பின் வாயடைத்துப் போய் நின்றிருந்த பவித்ராவை உலுக்கி, “பவிக்கா என்னாச்சு?”
ஹரீஷை அரை நொடி பார்த்த பவித்ரா, பின் பார்வையை தாழ்த்தி ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
ஹரீஷை மேலும் கீழும் பார்த்த ஜனனி, சிறு நக்கலுடன், “ரொம்ப ஸீன் போட்டிருப்பீங்க போலவே!”
“அதை விடுங்க… திவ்யா எதுக்கு அழுதா?”
அதைக் கேட்டதும், ஜனனி கோபத்துடன் பொறியத் தொடங்கினாள்.
“உங்க லவ்வை முதல்லயே சொல்லித் தொலைக்கிறதுக்கென்ன! எதுக்கும் கலங்காதவ, உங்களை விலக்கவும் முடியாம நெருங்கவும் முடியாம தவிக்கிறா…! உங்க அன்பை புரிஞ்சுக்கிட்டாலும், கொஞ்சமே கொஞ்சம் அப்பாவுக்காக தான் உங்க விருப்பத்தை சொன்னீங்களோனு நினைச்சு தவிக்கிறா… அது மட்டுமில்ல, பெர்சனல்லாவே எனக்கு உங்க மேல் கோபம் தான்…” என்றவள்,
அவனது பார்வையை பார்த்து, “என்ன பார்க்கிறீங்க!” என்று மிரட்டினாள்.
பிறகு, “எங்களை கிட்ட திட்ட ஏத்துக்கிற மனநிலைக்கு வந்துட்டா, ஆனா, நீங்க சொதப்பி வச்சதில் திரும்ப ஆரம்ப கட்டத்துக்கே வந்து நிற்கிறா… அம்மாவை இன்னும் ஏத்துக்கலனாலும், என்னையும் அப்பாவையும் இப்ப விலக்கி வச்சிருக்கிறதுக்குக் காரணம் நீங்க தான். எங்கே எங்களை ஏத்துக்கிட்டா, நீங்க விலகிடுவீங்களோனு பயப்படுறானு நினைக்கிறேன்.”
“என்ன சொல்றீங்க?”
“அப்பா கிட்ட ‘இதுக்கு மேல என்னால் முடியல… இன்னொரு அதிர்ச்சியை தாங்கும் சக்தி எனக்கு இல்லை… நான் மொத்தமா விலகிப் போய்டுறேன்’னு கண் கலங்கி இருக்கா… இன்னொரு அதிர்ச்சினு அவ சொன்னதுக்கு, நான் சொன்னது தான் அர்த்தம்… ஒருவேளை அப்பாவுக்காக நீங்க அவளை நெருங்கி, அவ அப்பாவுடன் சேர்ந்ததும், அவளை விட்டு விலகிடுவீங்களோனு யோசிக்கிறா”
சில நொடிகள் மௌனத்தில் கழிய ஜனனி, “எப்பொழுதும் தெளிவா யோசிக்கிறவ, உங்க விஷயத்தில் மட்டும் ஏனோ குழப்பிக்கிறா!”
ஹரீஷ் பவித்ராவிடம், “நாளைக்கு அவளை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வா… நான் நாளைக்கு காலேஜ் வர மாட்டேன். நான் ஊருக்குப் போயிருக்கிறதா விஜய் அவளிடம் சொல்லுவான்… அரவிந்த் மூலமா தெரிந்ததா சொல்லுவான்… நாளைக்கு கண்டிப்பா அவளுடன் நான் பேசணும்.”
பவித்ரா மானசீகமாக நெஞ்சில் கைவைத்து, திகிலுடன் அவனைப் பார்க்க…
அவன், “பயப்படாத… உங்க அப்பாகிட்ட சேர்மன் சார் பேசுவார்.”
ஜனனி, “நல்ல திட்டம் போடுறீங்க… ஆக மொத்தம், அக்கா கிட்ட எல்லோரையும் மாட்டி விடுறீங்க…”
ஹரீஷ் முறைப்புடன், “இவளே பயந்து போய் இருக்கா… நீங்க வேற ஏத்தி விடாதீங்க.”
“உண்மையை தானே சொல்றேன்… நாளைக்கு நீங்க அக்கா மனசை கரைக்கல…”
“அதை நாளைக்குப் பார்த்துக்கலாம்.”
“இவ்ளோ தானா உங்க காண்பிடன்ஸ்?”
“காண்பிடன்ஸ் வேற… உண்மை நிலவரத்தைப் புரிஞ்சுக்கிறது வேற…! இப்பவும் என் தியா மனசை மாத்துவேன்னு, எனக்கு காண்பிடன்ஸ் இருக்குது. ஆனா, அது நாளைக்கே நடக்கும்னு உறுதியா சொல்ல முடியாது. ஆனா நிச்சயம், கூடிய சீக்கிரம் நடக்கும்… நாளைக்கே அவ மனசு மாறுதோ இல்லையோ, நிச்சயம் என் பக்கம் யோசிக்க வைப்பேன்.” என்று உறுதியுடன் கூறியவன்,
பின் பவித்ராவிடம், “உன் பிரெண்ட் நல்லா இருக்கணும்னு நினைச்சா இதை செய்.” என்றான்.
பவித்ரா, “சரி சார்.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.
அதன் பிறகு மூவரும் கிளம்பினர்.
ஜனனி நடந்தவற்றை ராஜாராமிடம் கூறியதும்,
அவர் மென்னகையுடன், “நல்லதே நினைப்போம்” என்றார்.
“உங்களுக்கு அவர் மேல் கோபம் வரலையா பா?”
“அவர் நிலையில் இருந்து யோசித்துப் பார்க்கணும்டா”
“அப்படி என்ன அவர் நிலைமை?”
“அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்… திவிமா கோடீஸ்வரி… ஸ்டேட்டஸ் முதல் விஷயம்… அப்புறம் இரண்டாவது நான்.”
“நீங்களா?”
“முதல் நாளே என்னிடம் நன்றிக் கடன் பட்டதா சொன்னார்… எனக்கும் திவிமாக்கும் என்ன உறவுனு தெரியலைனாலும், அவரால் நம்ம குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்து என் நிம்மதி கெட்டிரக் கூடாதுன்னு யோசித்து இருப்பார். அப்புறம் திவிமா சந்தோசம் தான் முக்கியம்னு, அவர் வெளியே வந்தப்ப.. திவிமா அவரை தப்பா புரிஞ்சிட்டு விலகி நிற்கிறா…! அவரும் பாவம் தான் டா.”
“ஆனாலும் மாம்ஸ், இவ்ளோ நல்லவரா இருக்கக் கூடாது.”
“ஹும்ம்… கொஞ்சம் கோபக்காரர் என்றாலும், ரொம்ப நல்லவர்… உன் அக்காவை சந்தோஷமா வச்சுப்பார்.”
“ஹும்ம்… அக்காவை பார்த்ததும் அவர் கண்ணில் தனி ஒளி வந்துது… அக்காவை தவிர வேறு எந்தப் பெண்ணையும் நெருங்க விட மாட்டார் போல… முதலில் நான் யாருனு தெரிவதற்கு முன், அவர் நின்ற பாவனையே ‘எட்டி நில் எச்சரிக்கிறேன்’னு தான் இருந்தது.”
“ஹும்ம்… சரி தான்… நான் விசாரித்ததில் அப்படி தான் கேள்விப் பட்டேன்.”
“நான் மாம்ஸ் கிட்ட பேசியதை சொன்னப்ப, அம்மா இங்கே இருந்திருந்தால் என் வாயிலேயே அடி போட்டாலும் போட்டிருப்பாங்க.”
“உன் அம்மா, உன்னை அடிப்பாள்!”
“அது… ஆனா… கண்டிப்பா திட்டுவாங்க தானே”
“வீட்டு மாப்பிள்ளையை இப்படி பேசினா கொஞ்சுவாங்களா?”
“அப்போ நீங்க ஏன் திட்டல?” என்று தலை சரித்துக் கேட்டாள்.
“நீ பேசிய விஷயம் சரி. ஆனா, பேசிய விதம் சரியில்ல… இருந்தாலும், அவரே உன்னை குட்டி தங்கைனு சொன்ன அப்புறம், நான் உங்களுக்கு நடுவில் வர விரும்பல…”
“ஆனாலும், மாம்ஸ் என்னை குட்டிப் பொண்ணுன்னு சொல்லிட்டார்.” என்று சிணுங்கினாள்.
அவர் புன்னகையுடன், “எப்பவுமே எனக்கு நீ குட்டி தேவதை தானே டா… அது போல் சொல்லி இருப்பார்.” அதன் பிறகு இருவரும் கிளம்பினர்.