டு இரு… உன்னை நோயாளியா மாத்திருவா.”
“ஆத்தி! செஞ்சாலும் செய்வா…! நான் சொன்னதை அவ கிட்ட சொல்லிடாதடா.” என்றான்.
……………..
ஹரீஷ் சொன்னது போல், அடுத்த நாளே நண்பர்களுடன் சகஜமான திவ்யா, இவனை மட்டும் கண்டு கொள்ளவில்லை. முன்பை விட இன்னும் அதிகமாக விலகியவள், இன்று திடீரென்று வந்து வம்பு செய்து விட்டுச் சென்றிருக்கிறாள்.
அரவிந்தின் கூற்றை கேட்டு ஹரீஷ் முறைக்க,
அவனோ அலட்டிக்கொள்ளாமல், “விஷயத்தை சொல்லு… அப்புறமா ஆற அமர உட்கார்ந்து முறைக்கலாம்.” என்றான்.
ஹரீஷ் அமைதியாக இருக்கவும்,
“ம்ம்… சொல்லு டா.”
“நேத்தும் என்னை கண்டுக்காம தான் இருந்தா, இன்னைக்கு தான் புதுசா இப்படி செய்றா.”
“என்ன டிசைனோ நீயும், உன் ஆளும்!” என்றவன், “அது எப்படிடா உள்ளுக்குள் அவ்ளோ லவ் இருந்தும், அவ உன்னை பார்த்துட்டே என் கிட்ட பேசியப்ப, பறப்பது போல் பீல் ஆனாலும் கண்ணில் எதையும் காட்டாம அவளைப் பார்த்த…?”