சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்ட ஹரீஷ்,
“தியா, என் கண்ணை பார்த்து நீ என்னை காதலிக்கலை… நான் உனக்கு வேண்டாம்னு சொல்லு. நான் உன் கண் காணாத இடத்துக்கு போய்டுறேன் ஆனா, ஒன்றை நல்லா புரிஞ்சுக்கோ… உன்னை விட்டு விலகிப் போனால் நான் பிணம் போல தான்…..”
அவள் சட்டென்று திரும்பி கடுமையாக முறைக்கவும்,
“நான் பேசுவது வசனம் போல் இருக்கலாம், ஆனா, அது தான் உண்மை… உன்னை பற்றி தெரிஞ்சுக்கிறதுக்கு முன், நான் என் காதலை சொல்லாதது தானே உன் சஞ்சலத்துக்குக் காரணம்… நீ என் மேல் கொண்ட காதல் மேல் சத்தியமா சொல்றேன்டி… என்ன பார்க்கிற? நீ தான் என் காதல் பொய்னு நினைக்கிறியே!” என்று வலியுடன் கூறியவன்,
“அதான் உண்மையான உன் காதல் மேல் சத்தியமா சொல்றேன்… உன் பிறந்த நாள் பரிசா, நான் என் காதலை சொல்லணும் நினைச்சேன்… அன்னைக்கு மட்டும் தங்ககுமார் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா, காலையிலேயே உனக்காக நான் ஆசையா வாங்கின புடவையை கொடுத்து என் காதலை சொல்லியிருப்பேன்.” என்றவன் சிறு இடைவெளி விட்டான்.
அவளது விழிகள் தனி ஒளி பெற, அவனது வார்த்தைகள் அளித்த தித்திப்பு, அவளது உயிர் நாடி வரை சென்றடைய… ஜீவனில் புது உயிர் பிறந்தது போல் உணர்ந்தாள்.
இருந்தும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தவள், ஜாக்கிரதையாக பார்வையை மீண்டும் சித்திரத்தில் பதித்திருந்தாள்.
அவன், “உன் பிறந்த நாளை நீ கருப்பு நாள்னு சொல்லி அழுதுட்டு போனதும், நான் எப்படி துடித்தேன்னு எனக்கு மட்டும் தான்டி தெரியும்… எப்போடா அந்த கிளாஸ் முடியும்னு நேரத்தை நகர்த்தி, உன்னை தேடி காலேஜ் முழுவதும் கிட்டத்திட்ட பைத்தியக்காரன் மாதிரி அலைஞ்சேன்.
உனக்கு ஆறுதல் சொல்ல முடியாம, நீ எங்க இருக்கனு கூட தெரியாம இருந்தது நரகம்டி…! வேறு வழி இல்லாம தான், உன்னை பத்தி கேட்க சேர்மன் சாரை பார்க்கப் போனேன்…
நமக்குள் இருந்த ஸ்டேட்டஸ் வித்யாசமும், சேர்மன் சார் உன் ரிலேடிவ் என்பதும் தான், நான் என் மனதை மறைச்சதுக்கு காரணம்.
உன் காதல் என் காதலை வெளிக் கொண்டு வந்துது. இருந்தும் சேர்மன் சாரை நினைச்சு சிறு தயக்கம் இருந்தது தான். ஆனா அது கூட உன் கண்ணீரை கண்டதும் காணாமப் போயிடுச்சு… அப்போ என் கண்ணுக்கு தெரிந்தது, மனதில் மூளையில் நிறைந்து இருந்தது நீ… நீ மட்டும் தான்…!
நீயே சொன்ன மாதிரி, என் கோபம் உன்கிட்ட சூரியனைக் கண்ட பனித்துளியை மாதிரி காணாமப் போய்டுது… உன்னை பத்தி தெரிஞ்சுக்க தான் சேர்மன் சாரிடம், அவர் நிம்மதி தான் முக்கியம்னு சொன்னேன்… ஆனா, அதை அவர் கூட நம்பல…” என்றான்.
அவனது அன்றைய மனநிலையை நினைத்து அவள் உள்ளம் பதறினாலும், கஷ்டப்பட்டு பார்வையை அவனிடம் திருப்பாமல் அமர்ந்திருந்தாள்.
அவன், “உனக்காவது பதினைந்தாவது வயசில் தான் நீ தத்தெடுக்கப்பட்டவள்னு தெரியும்… எனக்கு பிறந்ததில் இருந்தே எனக்கு யாரும் இல்லைனு தெரியும்.
உன் பிறப்பை நினைத்து நீ கலங்குறது எனக்கு தெரியும்… என்னை நினைத்துப் பார்… உனக்காவது உன் பிறப்பை பற்றியும் தெரியும், உன் பெற்றோர் யாருனும் தெரியும்…
ஆனா எனக்கு! என் பிறப்பை பற்றியும் தெரியாது, என் பெற்றோர் யாருன்னும் தெரியாது. பிறந்த அன்னைக்கே ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட என் பிறப்பு, புனிதமானதாவா இருக்கும்” என்று அவன் உணர்ச்சியற்ற குரலில் கூற, அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
அவன் வேதனையை கண்டு அவள் மனம் துடித்தது.
அவனை மடி சாய்த்து தலை கோதிவிட அவள் உள்ளம் துடித்தது.
அவளது மனதை அவள் விழி வழியாகப் புரிந்து கொண்டவன், மறுப்பாக தலையை அசைத்து, “நிச்சயம் உன் மடியில் படுத்து யாரிடமும் திறக்காத என் மனதை திறந்து என் வேதனைகளை உன்னிடம் கொட்டுவேன். ஆனா, அது இப்போ இல்லை… இதை சொன்னது, உன்னை என் பக்கம் இழுக்க இல்ல… உன் பிறப்பை நினைச்சு நீ கலங்கக் கூடாதுனு தான் சொன்னேன்…”
அவள் மீண்டும் பார்வையை திருப்பி, மனதை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
“அந்த ஆள் செய்த தப்புக்கு, நீ ஏன் சிலுவையை சுமக்கனும்! அதுவும் வெளியே தெரியாத உண்மையை நினைச்சு ஏன் கலங்குற! எப்பொழுதும் போல் நிமிர்ந்து நில்…! என் உயிர் மூச்சு இருக்கும் வரை உனக்கு துணையாக நான் இருப்பேன்…” என்றவன், ஆழ்ந்த குரலில், “தியா” என்று அழைத்தான்.
மனதை அடக்க முடியாமல், அவள் அவன் கண்களை நோக்கினாள்.
அவன், “இப்போ கூட என்னை விட்டு நீ விலகி இருந்தாலும், நான் உன்னை விட்டு விலகினா உன்னால் அதை தாங்கிக்க முடியாதுனு எனக்கு தெரியும்…! நீயே என்னை விட்டாலும், நான் விலக மாட்டேன்…” என்று உறுதியுடன் கூறியவன், “என்னடா இப்படி சொல்றவன், ஆரம்பிக்கும் போது போறேன்னு சொன்னானேனு நினைக்கிறியா!” என்று வினவினான்.
பிறகு மென்னகையுடன், “என் தியா பற்றி எனக்கு தெரியும்… என்னை போல் இல்லை… என்ன தான் வெளியே ரௌடி பேபியா தெரிந்தாலும், என் செல்லம்மா ரொம்ப மென்மையானவ… பொய்யாக் கூட என்னை காதலிக்கலனோ, என்னை வேண்டாம்னோ சொல்ல மாட்டா.” என்று கூறி கண் சிமிட்டினான்.
அவள் முறைக்கவும், அவன் உதட்டோரப் புன்னகையுடன் புருவம் உயர்த்திப் பார்த்தான்.
திவ்யா மனதினுள், ‘மயக்கப் பார்க்கிறான்… ஸ்டெடி திவ்யா ஸ்டெடி’ என்று சொல்லிக் கொண்டு பார்வையை திருப்பினாள்.
அவன் அதைப் புரிந்து கொண்டது போல் வாய் விட்டு சிரித்தான். அவளது கட்டுப்பாட்டையும் மீறி, அவள் கண்கள் அவனது சிரிப்பை ரசித்து படம் பிடித்து, மனதிற்கு அனுப்பியது.
அவன் சிரிப்பை நிறுத்தி மென்னகையுடன் மீண்டும் புருவம் உயர்த்த, அவள் உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.
இருக்கையை விட்டு எழுந்தவன், “நான் என் தரப்பை சொல்லிட்டேன்… நல்லா யோசி டா… நான் காத்திருப்பேன்… இப்போ நான் கிளம்புறேன்.” என்றான்.
அவள் மனதை அடக்கியபடி அமைதியாக இருக்கவும்…
“உனக்கே தெரியும், எனக்கு பொறுமை கம்மினு… ஸோ ரொம்ப காக்க வைக்காத” என்றான்.
அவள் அவனை பொய்யாக முறைக்கவும், அவன் மென்னகையுடன் கண்சிமிட்டினான்.
இப்பொழுது அவள் நிஜமாகவே முறைக்கவும், அவன், “அப்புறம் பேபி… உன் பிரெண்ட்ஸ் உனக்காகத் தான் இப்படி செய்தாங்க….”
அவள் கோபத்துடன் கையை வெளியே போகுமாறு நீட்டி, பார்வையை வேறு புறம் திருப்பவும்,
“தியா பேபி ரௌடி பேபியா மாறிட்டா… ஓடிரு ரிஷி” என்று அவளுக்கு கேட்கும் படி முணுமுணுத்தவன், சத்தமின்றி அவள் அருகே வந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு, “லவ் யூ டி, என் செல்ல ரௌடி பேபி!” என்றுவிட்டு வெளியே ஓடினான்.
இணைய காத்திருப்போம்…