
விலகல் – 27
அடுத்த நாள் மாலையில், ஹரீஷ் அரவிந்துடன் வண்டி நிறுத்துமிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் முன் இடுப்பில் கைவைத்தபடி முறைப்புடன், ஜனனி வந்து நின்றாள்.
ஹரீஷ் ‘யாரிது!’ என்ற யோசனையுடன் பார்க்க,
அவளோ ஹரீஷை முறைத்தபடியே, “அரவிந்த் சார், நீங்க கிளம்புங்க” என்றாள்.
அருகில் இருந்த மரத்தின் அருகே திவ்யாவும், பவித்ராவும் நின்று கொண்டிருந்ததை இவர்கள் கவனிக்கவில்லை.
‘என் பெயர் இவங்களுக்கு எப்படி தெரியும்!’ என்று மனதினுள் யோசித்த அரவிந்த், ‘ஒருவேளை ஹரி நண்பன்னு என் பெயரை தெரிந்து வச்சி இருக்காங்களோ!’ என்று கூறிக்கொண்டு கிளம்பினான்.
ஹரீஷும், அவனுடன் கிளம்பப் பார்த்தான்.
ஜனனி, “ஹலோ பாஸ், எங்க போறீங்க! நான் உங்க கிட்ட பேச தான் வந்தேன்.”
ஹரீஷோ அவளை அலட்சியமாகப் பார்த்து முறைத்துவிட்டு கிளம்ப,
ஜனனி நக்கல் குரலில், “பார் டா! திவ்யா தவிர வேற பொண்ணுடன் சார் நின்னு பேச மாட்டார் போல!” என்றதும், அவனது நடை நின்றது.
திரும்பியவன் இப்பொழுதும் பேசவில்லை. ஆனால், அவனது கண்கள் அவளை ஆராய்ச்சியுடன் நோக்கியது.
ஜனனி மனதினுள், ‘என்ன ஒரு லேசர் பார்வை! நம்ம ராஜுப்பா(ராஜாராம்) கூட தோத்திவிடுவார் போல! அக்கா எப்படி இவரை சமாளித்து தண்ணி காட்டுறா!’ என்று நினைத்தவள், வெளியே கெத்தாகவே பார்த்தாள்.
அவன், “யார் நீ? உனக்கு எப்படி திவ்யாவை தெரியும்?”
“யாருன்னு தெரிந்தா தான் பேசுவீங்களா?” என்றவள் கோபக் குரலில், “தெரியாமல் தான் கேட்கிறேன், உங்களுக்கு என்ன பெரிய ஹீரோனு நினைப்பா?”
ஹரீஷும் கோபத்துடன், “ஏய், என் நினைப்பை பற்றி உனக்கென்ன! தேவை இல்லாததை பேசாத… நீ யாருனு சொல்லு?”
“உங்க மேல் செம்ம கோபத்தில் இருக்கிறேன்… ஏதோ அக்காவுக்கு உங்களை பிடிச்சதால் பொறுத்துப் போறேன்.”
அவன் புருவம் உயர்த்திப் பார்க்கவும்,
அவள், “என்ன?” என்று சிடுசிடுத்தாள்.
“யாரு உன் அக்கா?”
பெருமையுடன், “திவ்யா” என்றவள் பின் கோபத்துடன் முறைத்தாள்.
ஜனனியின் முகத்தில் தோன்றிய பெருமையையும், கோபத்தையும் பார்த்த திவ்யா, கனிவுடனும் ரசனையுடனும் தங்கையைப் பார்த்தாள்.
ஹரீஷ் கோபம் விலகிட சிறு புன்னகையுடன், “நீங்க ஜனனியா?”
“ஒருமையிலேயே பேசலாம்.” என்று முறைப்புடனே கூறினாள்.
அவன் மென்னகையுடன், “என் மேல் என்ன கோபம்?”
“என் அக்கா எவ்ளோ ஸ்ட்ராங் பெர்சன் தெரியுமா? அவளோட இடத்தில் நான் இருந்திருந்தால், என்னவாகி இருப்பேனோ! ஆனா, அவ எவ்ளோ ஸ்டராங் மைன்டட்டா பிரச்சனைகளை பேஸ் செஞ்சு, கம்பீரமா நிமிர்ந்து நிற்கிறா! அவளைப் போய் அழ வச்சிட்டீங்களே! அவ அழுது நான் பார்த்ததே இல்லை… ஐ ஹேட் யூ!”
பவித்ரா பிரம்மிப்புடன் ஜனனியை பார்க்க, திவ்யா நெகிழ்ச்சியுடன் பார்த்தாள்.
ஜனனி பேசப் பேச பெருமையுடனும், காதலுடனும் தன்னவளை நினைத்தபடி கேட்டுக் கொண்டிருந்த ஹரீஷின் முகம், அவள் அழுதாள் என்றதும் சுருங்கியது.
அவன் சிறு பதற்றத்துடன், “என்ன சொல்றீங்க?”
“என்னை ஒருமையில் பேசச் சொன்னேன்.”
“இப்போ அது ரொம்ப முக்கியம்!” என்று சிறு எரிச்சலுடன் கூறியவன், “திவ்யா, எப்போ எதுக்கு அழுதா?”
“உங்களை யாரு இங்கே வந்து சேரச் சொன்னது? அக்கா பிரச்சனைகளின் நடுவே இருந்தாலும், சிறு நிம்மதியுடன் சந்தோஷமா தான் இருந்தா… நீங்க இங்கே வந்து அவ மனசை கலைத்து… அவ லவ்வை சொன்னதும் ஏத்துக்காம சுத்த விட்டுருக்கீங்க…! நீங்க என்ன பெரிய பருப்பா! என் அக்காவோட அன்பு கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும். அவ அன்போட வேல்யூவும், அருமையும் உங்களுக்கு தெரியல…”
ஹரீஷின் முகத்தில் தோன்றிய வேதனையை பொறுக்க முடியாமல், அவர்கள் முன் வந்த திவ்யா, “இங்கே என்ன செய்ற? என்னைப் பார்க்க தானே வந்த… இவருடன் என்ன பேச்சு?” என்றாள்.
திவ்யா உரிமையுடன் பேசியதும் பிரகாசித்த ஜனனியின் முகம், அடுத்த நொடியே முறைப்புடன் ஹரீஷ் பக்கம் திரும்பியது.
ஜனனி ஹரீஷிடம், “நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல… ஆனா, உங்க முகம் சுருங்கியதை பார்க்க முடியாம வந்து தடுக்கிறா… இவ அன்பை புரிஞ்சுக்காம…”
ஹரீஷ் சிறு வலியுடன் தன்னவளைப் பார்த்தபடி, “புரிந்ததால் தான்… இவளுக்கு நான் தகுதியானவன் இல்லைனு நினைச்சு முதல்ல விலகினேன். அப்புறம் என்கிட்ட தான் இவளோட நிம்மதி, சந்தோசம் எல்லாம் இருக்குதுனு புரிந்து நான் நெருங்கினா, இவ விலகுறா…!” என்றவன் திவ்யாவின் முகத்தில் தோன்றிய வேதனையின் சாயலில் தன் குரலை மாற்றி,
சிறு உற்சாகத்துடன், “ஆனா, என்னோட ரௌடி பேபியே என்னை விட்டாலும், நான் அவளை விட மாட்டேன்… அது அவளுக்கும் தெரியும்.” என்றான்.
திவ்யாவின் விழிகள் கட்டுப்பாட்டையும் மீறி அவனை நோக்கியது. அவன் கண்ணில் ஒளியுடன், உதட்டோரப் புன்னகையுடன் புருவம் உயர்த்தினான்.
அவன் குரலில் தெரிந்த காதலிலும், என்னுடன் சேர்ந்து சிரி என்று அழைத்த அவனது விழி மொழியிலும், அவளை எப்பொழுதும் மயக்கும் உதட்டோரப் புன்னகையிலும், அவன் புருவம் ஏற்றிய விதத்திலும், அவளது மனம் மொத்தமாக அவனிடம் சாயத் துடித்தது.
சில நொடிகளில் சுதாரித்தவள் பார்வையை தாழ்த்தி, “நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு வேகமாக விடுதி நோக்கிச் சென்றாள்.
அவள் மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், பின் ஜனனி பக்கம் திரும்பி, “தேங்க்ஸ்” என்றான் மென்னகையுடன்.
“எதுக்கு? ஐ ஹேட் யூ சொன்னதுக்கா?”
“கூடிய சீக்கிரம், என் தியா என்னிடம் வந்ததும், நீங்களே மாத்திச் சொல்லுவீங்க.”
“ஓவர் காண்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது பாஸ்.”
“ஓவர் காண்பிடன்ஸ் தானே!”
லேசாக உதட்டை சுழித்த ஜனனி, “என்னை ஒருமையில் பேசச் சொன்னேன்.”
“இப்போ நீங்க சேர்மன் சார் மகள்… என் தியாவோட தங்கையா மாறியதுக்கு அப்புறம், எனக்கும் குட்டி தங்கை தானே! அப்போ ஒருமையில் பேசுறேன்.”
“ஹலோ, நான் ஒன்னும் குட்டிப் பொண்ணு இல்லை… மெடிக்கல் செகண்ட் இயர் படிக்கிறேன்.”
“இருக்கலாம்… எங்களுக்கு, பாசக்கார குட்டி தங்கையா தானே தெரியிறீங்க.”
கையை தேய்த்தவள், “ஸ்ப்பா முடியலை!” என்றாள்.