அடுத்த நாள் ஹரீஷ் கூறியது போல் விஜய் கூறினான்.
காலை தேநீர் இடைவேளையில் வெளியே சென்று வந்த விஜய் திவ்யாவிடம், “மச்சி, ஹரி சார் ஊருக்குப் போயிருக்காராம்… அரவிந்த் சார் நொந்தக்குமாரிடம் சொன்னதை கேட்டேன்… எந்த ஊருக்குப் போயிருப்பார்?”
அவனை முறைத்த திவ்யா, பவித்ராவை ‘அப்படியா?’ என்பது போல் பார்த்தாள்.
பவித்ரா உள்ளுக்குள் நடுங்கினாலும், வெளியே, “எனக்கு தெரியாது திவி… இன்னைக்கு நான் அவரை பார்க்கல..” என்றாள்.
விஜய், “இவளைப் போய் கேட்கிறியே! இவ இன்னைக்கு மட்டுமா பார்க்கல..! ரெண்டு மாசமா அவர் அங்கே இருப்பதே தெரியாமல் இருந்தவ தானே!”
பவித்ரா அவனை முறைக்க…
விஜய், எப்பொழுதும் போல் அதை கண்டு கொள்ளவில்லை.
‘எங்கே போயிருப்பான்!’ என்ற கேள்வி திவ்யா மனதை அரித்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
மதிய உணவு இடைவேளையில் விஜய்யின் கண்ணசைவில் பவித்ரா, “திவி, இன்னைக்கு என் வீட்டுக்கு வரியா? வீக்-எண்டு அங்கேயே இருக்கலாம். இன்னும் ரெண்டு வாரத்தில் வர கேம்பஸ் இண்டர்வியூக்கு சேர்ந்து ப்ரிபர் செய்யலாம்.” என்று முடித்தவள்
மனதினுள் ‘அப்பா… ஒழுங்கா பேசிட்டேன்’ என்று நினைத்தாள்.
“சுண்டைக்கா, இன்னைக்கு தான் உருப்படியான ஒரு ஐடியா சொல்லி இருக்க…” என்ற விஜய் திவ்யாவிடம் உற்சாகத்துடன், “நானும் வரேன் திவி… சேர்ந்து ப்ரிபர் செய்யலாம்.” என்றான்.
திவ்யா யோசிக்கவும்,
விஜய், “என்ன யோசிக்கிற திவி! சேர்மன் சார் பார்த்துப்பார்… வார்டனிடம் பேசிப்பார்… ஹரி சார் கூட இல்லையே! அப்பறமென்ன?”
திவ்யா முறைக்கவும்,
“என்ன முறைப்பு! ஹரி சார் இருந்தா வர மாட்ட தானே!”
“அப்படி நான் சொன்னேனா?” என்று திவ்யா வினவ,
விஜய், “அப்போ, இப்போ அவர் இல்லைன்னு தான் யோசிக்கிறியா?”
திவ்யா மீண்டும் முறைக்கவும்,
விஜய், “இப்பலாம் இந்த சுண்டைக்காயை விட, நீ தான் அதிகமா முறைக்கிற…”
பவித்ரா, “டேய் நீ அடங்கவே மாட்டியா?”
“யா” என்று விஜய் பெருமையுடன் கூற…
பவித்ரா துப்புவது போல் செய்கை செய்ய…
விஜய் தனது தோளை, தூசி தட்டுவது போல் தட்டினான்.
திவ்யா புன்னகையுடன், “சரி, நான் வரேன்” என்றாள்.
விஜய் உற்சாகத்துடன், “ஹே! ஒன்னா ப்ரிபர் செய்றோம்! ஒன்னா ஒரே கம்பெனியில் செலக்ட் ஆகுறோம்.” என்று கூறி கையை நீட்ட,
திவ்யா புன்னகையுடன் அவன் கை மீது கையை வைத்தாள்.
பவித்ரா மனதினுள் ‘இந்த வீர வசனம் இப்போ ரொம்ப தேவை! உண்மை தெரிந்தா இவ என்ன செய்வாளோ’ என்று புலம்பியவள், வெளியே உதட்டை இழுத்துச் சிரித்தேன் என்று காட்டி, கையை திவ்யா கை மேல் வைத்தாள்.
மாலை திவ்யா பவித்ராவின் வண்டியை எடுக்கச் சென்றிருக்க, அவளுக்கு முன் தனது வண்டியை எடுத்து வந்திருந்த விஜய்யிடம் பவித்ரா, “எனக்கு ரொம்ப பயமா இருக்குதுடா” என்றாள்.
விஜய், “இன்னும் கொஞ்ச நேரம் தான்… காரியத்தை கெடுத்திறாத”
“என் நெஞ்சு எப்படி வேகமா அடிச்சுக்குது தெரியுமா?”
திவ்யா அவர்களை நெருங்கவும், “முகத்தை சாதாரணமா வை… திவி வந்துட்டா.” என்றான்.
ஒருவழியாக மூவரும் பவித்ரா விட்டிற்கு வந்தனர். பவித்ரா திவ்யாவின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து, பயத்தை மறைத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், பவித்ராவின் அன்னை, “பவி… நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்… அப்பா வர கொஞ்சம் லேட் ஆகும் சொன்னாங்க…” என்றுவிட்டு கிளம்பிச் சென்றார்.
வீட்டின் கூடத்தில் மூவரும் அமர்ந்திருந்தனர்.
திவ்யா, “ஆரம்பிக்கலாமா?”
விஜய், “அதுக்குள்ளயா?”
“இவ்வளவு நேரம் ரிலாக்ஸ் செஞ்சது போதாதா?”
“இன்னும் கொஞ்ச நேரம் கழித்து ஆரம்பிக்கலாமே”
“நான் ஆரம்பிக்கப் போறேன்… நீ வேணா கொஞ்ச நேரம் கழிச்சு வா” என்றவள், சில புத்தகங்களை எடுத்து வைத்தாள்.
அப்பொழுது பவித்ரா எழுந்து நிற்கவும்,
நிமிர்ந்து பார்த்த திவ்யா அங்கே ஹரீஷை பார்த்ததும், ஒரு நொடி மனதினுள்… ‘இங்கே தான் இருக்கிறானா!’ என்று நிம்மதி கொண்டாலும், அடுத்த நொடியே தோழியின் முகத்தை ஆராய்ந்தாள்.
அப்பொழுது அவளும் திவ்யாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பவித்ரா முகத்தில் தெரிந்த கலவரத்திலிருந்தே அவர்கள் ஒன்று சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டவள் அமைதியாக ஹரீஷை பார்த்தாள்.
அவளது அமைதி, எரிமலை சீற்றத்திற்கு முன் இருக்கும் அமைதி என்பதை உணர்ந்த ஹரீஷ், “அஞ்சு நிமிஷம், உன்னோட தனியா பேசணும்.” என்றான்.
திவ்யா நன்றாக சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்ததின் மூலம், ‘நீ பேசுவதை கேட்க நான் தயார்’ என்பதை சொல்லாமல் சொன்னாள்.
ஹரீஷ், “நாம ரூமுக்கு போய் பேசலாம்.” என்றான்.
அசையாமல் அமர்ந்திருந்த திவ்யாவின் பார்வையில் மட்டும் மாற்றம் இருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த சித்திரத்தில் பார்வையை பதித்திருந்தாள்.
ஹரீஷ், பவித்ரா மற்றும் விஜய்யை நோக்கி, “நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்றான்.
பவித்ரா தயக்கத்துடன் திவ்யாவை பார்த்தாள்.
விஜயும் திவ்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் பார்ப்பது தெரிந்தும் திவ்யா, தனது பார்வையை சிறிதும் அவர்கள் பக்கம் திருப்பவில்லை.
ஹரீஷ், “திவ்யா ஒன்னும் சொல்ல மாட்டா… கொஞ்ச நேரம் வெளியே இருங்க.” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு கூறினான்.
பவித்ரா, “அவ ஒன்னும் சொல்லாதது தான் எனக்கு பயமா இருக்குது” என்றாள்.
விஜய்க்கும் அதே எண்ணம் தான் என்றாலும், தோழியின் நலனை கருதி, “திவி புரிஞ்சுப்பா, வா” என்றபடி பவித்ராவை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.
நீண்ட மெத்திருக்கையில் திவ்யா அருகே ஹரீஷ் அமர்ந்ததும், விருட்டென்று எழுந்து அருகில் இருந்த ஒற்றை மெத்திருக்கையில் அமர்ந்தாள்.